விசா பதிப்பகம் வெளியீட்டில் புதுமைப்பித்தனின் 16 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு தான் கொடுக்காய்ப்புளி மரம். நல்ல அருமையான கதைகள்.
புதுமைப்பித்தனுக்கு தமிழ் உரைநடை கையைக் கட்டிக் கொண்டு சேவகம் செய்திருக்கிறது. எந்த அளவுக்கு புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இத்யாதிகளை நினைத்து தமிழர்கள் பெருமைப் படுகிறோமோ அதே அளவு புதுமைப்பித்தன் எழுத்துக்களும் தமிழின் ஓர் உச்சம் தான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து (வாசகன் என்ற ஒரே தகுதி தான்).
தொகுப்பில் முதல் கதை -
கொடுக்காய்ப்புளி மரம். பணக்கார கிறிஸ்துவர் தான தருமம் செய்கிறார் மோட்ச சாம்ராஜ்யத்தை எதிர் பார்த்து. அவர் வீட்டில் உள்ள கொடுக்காய்ப்புளி எடுத்து உண்ணும் பிச்சைக்காரனின் நான்கு வயது பெண்ணை அடித்துக் கொல்கிறார். பதிலுக்கு பிச்சைக்காரனும் பணக்காரரை கொன்று விடுகிறார். நன்றாக எழுதியுள்ளார்.மணிக்கொடியில் 1934 ஆம் ஆண்டு பிரசுரமான கதை.
நியாயந்தான் - வடலூர் குமாரப் பிள்ளை நேர்மையாக இருந்த போது கஷ்டப் பட்டு கொழும்பு சென்று நேர்மையற்ற செயல்களால் வாழ்வில் சுகமாக இருப்பது தான் கதை. ஜோதி இதழில் 1938 ஆம் ஆண்டு வெளியானது.
சாமியாரும், குழந்தையும், சீடரும் இது ஒரு சூப்பர் கதை. உன்னிகிருஷ்ணன் குரல் நன்றாக இருக்கும்.கேட்டால் சுகம் தெரியும். இந்தக் கதையைப் படித்தால் தான் அருமை புரியும். படித்துப் பாருங்கள்.
நினைவுப் பாதை : வள்ளியம்மையாச்சி மரணத்தைப் பற்றிய அருமையான சித்தரிப்பு.வைரவன் பிள்ளை மன ஓட்டம் சிறப்பாகப் சித்தரிக்கப் பட்டுள்ளது. (உ-ம்) "ஏறக்குறைய இந்த ஐம்பது வருஷ காலத்தில் அவர் வள்ளியம்மையாச்சியைப் பற்றி அவ்வளவாக - முதல் பிரசவத்தில் தவிர - பிரமாதமாக நினைத்தது கிடையாது.....
மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி, உடலோடு ஒட்டின உறுப்பாகி விட்டது. ஒவ்வொருவரும் தமக்கு ஐந்து விரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்ட இருக்கிறார்கள்?...விரல் ஒன்று போனால் ஐந்தென்ற நினைப்பு பிறக்கும்....."
மகாமசானம்: நெருக்கடியான சென்னையில் இறந்து போகும் பிச்சைக்காரன். இது ஒரு மாஸ்டர் பீஸ். இந்தக் கதைக்கு எப்படித்தான் இப்படி ஒரு தலைப்பு தோன்றியதோ? இன்று சென்னை அல்ல உலகமே அப்படி இருப்பதாகக் கொள்ளலாம் போல. தலைப்புக்கு பரிசு உண்டென்றால், இந்தத் தலைப்பு பரிசு பெற மிகவும் தகுதியான ஒன்று. உலகம் உள்ள வரை வாழும் இந்த சிறுகதை. இதை படித்த போது வண்ண நிலவனின் எஸ்தர் மற்றும் லா.ச.ரா.வின் பச்சைக் கனவு கதைகள் நினைவிற்கு வந்தது. இந்தக் கதை ஜெமோ,எஸ்ரா,சுஜாதா என்று யாருடைய பரிந்துரையிலும் இல்லாமல் இருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது. இதை வேறு யாராவது இன்ப அனுபவமாக படித்தது உண்டா?
காலனும் கிழவியும் மற்றும்
அபினவ் ஸ்நாப் சுமாராகத் தான் இருந்தன.
வேதாளம் சொன்ன கதை: மிகவும் பிடித்திருந்தது. ஒரு பறவையின் மூலம் கதையை நகர்த்தியிருக்கிறார். கட்டாயம் படிக்க வேண்டிய கதை.
விநாயகர் சதுர்த்தி: கடவுள் நம்பிக்கை, மறுப்பு வைத்து பின்னப்பட்ட சூப்பர் கதை.
ஒரு நாள் கழிந்தது எழுத்தாளளின் வறுமை கதைக் கரு. அவர் வாழ்க்கை அனுபவமா?
மனித இயந்திரம்: 45 வருட ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்டோர் குமாஸ்தா மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு கணப் பிழை பற்றிய விவரிப்பு தான் கதை. மற்றுமொரு மாஸ்டர் பீஸ்.
நாசக்கார கும்பல்: அந்த கால கட்டத்தில் இருந்த ஜாதி வித்தியாசங்கள் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கதையை தமிழ் நடைக்காகவே படிக்கலாம். புதுமைப் பித்தனின் எழுத்து நடையின் உச்சம் (நான் படித்த வரை) என்று இதைக் கூறலாம்.
உபதேசம், புரட்சி மனப்பான்மை எனக்கு ரொம்ப ரசிக்கவில்லை.
மனக்குகை ஓவியங்கள் () : இதில் ஏசுவில் ஆரம்பித்து சிவன் வரை எல்லா கடவுளையும் ஒரு பிடி பிடித்துள்ளார். சுவையாக இருந்தது.
சாப விமோசனம் இராமாயணத்தில் வரும் அகலிகையை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறப்பான கற்பனை. இதில் கைகேயி - அகலிகை மற்றும் சீதை - அகலிகை விவாதங்கள் சிந்தனை தூண்டுவதாக உள்ளது. இதை வைத்து ஒரு நாவல் எழுதி இருக்கலாம்.இந்தத் தொகுப்பிலேயே மிகச் சிறந்த கதை என்று கூறலாம்.
இவர் கதைகளில் வறுமை, இழப்பு, கடவுள் நம்பிக்கை அல்லது மறுப்பு பற்றிய தேடல் மிக அழகாக, இயற்கையாகக் கை கூடி வருகிறது.
படிக்கவில்லை என்றால் கட்டாயம் படித்துப் பார்க்கவும்.
சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகளில் ஒன்று மனித இயந்திரம்.
ஜெயமோகன் சிபாரிசில் இடம் பெறும் கதைகள்:
ஒருநாள்கழிந்தது
சாமியாரும் குழந்தையும் சீடையும்
காலனும் கிழவியும்
சாபவிமோசனம்
வேதாளம் சொன்ன கதை
இங்கே கொடுக்கப்பட்டுள்ள சிறுகதைகள் இணைப்புக்களுக்கு
அழியாச்சுடர் ராமுக்கும், சுஜாதா பரிந்துரைக்கு
சிலிகான் ஷெல்ப் RV,chennailibrary.com க்கும் நன்றிகள்.