வியாழன், 27 மே, 2010

வெண்ணிலா கபடிகுழு - வித்தியாசமான அனுபவம்


ஆஸ்திரேலியாவில் ஒரு பாட்டு. இஸ்தான்புல்லில் ஒரு குத்தாட்டம். நான்கு பஞ்ச வசனங்கள். தமிழக முதல்வருக்கும் பிடித்த நமீதா, கலாநிதி மாறன் வழங்கும் என்ற எந்த பெருமையும் இல்லாமல் இன்று ஒரு தமிழ் சினிமாவை வெற்றி ஆரத் தழுவிக் கொண்டது என்றால் அது வெண்ணிலா கபடி குழு என்று தைரியமாக சொல்ல முடியும்.

சமீபத்தில் தான் இந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் பற்றி என்ன சொல்ல? இயக்குனர் சுசீந்தரனின் திரைக்கதை ஒரு மகுடம் என்றால், பாஸ்கர் சக்தியின் வசனம் அந்த மகுடத்தில் வைத்த வைரக்கல் போல் ஜொலிக்கிறது. வசனத்தில் இழையோடும் நகைச் சுவை மறக்க முடியாத ஒன்று தான். கபடி விளையாட்டில் உள்ள அரசியலும், வெற்றி பெற்ற விளையாட்டு வீரரின் மனநிலையில் ஏற்படும் மாறுதலும், ஜாதியை வைத்து கபடிக் குழுவை பிரிக்கப் பார்ப்பதும் மற்றும் வெற்றி அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வெறியையும் மிக அளவோடு அழகாகக் காட்டியுள்ள இயக்குனரை எத்தனை பாராட்டினாலும் தகும். எல்லோரும் நன்கு நடித்திருந்தாலும் கிஷோரின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இசை பிரமாதமில்லை என்றாலும், விஜய் அன்டோநியயைப் போட்டு கெடுக்காமல் இருந்த இயக்குனரை பாராட்ட வேண்டும். படத் தயாரிப்பளருக்கு (பெயர் மறந்து விட்டது) ரொம்ப துணிச்சல்.படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று. சரண்யா (கதாநாயகி) மனதில் பேருந்தில் பயணிக்கும் போது என்ன மாதிரி எண்ணங்கள் ஓடியிருக்கும். மாரிமுத்துவை பார்க்காத வருத்தமா அல்லது அடுத்த திருவிழாவில் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையா? அருமை.

இந்தப் படத்தை பார்த்த பின் தான் சன் டிவி திரையை கிழித்துக் கொண்டு வரும் சுறா ஏன் திரையரங்குகளில் தூங்குகிறது என்றும், வலை உலகத்தினர் ஏன் சுறாவைச் சுரண்டிப் பார்க்கிறார்கள் என்றும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக