திங்கள், 29 டிசம்பர், 2008

பணம் படுத்தும் பாடு

"பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை" என்று திருவள்ளுவர் கூறினார். ஆனால் இந்த பொருள் படுத்தும் பாடு சொல்லி முடியாது. பணம் சேமிக்க வேண்டும். நியாயம் தான். அந்த பணத்திற்கு அதிக வட்டி கிடைக்க வேண்டும்.குறுகிய காலத்தில் பணத்தை பல மடங்கு ஆக்க வேண்டும் என்ற எண்ணம். இந்த பேராசையின் விளைவு உள்ளதும் போய் மிஞ்சுவது துன்பமும்,வருத்தமும் தான்.பலருக்கு 1995-1996ம ஆண்டில் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியின் போது காளான் போல் முளைத்த தனியார் முதலீடு நிறுவனங்கள் நினைவிலிருக்கும்.அதனால் சீரழிந்த குடும்பங்கள் கணக்கில் அடங்கா. அதே போல் இன்று உலகளவில் ஒரு பெரிய பண மோசடி வேலை நடந்திருக்கிறது.இந்த மோசடியின் வில்லன் "பெர்னார்ட் மெடாப்"(Bernard Medoff)..இன்று இணையத்தில் அதிகமாக உலா வரும் இரண்டு பெயர்கள் "சார்லஸ் பாஞ்சி"(Charles Ponzi)மற்றும் "பெர்னார்ட் மெடாப்"(Bernard Medoff). மெடாப் இந்த மாதம் 11ம் தேதி நியூயார்க்கில் கைது செய்யப் பட்டார். இவர் "மெடாப் முதலீடு பாதுகாப்பு" நிறுவனத்தின் தலைவர். இவர் செய்த குற்றம் உலகின் பலதரப்பட்ட முதலீட்டாளர்களை 50 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி)டாலர்கள ஏமாற்றி இருக்கிறார்.இது எப்படி முடிந்தது என்பதின் பிண்ணணியை பார்ப்போம்.

1960௦ம் ஆண்டு மெடாப் பங்குகளை வாங்கி விற்கும் ஒரு சிறிய நிறுவனத்தை ஆரம்பித்தார். 1970௦ களின் மத்தியில் சின்சினாட்டி பங்கு சந்தையை 21/௨ லட்சம் டாலர் செலவில் கணணி மயமாக்கினர். 1989ம் ஆண்டில் அவருடைய நிறுவனம் நியூயார்க் பங்கு சந்தையில் கிட்டத்தட்ட 5% பங்குகளை வாங்கி விற்கும் நிறுவனமாக உயர்ந்தது.கணணி மயத்தின் பலனால் நியூயார்க் பங்கு சந்தையில் பங்குகளை வாங்கி விற்பதை விரைவாகவும்,குறைந்த செலவிலும் செயல் படுத்த முடிந்தது.அதனால் மெடாபின் புகழ் பொருளாதார வர்த்தகத் துறையில் விரிவடைந்தது.மெடாப் ஒரு யூதர். யூத தொண்டு நிறுவனங்களுக்கு அதிகமாக நிதியுதவி கொடுத்து வந்தார்.பல யூத தொண்டு அமைப்புகள் மெடாப் நிறுவனத்திற்கு அதிக அளவிற்கு பண முதலீடு செய்தன.மெடாப் மீது நம்பிக்கை வைத்திருந்த வக்கீல்கள்,டாக்டர்கள் மற்றும் அக்கௌன்ட்டென்ட்கள் மூலமாக மேலும் மூதலீடுகள் வந்து குவிந்தன.சில பல்கலைகழகங்களும் பணத்தை இவர் நிறுவனத்தில் மூதலீடு செய்ததை விதி என்று தான் கூற வேண்டும்.அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகின் பல நாடுகளில் இருந்து வந்த மூதலீடுகள் ஏராளம். ஆண்டிற்கு 10% முதல் 12% வரை முதலீட்டின் பெருக்கம் இருந்தது. பொருளாதாரம் நன்றாக இருந்தாலும் இல்லையென்றாலும் இந்த அளவு முதலீட்டின் மதிப்பு உயர்ந்தது எல்லோரையும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதைப் பற்றி மெடாப் "என் நிறுவனத்திற்கே உரிய தொழில் முறை ரகசியம். வெளியில் சொல்ல முடியாது" என்று கூறி கேள்வி கேட்டவர்களை சமாதான படுத்திவிட்டார்.நம்பக்கூடிய வகையில் பொய்யான கணக்கு விவர அறிக்கையை (account statement) மூதலீடாளர்களுக்கு அனுப்பினார்.மேடாபின் நம்பகத் தன்மை பல மடங்கு உயர்ந்தது. பணம் பண்ணத் தெரிந்த ஒரு பண்பாளர் என்ற உருவம் (இமேஜ்) அவருக்கு கிடைத்தது. உலக நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து வங்கிகள், மூதலீட்டு நிறுவனங்கள் மூலம் பண மழை பெய்தது. இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அமெரிக்கா பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. கடன் கிடைப்பது அரிதானது.மெடப்ப் நிறுவனத்தில் மூதலீடு செய்வது பெருமளவில் குறைந்தது.அதே சமயத்தில் மூதலீடாளர்களுக்கு கையிருப்பில் பணமாக தேவைப்பட்டது. ஒரே நேரத்தில் பல முதலீட்டாளர்கள் ஏழு பில்லியன் டாலர் பணத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினர். மேடாபிற்கும் அவர் நிறுவனத்திற்கும் பெரும் சிக்கல் உண்டானது.பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.மெடாப் தன் மகன்களிடம் தான் நடத்தி வந்தது "பாஞ்சீ திட்டமுறை" (Ponzi scheme) என்று ஒத்துக் கொண்டார்.

பாஞ்சீ திட்டமுறை என்பது முதல் சில மூதலீடாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்து நம்பக தன்மையை ஏற்படுத்தி, அதிக முதலீட்டையும்,மூதலீடாளர்களையும் கவர்வது.பின்னால் வரும் மூதலீட்டை வைத்து முன்னால் மூதலீடாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது.இந்த முறையில் மூதலீடு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்க வேண்டும்.இது நடை முறையில் சாத்தியமில்லை.இதை தான் மெடாப் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் செய்து வந்தார்.இதன் தோல்வியில் தனிமனிதர்கள்,தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பெருமளவில் பணத்தை இழந்தன.ஏழைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களின் பண இழப்பு தான் மிகவும் வருத்தம் தரக் கூடியது. எந்த தவறிலும் முழுவதும் பாதிக்க கூடியவர்கள் ஏழைகள் தான் என்பது மீண்டும் நிறுபனமாகி உள்ளது.இங்கிலாந்து,ஸ்பெயின்,ஜப்பான் போன்ற பல நாட்டு நிறுவனங்களின் இழப்பு பல பில்லியன் டாலர்களாக கணக்கிடப் பட்டுள்ளது.மெடாப் நியூயார்க்,ப்ளோரிடா,பிரான்ஸ் என்று பல இடங்களில் சொகுசு பங்களாக்களை வாங்கி அனுபவித்திருக்கிறார். பெரிய எல்லா வசதிகளும் கொண்ட படகு வாங்கி அதில் சமுதாயத்தின் முக்கிய புள்ளிகளுக்கு ஆடம்பரமான விருந்து கொடுத்து தனது நிறுவனத்திற்கு போதுமான அளவில் மூதலீடை பெற்றிருக்கிறார்.இன்றுள்ள இவருடைய சொத்தின் மதிப்பு 15 பில்லியன் என்று கணக்கிடப் பட்டுள்ளது.70 வயதான இவர் தண்டிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும்.இவரின் இந்த செயல் பல விடை காண முடியாத கேள்விக்களை எழுப்பியுள்ளது.

பங்குச் சந்தை பரிமாற்ற பாதுகாப்பு ஆணைக்குழு (securities exchange commission - SEC) என்ற அமெரிக்கா அரசின் நிறுவனம் தான் இதை போல நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும். 1999ல் இருந்து வந்த குற்றச் சாட்டுகளை சரியாக விசாரிக்கவில்லை இந்தநிறுவனம்.மேலும் SEC 2005 மற்றும் 2007 ஆண்டுகளில் "ஆடிட்" செய்து, மெடாப் நிறுவனத்தின் கணக்கில் எந்த குறையுமில்லை என்று சான்று கொடுத்தது.இதை உலகே ஆச்சிரியமாக பார்க்கிறது. SECன் தலைவர் கிறிஸ்டோபர் காக்ஸ் "இந்த குற்றம் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை" என்று கூறி இருக்கிறார்.முழு விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. புஷ் அரசு நிர்வாகம் செயல்பட்ட லட்சணத்திற்கு மேலும் ஒரு சாட்சி.இதில் வெளிநாட்டு அரசுகளின் மூதலீடு மேற்பார்வை அமைப்புகளின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தான் தனி மனிதனாக இந்த குற்றத்தை செய்ததாக மெடாப் கூறியுள்ளார். இது நம்பக் கூடியதாக இல்லை.போகப் போக தெரியும்.

இது போல் தவறுகள் நடக்க மூதலீடு செய்யும் பொது மக்களும், மூதலீட்டு நிறுவனங்களும் தான் காரணம். பொது மக்கள் விழிப்புணர்வு மிகவும் முக்கியம்.நண்பன் சொன்னான், மாமன் சொன்னார் என்று மூதலீடு செய்வது பெரிய தவறு. நடைமுறைக்கு ஒத்து வராத வட்டி விகிதங்கள் அறிவிக்கும் நிறுவனங்களை முழுவதும் நிராகரிக்கப் பட வேண்டும். இந்த மாதிரி குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும். பொருளாதார தாராள மயமாக்கப் பட்ட இன்றைய உலகில் பணம் உலகம் முழுதும் புழங்கும் போது,இழப்பும் உலகளவில் பரவி இருப்பது தவிர்க்க முடியாதது.மிகவும் உலகில் நம்பகத் தன்மை குறைந்து வருவதற்கு மேலும் ஓர் உதாரணம்.

பணம் படுத்தும் பாடு

சனி, 27 டிசம்பர், 2008

ஜன்னல் வழியே


பசுமையான நாட்களை நினைத்து

உருகிக் காயும் உதிர்ந்த இலைகள்

துளிர்விடும் நாள் தொலைவில் இல்லை

என்ற நம்பிக்கையில் கிளைகள்

நிர்வாணமான கிளைகள் மேல்

மோகத்தில் பெய்யும் பனிமழை

பூமியின் பந்தத்தால் கட்டுண்ட வேர்கள்

ஜன்னல் வழியே பார்க்கும் அவன்

ஜன்னல் வழியே

டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் - 2

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் பந்தில் ஆட்டத்தின் முடிவை எதிர் நோக்கி இருக்கும் ரசிகர்களின் மன நிலையில் காத்திருந்த தேடிரோஇட் மக்களை மகிழ்விக்கும் விதமாக வெளி வந்தது புஷ்ஷின் ஜெனரல் மோட்டார்ஸ் (ஜி.எம்) மற்றும் க்ரச்லேர் நிறுவனங்களுக்கான 13.6 பில்லியன் அரசின் கடனுதவி.மேலும் 4 பில்லியன் டாலர்கள் கடனாக பெறவும் வழி செய்யப்பட்டுள்ளது.அந்தமுடிவை வரப்போகும் அதிபர் ஒபாமாவிடம் புஷ் ஓப்படைத்திருக்கிறார். மார்ச் 15ம் தேதிக்குள் எடுத்த,எடுக்கப் போகும் நடவடிக்கைகளை அரசிடம் இந்த இரு நிறுவனங்களும் சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் அரசின் எதிர்கால முடிவுகள் அமையும். ஆனால் அதனுடன் வந்த கட்டுப்பாடுகள் கடுமையானவை.குறிப்பாக ஆட்டோ தொழிலாளர்களின் கூட்டமைப்பு தனது ஊழியர்களின் ஊதியத்தை அமெரிக்காவிலுள்ள ஜப்பானிய கார் நிறுவனங்களின் ஊதியத்திற்கு சமமாக மாற்றுவது, உதிரி பாகங்கள் அளிக்கும் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு பதிலாக முடிந்தளவு பங்குகளை கொடுப்பது, தன்னுடைய கடனை 2/3 பங்காக குறைப்பது,நடைமுறை செலவினங்களை கட்டுப் படுத்துவது முதலானவை முக்கியமானவைகள்.,."வேலை வங்கி" என்ற பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் அனுபவித்து வரும் சலுகையை முழுவதும் விட்டுக் கொடுக்க வேண்டும்.வேலை வங்கி என்பது வேலை இல்லாத போதும் பாதிக்கப் பட்ட தொழிலாளர்கள் 90% ஊதியத்தை பெறுவது.

ஜி.எம் க்கு 13,6 பில்லியனில் 9.6 பில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளது.உடனடியாக தொழிலாளர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை தொடங்கி சென்ற ஆண்டு செய்து கொண்ட ஓப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய உள்ளதாக ஜி.எம் இன் தலைமை நிர்வாக அதிகாரி ரிக் வெக்னர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் எந்த அளவிற்கு தியாகத்திற்கு தயாராக இருப்பார்கள் என்று தெரியவில்லை.சென்ற ஐந்து ஆண்டுகளில் இந்த கூட்டமைப்பில் 1 1/௨ லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்.மேலும் புதிதாக வேலைக்கு சேரும் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 14 டாலர் என்று ஊதியம் நிர்ணயம் செய்ய கூட்டமைப்பு சென்ற ஆண்டு ஒத்துக் கொண்டது.தொழிலாளர்களின் மன வலியை இரும்புத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் லியோ ஜெரல்ட் "வேலைக்கு போகும் முன் குளிப்பவர்களுக்கு அமெரிக்கா அரசு உதவும்,ஆனால் அதையே வேலைக்குப் பிறகு குளிப்பவர்களுக்கு செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.ஜி.எம் நான்கு வர்த்தகக் குறிகளை (brands) விற்கவும் முடிவுசெய்துள்ளது.மேலும் தற்போதுள்ள 96000 தொழிலாளர்களின் எண்ணிக்கையை 66000 ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்த கடனுதவியால் ஜி.எம் மீண்டும் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.ஜி.எம் இன் பங்குகள் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.ஒரு வேளை ஜி.எம் திவாலானால், அரசு கொடுத்த கடன் பணம் கூட திரும்ப வருவதற்கு சாத்தியமில்லை. இந்த நிறுவனத்தில் பங்குகள் வைத்திருப்பவர்களுக்கும் "வெறும் கை வெங்கட்ராமா" என்ற கதை தான்.

ஆனால் இந்த கெட்ட நேரத்திலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது.GMAC என்ற ஜி.எம் இன் கார்களுக்கு கடனுதவி வழங்கும் நிதி நிறுவனத்தை வங்கிகள் போல் பாவிக்க வேண்டும் என்று அரசிடம் கோரி இருந்தது. அதனை அரசு ஏற்றுக் கொண்டு அறிவுப்பு வெளியிட்டுள்ளது.அதனால் அமெரிக்கா அரசினால் சிக்கலில் தவிக்கும் நிதி நிறுவனங்களுக்கு ஓதுக்கப் பட்ட 700 பில்லியன் டாலர் பணத்திலிருந்து ஒரு குறிப்ப்பிட்ட தொகை கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் இந்த நிதி நிறுவனம் திவாலாகி விடுவதில் இருந்து காப்பாற்றப் பட்டுள்ளது.மேலும் ஜி.எம் கார்கள் வாங்குபவர்களுக்கு கடனுதவி அளிக்க முடியும். அதன் விளைவாக கார்களின் விற்பனை சரிவை தடுக்க ஏதுவாகும்.இதன் பயனாக ஜி.எம் இப்போது ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவிலிருந்து மீளும் சிறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

போர்ட் நிறுவனம் எந்த நிதி உதவியும் தற்போது தேவையில்லை என்று அரசிடம் கூறியுள்ளது. 2006ம் ஆண்டிலேயே தன்னுடைய சொத்துக்களை அடமானம் வைத்து கிட்டத்தட்ட 23 பில்லியன் டாலர்கள் கடனாகப் பெற்றது. அதை அன்று கேலி செய்தவர்கள் இன்று போர்ட் புத்திசாலிதனமாக செயல் பட்டதாக கூறுகின்றன.அடுத்த வருடம் அமெரிக்காவில் கார்களின் விற்பனை 20% குறையும் என்று கணிக்கப் பட்டுள்ளது.அந்த அளவிற்கு உற்பத்தியை குறைக்கவும், செலவினங்களை குறைத்தும் செயல்பட போர்ட் தயாராக இருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அலன் முல்லாலே கூறியுள்ளார். இருந்தாலும் எந்த எதிர்பாராத சூழ்நிலையை சமாளிக்க அரசிடம் 10 பில்லியன் டாலர்கள் கடன் பெறும் வசதியை கோரியுள்ளது.மேலும் 2009 மற்றும் 2010௦ம் ஆண்டுகளில் போர்ட் வெளியிட உள்ள புதிய கார்கள் தரமானதாகவும்,பெட்ரோலை குறைவாக உபயோகிப்பதாகவும் உள்ளது. இந்த கார்கள் வாடிக்கையாளர்களை போர்ட் பக்கம் திருப்பி இழுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இதனால் நூறு ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமிக்க போர்ட் நிறுவனம் இந்த சிக்கலில் இருந்து மீண்டு லாபத்தை ஈட்டும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

க்ரஸ்லெர் ஒரு தனியார் நிறுவனம். அதில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.4 பில்லியன் டாலர் கடனுதவி கிடைத்துள்ளது.கடன் கிடைத்துடனேயே அதனை திருப்பிக் கொடுப்பது கடினம் என்று அதனுடைய தலைமை நிவாக அதிகாரி நறேடெல்லி கூறியுள்ளார்.இந்த நிறுவனம் தனியாக செயல் பட்டு மீண்டும் லாப நோக்கத்துடன் திரும்புவது நடக்கக் கூடியதாகத் தெரியவில்லை. ஒன்று இந்த நிறுவனம் திவலாகவோ அல்லது வேறு நிறுவனத்துடன் இணைவதோ தான் எதிர் காலத்தில் நடக்கக் கூடியதாக அனுமானிக்க முடிகிறது.இந்த நிறுவனத்தின் சரித்திரத்தின் கடைசி அத்தியாயம் எழுதப் படுகிறதோ என்று தோன்றுகிறது.

அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்கவிருக்கும் ஒபாமா புஷ்ஷின் இந்த கடன் கொடுக்கும் முடிவை வரவேற்றுள்ளார். ஆனால் பதவி ஏற்றவுடன் ஒபாமா பலவிதமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். கார் நிறுவங்களின் தொழிலாளர் கூட்டமைப்பு தேர்தலின் போது அவருக்கு முழுமையான ஆதரவு கொடுத்தது நினைவிருக்கலாம். தொழிலாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில் இந்த நிறுவனங்களின் செலவினங்களை குறைத்து லாப நோக்கத்துடன் செயல் படும் நிலையை உருவாக்க வேண்டும். மிகவும் கஷ்டம்தான். என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தேட்டிரைட் மக்கள் வரும் புத்தாண்டை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மன அழுத்தத்துடன் எதிர்கொள்ளும் துரதிருஷ்டமான நிலையில் உள்ளார்கள்.

டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் - 2

வெள்ளி, 19 டிசம்பர், 2008

டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள்

டேட்டிராயிட் கார் தொழிற்சாலைகளின் துயரம் தொடருகிறது. நவம்பர் ஏழாம் தேதி போர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் என்ற இரண்டு நிறுவனங்களும் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும், ஜூலை,ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 14.6 பில்லியன் டாலர் அளவு பணத்தை கையிருப்பில் இருந்து கரைத்ததாகவும் அறிவித்தது.கிர்ரைச்ளர் (Chrysler) என்ற மூன்றாவது நிறுவனத்தின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது.இந்நிலைக்கு நிர்வாகக் கோளாறு,தொலைநோக்குப் பார்வை இல்லாதது, ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பின் (United Worker's Union) செயல்பாடுகள், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான மருத்துவச் செலவுகள், ஓய்வூதியம் போன்ற பல காரணங்கள் முன் வைக்கப்படுகிறது. இதோடல்லாமல் ஆண்டு மத்தியில் கடுமையாக உயர்ந்த கச்சா எண்ணை விலை மற்றும் அமெரிக்கா பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு இந்த நிறுவனங்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கி விட்டது.இந்த நிலையில் தான் அமெரிக்கா அரசாங்கத்தின் உதவியை நாடியது கம்பெனிகள்.


மூன்று கம்பெனியின் தலைமை நிர்வாகிகளும் இரண்டு முறை டேட்டிராயிட்யில் இருந்து வாஷிங்க்டனுக்கு யாசகம் கேட்டு படையெடுத்து ஆகிவிட்டது. முதல் முறை பண உதவி கிடைத்தால் அதை உபயோகிக்கும் முறைகளை பற்றி செனட் சபையில் சரியான விளக்கங்களை கொடுக்கத் தவறினார்கள். அதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளனார்கள் இந்த தலைமை நிர்வாகிகள்.முறையான செயல் திட்டத்துடன் வருமாறு திருப்பி அனுப்பப் பட்டனர். மீண்டும் டிசம்பர் 2ம் தேதி செயல் திட்டத்தை சமர்ப்பித்து, 34 பில்லியன் டாலர் பண உதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதில் ஜெனரல் மோட்டார்ஸ் இந்த ஆண்டு இறுதிவரை தான் கம்பெனியை நடத்த பணம் இருப்பதாக அறிவித்தது. உடனே அமெரிக்கா காங்கிரஸ் 15 பில்லியன் டாலர் உதவி கொடுப்பதற்கு வகை செய்யும் மசோதா ஒன்றை தயாரித்து அதற்கு புஷ்ஷின் ஆதரவையும் பெற்றது. பண உதவி மசோதாவை ஆதரிக்க ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு தன் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்க, ஆள் குறைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளை குடியரசுக் கட்சியினர் முன் மொழிந்தனர். அதனை தொழிலாளர் கூட்டமைப்பு முற்றிலுமாக நிராகரித்தது.மேலும் இந்த கம்பெனிகள் திவாலாகி விட்டோம் என்று அறிவித்து, கடுமையான சீர்திருத்தங்களை செய்து லாபத்தை அடைய வேண்டும் என்று பெரும்பாலான குடியரசுக் கட்சியின் செனேட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருதலானார்கள். அந்த மசோதா குடியரசுக் கட்சியனரின் ஆதரவு இல்லாததால் தோல்வியை தழுவியது. பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த தொழிலாளர்களும், கம்பெனியின் நிர்வாகிகளும் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர்.


ஒரு நாளைக்கு 200 மில்லியன் டாலர்கள் செலவு செய்யும் இந்த நிறுவனங்கள் "எதைத் தின்னால் பித்தம் தெளியும்" என்கிற பரிதாப நிலை.மசோதா தோல்வி அடைந்ததும், பொருளாதாரக் நிறுவனங்களின் சிக்கலை தீர்க்க அமெரிக்கா செனேட் அனுமதித்துள்ள 700 பில்லியன் டாலரில் இருந்து, 15 பில்லியன் பண உதவி செய்ய வேண்டும் என்று புஷ்ஷிடம் நேரடியாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.. புஷ்ஷும் அமெரிக்க நிர்வாகமும் இன்னும் முடிவெடுக்காமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. "ரோம் நகரம் எரியும் பொது நீரோ மன்னன் பிடில் வாசித்த" கதை தான்.இந்த நிறுவனங்களை திவாலாக விட்டால் அதனால் ஏற்படும் இழப்பு நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் அளிக்கும் பல தொழிற்சாலைகளில் வேலை இழப்பு ஏற்படும். இந்த தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள அத்தனை வியாபாரமும் பாதிக்கப்படும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.ஏற்கனவே மூச்சு திணறிக் கொண்டிருக்கும் அமெரிக்கா பொருளாதாரம் மேலும் மோசமடையும். கனடாவிலும் வேலை இழப்பு பெரிய அளவில் இருக்கும்.திவாலான கம்பெனியின் கார்களை வாங்க மக்கள் முன் வர மாட்டார்கள். ஒரு கார் வாங்கினால் ஏழு முதல் பத்து வருடம் வைத்திருக்க நேரிடும். கார் உற்பத்தி செய்த நிறுவனமே இல்லை என்றால், உதிரி பாகங்கள் கிடைக்காது. அந்த காரை விற்க முடியாது என பல சிக்கல்கள்.


ஜப்பானில் இருந்து 1980ல் கார்களை இறக்குமதி செய்து வந்த நிறுவனங்கள், இன்று அமெரிக்காவிலேயே கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. அவர்கள் நிலைமை மிகவும் மோசமாக இல்லை என்றாலும், உதிரி பாகங்கள் விநியோகிக்கும் நிறுவனங்கள் எல்லா கார் நிறுவனங்களுக்கும் பெரும்பாலும் பொதுவானவையே.அதனால் டேட்டிரோஇட் கார் நிறுவனங்களின் வீழ்ச்சி டொயோடா,ஹோண்டா மற்றும் நிசான் போன்ற நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும்.நிசான் நிறுவனம் ஜப்பானில் தன் உற்பத்தியை குறைக்கப் போவதாகவும்,500 தற்காலிக ஊழியர்களை இடை நீக்கம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. டொயோடா நிறுவனமோ ஜப்பான் மற்றும் இந்தியாவில் தன் விரிவாக்கத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. போர்ட் தன் தொழிற்சாலைகளுக்கு கிறிஸ்துமஸ் கால இரண்டு வார விடுமுறையை மூன்று வாரங்களாக நீட்டித்துள்ளது. கிர்ரைச்ளர் (Chrysler) ஒரு மாத விடுமுறையை அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் என்பது அமெரிக்காவின் முக்கியமான கலாச்சார திருவிழா. அதற்கு பரிசுப் பொருள்கள் வாங்கக் கூட பணமில்லாமல் தொழிலாளர்கள் அவதிப் படுகிறார்கள். முன்பெல்லாம் டேட்டிராயிட்ல் நண்பர்களைப் பார்த்தால் வேலை இருக்கிறதா என்று விசாரிப்போம். இன்று நிறுவனமே இருக்கிறதா என்று கேட்கும் நிலை.


இந்த கொடுமையான சூழ்நிலையை தற்காலிகமாக எதிர்கொள்ள புஷ் அரசு இந்த மூன்று நிறுவனங்களுக்கும் உடனடியாக பண உதவியை செய்ய வேண்டும். இடது சாரி,வலதுசாரி போன்ற மனப்பான்மையை மூட்டை கட்டி வைத்து, மனிதாபிமானத்துடன் அரசு செயல் பட வேண்டும். இந்த பண உதவியால் மூன்று கார் நிறுவனங்களின் பிரச்சனைகள் முழுவதும் தீர்ந்து விடாது. சிறிது மூச்சு விட நேரம் கிடைக்கும். மீண்டும் கிர்ரைச்ளர் (Chrysler) ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைவது குறித்து பேச்சு வார்த்தையை துவங்கி உள்ளது. கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்த நிறுவனங்கள் முன் வர வேண்டும். தரமான, பெட்ரோலை குறைந்த அளவில் பயன்படுத்தும், சுற்றுப் புற சூழலை அதிகம் பாதிக்காத, மிகவும் தரமான கார்களை உற்பத்தி செய்து மக்களை மீண்டும் கவர வேண்டும். தொழிலாளர் கூட்டமைப்பும் தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். முழுவதும் வேலை இழப்பதை விட, சில சலுகைகளை விட்டு கொடுத்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவது தான் விவேகம்.டேட்டிராயிட்ல் இன்றுள்ள மூன்று கார் நிறுவனங்கள் இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ மாறுமா? இல்லை டேட்டிராயிட் "கார்களின் நகரம்" என்ற பாரம்பரியத்தை இழக்கும் காலம் வந்துவிட்டதா?டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள்

வியாழன், 18 டிசம்பர், 2008

வைஷ்ணவ ஜனதோ

"வைஷ்ணவ ஜனதோ" என்ற காந்திக்கு மிகவும் பிடித்த குஜராத்தி புலவர் நரசிம்ம மேத்தா என்ற நரசையான் எழுதிய பாடலின் தமிழ் மொழி பெயர்ப்பு.

காந்தியின் ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தது

உண்மையான வைணவன்
ஒரு இயல்பான வைணவன் அவன் எண்ணங்களில்
அடுத்தவர் துன்பம் தன் துன்பமாகும்
அவன் சேவை செய்ய எப்போதும் தயாராக இருக்கிறான்,
அளவிற்கு அதிகமான பெருமையால்
ஒருபோதும் குற்ற உணர்வு இல்லாதவன்.
அவன் எல்லோருக்கும் தலை வணங்குபவன்,
யாரையும் வெறுக்காதவன்,
வார்த்தைகள் மற்றும் செயல்களிலும்
தூய்மையான எண்ணங்களை பாதுகாப்பவன்.
இப்படிப் பட்ட மகனின் தாய் ஆசிர்வதிக்கப்பட்டவள்
அவன் எல்லா பெண்களையும் தன் அன்னையைப் போல் வணங்குகிறான்.
அவன் வேறுபாடில்லாத சமநிலையை பாதுகாக்கிறான்
பொய்யால் அவனுடைய வாய் என்றும் கறை படாது
மேலும் அடுத்தவர் பொருளை தொடுவதும் இல்லை
பாசப் பிணைப்பால் கட்டிப் போட முடியாதவன்.
எப்பொழுதும் ராம நாமத்தில் இணக்கம்,
அவனுடைய உடம்பினுள்ளேயே எல்லா
திருத்தலங்களையும் சொந்தமாக்கிக் கொள்கிறான்.
அவன் ஆசை, ஏமாற்றம
விருப்பு, வெறுப்பு, சினம் இல்லாதவன்.

குஷ்வந்த் சிங் ஆங்கில மூலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தது.

கடவுள் போன்ற ஒரு மனிதன் என்பவன்,
அடுத்தவர்களின் வலியை உணர்பவன்
அடுத்தவர்களின் துன்பத்தை பகிர்ந்து கொள்பவன்
மேலும் பெருமையை வெறுப்பவன்
தன்னை அடியார்க்கு அடியாராக கருதுபவன்,
யாரைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட தீவினை பேசாதவன்
வார்த்தைகள், உடம்பு மற்றும் மனத்தால் சலனமில்லாமல் தீர்மானத்துடன் இருப்பவன்
அப்படிப்பட்ட பிள்ளையை பெறும் தாய் ஆசிர்வதிக்கப்பட்டவள்.
எல்லோரையும் சமமாக பாவிப்பவன், காமத்தை துறந்தவன்,
தன் தாயை கௌரவிப்பது போல் மற்ற பெண்களையும் மதிப்பவன்
அவன் நாக்கு இறுதி மூச்சு உள்ளவரை பொய்யின் சுவை அறியாது
அடுத்தவர்களின் உலக மோகப் பொருள்களை ரகசியமாக அடைய நினையாதவன்,
துறவின் பாதையில் நடப்பதால்
உலக மோகப் பொருள்கள் மேல் இச்சை இல்லாதவன்,
அவன் உதடுகளில் எப்பொழுதும் ராமனின் நாமம்.
எல்லா புனிதத் தலங்களையும் தன்னுள்ளே கொண்டவன்
பேராசை மற்றும் ஏமாற்றும் குணமற்றவன்,
காமத்தையும் சினத்தையும் வென்றவன்
அப்படிப்பட்ட மனிதன் மூலமாக துறவி நரசையானுக்கு கடவுளை ஒத்த தொலை நோக்குப் பார்வை இருந்தது,
அந்த மனிதன் வழியாக வருகின்ற தலைமுறைகள் அருள் பெறுவார்கள் என்று.

வைஷ்ணவ ஜனதோ

செவ்வாய், 9 டிசம்பர், 2008

மும்பை தாக்குதலும் பாகிஸ்தானின் நெருக்கடிகளும்

மும்பை நகரம் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாவது ஆண்டிற்கு ஒரு முறை வரும் நிகழ்வு போல் ஆகி விட்டது. இந்திய அரசின் மெத்தனப் போக்கு, பொறுப்பின்மை மற்றும் அலட்சியத்திற்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டு. தீவிரவாதம் தான் கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய நாட்டின் முக்கியப் பிரச்சனை என்று கூறி வந்த பிரதமர் நிர்வாகத் திறமையில்லாத சிவராஜ் படேலை உள்துறை அமைச்சராக தொடர்ந்து வைத்திருந்தது மன்னிக்க முடியாத குற்றம். கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கைகள் இருந்தும் அதனை உதாசீனப் படுத்தியதின் விளைவு ௨00கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்சேதம். நாட்டின் பாதுகாப்புப் படை (NSG) சம்பவ இடத்திற்கு வருவதற்கு 10 மணி நேரம் தாமதம், தொலை நோக்கி (telescopic) துப்பாக்கி இல்லாததால் பிணைக் கைதிகளை பாதுகாப்புப் படையினரே தாக்கும் அபாயம்,மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அரசியல்வாதிகளின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் மக்களுக்கு அரசாங்கம் மற்றும் அரசியல் வாதிகளின் மேல் இருந்த கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் இழந்து வெறுப்பு மேலிட்டது. அதனை கேரளா முதலமைச்சர் விவகாரத்தில் தெளிவாக காண முடிந்தது.மேடைக்கு மேடை இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்று முழங்கிய உள்துறை பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கடைசியில் பெரிய நாமம் போட்டது தான் மிச்சம்.

மும்பை போன்ற தீவிரவாத தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகும் நகரங்களில் தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவு இல்லாதது பெரிய அதிசியம் தான். தீவிரவாத தாக்குதல்களின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய பயிற்சி, சந்தேகப் படும் நபர்களைக் கண்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அணுகு முறை முதலியவைகள் விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் தீவிரமாக முயல வேண்டும்.மேலும் உளவியல் ரீதியாக பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் முன் வர வேண்டும். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றதோடல்லாமல், பிணைக் கைதிகளை வைத்து மூன்று நாட்களுக்கு ஆடிய வெறியாட்டம் உலக அளவில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை கையாளும் முறையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல நாடுகளின் தவறான வெளிநாட்டுக் கொள்கை, சந்தர்ப்பவாதம் காரணமாக மிகவும் சிக்கலாகி விட்ட இந்த தீவிரவாத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுவதுமாக இந்த நூற்றாண்டில் ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. எனவே இந்தியா தன்னுடைய உள்நாட்டு பாதுகாப்பில் மிக அதிகம் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.குறிப்பாக உளவுத் துறையை பலபடுத்துதல், பலவிதமான உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் பிரதானமானது. மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழும் பரிதாப நிலை தான்.தீவிரவாதமே கொடுமை என்றால் அதனை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்களை என்ன செய்ய. அவர்களுடன் ஓர் ஆக்கப்பூர்வமான உரையாடலில் மாற்றுக் கருத்து சிந்தனையாளர்கள் ஈடுபட்டு ஒரு தெளிவை ஏற்படுத்துவது தீவிரவாத எதிர்ப்பை வலுப்படுத்த உதவும்.

தீவிரவாத தாக்குதலுக்குப் பின் தொலைக் காட்சியில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இந்த தாக்குதலுக்கு "வெளிநாட்டு சக்திகள்" தான் காரணம் என்று பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியது இன்று விசாரணையில் உண்மையாகிவிட்டது. பாகிஸ்தான் பல்முனை தாக்குதலுக்கு உள்ளான ஒரு பரிதாபமான நாடக உள்ளது. அதன் மேற்குப் பகுதியில் தலிபான்களால் தொல்லை. கிழக்கில் காஷ்மீர், பிரச்சனை. உள்நாட்டில் அடிக்கடி நடக்கும் வன்முறைகள். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இன்றுள்ள சிவில் அரசாங்கம் நேரடியான ஈடுபட்டதற்கு சாட்சி இருப்பதாக தெரியவில்லை. இந்த ஈனச் செயலால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அரசு அதனுடைய உளவுத் துறை தலைவரை இந்தியா அனுப்ப முதலில் சம்மதித்தது. ஆனால் இன்னும் உள்நாட்டு விவகாரத்தில் வலுவான ஆளுமையை வெளிப்படுத்தும் பாகிஸ்தானின் ராணுவ எதிர்ப்பால் பாகிஸ்தான் அரசு பின்வாங்கியது.பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதன் உளவுத் துறைக்கு தீவிரவாத இயக்கங்களுடன் உள்ள தொடர்பு உலகறிந்த ஒன்று. இராணுவம் ஆதரித்த தீவிரவாத இயக்கம் தான் மும்பை தாக்குதலை திட்டமிட்டு அதனை செயல் படுத்தியது என்பதற்கான ஆதாரங்கள் வலுக்கிறது. இராணுவம் தனக்கு எந்த பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லை என்று உடனே அறிவித்து அதை செயல் படுத்தினால் இந்திய பாகிஸ்தான் உறவு வலுப் பெற உதவும். இந்தியா தன்னிடம் கிடைத்த தடயங்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும். எல்லா லக்ஷர் தோய்பா தீவிரவாத பயிற்சி முகாம்களையும் மூட வேண்டும். அந்த இயக்கம் வேறு எந்த பெயரிலும் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். எல்லாவற்றிகும் மேலாக பாகிஸ்தான் மக்கள் இந்த தீவிரவாத இயக்கங்களையும் முழுவதும் நிராகரிப்பது அவசியம். பாகிஸ்தானைத் தாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இதுவரை இந்தியா அரசு மிகவும் பொறுப்பான முறையில் நடந்து கொண்டுள்ளது. பாகிஸ்தானின் சிவில் அரசு மிகவும் வலுவிழந்து உள்ளது. அதற்கு மேலும் நெருக்கடி கொடுப்பது எதிர்மறை விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் உள்ள பாகிஸ்தானின் பொருளாதரத்தை மனதில் கொண்டு தீவிரவாதிகளை ஆதரிப்பதால் தன் நாட்டிற்கே பெரிய தீங்கிழைக்கிறோம் என்பதை பாகிஸ்தான் ராணுவமும், உளவுத் துறையும் உணர வேண்டியது அவசியம். இறுதியாக இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இந்த தீவிரவாத கெடுதலை முறியடிக்க வேண்டும்.

மும்பை தாக்குதலும் பாகிஸ்தானின் நெருக்கடிகளும்