வியாழன், 3 டிசம்பர், 2009

இளையராஜா என்ன பாவம் செய்தார் சா(ரு)ர்?

கே.வி மகாதேவன், எம்.எஸ்.வி என்று பெரும் மேதைகள் தமிழ் சினிமா துறையில் இசை சக்ரவர்த்திகளாக ஆளுமை செய்து கொண்டிருந்த காலத்தில், புதுமையான இசையுடன் புயலென நுழைந்து தமிழ் சினிமா இசையின் போக்கையே மாற்றி அமைத்த பெருமை இளையராஜாவையே சாரும் என்பது உலகறிந்த ரகசியம். வித விதமான எத்தனையோ அழகான மெட்டுக்கள் போட்டு கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்ற இளையராஜா ஒரு சகாப்தம். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சமீப காலமாக மலையாள உலகத்தை கொடிதூக்கிப் பிடிக்கும் போக்கை சில பத்திரிகை கட்டுரைகளும், சில எழுத்தாளர்களும்.கடைபிடிக்கிறார்கள். அதில் தவறில்லை. அது உண்மையாகவே இருக்கட்டும். தமிழர்கள் எதற்கும் உபயோகம் அற்றவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். இந்த சூழலிலும் சில தமிழர்கள் நமக்குப் பெருமை சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அதில் இளைய ராஜாவுக்கு ஒரு முக்கியப் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது.

எந்த துறையிலும் எப்போதுமே வெற்றி என்பது நடக்காத ஒன்றே. உலகத்திலேயே சிறந்த மட்டையாளர் என்று கூறப்படும் பிரட்மன் கூட எல்லா ஆட்டங்களிலும் சதம் அடிக்க வில்லை. அதேபோல் ஓர் எழுத்தாளர் எழுதும் எல்லா பத்திகளும், நாவல்களும், கட்டுரைகளும் பிரபலமடைவதில்லை. ஏதோ ஓரிரு கோணங்களில் (degrees) வெற்றி அடைய முடிகிறது என்பது தான் நடைமுறையில் காண முடிகிறது.அதே போல் சில படங்களில் இளையராஜாவின் இசை ரசிக்கத்தக்கதாக இல்லை என்றால், உடனே அவரை ஏளனம் செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இளையராஜா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லை. ஆனால் பெரும்பாலான படங்களில் அவர் இசை பல உள்ளங்களை கொள்ளை கொண்டதோடில்லாமல், அவரது திறமையை முழுவதும் வெளிப்படுத்தியது.

குமுதத்திற்கும், சாருவுக்கும் பிரச்சனை என்றால் அதில் இளையராஜாவை ஏன் இழுக்க வேண்டும்? எழுத்தாளர்களை வைத்து பத்திரிக்கை நடித்தி வரும் குமுதம், ஓர் எழுத்தாளரையே "ஜோக்கர்" என்று எழுதியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில் அதற்கு பதில் எழுதிய சாரு இளையராஜாவைப் பற்றி எழுதும் போது அவருடைய 25 ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஏதோ ஒரு ஹிந்திப் படத்தை மேற்கோள் காட்டியுள்ளது பெரிய நகைச்சுவை தான். குமுதம் போன்ற பத்திரிகை செய்திக்காக, ஒரு பெரிய வாசகர் கூட்டத்தையே வைத்திருக்கும் சாரு இப்படி எழுதுவது அவசியமே இல்லை.

சாருவைப் பற்றி குமுதத்தின் அவதூறு மற்றும் சாருவின் இளையராஜா மீதான தாக்குதல் அவரவர்களின் வாசகர் வட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்து விடாது.