திங்கள், 21 செப்டம்பர், 2009

இந்த வாரக் கணக்கு - 22


ஒரு சீட்டுக்கட்டில் 52 சீட்டுகள் உள்ளன என்பது தெரிந்ததே. Ace- இன் மதிப்பு 11 எனக் கொள்வோம்.ஜாக்,ராணி மற்றும் ராஜா சீட்டின் மதிப்பு 10 என்று வைத்துக் கொள்வோம்.மற்ற சீட்டுக்களுக்கு மதிப்பு அதில் உள்ள எண்ணின் மதிப்பாகும்.

கேள்வி இதுதான்:

மூன்று சீட்டுக்களை திரும்ப வைக்காமல், முதல் எடுத்த சீட்டின் மதிப்பை விட அடுத்த சீட்டின் மதிப்பு குறைவாக இருக்கும் படியும், மூன்று சீட்டுகளின் எண்களைக் கூட்டினால் 12 அல்லது அதற்கு குறைவான மதிப்பு கொண்டிருக்கும் படியும் இந்த சீட்டுக்கட்டில் இருந்து எடுக்க நிகழ்தகவு (probability) என்ன?

பிங்கின் புதிய "மறைமுக" (virtual) தேடும் வசதி

தேடு பொறியில் கூகுளின் ஆதிக்கத்தைக் குறைத்து. அதிக வருமானம் பெறுவதற்கு மைச்ரோசபிட் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து வருகிறது. அதில் யாகூவுடன் செய்து கொண்ட உடன்பாடு மிகவும் முக்கியம்.மேலும் தரவுகளை வரிசைப் படுத்தி கொடுக்க உதவியாக "உள்பிராம் ஆல்பா" (Wolfram Alpha) தேடுபொறியின் உதவியையும் பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை மைச்ரோசபிட் செய்து கொண்டது. அதற்கு அடுத்ததாக புதிய "மறைமுகத் தேடல்" வசதியை பிங் தேடுபொறியில் மைச்ரோசபிட் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த புதிய தேடல் எப்படி செயல் படுகிறது என்று பார்ப்போம்.

பிங்கின் மறைமுக வலைத்தளத்திற்குச் சென்றால், முகப்பில் படங்கள் இருக்கிறது.அதாவது படத்தை வைத்து தேடும் முறை. ஒரு சமீபத்திய புத்தகத்தின் மதிப்புரைப் படிக்கிறீர்கள். ஆனால் புத்தகத்தின் பெயர் மறந்து விட்டீர்கள்.இப்போது பிங்கின் "மறைமுக" தேடலை பயன் படுத்தி பொருட்கள் வாங்குதல் (shopping) என்ற இடது பக்கத்தில் உள்ள காட்சிவகைப்பட்டி (display menu) உபயோகித்து "புத்தகங்கள்" என்ற படத்தை கொண்டு புத்தகங்களின் பட்டியலைப் பெறலாம். கீழே உள்ள படத்தில் பட்டியலைப் பாருங்கள்.மேலும் இந்த தேடலின் மூலமாக சினிமாவாகப் படமாக்கப் பட்ட புத்தகங்களையும் கண்டறியலாம். படத்தில் காணலாம்.அதே போல் "உலகத் தலைவர்கள்"(world leaders) என்ற காட்சிவகைப்பட்டி அழுத்தினால் கீழே உள்ளது போல உலகத் தலைவர்களின் படங்கள் காட்டப்படுகின்றன.மேலும் அதிலிருந்து மன்மோகன் சிங் படத்தை அழுத்தினால், அவரைப் பற்றிய வலைத் தளங்கள் பட்டியலிடப் படுகின்றன. அதிலும் இடது பக்கத்தில் மற்ற இந்தியத் தலைவர்களின் பெயர்கள் தேடுவதற்கு வசதியாக வரிசைப் படுத்தப் படுகின்றன. இது ஒரு மிக நல்ல முயற்சியாகவும், இந்தத் தேடுதல் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

நீங்களும் இங்கே முயற்சி செய்து பாருங்களேன்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

கூகிள் "squared" உபயோகங்கள்கூகிள் எத்தனையோ புதிய முயற்சிகளை செய்து வருகிறது. அதில் சமீபத்திய ஒன்று தான் "கூகிள் சதுரம்" என்ற இந்த தேடும் தளம்.இன்று வலைத்தளங்களின் எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை என்று ஆகிவிட்டது. இணையத்தில் கிடைக்காத விஷயங்களே இல்லை. இணையத்தில் உள்ள தரவுகளை அழகாக திரட்டி நெடுவரிசை மற்றும் வரிசையில் ஒருங்கிணைத்து ஓர் எக்ஸ்செல் வடிவில் கக்குகிறது இந்த தளம். நான் "cancer" என்று கொடுத்து "சதுரம்" ஆக்கச் சொன்னதில் கிடைத்த முடிவு கீழே:இந்த எக்ஸ்செல் வடிவில் வரும் தரவுகளை நீங்கள் சேமித்து வைத்து பின்பு பயன்படுத்தவும் முடியும். மேலும் உங்களுக்கு வேண்டிய தரவுகள் இல்லை என்றால் அதனையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். தரவுகள் அதிகமாக அதிகமாக இதைப் போன்று தரவுகள் திரட்டும் தன்மை அதிகரிக்கும். தமிழ் தேடுபொறிகள் இதனை செயல்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தான் நினைக்கிறேன்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

இந்த வாரக் கணக்கு - 21வேலு ஓர் இனிப்புக் கடைக்குச் சென்று ரூபாய் நூறு மதிப்பிலான மூன்று விதமான இனிப்புகள் வாங்கினான். அந்த இனிப்புகள் முறையே போளி,மைசூர்பாகு,ரசகுல்லா. ஒவ்வொரு இனிப்பு வகையிலும் குறைந்த பட்சம் ஒன்றாவது வாங்கினான்.ஒரு போளியின் விலை 50 பைசா. ஒரு மைசூர்பாகு ரூபாய் மூன்று.ஒரு ரசகுல்லா விலை ரூபாய் பத்து.மூன்று வகையான இனிப்புகளும் சேர்த்து நூறு இனிப்புகள் இருந்தன.

கேள்வி இதுதான்:

நூறு இனிப்புகளில் எத்தனை போளி, எத்தனை மைசூர்பாகு மற்றும் எத்தனை ரசகுல்லாக்கள் இருந்தன.

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ஓர் ஆசிரியரின் நினைவாக....

ஒவ்வொரு மனிதனின் முன்னேற்றத்திலும்,உயர்விலும் எத்தனையோ சக மனிதர்களின் பங்கு நிச்சியம் இருக்கும்.அதை உணர்ந்து அந்த மனிதர்களின் நினைவில் காலச் சக்கரத்தை பின் தள்ளிப் பார்த்தால் அதில் கிடைக்கும் உவகைக்கு அளவே இல்லை எனலாம். என் வாழ்க்கை பயணத்தில் அப்படி மறக்க முடியாத எத்தனையோ மனிதர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அந்த வகையில் ஆசிரியர் தினத்தை ஒட்டி என் ஆசிரியர் ஒருவரின் நினைவாக இந்த இடுகை.நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பத்தாம் வகுப்பில் கணிதம்,இயற்பியல்,வேதியல் போன்ற ஏதாவது ஒரு பாடத்தை விருப்பப் பாடமாக எடுக்க வேண்டும். கணிதம் என்றால் இங்கு "அல்ஜீப்ரா ஜாமெட்ரி". ஏதோ காரணத்தினால் அந்த காலத்தில் கணிதம் விருப்பப் பாடமாக எடுப்பவர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ற தவறான எண்ணம் இருந்தது.அது மாணவர்களுக்கும்,பெற்றோருக்கும் பொருந்தும. நல்ல வேளை இன்று அப்படி இல்லை. அந்த தவறான எண்ணத்தினால் அல்ஜீப்ரா ஜாமெட்ரி விருப்பப் பாட வகுப்பில் முதல் நாள் குறைந்தது 65 மாணவர்கள் வந்தமர்ந்தார்கள்.வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியர் எல்லோரையும் நோட்டம் விட்டுக் கொண்டே நேரே கரும்பலகையை நோக்கிச் சென்றார். x,y,a,b அது இது என்று அந்த வகுப்பு முடியும் வரை பின்னி எடுத்து விட்டார்."ஏலே இந்த சார்வாள் கொளப்புதார்லே" என்று சில மாணவர்கள் வேறு விருப்பப் பாடத்தை சென்றடைந்தார்கள்.அடுத்த நாளும் இந்த கதை தொடர இறுதியில் 35 மாணவர்கள் தான் கணிதப் பாடத்தில் எஞ்சி நின்றனர்.

அந்த இரண்டு நாளைக்குப் பிறகு அவர் பாடம் நடத்திய விதம் மிக ரசிக்கத் தக்கதாக இருந்தது."எழுத்து அறிவித்தவன் இறைவன்" என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.அவர் கற்பித்த எத்தனையோ கணித நுணுக்கங்கள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. தினமும் வீட்டுப் பாடம் (Home work) கொடுத்து அதனை சரி பார்த்து, மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வகுப்பை நடத்திச் சென்ற விதம் இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.நான் இன்று ஒரு நல்ல நிலைமையில் இருப்பதற்கு இந்த ஆசிரியரின் பங்கு மகத்தானது.அவருக்கு இந்த இடுகையை மனமார சமர்பிக்கிறேன்.நான் பாளையம்கோட்டையில் உள்ள தூய யோவான் (St.John's) உயர் நிலைப் பள்ளியில் படித்தேன்.அந்த நல்லாசிரியர் பெயர் திரு.ஆசீர்வாதம்.மனைவி கிடைப்பது மட்டும் இறைவன் கொடுத்த வரமில்லை, நல்ல ஆசிரியர் கிடைப்பதும் இறைவனின் வரம் தான். இந்த இடுகையைப் படிக்கும் போது உங்களின் ஆசிரியர் நினைவு வருவது தவிர்க்க முடியாதது.

வியாழன், 3 செப்டம்பர், 2009

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஓர் இனிய மாலைப் பொழுது

ஜெயமோகனும் நானும்எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அமெரிக்க பயணத் திட்டத்தை அவர் வலைப் பக்கத்தில் பார்த்தவுடன், அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு இருக்கும் என்று தோன்றியது வீண் போகவில்லை.அருள் பிரசாத் என்ற அருமையான மனிதரின் முயற்சியில் ஆகஸ்ட் 25 ம் நாள் "ஜெயமோகனுடன் வாசகர்கள் சந்தித்து உரையாடல்" (டெட்ராயிடில்)ஏற்பாடாகியது.இந்த சந்திப்பு நடைபெற்ற இடம், பிரபல நாவலான "கல்லுக்குள் ஈரம்" எழுதிய ரா.சு.நல்லபெருமாள் அவர்களின் மகள் அம்மு சுப்ரமணியம் அவர்களின் வீடு. நானும் அம்முவின் கணவர் சுப்ரமணியமும் சிறு வயதில் பாளையங்கோட்டை மகாராஜ நகரில் அருகருகில் வசித்தவர்கள் என்று அறிந்தவுடன் பரஸ்பர மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


நான் ஜெயமோகனை சந்தித்த போது அனந்த், அண்ணாமலை மற்றும் அருளின் மனைவி அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.அவர் மிகவும் இயற்கையான புன்னகையை அணிந்து வரவேற்று அறிமுகப் படுத்திக் கொண்டது, ஒரு சுமூகமான சூழ்நிலையை அங்கு ஏற்படுத்தியது.இதுவரை அமெரிக்க விஜயம் மிகவும் ரசிக்கத்தக்க,வெற்றிகரமான ஒன்றாக இருந்ததாக கூறினார்.


அனந்த் பகவத் கீதையைப் பற்றி கேட்டவுடன், ஜெயமோகனுக்கு திருநெல்வேலி அல்வா சாப்பிட்டது போல் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.பொறுமையாக நல்ல விளக்கம் கொடுத்தார்.அதற்குள் இந்து மதம் பௌத்த மதத்தை இந்தியாவில் அழித்ததா என்ற கேள்வி எழுந்தது. அந்த விவாதத்தின் போது ஜெயமோகன் இந்து மதம் நுண்கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது அதனுடைய வளர்ச்சிக்கும்,நிலைத்தலுக்கும் ஒரு முக்கிய காரணியானது என்ற கருத்து கவனிக்கக் கூடியதாக இருந்தது.ஜெயமோகனுடைய உரையாடலில் அவருக்கு "அத்வைத" சித்தானந்தத்தின் மீது உயர்வான கருத்து இருப்பது தெரிய வந்தது.


தன்னுடைய இந்து மதத்தைப் பற்றிய பார்வை வரலாற்று நோக்குடையது என்றும், ஆனால் சோவின் அணுகுமுறையில் அது இல்லை என்பது பெரிய வேற்றுமை என்றார் ஜெயமோகன். ஜெயமோகனுக்கு இந்து ஞான மரபில் நம்பிக்கையும்,கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமையும், எனக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சுப்பிரமணியம் சந்திரசேகரை நினைவு படுத்தியது. சந்திரசேகர் தன்னை ஒரு நாத்திகவாதி என்று சித்தரித்த போதும், பகவத் கீதையை தினமும் படிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்திருக்கிறார்.மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்.


ஜெயமோகனுடைய படைப்புக்களைப் பற்றி பேச்சு திசைமாறிய போது பீர்டினா சலீம் என்ற அமெரிக்கப் பல்கலைகழகம் ஒன்றில் வேலை பார்க்கும் ஆங்கிலக் கவிஞர் வந்தார்.அவருடைய ஓர் ஆங்கிலக் கவிதை புத்தகத்தை ஜெயமோகனுக்குப் பரிசளித்தார்.பின்பு அவருடைய படைப்புக்களைப் பற்றி கேட்டறிந்தார்.வெவ்வேறு மொழிகளில் எழுதும் இரண்டு எழுத்தாளர்கள் சந்திப்பு ஒரு புதுமையான அனுபவம்.

ஜெயமோகன் பீர்டினா சலீம்இதற்கு நடுவே அம்மு அவர்களின் உபயத்தால் அருமையான உணவு பரிமாறப்பட்டது. அம்முவும்,சுப்ரமணியமும் வந்தவர்களை உபசரித்த விதம் விருந்தோம்பலுக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

அம்முவும்,சுப்ரமணியமும் (அமர்ந்திருப்பவர்)


அலமேலு மங்கை என்று பெயர் வைத்த தன் தந்தை தன்னை அம்மு என்று அழைத்ததாகக் கூறினார் அம்மு. உடனே ஜெயமோகன் ஜெயலலிதாவிற்கு அம்மு என்ற ஒரு பெயர் உண்டு என்றார்.ஜெயலலிதாவுடன் ஒப்பீடா என்று விளித்தார் அம்மு. வேதாந்தம், சித்தாந்தம், கவிதை, படைப்புகள் என்று ஆழமான விஷயங்களில் இருந்து நகைச்சுவையை நோக்கி உரையாடல் நகர்ந்தது.சினிமா உலகில் எம்.ஜி.யார் சின்னவர் என்றே அறியப்படுவார் என்ற ஜெயமோகன், எம்.ஜி.யாரைப் பற்றி சினிமாத் தொழிலாளர்கள் மிகவும் உயர்வாகப் பேசும் பல சம்பவங்களைக் கூறினார்.(அதைப் பற்றி அவரே விரிவாக எழுதுவார் என்று நம்புவோம்.Let us hear from horse's mouth).


இறுதியாக ஜெயமோகனிடம் விடை பெறும் போது எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் "வண்ண நிலவனைப்" பற்றி தாங்கள் எழுத வேண்டும் என்ற என் வேண்டுகோளுக்கு அவர் சம்மதித்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.வண்ண நிலவனைப் பற்றிய எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் உயிர்மைக் கட்டுரை ஆகச் சிறந்தது என்றால் மிகையாகாது.தமிழ கூறும் நல்லுலகம் வண்ண நிலவனுக்கு பரிசுகளும்,பாராட்டுகளும் கொடுத்து கௌரவிக்கவில்லை என்ற எண்ணம் என்னைப் போன்ற அவர் வாசகர்களுக்கு இருப்பது நியாயம் தான்.அவருக்கு அடுத்த தலைமுறை எழுத்தளார்களான ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்றோர் அவரை அங்கீகரித்தல் ஒரு சிறப்பான விஷயம் என்று கருதுகிறேன்.

எந்த எழுத்தாளருக்கும் வாசகர் வட்டம் மாறலாம்.வாசகனும் குறிப்பிட்ட எழுத்தாளரை கடந்து செல்லலாம்.எழுத்தின் மூலம் இருக்கும் தொடர்புடன், வாசகனாக நேரில் பார்த்து எழுத்தாளருடன் உரையாடுவது ஓர் இன்பமான அனுபவம் என்று தெரிந்து கொண்டேன்.
சமகால பிரபலமான எழுத்தாளரை நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியான ஒன்றென்றால், பாளையங்கோட்டை நண்பர்களுடன் புதிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெற்றது ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.