அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 டிசம்பர், 2014

இயக்குநர் கே.பாலசந்தர் நினைவில் ..

இயக்குநர் கே.பாலசந்தர் ஒரு முழுமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து சென்றுள்ளார். இருந்தாலும் ரொம்பவுமே வருத்தமாக இருக்கிறது அவர் படைப்புகள்  எனக்கு மிகவும் பிடிக்கும்.குறிப்பாக தப்புத் தாளங்கள், அவர்கள், நிழல் நிஜமாகிறது.அவர் படங்களின் பாடல்கள் மிக அருமையாக இருக்கும். வி.குமார், M.S விஸ்வநாதன்  , இளையராஜா மற்றும் A.R. ரஹ்மான் வரை எல்லா இசை அமைப்பாளர்களையும் நன்றாக பயன்படுத்தியிருப்பார். நிழல் நிஜமாகிறது சினிமாவில் இரண்டே பாடல்கள் தான். தேன் சுவை. உன்னால் முடியும் தம்பி பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. டூயட்டிலும் சௌக்கியமான இசை.

தப்புத் தாளங்கள் சினிமாவில் ரஜினியின் தம்பி சரிதாவைப் பார்த்து விட்டு போன செய்தி ரஜினிக்குத் தெரிந்தவுடன் வரும் காட்சியில் , ரஜினியும் ,சரிதாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். ஒரு காட்சியில்  வந்தாலும் கமல் அசத்தியிருப்பார்.   "நாய் வித்த காசு குறைக்கும்' இது" நினைவிருக்கிறதா?



அவர்களில் ரஜினியை சாடிஸ்ட் ரோலில் மிளிர வைத்திருப்பார் கே.பி. நிழல் நிஜமாகிறதில் கம்பன் ஏமாந்தான் பாடலில் கமல் நடிப்பும், இலக்கணம் மாறுதோ பாடலில் சுமித்ரா நடிப்பும் இன்றும் கண்களில் நிற்கிறது. ஆனாலும் ஷோபா எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுருப்பார்.

பாமா விஜயம் சினிமாவில் நடுத்தர வர்க்கத்தினரின் பகட்டை வெளிப்படுத்தியிருந்த விதம் அற்புதம்.

நாகேஷை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக பரிமளிக்க வைத்ததில் கே.பி யின் பங்கு மிக முக்கியம்.

சின்னத்திரையில் "இரயில் சிநேகம்" என்ற தொடரில் டைட்டில் பாட்டாக வந்த "அந்த வீணைக்குத் தெரியாது அதை செய்தவன் யாரென்று" சஹானா ராகப் பாடல் எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம். எல்லா பிரபலங்களுக்கும் அவர்கள் துறையில் கோலோச்சும் கால கட்டம் உண்டு. கே.பி யும் ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாத் துறையில் கோலோச்சினார்.இன்று அவர் நம் மத்தியில் இல்லை என்பது வருத்தம் தான். 

வியாழன், 3 ஜனவரி, 2013

வயலின் மேதை எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நினைவில்

வயலின் மேதை எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் மன வருத்தமாக இருக்கிறது. ஒரு சகாப்தத்தின் முடிவு. இவர் தன் தந்தையாரிடம் வயலின் கற்றுக் கொண்டார். ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக சங்கீத முறைகள் இரண்டிலும் முழுமையான பயிற்சியும், ஞானமும், திறமையும் பெற்றவர்.



சென்னையில் படிக்கும் சமயம் இவருடைய பல கச்சேரிகளை கேட்கும் வாய்ப்பு பெற்றேன். சில மாதங்கள் சென்னை விவேகானந்தா கல்லூரியில்  பகுதி நேர ஆசிரியர் பணி செய்து வந்தேன். அப்போது மயிலாபூரில் மாலையில் செல்லும் சமயம் எம்.எஸ்.ஜி அவர்கள் நெற்றியில் பட்டை, முகத்தில் புன்னைகை சகிதம் கையில் ஒரு மஞ்சள் பையுடன் ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிரில் காய்கறி வாங்கிக் கொண்டிருப்பார். வணக்கத்திற்கு புன்முறுவலுடன் ஒரு வணக்கம். கச்சேரிகளிலும் அதே புன்முறுவலைக் காணலாம். பரூர் வழி வயலின் மகுடத்தில் ஒரு ஜொலிக்கும் வைரம். சென்ற வருடம் அவர் பத்ம பூஷன் விருது வாங்கிய போது ஹிந்துவில் வந்த அவருடைய பேட்டி அருமையான ஒன்று.

அவர் தனி வயலின் கச்சேரிகள் அமிர்தம் தான். அவருடைய வயலின் பக்க வாத்தியம் தனக்குத் தான் தெரியும் என்பது போல் இல்லாமல் அன்று பாடுபவருக்கு உறுதுணையாகவும், அதனை மேம்படுத்தும் வகையிலும் இருக்கும்.ஒரு கச்சேரியில் என் அருகில் அமர்ந்திருந்த முதியவர் அருமையான சங்கதிகள் விழும் இடங்களில் செல்லமாக எம்.எஸ்.ஜி யைத் திட்டிக் கொண்டே ரசித்தது இன்றும் நினைவில் உள்ளது.

அவர் வாசிப்பைப் பற்றி என்ன சொல்ல? திருநெல்வேலி அல்வாவை சாப்பிட்டால் தான் அதன் சுவை  தெரியும்.  ருசி மறக்கவும் மறக்காது.

எம்.எஸ்.ஜி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

அவர் வாசித்த காணொளி ஒன்று.

புதன், 15 டிசம்பர், 2010

கிரிக்கெட் வீரர் T.E. Srinivasan நினைவாக - ஆற்றலின் இயலாமை


T.E. Srinivasan என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரை நினைவிருக்கலாம்.இவர்

ஒரே ஒரு டெஸ்டில் தான் இந்தியாவிற்காக விளையாடி இருக்கிறார். ஆனால் மிகச் சிறந்த

மட்டையாளர். அந்த காலத்தில் இருந்த "கோட்டா" முறையினால் இந்திய அணியில்

தொடர்ந்து இடம் பெற முடியாமல் தன் இடத்தை கோட்டை விட்டவர். மிகவும்

தன்னம்பிக்கை உடையவர்.இவரைப் பற்றி இங்கிலாந்தின் முன்னால் கேப்டன் அர்த்ரடன் தன்

புத்தகத்தில் மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். இவர் விளையாடி நான் நேரில் பார்க்கும் வாய்ப்பு

இரண்டு முறை கிடைத்தது. இவர் சென்ற வாரம் மூளைத் தொற்று நோயால் காலமானார்.

ஏதோ ஒரு விதத்தில் என் வாழ்கையில் சிறிது நேரமாவது ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்திய

இவரின் மரணச் செய்தி மனதை மிகவும் வருத்தியது. அவர் ஆத்மா சாந்தியடைய

வேண்டுவோம். அவரைப் பிரிந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு மனமார்ந்த

ஆறுதல்கள்.

T.E. Srinivasan நினைவாக சுரேஷ் மேனன் என்ற பத்திரிகையாளர் எழுதிய ஒரு சிறப்பான

அஞ்சலியை இங்கு படிக்கலாம்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

உன்னதக் கலைஞன் நாகேஷ்




நாகேஷ் என்ற குண்டு ராவ் மறைவு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.எத்தனை கோடி மக்களை சிரிக்க வைத்திருப்பார்.தன் சொந்த வாழ்கையில் பல துயரங்கள்.தாராபுரம் இவர் ஊர்.அங்குள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு பத்து நாட்கள் நடக்கும் வருட விழாவின் போது பல ஆண்டுகள் இவர் முதல் நாள் ஆகும் செலவை ஏற்றிருக்கிறார்.

நாகேஷின் திரை நடிப்பு இரண்டு வகை.ஒன்று நகைச் சுவை.மற்றொன்று குண சித்திரம்.நீர் குமிழி,எதிர் நீச்சல்,சர்வர் சுந்தரம்,தில்லான மோகனம்பாள் ஒரு வகை.இவருடைய குண சித்திர நடிப்பிற்கு பெருமை சேர்த்தது.காதலிக்க நேரமில்லை,திருவிளையாடல்,ஆயிரத்தில் ஒருவன்,தேன்மழை போன்றவை இவருடைய நகைச் சுவை நடிப்பின் திறமையை உலகிற்கு பறை சாற்றியது.இன்றும் அந்த நகைச சுவை காட்சிகளை பார்த்தாலோ,கேட்டாலோ கவலையை மறந்து சிரிக்கலாம்.மனோரமாவுடன் இவர் நடித்த நகைச் சுவை காட்சிகள் மனதிலிருந்து நீங்காதது.

இவருடைய குண சித்திர நடிப்பை வெளிக் கொணர்ந்த கே.பாலச்சந்தர் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்."மாது வந்திருக்கிறேன்"என்று ஏதிர் நீச்சல் படத்தில் தன் வறுமையை வெளிப்படுத்தி அதே நேரத்தில் படிப்பை தொடர்ந்து வெற்றி பெறுவது இன்றும் சிலர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சியாக காணலாம்.தமிழ் சினிமாவில் கல்யாண பரிசு தங்கவேலு,திருவிளையாடல் தருமி காலத்தால் அழிக்க முடியாத நகைச்சுவை காட்சிகள்.

தமிழ் திரை உலகில் இவருடைய நகைச் சுவை நடிப்பிற்கு வாய்ப்பு குறைந்த நேரத்தில் கமலஹாசன் தான் இவருக்கு நல்ல வேடங்கள் கொடுத்து இவர் திறமையை நான்கு உபயோகபடுத்தினார்.அதற்கு கமலை எத்தனை பாராட்டினாலும் தகும். இந்த உன்னதக் கலைஞன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

சனி, 31 ஜனவரி, 2009

ஆர்.வி என்ற நிர்வாகி


ஆர்.வெங்கட்ராமன் (ஆர்.வி) ஒரு உண்மையான காங்கிரஸ் கட்சிக்காரராகவும், நேர்மையான அரசியல் வாதியாகவும்,மிகச் சிறந்த நிர்வாகியாகவும்,தேசியவாதியாகவும் திகழ்ந்தார்.1942ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
இந்தியா அரசியல் சாசனத்தை வகுத்த அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1967ம் ஆண்டு காமராஜ் அவர்கள் மந்திரி சபையில் தொழில் துறை,மின்சாரம் என்று பல துறைகளின் அமைச்சராக பதவி ஏற்றார்.அவருடைய முன் முயற்சியில் தான் இன்றுள்ள கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் உருவாகின.
சிறு மற்றும் மத்திய தொழில்கள் தொடங்குபவர்களுக்கு பெரிய அளவில் ஊக்கமளித்தார்.இந்த மாதிரி தொழில்கள் வேலை வாய்ப்பை பெருக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.தமிழ்நாட்டில் பொதுத் துறை வளர்ச்சிக்கு வித்திட்டார்.குறிப்பாக BHEL,நெய்வேலியில் NLC போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் இன்று தமிழ்நாட்டில் இருப்பதற்கு இவர் முன் முயற்சி தான் காரணம்.TVS நிறுவனத்தை சென்னையில் தொழில் தொடங்க வைத்ததில் இவர் பங்கு நிச்சயம் உண்டு.
இவருடைய அனுபவத்தையும்,நிர்வாகத் திறமையையும் நன்கு பயன் படுத்திக் கொண்ட காமராஜை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆர்.வி.திட்டக் குழு உறுப்பினராக 1967ம் ஆண்டிலிருந்து 1971ம் ஆண்டு வரை பணியாற்றினார்.மீண்டும் 1977ம் ஆண்டிலிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
1980ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.அந்த நேரத்தில் தான் முதல் முறையாக உலக வங்கியிடம் இந்தியா நிதி உதவி பெற்றது.
பின்பு ராணுவ அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார்.அணு குண்டு சோதனை செய்ய இந்தியா 1983ம் ஆண்டு தயாராக இருந்ததாகவும்,அதனை ஆர்.வி. தானே அதற்கான வசதிகளை மேற்பார்வை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.அப்துல் கலாமை ஏவுகணைகள் பிரிவிற்கு மாற்றி அதற்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினார்.
1984 ம் ஆண்டு துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.இவர் நேரு-இந்திரா குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1987ம் ஆண்டு இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.இவர் 4 பிரதமர்களுடன் வேலை செய்ய நேரிட்டது.இவர் ஜனாதிபதியாக இருந்தபோது தான் மத்தியில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது.வி.பி.சிங்கை ஆட்சி செய்ய அழைத்து ஒரு நல்ல முன் மாதிரி ஏற்படுத்தினார்.ஆட்சி மாற்றத்தால் மாநில ஆளுநர்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வி.பி.சிங் நினைத்த போது,ஜனாதிபதியே ஆளுநர்களை ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு கடிதம் எழுதுவது நன்று என்ற நல்ல யோசனையை தெரிவித்தார்.இவர் ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் தான் பொபஃர்ஸ் ஊழல்,இலங்கைப் பிரச்சனை,ராஜீவ் காந்தி கொலை,மண்டல் கமிசன் பரிந்துரை போன்ற முக்கிய நிகழ்வுகள் நடேந்தேறின.1991ம் ஆண்டு போது தேர்தலில் எந்த கட்சிக்கும் பெருன்பான்மை கிடைக்காத நேரத்தில்,எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து "தேசிய அரசு" அமைக்கலாம் என்ற யோசனையை முன் வைத்தார்.இந்த நிகழ்வுகளை எல்லாம் முன்வைத்து "My Presidential Years" என்ற புத்தகத்தை எழுதினார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சில யோசனைகளை முன் வைத்தார்.குறிப்பாக,மத்தியில் இரண்டு கட்சி ஆட்சி முறை இருக்க வேண்டும் என்றும்,சிறிய கட்சிகள் குழப்பம் ஏற்படுத்துவதை இது தவிர்க்கும் என்றும் கூறினார்.மேலும் ஒரு அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் போது,அடுத்து யாரை பிரதமராக பரிந்துரைகிறோம் என்பதையும் தீர்மானம் கொண்டு வரும் கட்சி தெரிவிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.கிருஷ்ணசாமி அசொசியட்ஸ் ஆர்.வி.யைப் பற்றி ஒரு ஆவணப் படம் (Documentary) எடுத்து வெளியிட்டது.அது தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது.இதில் "சில மாநில அரசுகள்" கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறை படுத்தப் பட்டதை பற்றிய கேள்விகளுக்கு,தான் இந்தியா அரசியல் சாசனப்படி நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.

98 ஆண்டுகள் வாழ்ந்து முக்கிய பொறுப்புக்களில் இருந்த ஆர்.வி ஒரு தொண்டு மனப்பான்மையுடன் கூடிய கண்ணியமான வாழ்கையை வாழ்ந்து மறைந்துள்ளார்.இன்றுள்ள மற்றும் எதிர்கால அரசியல் வாதிகள் இவரிடமிருந்து கற்க நிறைய விஷயங்கள் உள்ளன.வரலாற்று ஆசிரியர்கள் சென்ற நூற்றாண்டின் இந்திய அரசியலை ஆராயும் போது ஆர்.வி க்கு நிச்சயம் சரித்தரித்தில் ஒரு உன்னதமான இடம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

செவ்வாய், 25 நவம்பர், 2008


சுஜாதா - ஒரு வாசகனின் அஞ்சலி


சுஜாதாவின் மறைவுச் செய்தியை அறிந்தவுடன் கவிஞர் கண்ணதாசன் கூறிய "சாவே உனக்கு ஒரு சாவு வரதா" என்று எழுதியது தான் நினைவுக்கு வந்தது. ஒரு சிறந்த பொறியியல் வல்லுநர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் தமிழில் அறிவியலை மிகவும் எளிதாக கூறும் திறமை என்று பல சிறப்புகளை பெற்றவர். இவருடைய நைலான் கயிறு, கனவு தொழிற்சாலை, ரத்தம் ஒரே நிறம், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று பிரபலமான நூற்று கணக்கான கதைகள், நாவல்கள் படைத்தவர். இவருடைய முதல் சிறுகதை "சிவாஜி" என்ற பத்திரிகையில் வெளி வந்தது. பிற்காலத்தில் ஒரு பேட்டியில் முதல் கதை பிரசுரமானத்தில் ஏற்பட்ட சந்தோஷம் அளவிட முடியாதது என்றும், அதை யாராவது பெற்று தந்தால் தன் சாம்ராஜ்யத்தில் பாதியை கொடுப்பதாகவும் கூறி இருந்தார். தமிழில் கதை எழுதிவதில் "விஸுஅல் ரைடிங்" என்ற புதிய அணுகு முறையை கையாண்டார். அறிவியல் புனைக் கதைகள் (science fiction) மற்றும் அறிவியல் சார்ந்த இவருடைய கட்டுரைகள் தான் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து இவரை மிகஉம் வேறுபடுத்தி காட்டியது. தமிழில் "அறிவியல் கதைகளின் முன்னோடி" என்ற பட்டம் இவருக்கு சரியாக பொருந்தும். எழுவதுகளில் வந்த சுஜாதாவின் "கணையாழிஇன் கடைசி பக்கங்கள்" அவருடைய பரந்த அறிவையும், புத்திகூர்மையையும் வெளி படுத்துவதாக இருந்தன. கவிதை மற்றும் நாடகங்கள் படைப்பதிலும் கூட இவருடைய திறமையை காண முடிந்தது. "ஹைக்கூ" கவிதைகளை தமிழில் பிரபல படுத்தினார். பல வாசகர்களை கவிதை எழுதும் முயற்சியில் எடுபடச் செய்து சிறிதளவு வெற்றியும் பெற்றார். தமிழ் இலக்கியத்தின் பால் இவருடைய எழுத்தால் பல இளைய தலை முறையினர் கவர்ந்து இழுக்கப்பட்டனர் என்பது தான் இவர் தமிழுக்கு ஆற்றிய மிகப் பெரிய சேவை.

எண்பதுகளில் இருந்து எழுதுவதற்கு கணணி உபயோகித்தார் என்பது ஓர் ஆச்சிர்யமான விஷயம். "கணணியில் தமிழ்" என்பதிற்கு உண்மையான முயற்சி மேற்கொண்டவர். வைஷ்ணவ பக்தி இலக்கியத்தை பற்றி நிறைய எழுதினார். குறிப்பாக ஆண்டாள் பற்றிய கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது. சிறு கதைகள் மற்றும் கதைகள் எழுதும் நுணுக்கங்களை அழகான கட்டுரைகள் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சிற்றிதழ்களில் இடம் பெற்ற அருமையான கதைகள்,கட்டுரைகள் மற்றும் கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள தவறியதே இல்லை. உதாரணமாக விழுப்புரம் கல்லூரி பேராசிரியர் பழமலை எழுதிய "சனங்களின் கதை" என்ற யதார்த்தமான கவிதை தொகுப்பை பாராட்டி எழுதி சாதாரண வாசகனை அடையச்சைதார். தமிழ் பழங்கால இலக்கியத்தையும் இவர் விட்டுவைக்கவில்லை. கடுமையான விமர்சனகளுக்கிடையே ("இந்தியா டுடே", காலச்சுவடு" ) "புறநானூறு ஓர் எளிய அறிமுகம்" என்ற நூலை இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டார். இவருடைய எளிமையான உரைநடை, சிறு வாக்கியங்களாக செய்தியைச் சொல்லும் முறை மற்றும் நகைச் சுவை உணர்வு ("குதிரை" சிறு கதை, அந்நியன் சினிமாவில் விக்ரம் எழுதும் காதல் கடிதம்) திரை உலக வசனகர்த்தாவாக பிரகாசிக்க உதவியது. மணிரத்தினம், சங்கர் போன்ற இயக்குனர்கள் இவரை நன்கு பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் கதைகள் சினிமாவில் சிதைக்கபடுவதை கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், எழுத்து மற்றும் திரைக்கு இடையே உள்ள ஊடக வித்தியாசங்களை புரிந்து கொண்டு யதார்த்த நிலையை கையாண்டார் என்றால் மிகையாகாது. காச்மாலாஜி (cosmology) , குஅந்டொம் ப்ஹைசிச்ஸ் (quantum physics) முதலிய சிக்கலான விஷயங்களை தமிழில் என்னைப் போன்ற சாதரணமான வாசகனுக்கும் புரியும் வகையில் பகிர்ந்து கொண்டார். முதலில் இவருடைய கதைகளை நல்ல இலக்கியமாக விமர்சகர்கள் ஏற்க மறுத்தாலும், காலப் போக்கில் தமிழ் சிறுகதை இலக்கியத்தில் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் போன்ற தலை சிறந்த எழுத்தாளர்களுடன் சுஜாதா பெயர் இடம் பெறுவது தடுக்க முடியதாகி விட்டது.


ஓட்டு போடும் இயந்திரம் கண்டு பிடித்ததற்கு, அறிவியலை (ஏன், எப்படி, எதற்கு) பிரபலமான ஊடகங்கள் மூலமாக பிரபலப்படுதியதற்கு சுஜாதாவிற்கு பரிசுகள் கிடைத்தன. தன்னுடைய தொழிலையும், சொந்த வாழ்க்கையையும் மற்றும் எழுத்தாளர் என்ற அடையாளத்தையும் குழப்பிக் கொள்ளாமல் எளிமையான, இறுதிவரை உற்சாகமான ஒரு வித இளமையுடன் வாழ்ந்து வந்தார். சுஜாதாவை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்தார்க்கும், வாசக நண்பர்களுக்கும் அவருடைய எழுத்துக்களில் வாழ்கிறார் என்பது தான் ஒரே ஆறுதல்.

இறுதியாக சுஜாதா இறப்பு பற்றி அவர் எழுத்தில்:
"செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை ,என் புத்தகங்கள் ,என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும் .செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.
நான் நானாகவே தொடர வேண்டும் . அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும் . கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும் . அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன , முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்."


சுஜாதா நினைவாக ஒரு கவிதை முயற்சி:

சுஜாதா மரணம்

பூஜ்ஜியத்தால் வகுத்து பிரபஞ்சத்தை
படைத்த ஆண்டவனுக்கே ஆசை
அறிவியல் தமிழில் அறிய
கணணி கற்க கதைகள் கேட்க
ஆள் தேவை விளம்பரம் கண்ட
காலன் பாசக்கயிற்றுக்கு விடை