படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 மார்ச், 2017

அ முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைமுறை சிக்கல்கள் 


நான் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த புதிதில், கென் என்ற ஒரு மிக நல்ல மனிதருடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடமிருந்து அமெரிக்க வாழ்க்கை முறைகள் குறித்து பல விஷயங்கள் கற்றறிந்தேன். அவருடைய தந்தை வழிவந்தவர்கள் இத்தாலியையும், தாய் வழிவந்தவர்கள்  போலந்தையும் சேர்ந்தவர்கள். அவருடைய பெற்றோர்களுக்கு ஓரளவு இத்தாலி மற்றும் போலந்துடன் தொடர்பு இருந்தது எனவும், தானும் தன் மகளும் முழுமையான அமெரிக்கர்கள் எனவும் சொன்னார். அதிகபட்சம் புலம்பெயர்ந்த மூன்றாம் தலைமுறையினர்கள் அமெரிக்க கலாசாரத்துடன் ஒன்றி வாழப் பழகிக்கொள்கிறார்கள்  இன வேற்றுமை உணர்வுச் சிக்கல்களைப் பற்றி விவாதித்தபோது “இன்று கடுமையானச் சட்டஙகள் உள்ளன. எல்லா இனத்தவரும் வெளித் தோற்றத்தில் ஒற்றுமையாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மனதளவில் வித்தியாசப்படுத்துதல், பாரபட்சம் பாராட்டுதல், உயர்வு மனப்பான்மை மற்றும் தாழ்வு மனப்பான்மை மறைந்ததாகக் கூற முடியாது. விரைவில் மறையும் வாய்ப்பு குறைவுதான்” என்று கென் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாகத்தான் இருக்கிறது.
. அ.முத்துலிங்கத்தின் “அமெரிக்கக்காரி” படித்தவுடன் நினைவில் வந்தது கென்னுடன் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த உரையாடல்தான். புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர்கள் கடந்து செல்லும் அனைத்தையும் மதியின் வாழ்க்கையில் காண முடிகிறது. பிரச்சினைகளின் தொடக்கம் ஆங்கில மொழி உச்சரிப்பு மற்றும் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு வார்த்தைகளின் பயன்பாடு. புலம்பெயரும் ஊரைப் பொறுத்து எதிரெதிர் துருவத்தில் அமையும் சீதோஷ்ண நிலைக்கு சரிசெய்து கொள்வதும் கடினமானது. சிறு வயதில் அறிந்தும் அறியாமலும் மனதில் ஆழப் பதிந்துவிட்ட சில எண்ணங்களை விடவும் முடியாமல் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவும் முடியாமல் ஒருவித குழப்பமான சூழலுடன்தான் முதல் சில துவக்க ஆண்டுகள் செல்லும். மேலும் புதிய கலாச்சாரத்தின் சில நல்ல கூறுகளைக் கடைபிடிப்பதிலும் மனச் சிக்கல்கள் தோன்றுவதைக் காண முடியும். இந்தியாவில் எப்படி கிரிக்கெட் குறித்து  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் விவாதிப்போமோ அதே போன்று பேஸ்பால், பேஸ்கட்பால், அமெரிக்க ஃபுட்பால் பற்றிய விவாதங்கள் நடக்கும். முழுவதும் பங்கு பெற முடியாவிட்டாலும், விவாதத்தைப் புரிந்து கொள்ளவாவது  நாம் அந்த விளையாட்டுகளைக் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. என் மகன் பள்ளியில் படிக்கும்போது, காலை அவசரத்திலும் இணையத்தில் விளையாட்டு முடிவுகள், அது சம்பந்தமான கட்டுரைகள் படித்து விட்டுத் தான் கிளம்புவான். அவன் வயதொத்த மாணவர்களிடையேயான அழுத்தமே இதற்கு காரணம். இந்த விஷயத்தில் மதியின் அறியாமையை அ. முத்துலிங்கம் அழகாக சித்தரித்திருக்கிறார்.
அமெரிக்கக்காரியின் கதைக்களம் 90-களின் இறுதியில் அமெரிக்காவில் நடந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருபது ஆண்டுகளில் இன வேற்றுமைச் சிக்கல்கள் அதிகமாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது. என்னுடன் பணிபுரியும் சக அமெரிக்கர் பதினைந்து வயதான தன் பெண்ணிற்கு இன்னும் ஒர் ஆண் நண்பர் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டார். ஆனால் இலங்கையில் வளர்ந்த மதி பதினெழு ஆண்டுகள் தரை பார்த்து நடந்திருக்கிறாள். இந்த கலாச்சார வேறுபாட்டின் விளைவே, மதியால் தன் காதலர்களைத் தக்க வைத்துக் கொள்வதிலோ அல்லது காதலர்களைத் தேர்வு செய்வதிலோ வெற்றி காணாமல் இருந்ததற்கான காரணம் எனலாம். தன்னைத் தேடி வந்த மூன்று ஆண்களுக்கும் உறவின் ஆரம்பமாக இருந்தது, மதிக்கு உறவின் முடிவானது. இந்த நாட்டில் குழந்தைகளுடன் கூட தொடர்ந்து உரையாடவும், அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. தனி மனித சுதந்திரத்துக்கு குழந்தைப்பருவத்தில் இருந்தே இங்கு மதிப்பளிக்கப்படுவதால், அவர்கள் சுதந்திரமாய் முடிவெடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். நாம் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும், எதையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் மதி பெரியவர்களின் சொல்படியும், கட்டளைகளுக்கு அடிபணிந்தும் வாழ வேண்டும் என வளர்க்கப்பட்டவள். புலம் பெயர்ந்தவுடன் சொந்தமாக முடிவுகளை எடுத்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவதில் சங்கடங்களை எதிர் கொள்கிறாள். முதல் காதலன் தன் அறைக்கு அழைத்தவுடன், அவனுடன் உரையாடி அவனைப் புரிந்து கொள்ளவோ அல்லது தன் தரப்பை விளக்கவோ மதி முயலவில்லை. தன் குடும்பத்தாரை அறிமுகப்படுத்திய மூன்றாவது காதலனுடனாவது இரண்டு மணி நேர கார் பயணத்தில் தன் மனநிலையை விளக்கியிருக்கலாம். இந்த உரையாடல்கள் மூலம் அமெரிக்க வாழ்வின் யதார்த்தாங்களை ஓரளவுக்காவது புரிந்து கொண்டிருக்கலாம்.
மதி புலம் பெயர இலங்கையின் உள் நாட்டுப் போரும் ஒரு காரணி. தன் தாயைத் தவிர வேறு உறவும் இல்லை. இலங்கையிலிருந்து அமெரிக்கா வந்து அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரே நபர். இத்தனைச் சிக்கல்களிருந்தும் விடுபட்டு தெளிவு பெற மூன்று ஆண்டுகள் மதிக்குத் தேவைப்படுகிறது. மதிக்கு வியட்நாமைச்  சேர்ந்த லாங்ஹன் பிடித்ததற்கு காரணம், அவன் தன்னை படுக்கை அறைக்கு அழைக்காததா அல்லது தனிமையும், சிறிது முதிர்ச்சியும் கொடுத்த புரிதலா? வேறு காரணங்களும் இருக்கலாம். திருமணத்திற்கு பின்பான லாங்ஹன்னின் அன்பும், அரவணைப்பும் மதிக்குத் தன் இலட்சியத்தை அடைய உதவுகிறது.  நான்கு ஆண்டுகளாக குழந்தை பிறக்காததற்கு தான் மட்டுமே காரணம் என்பதால், தன்னைப் பிரிந்து செல்லலாம் என லாங்ஹன் சொல்வதை மதி நிராகரிப்பது கதையில் ஓர் அருமையான தருணம். பொதுவாக அமெரிக்கர்களிடையே திருமண பந்த்ததின் பிணைப்பு மிகவும் மெலிதானது என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இங்கு வருவதற்கு முன் என் எண்ணமும் இதையொட்டித் தான் இருந்தது. ஆனால் இருபந்தைத்து வருடத்திற்கு மேல் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக தொடரும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
தன்னால் முடியவில்லை என்றாலும் வியட்நாமியுடன் சேர்ந்து வாழும் இலங்கைக்காரியான தனக்கு ஆப்பிரிக்க இனத்தவரின் விந்தீடு மூலம் பிறக்கும் பெண் குழந்தை கலாச்சார சிக்கல்கள் எதிர்கொள்ளாமல் சுதந்திரமாக வாழும் என்பதே மதிக்கு பெரியளவில் நிம்மதியைக் கொடுக்கிறது.
இலக்கியம் பற்றிப் பேசும்போது நாம் பொதுமைப்படுத்திப் பேசுவது இயல்பு. ஆனால், மதி புலம்பெயர்ந்தவர்களின் மனநிலையை வெளிப்படுத்தினாலும் அவள் அவர்களின் பிரதிநிதியல்ல. இனத்தேசீயவாதம் காரணமாக போர் நிகழ்ந்த இலங்கைச் சூழலில் மதியின் தேர்வுகள் கவனிக்கத்தக்கவை. அவள் வியட்நாமியனைக் காதலித்து மணம் புரிந்து, ஆப்பிரிக்கரின் விந்தணுவை ஏற்று பிள்ளை பெற்றுக் கொள்கிறாள். எத்தனை தமிழர்கள் இப்படிச் செய்வார்கள்? தன் பின்னணியையும் தன் தாயகத்தையும் பார்த்து தன் பெண்ணைப் பார்க்கும்போது மதியின் மனநிலை என்னவாக இருக்கும்?
மதி அமெரிக்கக்காரியோ இல்லையோ, அவளை ஒரு தனித்துவம் கொண்ட மனுஷியாகப் படைத்திருப்பதில் அ. முத்துலிங்கம் வெற்றி பெறுகிறார். அதுவே இதை ஒரு உயர்ந்த படைப்பாகவும் ஆக்குகிறது.
"பதாகை" இணைய இதழில் வெளியானது.
அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்கக்காரி‘ சிறுகதை

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

வாழ்விலும் தாழ்விலும், மாறாத சிறந்த குண நலன்களும் மனித நேயமும் கொண்ட மனிதர்களை இன்றும் நாம் எதிர்கொள்கிறோம். ஆனால் அதன் சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். முப்பது வருடங்களுக்குமுன்கூட ஒரே தெருவிலோ, கிராமத்திலோ இருப்பவர்கள் ஒரே குடும்பம் போல் தான் இருந்து வந்தார்கள். இன்று , குறிப்பாக, நகரங்களில் பக்கத்து வீட்டில் கூட யார் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலைதான் உள்ளது. குடும்பத்துடன் வெளியூருக்குச் செல்ல நேர்ந்த என் நண்பர் ஒருவர் ஒரு வாரம் தன்னுடைய மீன் வளர்க்கும் தொட்டியைப் பாதுகாத்துக் கொள்ளச் சொல்லிக் தன் பிளாட்டில் இருக்கும் பலரிடம் கேட்டபோது ஒருவரும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதான் இன்றைய நிலை.


ஆனால் பாப்பி அம்மாள் மேல் பல குற்றங்களையும், வசவுகளையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கும் அண்டை வீட்டார்கள், பாப்பி அம்மாள் பிரசவ வேதனையில் அவதிப்படும்போது, அனைத்து வேற்றுமைகளையும் மறந்து நடு இரவில் அவளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். அந்த மனித நேயத்தை மிகவும் விரிவாக இந்தப் புனைவில் தகழி விவரித்துள்ளார்.


பாப்பி அம்மாள் தன் முதல் குழந்தையான பத்மநாபனைப்  பெற்ற  கையோடு கணவனை இழக்கிறாள். பாப்பி அம்மா தன் குழந்தையுடன் மிகவும் சிரமமான வாழ்க்கையை மேற்கொள்கிறாள். அப்போது தன் அண்டை வீட்டர்களான குட்டி அம்மா, நாணி அம்மா, பாரு அம்மா, காளியம்மா முதலியவர்கள்தான் பத்மநாபன் பசியறியாமல் வளர உதவுகிறார்கள். அவன் அந்த அன்பின் ருசியை இறுதி வரை மறக்காமல் இருக்கிறான்.

சூழ்நிலை காரணமாக நான்கு சக்கரம் (பழைய திருவாங்கூர் நாணயம்) கொடுத்த பாச்சு பிள்ளையுடன் உறவு கொண்டு பாப்பி அம்மாளுக்கு கார்த்தயாயினி என்ற மகள் பிறக்கிறாள். ஆனால் பாச்சுப் பிள்ளை தான் கார்த்தயாயினியின் தகப்பன் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறான். அதன் பிறகு பாப்பி அம்மாளுக்கு கோவிந்த நாயர் தொடர்பு நாராயணன் என்ற குழந்தையின் பிறப்பில் முடிகிறது.


பாப்பி அம்மாவின் முதல் மகனான பத்மநாபன் கோயம்பத்தூரில் வேலைக்குச் செல்கிறான். அவன் இரண்டு ஓணம் பண்டிகைக்கு வீட்டில் இல்லாமல் அந்த வருட ஓணத்திற்கு வரும் சமயம்தான் பாப்பி அம்மாள் கோவிந்தா நாயர் மூலம் கர்ப்பமாகி இருக்கிறாள் அவள் இதை எப்படி பத்மநாபனிடம் தெரிவிப்பது என்று தவிக்கிறாள். அண்டை வீட்டாரை பார்க்கச் செல்லும் போது தான் கேட்க நேரிடும் கேலிப் பேச்சுக்கு அவன் பொறுமை காக்கிறான். மேலும் அவனது காது பட பாட்டி (தந்தையின் அம்மா) வீட்டில் பேசப்படும் கூர்மையான சொற்களினால் மனம் நொந்து, அங்கு எதுவும் சாப்பிடாமல் வெளியேறுகிறான். பத்மநாபன் ஊர் செல்லும் வரை பாப்பி அம்மா வீட்டில் இருக்கும் கோவிந்த நாயர் அதன் பிறகு அங்கு வருவதை நிறுத்திக் கொள்கிறார். இதை நோட்டம் விடும் அண்டை வீட்டார் குட்டி அம்மா கணவன் குட்டன் உதவியுடன் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். அதற்கு பாப்பி அம்மாவின் சம்மதம் இல்லை எனத் தெரிந்தவுடன் அந்த முயற்சியை பாதியில் முடிகிறது.

இதன் நடுவில் பாலகிருஷ்ணன் நன்கு முன்னேறி பாண்டி நாட்டில் டீக்கடை வைத்து பணம் சம்பாதித்து சொந்தமாக நிலம் வாங்குகிறான். பாரு அம்மாவின் மகனான பரமேஸ்வரன் பிள்ளையைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அவனும் வீட்டிற்கு பணம் அனுப்புகிறான். இதைக் கேட்டு குட்டி அம்மாவும், குட்டன் பிள்ளையும் தங்கள் பிள்ளையான வாசுதேவனை பாலகிருஷ்ணனுடன் அனுப்ப முடியவில்லையே என்று சண்டை இடுகிறார்கள். ஆனால் ஒரு நாள் வீட்டில் பணத்தைத் திருடிக் கொண்டு வீட்டை விட்டு வாசுதேவன் ஓடிவிடுகிறான். அவனைக் காணும் பத்மநாபன் வாசுதேவனையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு வேலை போட்டுத் தருகிறான்.

பத்மநாபனை பாரு அம்மாவின் மகளான பங்கஜாக்ஷிக்கும், பரமேஸ்வரன் பிள்ளையை கார்த்தியாயினிக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என நாணியம்மா யோசனை கூறுகிறாள். இன்று வசதியாக இருக்கும் பாப்பி அம்மாள் இந்த சம்மந்தத்தை ஏற்றுக் கொள்வாளா என யோசிக்கிறார்கள். அவள் பத்மநாபனும், பாச்சுப் பிள்ளையும் தான் இதனை முடிவு செய்ய வேண்டும் என்றும், தனக்கு இதில் சம்மதம் எனவும் கூறுகிறாள். பத்மநாபனுடன் இருக்கும் வாசுதேவன் அங்கிருந்து மீண்டும் ஊர் திரும்பி பத்மநாபனைப் பற்றி அவதூறு கூறுகிறான்.

ஆனால் பத்மநாபனிடமிருந்து வரும் கடிதம் வாசுதேவன் பணத்தைத் திருடிக் கொண்டு ஓடி வந்துவிட்டான் என்ற செய்தியைத் தெளிவாக்குகிறது. பத்மநாபன் பரமேஸ்வரனுக்கு ஒரு ஓட்டல் வைத்துக் கொடுக்க முயற்சிப்பதாகவும், தானும் சிறிது பணம் சம்பாதித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கடிதத்தில் கருத்துத் தெரிவிக்கிறான். பாச்சுப் பிள்ளை பாப்பி அம்மாவின் வசதியைப் பார்த்து அங்கு வந்து ஒட்டிக் கொள்கிறார். அவர் முடிவும் பாப்பி அம்மாவின் வீட்டிலேயே நடக்கிறது. பாச்சுப் பிள்ளையை எரித்து இறுதிச் சடங்கை நாராயணன் செய்கிறான்.


இந்தப் புதினத்தைப் பொறுத்தவரை அந்தக்காலத்து கேரள மக்கள் வாழ்கையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. மனித நேயம், அண்டை வீட்டார் பொறாமை, தொழிலுக்காக இடம் பெயர்தல், தன்  இன மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல் என்ற பண்புகளை முன் வைக்கிறது.

பாப்பி அம்மாள் போல் பொறுமையும், சகிப்புத் தன்மையும் இருக்கும் ஒரு பாத்திரப் படைப்பு இன்றுள்ள சூழ்நிலையில் எந்த அளவுக்கு ஒத்து வரும் எனக் கூற முடியாது. ஆனால் கேரள மக்களின் கடும் உழைப்பு மற்றும் தொடர் முயற்சி ஒரு தொடர்கதை என்பதில் சந்தேகமில்லை. தமிழில் சு.ரா. வின் மொழிபெயர்ப்பும் வாசிக்க ருசியாகத்தான் இருக்கிறது. இதைக் காலத்தைக் கடந்து நிற்கும் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு எனக் கூற இயலவில்லை. இருந்தாலும் பாத்திரச் சித்தரிப்புகள் மேலோட்டமானவைகளாக இல்லை. ஒரு முறையேனும் படிக்கப்பட வேண்டிய நாவல்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

தகழியின் குணவதி - தமிழில் சு.ரா


புனைவுகளைக் கொண்டு  மனிதனின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கி அவை சார்ந்த சிக்கல்களையும், முரண்பாடுகளையும் வாசகனின் கண் முன்பு நிறுத்தும்போது எழுத்தாளன் இலக்கியத்தின் உச்சத்தை நோக்கிச் செல்கிறான். அவனது எழுத்தின் ஆழத்தைப் பொறுத்து படைப்பின் நிரந்தரத்தன்மையும், எழுத்தாளனின் இடமும் உறுதி செய்யப்படுகின்றன. வெகு சில எழுத்தாளர்களே சிறந்த இலக்கியங்களைப் படைத்தவர்கள் என்ற அங்கீகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட ஓர் எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை என்பதில்  எந்த சந்தேகமுமில்லை.

தகழியின் இரண்டாவது புதினமான "பதிதபங்கஜம்" 1934 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதனை சு.ரா தமிழில் "குணவதி" என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இதில், தகழி ஒரு விலைமாதுவின் மன ஓட்டத்தையும், உணர்ச்சிப் போராட்டங்களையும் ஆழமாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
"சொர்க்கத்திலிருந்து கேட்பதைப் போன்று இனிமையான குரலால் அமைந்த பாட்டு. காண்போரைக் கவரக் கூடிய அருமையான நடனம். பெண்மை என்றால் என்ன என்பதை அவளிடம் இறைவன் முழுமையாகச் செதுக்கி வடித்திருந்தான் என்பதே உண்மை. மனம் திறந்து கூறுவதாக இருந்தால் அவள் ஒரு பேரழகி." எனத் துவங்குகிறது குணவதி.. இந்த குணவதியைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ரதீசன், அவளைக் கண்டு மனவேதனைப்படும் வினயன் இவர்களின் மன ஓட்டம்தான் கதையின் களம்.

பலரும் குணவதியின்  குரலின் இனிமையிலும், நடனத்தின் நளினத்திலும் அவளது அழகின் சுவையிலும் தோய்ந்து களிக்கிறார்கள், அவள் மட்டுமே மன வேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறாள்.. ரதீசன் குணவதியின் மன நிலையையோ, அவள் கடந்து செல்லும் துன்பத்தையோ சிறிதும் கண்டுகொள்ள மறுக்கிறான். ரதீசனுக்கு குணவதி பணம் செய்யும் ஒரு இயந்திரம்குணவதியின் துன்பத்தைக் கண்டு மனமுருகி அவள் மேல் உண்மையான அன்பைச் செலுத்துகிறான் ரதீசன். எத்தனையோ ஆண்கள் குணவதியை அனுபவித்துச் சென்றிருந்தாலும், அவளிடம் வினயன்  காட்டும் பரிவில்தான் உண்மையான அன்பின் இயல்பை உணர்கிறாள் குணவதி. அவளது மென்மையான கரங்களைப் பற்றி "நீ தேவடியா இல்ல..." எனக் கூறுகிறான் வினயன். தன மீது பரிவு காட்டுவும் ஓருயிர் இந்த உலகத்தில் இருப்பதை குணவதியால்  நம்ப முடிவதில்லை.

ஊரில் இருப்பவர்கள் குணவதியைப் பார்க்கும் பார்வையில் அவள் கூசிப் போகிறாள். அதே சமயம் அவளிடம் ஒரு சிறுமி வந்து நாலு காசு வேண்டும் எனப் பிச்சைக் கேட்கிறாள். அப்போது குணவதி தனக்கு எப்படி இந்த மரியாதை வந்தது என  நினைத்துப் பார்க்கிறாள்தான் அணிந்திருக்கும் நகையே இதற்குக் காரணம் என மடிவு செய்கிறாள். இதைப் போன்ற பல நுணுக்கமான உணர்வுகளை மிக அழகாக எழுதிச் செல்கிறார் தகழி.

மற்றொரு சமயம் ஒரு பெண் குணவதியிடம் தன் கணவன் எங்கே என வினவுகிறாள். தன்  சாகப்  போகும் மகளைப் பார்க்கத் தன் கணவன் வர வேண்டும் என்று மன்றாடுகிறாள். ஆனால் குணவதிக்கோ அவள் எந்த ஆணைத் தன் கணவன்என்று சொல்கிறாள்  என்றே தெரிவதில்லை. தன் கணவனை மயக்கி தன் குடும்பத்தின் இந்த பரிதாபக நிலைக்குக் காரணமாக இருக்கிறாள் என்று குணவதியை சபிக்கிறாள் அவள். தன் செயல்களுக்கு இப்படிப்பட்ட பின்விளைவுகள் இருப்பதை அப்போதுதான் உணர்கிறாள் குணவதி. தன்மீதே அவளுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.

எத்தனையோ ஆண்களின் துளைக்கும் கண்களையும், உடல் பசியின் விருந்தாகவும்உணர்ச்சியற்று  வாழ்ந்து வரும் குணவதிக்கு வினயனின் பார்வையும், நடத்தையும் வேறு உலகை அவள் கண் முன் நிறுத்துகின்றன. வினயனும் குணவதியும் நெருங்கி வருகிறார்கள். குணவதி உண்மையான காதலையும், அன்பையும் தன் வாழ்வில் முதல் முறையாக, அனுபவிக்கிறாள். குணவதியைத் தூங்க வைத்து அவளுக்கு விசிறியும் விடுகிறான் வினயன். இந்த அன்பின் விவரணை தகழியின் மொழியில் சிறப்பாக உள்ளது. குணவதியைத் தன்னுடன் வந்து விடும்படி அழைக்கிறான் வினயன்..

குணவதி, தான் இனி இந்தத் தொழிலைச் செய்யப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாள். ரதீசன் அவளின் அனைத்து நகைகளையும் பெற்றுக் கொள்கிறான். குணவதியை கட்டாயப்படுத்தி பெருவியாதி பிடித்தவனின் இச்சைக்கு இரையாக்குகிறான். அதன் பிறகு குணவதி தன்னைப் பார்க்கவோ, நெருங்கவோ வினயனை அனுமதிப்பதில்லை. வினயன் குணவதியின் நிலையை உணர்ந்து ரதீசன்மீது தீராக் கோபம் கொள்கிறான். குணவதியின் அத்தனை துன்பங்களுக்கும் பழி வாங்க ஒரே வழி ரதீசனைக் கொல்வதே  என்ற எண்ணம் வினயனது உள்ளத்தில் மேலோங்குகிறது. அதை நிறைவேற்றுகிறான். மிகுந்த அன்புடனும், நெருக்கத்துடனும் இருக்கும் தன் தாயிடம் கூட இதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறான்.

தலை துண்டிக்கப்பட்டு ரதீசன் இறந்ததை நினைத்து குணவதி வருந்துவதைப் பார்த்து வினயன் ஆச்சரியமடைகிறான். ரதீசன் சுயநலத்திற்காக குணவதியைப் பயன்படுத்திக் கொண்டாலும், அவன் கொலை செய்யப்பட்டது தவறு எனக் கூறுகிறாள். அந்தக் கொலையை செய்தது வினயன் எனத் தெரிந்தவுடன் மிகவும் வருந்துகிறாள். அவனை போலீசில் சென்று உண்மையை ஒப்புக் கொள்ளச் சொல்கிறாள். வினயனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது.

அவன் சிறையிலிருந்து விடுதலையாகி திரும்பி வந்து பார்க்கும் சமயம் குணவதியின் வீட்டில் யாரும் இருப்பதில்லை. தாயும் இறந்துவிட்டாள் என்று அறிகிறான். அவளது இறுதி காலத்தில் யாரோ ஓர் இளம் பெண் அருகிலிருந்து அவளுக்கு சேவை செய்திருக்கிறாள் எனப் பிறர் சொல்லக் கேள்விப்படுகிறான். குணவதியைத் தேடி ஊர் ஊராக அலைந்தும் அவளைக் காணும் ஏக்கம் நிறைவேறாமல் நிராசையில் முடிகிறது அவனது வாழ்வு.

இந்தப் புனைவை தகழி எழுதியவிதம் மிகவும் அற்புதமாக உள்ளது. ஓரு  துளையிடும் கருவியைக் கொண்டு இதயத்தைத் துளைத்ததைப் போன்ற ஓர் உணர்வு. பெண்களின் துயரமும், தியாகமும் தொடந்து இலக்கியத்திற்கான ஒரு பொருளாக அமைகிறது. கண்ணீரைப் பின்தொடர்தலில் எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார் "இலக்கியத்துக்கு எப்போதுமே துயரமே கருப்பொருளாகிறது. துயரக்கடலில் எழும் உதயமே அதனால் மானுட சாரமாக கண்டடையப்படுகிறது". இது இந்த தகழின் நாவலைப் படிக்கும் போது நன்கு உணர்ந்தேன்.

மலையாளம் தெரிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சு. ரா வின் அழகான மொழியாக்கத்தில் தமிழில் படித்து அனுபவிக்க முடிகிறது. இந்தக் கதையை படித்து மனம் மிகவும் வேதனைக்கு உள்ளானது.

குணவதியை எழுதி இன்று ஏறக்குறைய 80 ஆண்டுகள் ஆகிவிட்டன.அன்று இருந்த பெண் குலத்தின் நிலைமையும் இன்றைய நிலையும் வேறானவை. இன்றும் பெண்களுக்கான சுதந்திரம் முழுதும் கிடைத்ததாகச் சொல்ல முடியாது. சிலருக்கு பொருளாதார சுதந்திரம் இருந்தாலும், ஆணாதிக்கம் முழுவதும் நீங்கி விட்டது எனக் கூற முடியாது. இன்றுள்ள பெண் குணவதி போலில்லாமல் நிச்சயம் ரதீசனின் கொடுமையை எதிர்க்கலாம். இந்தப் புதினம் அந்தக்கால விழுமியங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இன்றும் பெண்களை போகப் பொருளாக நடத்துபவர்கள் இல்லாமல் இல்லை. இன்றும் குணவதியின் மன உளைச்சலும், துன்பமும் அனுபவிக்கும் பெண்கள் இருப்பதால் இன்றும் இந்தப் புதினம் அதன் காலத்தைக் கடந்து இயல்பு நிலையையே பேசுகிறது. என்ன ஒன்று, குணவதி போன்ற பெண்களின் மனநிலை, அவர்களை இலக்கியப் படைப்புகள் அணுக வேண்டிய  முறை முதலானவை குறித்த நம் எதிர்பார்ப்புகள் மட்டுமே முழுமையாக மாறியிருக்கின்றன

இறுதியாக நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி:

"வினயனுடன் தான் கொண்டிருந்த உறவை தன்னுடைய மனதின் அடி ஆழத்திலிருந்து இழுத்து மேலே கொண்டுவர அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள் அவளின் காதல் அங்கு அடைபட்டுக் கிடந்தது. அந்த நோயாளி மனிதனுடன் உறவு கொண்ட ஓயறகு தான், அது உள்ளே தள்ளப்பட்டு விட்டது. அது கூட வினயனுடன் அவன் கொண்ட தீவிர காதலால் தான். ......
வினயனின் இரக்கம் கலந்த முத்தத்தை பெறவும், பார்க்கும் நிமிடங்களில் மனதில் மகிழ்ச்சிப் பொங்கி நிற்கவும், கடவுளின் இதயத்தைப் போல கருதி பாதுகாப்பான அவன் நெஞ்சின் மேல் தலையை வைத்து உறங்கவும் அவள் ஆசைப் பட்டது இருந்த இடம் தெரியாமல் அடங்கிப் போனது."
"உங்க குணவதி ஒரு தீராத நோயைக் கொண்டவள்"
"அய்யோ ...அது எப்படி?"
"ரதீசன் ஒருவனை அழைச்சிட்டு வந்தான். அவன் என் கூட படுத்தான்"
"உன் பாதத்தில் நான் கொஞ்சம் விழட்டுமா? கதவைத் திற."
"என்  பாதத்திலேயா ?"
"இல்ல கஷ்டங்கள் அனுபவிக்கற மனித உலகத்தையே உன் மூலம் நான் பார்க்கிறேன். அதற்கு முன்னால் ....."