வெள்ளி, 31 டிசம்பர், 2010

பிரான்க் டுக்ஸ்யின் ஓர் எழுச்சியான கவிதை


இந்தப் புத்தாண்டில் எல்லோர் முக்கியத்துவத்தையும் உறுதிபடுத்தும் ஒரு கவிதை.

என் முகமறியாத வலையுலக நண்பர்கள், மற்றும் பதிவெழுதும் அனைவருக்கும் என்

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இதோ மொழிபெயர்த்த கவிதை இங்கே:

இந்தப் பிரபஞ்சம் ஒரு முடிவிலியானால்

அதன் மையப்புள்ளியாக இருக்கிறேன் நான்.

அதே போல் தான் நீங்களும்.

நீங்கள் எங்கு சென்றாலும்

இது எப்போதும் உண்மையாகவே இருக்கிறது.

நம் முக்கியதுவத்திலிருந்து

நாம் எப்போதும் தப்பிக்கவே முடியாது.

வியாழன், 30 டிசம்பர், 2010

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்


1970-80 களில் இரண்டு பெரிய சமூகப் பிரச்சனைகள் இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்தன. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வரதட்சணைக் கொடுமை. இதை மையமாகக் கொண்டு பல சிறுகதைகள் (விகடன், குமுதத்தில்) மற்றும் புதுக் கவிதைகள் எழுதப்பட்டன. வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள் போன்ற வேலையில்லாத் திண்டாட்டத்தை முன்னிறுத்தி திரைப்படங்கள் வந்தது நினைவிருக்கலாம்.

இந்த சட்டகத்தை வைத்து இருபத்திமூன்று வயதான ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் உறவுச் சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களை மிக அழகாக,யதார்த்தமாக சித்தரித்துள்ளார் நாஞ்சில் நாடன். ஓர் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் படித்து பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் நாயகன் சிவதாணு. வேலை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்து தன் பெண் பார்வதியை படித்த பையனான சிவதாணுவுக்குக் கட்டிக் கொடுக்க முனையும் சொக்கலிங்கம் பிள்ளை.

முதலில் துள்ளிக் குதித்தாலும், பிறகு திருமணத்திற்கு சம்மதிக்கும் சிவதாணு. பணத்திற்கு கஷ்டமில்லாத மாமனார் வீடு. திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளையை வீட்டிலேயே வைத்துக் கொள்ள முயற்சிக்கும் மாமனார். சிவதாணுவின் வீட்டு ஏழ்மையை வைத்து "ஆறாத நாவினால் சுடும்" சொல் அம்புகள் மாமியார் நீலாப்பிள்ளை வார்த்தைகளில். இறுதியில் சிவதாணுவுக்கு ஒரு வேளை கிடைத்து தனிக் குடுத்தனம் போகலாம் என்றால், மனைவி பார்வதி வர மறுக்கிறாள். இது பெரிய சண்டையாகி தீராத மனஸ்தாபமாகிறது. இறுதியில் பார்வதியும், சிவதாணுவும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று கதை முடிகிறது.

இதை நாஞ்சில் நாடன் ஒரு உயர்ந்த இலக்கியத் தரத்தில் எழுதியுள்ளார். இயலாமை,கோபம்,ஆசை,தாபம், மனக் குரோதங்கள்,பொறாமை, உளச் சிக்கல்கள் மற்றும் ஏழ்மை என்று எல்லா உணர்ச்சிகளையும் மிக அருமையாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். சில இடங்கள் மிகவும் கவித்துவமாகவும் உள்ளன.குறிப்பாக சில வரிகள்: "பாழ். எல்லாம் பாழ். தேன் துளிர்க்கும் பருவத்தில் பிணநாற்றம் வீசுகின்ற மலர்....வேகின்ற வேளையில் படீர் என்று வெடித்து விட்ட மண்குடம்..விழுதென்று பிடிக்கப் பாம்பாகப் பயமுறுத்தும் உறவுகள்..."
"காரட்டைக் கண்ட ஒட்டகமாக கிடைக்கும் கிடைக்கும் என்று, அகப்படும் அகப்படும் என்று பிடித்துவிட ஓடிய ஓட்டம். முடிவில் நயவஞ்சகக் கும்பல்."

மேலும் தன் பாட்டியின் இறப்பின் போது சிவதாணுவின் நினைவுகள்,காந்திமதி, ராமநாதன் (வேலை செய்யும் இடத்தில கிடைத்த நல்ல நண்பர்கள்)பார்வதி வீட்டிற்கு சென்று வந்த விபரத்தை வாசகனின் கற்பனைக்கு விடுவது, பாத்திரப் படைப்புக்களில் சிறிதும் சுருதி பிசகாத ராக ஆலாபனை போன்ற சித்தரிப்பு மற்றும் சுகமான நாஞ்சில் நடை என்று பல சிறப்புகள் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நாவலை கட்டாயம் படிக்க சிபாரிசு செய்கிறேன்.(நீ என்ன கா.நா.சு வா, ஜெமோவா,எஸ்ராவா என்று கேட்காதீர்கள்?). நான் படித்தவரை தமிழில் இது ஒரு முக்கியப் படைப்பு என்பதில் எனக்கு சிறுதும் சந்தேகமில்லை.

இப்போது சில கருத்துகள்: ஒன்று, இந்தக் கதையை முடித்த விதம்(முடிவல்ல) சிறிது செயற்கையாக இருக்கிறது. இரண்டாவது, கதை நடந்த கால கட்டத்தில் இருந்த வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் வரதட்சணை பற்றி சிறிது விரிவாக எழுதி இருக்கலாம். ஆனால் 30 வருடங்களுக்குப் பிறகும் இந்த ஆக்கம் படிக்கப் படுவதற்கு முக்கியக் காரணம் மனித உறவுகளில் உள்ள சிக்கல்கள், தவறானக் கணக்குகள் விவரிக்கப் படும் விதம் மற்றும் எழுத்து நடை என்று கூறலாம்.

இந்த நாவல் "சொல்ல மறந்த கதை" என்று சினிமாவாக வந்துள்ளது. ஆனால் இந்த நாவல் சினிமாவை விடவும் பலமடங்கு சிறப்பாக இருக்கிறது. படமும் அப்படி ஒன்றும் மோசமில்லை

இந்த ஆக்கம் ஜெயமோகன் மற்றும் எஸ்.ரா பட்டியல்களில் இடம் பெறுகிறது என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த நேரத்தில் நாஞ்சில் நாடனுக்காக வலைத்தளம் நடத்தி வரும் சுல்தான் அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு. நாஞ்சில் நாடன் ஒருவேளை நன்றாக சமைக்கத் தெரிந்தவராக அல்லது நன்கு ரசித்துச் சாப்பிடக் கூடியவராக இல்லை இரண்டும் கலந்த கலவையாக இருக்க வேண்டும். 2010 ஆம் ஆண்டில் தமிழில் நடைபெற்ற மிகப் பெரிய இலக்கிய நிகழ்வாக இவருக்குக் கிடைத்த "சாகித்ய அகாடமி" பரிசைக் குறிப்பிடலாம். வாழ்த்துக்கள்.

புதன், 22 டிசம்பர், 2010

ஹைக்கூ முயற்சி

இணையம் இருப்பதில் தான் எத்தனை வசதி. நாம் என்ன எழுதினாலும் பதிவிடலாம். புதிய முயற்சி செய்து பார்க்கலாம்.

அதைத் தான் இங்கு நான் செய்திருக்கிறேன். ஹைக்கூ கவிதைகள் எழுதிப் பார்க்கலாம் என்று ஒரு பேராசை. பார்க்கலாம் எப்படிப் போகிறது என்று. படிப்பவர்களுக்கு மிக்க நன்றி.*****************************************

நின்று கொண்டேயிருக்கிறது

கேள்விகளுக்கு விடை அறியாமல்

மரம்

**************************************************

தேடுகிறேன்

தொலைத்த காதலை

கடற்கரை மணலில்

*****************************************************

திரும்பப் போகத் தானா

அடித்துக் கொண்டு வருகிறது

அலை

********************************************************

இழந்த பிறகு

இழக்க என்ன இருக்கிறது

தாய்

********************************************************
தூய்மையான தழுவல்

வருடம் தவறாமல் பூமிக்கு

பனிமழை

***********************************************************

நினைவுகளில் மூழ்கிய தாத்தா

பேரென்ன குழந்தே

பத்மஜா

*************************************************************எல்லோரும் சமம்

வட்டத்தின்

முதற்புள்ளி

****************************************************************

பிரசாதம்

கடவுள் போட்ட

பிச்சை

*****************************************************************

செவ்வாய், 21 டிசம்பர், 2010

நகுலனின் இரண்டு கவிதைகள்நகுலனின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆழ்மனதில் இருந்து வருபவைகள் அவர் கவிதைகள்.தனிமையையும், யதார்தத்தையும் அழகாக சித்தரிக்கும் இரண்டு கவிதைகள் இங்கே: படித்து மகிழுங்கள்.


காத்திருந்தேன்


மீண்டும் வீதியில் யாருமில்லை

வெறும் தனிமை

வெகு துலைவில்

வேகம் குறைந்து வரும்

டாக்ஸி என் வீடும் வரும் என்று

நம்பிக்கையின்

வேதனை தாங்கி,

நான் வாழ மனந்தூண்ட

நான் வறிதே வீற்றிருக்க

வந்த வண்டி

என் வீடு தாண்டிப் போகும்.


இவர்கள்


உதட்டளவில் பேசுகிறார்கள். மனமறிந்து

பொய் சொல்கிறார்கள். ஒரு கணத்தில்

சொன்னதை அடுத்த கணத்தில் மறந்து

விடுகிறார்கள். எதிரில் இருப்பவன்

பிரக்ஞையின்றி தங்களைப் பற்றியே

பேசிக்கொண்டிருக்கிறார்கள். வயிறு

காலியானாலும் வீடு நிறைய சாமான்

களை வாங்கி வைக்கிறார்கள். உடமை

கருதி செத்துக் கொண்டிருக்கும் ஒருவன்

முன், "இவன் ஏன் இன்னும் சாகமாட்

டேன்" என்கிறான் என்று பொறுமை

இழந்து நிறகிறார்கள். எல்லாவற்றிலும்

அதிசயம் என்ன வென்றால் இவர்கள்

தங்களைப் போல் நல்லவர்கள் இல்லை

என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்


இவர்களுடன் தான் உறவுகளை

வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது

நாம் வாழும் உலகில் தான் இவர்களும்

வாழ்கிறார்கள். ...

திங்கள், 20 டிசம்பர், 2010

அன்னை தெரசாவின் கவிதைவாழ்க்கை ஒரு சந்தர்ப்பம், அதிலிருந்து ஆதாயமடை.
வாழ்க்கை ஒரு அழகு, அதைப் பாராட்டு.
வாழ்க்கை ஒரு பேரின்பம், அதை ருசி.
வாழ்க்கை ஒரு கனவு, அதை உணர்.

வாழ்க்கை ஒரு சவால், அதைச் சந்தி.
வாழ்க்கை ஒரு கடமை, அதை முடி.
வாழ்க்கை ஓர் ஆட்டம், அதை விளையாடு.
வாழ்க்கை விலை உயர்ந்தது, அதன் மீது கவனமாயிரு.

வாழ்க்கை ஒரு சொத்து, அதைப் பேணு.
வாழ்க்கை அன்பாலானது, அதை அனுபவி.
வாழ்க்கை புதிரானது, அதை அறிந்து கொள்.
வாழ்க்கை ஒரு சத்தியம், அதை நிறைவேற்று.

வாழ்க்கை துன்பமானது, அதைச் சமாளி.
வாழ்க்கை ஒரு பாடல், அதைப் பாடு.
வாழ்க்கை ஒரு போராட்டம், அதை ஒத்துக் கொள்.
வாழ்க்கை ஒரு துன்பியல், அதை எதிர் கொள்.

வாழ்க்கை ஒரு சாகசம், அதை எதிர்த்து நில்.
வாழ்க்கை அதிர்ஷ்டமானது, உபயோகித்துக் கொள்.
வாழ்க்கை மிகவும் மதிப்புள்ளது, அதை அழித்து விடாதே.
வாழ்க்கை வாழ்க்கை தான், அதற்காகப் போராடு.

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

விமானத் தாக்குதல் ஆன ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு - Miroslav Holub கவிதைஇந்தக் கவிதையைப் பற்றி என்ன சொல்ல? சென்ற வருட இலங்கைப் போர் தான் கண் முன் தெரிகிறது. நீங்களே படித்து உணருங்கள்.
பில்சென் Holub வாழ்ந்த ஊர்.

விமானத் தாக்குதல் ஆன ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு

பில்சனில்,
இருபத்தியாறு ஸ்டேஷன் தெரு,
அவள் மூன்றாவது மாடிக்கு ஏறினாள்,
மேல் மாடியில், முழு இல்லத்தில் மீதமிருந்தது அதுவே.
கதவைத் திறந்தாள்,
அது வானத்திற்கு இட்டுச் சென்றது,
பாதளத்திலிருந்து ஆரம்பித்தது.

ஏனென்றால் இங்கு
உலகம் முடிவடைந்தது.

பிறகு அவள் கதவை அழுத்தமாக மூடினாள்
அப்போது தான்
சிரியாசோ
இல்லை அல்டேபறேனோ
அவளை சமையலறையிலிருந்து கூப்பிட முடியாது,
படிகளில் இறங்கினாள்
அவள் இடத்தை எடுத்துக் கொண்டாள்,
காத்திருந்தாள்
வீடு மீண்டும் உருவாகி வர
அவள் கணவன் வீட்டிற்கு மீண்டு வர
சாம்பலிலிருந்து,
குழந்தைகளின் கால்கள்
மீண்டும் சிக்கென ஊன்ற.

காலையில் கண்டறிந்தார்கள்
அவள் கல்லாக மாறியதை.
சிட்டுக்குருவிகள் அவள் கைகளில் கொத்தின.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

Miroslav Holub - உற்சாகமூட்டும் ஒரு கவிதை


Miroslav Holub செக்கஸ்லோவாகிய நாட்டைச் சேர்ந்த கவிஞர். மேலும் இவர் ஒரு விஞ்ஞானியும் கூட. சுவையான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். கவிதையில் அறிவியல் கலந்தும் எழுதியுள்ளார். அதைப் பிறகு பார்ப்போம். இந்தக் கவிதை ஒரு நம்பிக்கைக் கொடுக்கும் தோரணையிலும், "சும்மா இருப்பதே சுகம்" என்று இருக்காமல் முடிந்த வரை புது முயற்சிகளை செய்யத் தூண்டுவதாகவும், அதனால் இழப்பு இல்லை என்பதையும் கூறும் வகையில் அமைந்துள்ளது. நீங்கள் படிக்கும் போது உங்களுக்குப் பல சிந்தனைகளை கட்டாயம் கொடுக்கும். அதைப் பகிர்ந்து கொள்ளவும்.
இந்தக் கவிதை

போ அந்தக் கதவைத் திற.
பனி மூட்டம் வெளியில் இருந்தாலும்
அது போய் விடும்.

என்ற இடத்தில உச்சத்தை அடைகிறது என்று கருதுகிறேன்

அந்தக் கதவுகள்

போ அந்தக் கதவைத் திற.
ஒரு வேளை வெளியில்
ஒரு மரம் , இல்லை ஒரு மரத்துண்டு,
இல்லை ஒரு தோட்டம்
இல்லை ஒரு மந்திர நகரம் இருக்கலாம்.

போ அந்தக் கதவைத் திற.
ஒரு வேளை வெளியில்
சொரிந்து கொண்டிருக்கும் நாய் இருக்கலாம்.
ஒரு வேளை வெளியில் ஒரு முகம்,
இல்லை ஒரு விழி
இல்லை ஒரு சித்திரத்தின்
சித்திரம் இருக்கலாம்.

போ அந்தக் கதவைத் திற.
பனி மூட்டம் வெளியில் இருந்தாலும்
அது போய் விடும்.

போ அந்தக் கதவைத் திற.
வெளியில் இருளின் கானம் இருக்கக் கூடும்,
மேலும் வெளியில் ஆழமான காற்றின் மூச்சிருக்கலாம்
இல்லை ஒன்றுமே இல்லாமல் கூட போகலாம்
போ அந்தக் கதவைத் திற.

குறைந்த பட்சம்
காற்றோட்டமாவதுஇருக்கக் கூடும்.
மேலும் இவருடைய சில கவிதைகளின் மொழி பெயர்ப்பைத் தொடர்ந்து பார்க்கலாம்.

புதன், 15 டிசம்பர், 2010

கிரிக்கெட் வீரர் T.E. Srinivasan நினைவாக - ஆற்றலின் இயலாமை


T.E. Srinivasan என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரை நினைவிருக்கலாம்.இவர்

ஒரே ஒரு டெஸ்டில் தான் இந்தியாவிற்காக விளையாடி இருக்கிறார். ஆனால் மிகச் சிறந்த

மட்டையாளர். அந்த காலத்தில் இருந்த "கோட்டா" முறையினால் இந்திய அணியில்

தொடர்ந்து இடம் பெற முடியாமல் தன் இடத்தை கோட்டை விட்டவர். மிகவும்

தன்னம்பிக்கை உடையவர்.இவரைப் பற்றி இங்கிலாந்தின் முன்னால் கேப்டன் அர்த்ரடன் தன்

புத்தகத்தில் மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். இவர் விளையாடி நான் நேரில் பார்க்கும் வாய்ப்பு

இரண்டு முறை கிடைத்தது. இவர் சென்ற வாரம் மூளைத் தொற்று நோயால் காலமானார்.

ஏதோ ஒரு விதத்தில் என் வாழ்கையில் சிறிது நேரமாவது ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்திய

இவரின் மரணச் செய்தி மனதை மிகவும் வருத்தியது. அவர் ஆத்மா சாந்தியடைய

வேண்டுவோம். அவரைப் பிரிந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு மனமார்ந்த

ஆறுதல்கள்.

T.E. Srinivasan நினைவாக சுரேஷ் மேனன் என்ற பத்திரிகையாளர் எழுதிய ஒரு சிறப்பான

அஞ்சலியை இங்கு படிக்கலாம்.

வெள்ளி, 10 டிசம்பர், 2010

பாரதியின் நினைவில் ..மன்மோஹன்சிங் கேட்க வேண்டிய கவிதை

இன்று பாரதியின் பிறந்த நாள். பாரதியின் பல கவிதைகள் சுகமானவைகள். அதில் இன்று பிரதமர் மன்மோஹனுக்கு மிகவும் தேவையான கவிதை இது தான்.
இதைப் படித்து மன்மோகன் இப்படி எழுதினால் எப்படி இருக்கும்?

அச்சமில்லை அச்சமில்லை ஸ்பெக்ட்ரமென்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை சோனியாவென்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை ஜேபிசி என்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை பிரதமர் பதவி போன போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை ஆட்சி போன போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே


எல்லாம் ஒரு கனவு தான்.

திங்கள், 6 டிசம்பர், 2010

அல்ஜீப்ரா பிடிக்காதா.. இந்தக் கவிதை பிடிக்கும்

பள்ளியில் படிக்கும் காலத்தில் கணிதம், குறிப்பாக, அல்ஜீப்ரா என்றால் அலறி அடித்து ஓடுபவர்களைக் காணலாம். இல்லை ஆசிரியர் சரியாக அமையாததால் கணிதத்தில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். எப்படி இருந்தாலும் அல்ஜீப்ரா பற்றிய இந்தப் பகடியான கவிதையை கட்டாயம் நீங்கள் ரசிக்க முடியும். படித்து உங்கள் கருத்துக்களை உதிர்த்துச் செல்லுங்களேன்? இதைத் தமிழில் மொழி பெயர்க்க முயன்றேன். ஆனால் அந்தப் பகடியை என் மொழிபெயர்ப்பில் முழுவதும் கொண்டு வர முடியவில்லை. அதனால் ஆங்கிலத்தில் கவிதை இங்கே:

Life as Junior High School by Robert Hershon

You don’t think algebra is important
Mrs. Masterson said
but the day will come when you really need algebra
You’ll be terribly sorry you didn’t pay attention
When your life is in ruins and you are a laughing stock

Ha! The joke’s on you, lady
Decades have come and gone and
never once, not for a second, did I ever think:
Damn, if I only knew some algebra! Never once,
not for an instant. My hair’s turned white and never a
single regret -- ha ha ha ha ha

Unless -- that moment is still waiting up ahead,
when I’m 92 and trying to remember my shoe size,
my middle name, how many children I have . . .
And algebra might be the only answer!
I stand in the road, drooling and baffled --
and what’s that moving in the fog? Oh god,
it’s Mr, Gorman, wearing his devil suit and
waving a chemistry textbook