பிடித்த கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிடித்த கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

பசுவய்யா (சு.ரா) "வருத்தம்" கவிதை - பகிர்வு


இன்று கவிதைகள் படிக்கலாம் என்று நினைத்து சு.ரா.வின் கவிதைகள் படிக்கத் தொடங்கினேன். இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனதை ஏதோ செய்கிறது. 1989 ஆம் ஆண்டு எழுதப்பட்டக் கவிதை.நீங்கள் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தக் கவிதையை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.


வருத்தம்

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம்போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்.

சுந்தர ராமசாமி கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், விலை.ரூ.175 /=.

வியாழன், 6 ஜனவரி, 2011

வைதீஸ்வரனின் கவிதை

இந்தக் கவிதை பிடித்திருந்தால் தயவு செய்து இப்போது நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வாங்கி படித்து மகிழவும்.

கால் மனிதன்; (கவிதைத் தொகுப்பு) எஸ். வைதீஸ்வரன், சந்தியா பதிப்பகம்

பரிசு

நெருங்கியவன்

தெரிந்த முகம் என்று

சிரித்து விட்டேன்

மிகச் சிநேகிதமாய். பதிலுக்கு

அவனும் சிரித்துவிட்டான்

நாகரீகமாய்


கடந்த பின் தான்

புரிந்தது.. அவனை

அறிந்தவன் நான் இல்லையென்று


எறிந்த சிரிப்பை மீண்டும்

திரும்பி வாங்க சாத்தியமில்லை


இருந்தாலும்

அறிமுகமற்ற மனிதனிடம்

அன்பு காட்ட முடிந்தது

இன்று ஒரு நல்ல ஆரம்பம் தான்

தவறுதலாக் இருந்தாலும் கூட.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

நகுலனின் இரண்டு கவிதைகள்



நகுலனின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆழ்மனதில் இருந்து வருபவைகள் அவர் கவிதைகள்.தனிமையையும், யதார்தத்தையும் அழகாக சித்தரிக்கும் இரண்டு கவிதைகள் இங்கே: படித்து மகிழுங்கள்.


காத்திருந்தேன்


மீண்டும் வீதியில் யாருமில்லை

வெறும் தனிமை

வெகு துலைவில்

வேகம் குறைந்து வரும்

டாக்ஸி என் வீடும் வரும் என்று

நம்பிக்கையின்

வேதனை தாங்கி,

நான் வாழ மனந்தூண்ட

நான் வறிதே வீற்றிருக்க

வந்த வண்டி

என் வீடு தாண்டிப் போகும்.


இவர்கள்


உதட்டளவில் பேசுகிறார்கள். மனமறிந்து

பொய் சொல்கிறார்கள். ஒரு கணத்தில்

சொன்னதை அடுத்த கணத்தில் மறந்து

விடுகிறார்கள். எதிரில் இருப்பவன்

பிரக்ஞையின்றி தங்களைப் பற்றியே

பேசிக்கொண்டிருக்கிறார்கள். வயிறு

காலியானாலும் வீடு நிறைய சாமான்

களை வாங்கி வைக்கிறார்கள். உடமை

கருதி செத்துக் கொண்டிருக்கும் ஒருவன்

முன், "இவன் ஏன் இன்னும் சாகமாட்

டேன்" என்கிறான் என்று பொறுமை

இழந்து நிறகிறார்கள். எல்லாவற்றிலும்

அதிசயம் என்ன வென்றால் இவர்கள்

தங்களைப் போல் நல்லவர்கள் இல்லை

என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்


இவர்களுடன் தான் உறவுகளை

வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது

நாம் வாழும் உலகில் தான் இவர்களும்

வாழ்கிறார்கள். ...