ஜெயமோகனின் அறிமுகச் சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயமோகனின் அறிமுகச் சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

புதிய எழுத்தாளர்கள் - ராஜகோபாலன் மற்றும் சுனில் கிருஷ்ணன் சிறுகதைகள்

நண்பர் நட்பாஸ் எழுதியது

இன்று காலை ராஜகோபாலன் மற்றும் சுனில் கிருஷ்ணன் சிறுகதைகள் குறித்த தன் பார்வையை பாஸ்கர் லக்ஷ்மன் இடுகையிட்டிருக்கிறார் - http://tlbhaskar.blogspot.in/2013/08/2.html . இனி எனது எதிர்வினை.

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் பாஸ்கர் லக்ஷ்மன், "ஜெமோ கதைக்கு விமர்சனம் படித்தது போல் இருக்கிறது. இரண்டு கதையை விட அதுவே முன்னால் நிற்கிறது...," என்று கருத்து தெரிவித்துள்ளார் - http://tlbhaskar.blogspot.com/2013/08/blog-post_7.html?showComment=1375932899052#c8631121924541024487 . சென்ற பதிவில் இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் போதிய கவனம் பெறவில்லை என்ற நண்பரின் ஆதங்கம் புரிகிறது. எனவே, "நீங்கள் ஆழமில்லாமல் அடையும் உச்சங்கள் ஒவ்வொன்றும் ஆசானின் தாக்கத்தை நீர்க்கச் செய்கின்றன, அவரது பாணியை, அவரது சொல்லாடலை தேய்வழக்காக்குகின்றன," என்ற அந்தப் பதிவில் விடுத்த எச்சரிக்கையை மட்டும் மீண்டும் உணர்த்தி கதைகளுக்கு வருகிறேன். இது தொடர்பான மேலதிக கருத்துகள் இங்கே இருக்கின்றன - http://tlbhaskar.blogspot.in/2013/08/blog-post_7.html

ராஜகோபாலனின் "வாயுக் கோளாறு" பலருக்கும் ஏமாற்றம் அளித்தது என்று நினைக்கிறேன். இதற்கு ஒரு காரணம் ராஜகோபாலனை இளம் விமரிசகராகவே நாம் அறிந்திருக்கிறோம். அவர் இது போன்ற ஒரு சாதாரணமான கதையை எழுதுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக கணபதி சாரின் முடிவு. அவரது மோசமான அச்சங்கள் மெய்ப்பட்டன என்ற அதிர்ச்சியைக் கொடுக்காமல் காற்று போன டயராக கதை திடீரென்று உட்கார்ந்து விட்டது. ஏன் இப்படி ஆயிற்று என்று யோசித்தால், அங்கே கதைக்கு அந்நியமாக deus ex machina மாதிரியான ஒரு வஸ்து கணபதி சாரின் கதையை முடித்து வைக்கிறது. கணபதி சாரின் அச்சங்கள் அல்லது பெருமிதங்கள் தொழில்நுட்பம் குறித்து இருந்திருந்தால் ஒரு வேளை ஏர் ப்ரேக் வேலை செய்திருக்கலாம். ஆனால் என்னால் ஏர் ப்ரேக்கை வாயுக் கோளாறு என்று சொல்ல முடியவில்லை. அதெல்லாம் மனித சங்கதிகள்.

பொதுவாகச் சொன்னால் நாமெல்லாம் கதைகளைக் குறித்து மிகையான எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லாக் கதைகளும் உலகளாவிய பெரிய ஒரு மானுட தரிசனத்தைக் கொடுத்துவிட முடியாது. மனித இயல்பு இப்படியும் இருக்கிறது என்று சொல்வதில் தப்பில்லை. மனித வாழ்வில் இப்படிப்பட்ட வினோதர்கள் இருக்கிறார்கள், இப்படிப்பட்ட வினோத நிகழ்வுகள் நடக்கின்றன என்று சொல்லும் கதைகளை மோசமான கதைகள் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு ஆழத்தைத் தொட வேண்டும், ஏதோ ஒரு உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும், ஏதோ ஒரு தரிசனத்தைக் காட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்வது எந்த அளவுக்கு சரி என்று யோசிக்க வேண்டும். வயலில் நெல்லுக்கு மட்டுமல்ல, புல்லுக்கும் இடமுண்டு.   ஏன், இப்போதுதான் ஒரு மண்புழு மாகாத்மியம் படித்துவிட்டு புல்லரித்துக் கிடக்கிறேன்.

ராஜகோபாலனின் இன்னொரு கதை "கன்னிப் படையல்" - http://www.jeyamohan.in/?p=36417 . இதுவும் முடிவின் காரணமாக கடும் கண்டனங்களைச் சந்தித்துள்ளது. காரணம், முன் சொன்ன அதே பிரச்சினைதான். ஒரு பிற்போக்குக் கருத்தை இந்தக் கதை முன்னிலைப்படுத்துகிறது என்பதாக ஒரு கண்டனம். வளர்ந்த சூழலின் காரணமாக சிலர் இது போன்ற எண்ணங்கள் கொண்டவர்களாக இருக்க முடியாதா? எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் எவ்வளவு இறுக்கமானதாக மாறி வருகின்றன என்பதை இந்தக் கதைக்கு வந்த எதிர்மறை விமரிசனங்கள் உணர்த்துகின்றன. ஆழங்கள், உச்சங்கள், தரிசனங்கள். தனி மனித உணர்வுகளுக்கும் தனித்தன்மைகளுக்கும் இலக்கியத்தில் இடமேயில்லை என்று முடிவாகிவிட்டதா என்ன?

இரண்டு கதைகளும் அப்படி ஒன்றும் பெரிய ஒரு அபார உண்மையைத் தம் கருப்பொருளாகக் கொண்டவையல்ல. இப்படியும் இருக்கிறார்கள் என்பதை இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன என்று வாசித்தால் வாசிக்கப்படக்கூடிய கதைகள்தான். இவ்விரண்டில் கன்னிப் படையலில் உள்ள அறம் அராஜகம் போலீஸ் அத்துமீறல் ரவுடி ராஜ்யம் போன்ற ஸ்டீரியோடைப்புகள் ரசக்கேடாக இருக்கின்றன என்பதையும் மீறி அந்த அப்பாவின் தவிப்பு நம்மை பதைக்கச் செய்கிறது என்பது ராஜகோபாலனின் வெற்றி. கதையை வாசிக்கும்போது ஜெயமோகன் நினைவுக்கு வருகிறார் என்பதை ஒரு குறையாகச் சொல்ல முடியாது - அப்படிச் சென்ற பதிவில் சொன்னதைதான் மறுபடியும் சொல்ல வேண்டியிருக்கும்.

சுனில் கிருஷ்ணனின் வாசுதேவன் கதைக்கும் அதுதான். யாரும் ஜெயமோகன் மாதிரி எழுதக்கூடாது என்று சொல்லவில்லை, அதற்குத் தகுந்த கதைக்களன் இருந்தால் நல்லது. சுனில் கிருஷ்ணனின் அதிர்ஷ்டம் அது ஓரளவுக்கு அமைந்துவிட்டது - இருந்தாலும் கதைசொல்லியின் மனக்குரலாக அது அவ்வப்போது வெளிப்படும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது, அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். "உன் கதைமாந்தர் அழும்போது நீ பெருமூச்சு விடுகிறாய்" என்று செகாவ் கண்டித்தது நினைவுக்கு வருகிறது ("When you describe the miserable and unfortunate, and want to make the reader feel pity, try to be somewhat colder — that seems to give a kind of background to another's grief, against which it stands out more clearly. Whereas in your story the characters cry and you sigh. Yes, be more cold. ... The more objective you are, the stronger will be the impression you make." - http://mockingbird.creighton.edu/NCW/chekwrit.htm )

வாசுதேவன் கதை ஆம்னிபஸ்ஸில் சுனில் எழுதிய "காப்காவின் உருமாற்றம்" என்ற பதிவில் துவங்குகிறது - http://omnibus.sasariri.com/2012/10/blog-post_5.html . "சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில் வாசுதேவனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தேன்," என்ற நேரடி அனுபவத்தில் துவங்கும் அந்தப் பதிவு, வாசுதேவனை கப்காவின் பூச்சி நாயகன் சம்சாவாக அடையாளப்படுத்திவிட்டு, "ஏன் சம்சாவிற்கு சிறகு முளைத்து பட்டாம்பூச்சியாக அவன் புதிய வானங்களை நோக்கிப் பறந்து செல்லவில்லை? ஏன் அவன் புழுவாகவே இருந்து மறைந்தான்?" என்ற கேள்விகளோடு முடிகிறது. ஏறத்தாழ பத்து மாதங்களுக்குப் பின் இப்போது இந்தக் கதையில் வாசுதேவனுக்கு விடுதலை தந்திருக்கிறார் சுனில் - "வெளிறிய, அந்த ஈர்குச்சி தேகத்தின் குத்திட்ட கண்களும், தலையில் ஓடில்லாத இடத்தில் குழிந்த பள்ளமும் பல இரவுகளின் கனவுகளைக் கலைத்திருக்கின்றன," - இனி அவர் இப்படிச் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்.

வாசுதேவன் கதையின் முடிவில் மானுடனல்ல. ஏதோ ஒரு இடத்தில் அவன் மானுட தளைகளிலிருந்து விடுபட்டு உறவுச் சங்கிலியின் வெறும் தளையாகிறான்.  பின்னர் அக்கா குழந்தை உருவில் அவனது பெற்றோரின் பாச உணர்வுகளுக்கு மாற்று கிடைத்தபின், அந்த உறவில் அவன் தொடர்கிறான். இது ஒரு உணர்வாக எந்த அளவுக்கு நம்மை வந்தடைகிறது என்பதையொட்டி இப்படிச் சொல்வது சரியாக இருக்கும். எனக்கே இது சில சமயம் சரியாக இருக்கிறது, சில சமயம் சந்தேகமாக இருக்கிறது. வேறெப்படியும் இது அர்த்தமாவதுமில்லை. இது குறித்து ஒரு முடிவுக்கு வர அவகாசம் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.

ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு விடுதலை வாசுதேவனுக்குக் கிடைக்கிறது என்றால், அப்படிப்பட்ட ஒரு முடிவு சுனில் கிருஷ்ணன் தன் துணிச்சலால் தந்தது அல்ல - "பல இரவுகளின் கனவுகளைக் கலைத்த" அந்த நிர்பந்தத்தால் தந்தது. அதையும் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. கதாசிரியனின் நோக்கத்தைத் தீர்மானிப்பது ஆபத்தான விஷயம் என்றால் அவனை உளபகுப்பு செய்வது அபத்தமான விஷயம்.

கோவையைச் சேர்ந்த ஒரு நண்பர் இன்று தொலைபேசியில் பேசும்போது, "இந்தக் கதை ஒரு தனி மனித அனுபவ பகிர்வாக மட்டுமே நின்று விடுகிறது, அனுபவப் பதிவைத் தாண்டிச் சென்றிருக்கலாம்," என்ற கருத்தை வெளிப்படுத்தினார். "ஆனால் பூடகமாகக்கூட கதாசிரியர் என்ன சொல்ல முயல்கிறார் எனப் புரியவில்லை. ஏதோ அவசரத்தில் ஒரு அனுபவத்தைக் கதையாக மாற்ற முயன்றது போல் உள்ளது. அது நிச்சயம் முழுமை பெறவில்லை," என்று பாஸ்கர் லக்ஷ்மனும் சொல்கிறார். தொடர் வாசிப்பு மட்டுமே இது உண்மையா என்ன என்று சொல்ல முடியும்.

ஆனால் அதற்கான அவசியம் இந்தக் கதைக்கு உண்டா என்பது யோசிக்க வேண்டிய கேள்வி

புதன், 7 ஆகஸ்ட், 2013

எழுத்தாளர் ஜெயமோகனின் அறிமுகச் சிறுகதைகள் - 2

இந்தக் கதைகள் அனைத்தையும் ஒரு புத்தகமாகப் போடப் போவதாக ஜெமோ கூறியுள்ளார். நல்ல விஷயம். ஆனால் ஏன் இந்தக் கதைகளைத் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை.. அவர் முன்பு கொடுத்த நூறு சிறந்த கதைகளுக்குக் கையாண்ட ​அதே அளவுகோள் இல்லை எனத் தெரிகிறது.​புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை அணுக அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறை ​இருக்கவும் கூடாது என நினைக்கிறேன்.​ ​புத்தகத்தில் தன் தர நிர்ணய அளவீடுகளை வெளிப்படுத்துவார் என எதிர்பார்ப்போம்.

ராஜகோபாலன் எழுதிய வாயுக் கோளாறு மற்றும் கன்னிப்படையல் கதைகளைப் பார்ப்போம். முதலில் நெல்லைத் தமிழ் அழகு. சிறிது நேரம் ஊருக்குச் சென்று வந்தது போன்ற அனுபவம். வாயுக் கோளாறு நகைச்சுவையாக எழுதியுள்ளார். மற்றபடி கதையில் பெரிய விஷயம் இல்லை. பலருக்கும் தன் பெற்றோருக்கு இருந்த நோய் தனக்கும் வந்துவிடுமோ ​,​ அதனால் ​​ ​​தான் துன்பம் அனுபவிக்க நேரமோ என்ற எண்ணம் இருக்கும். அது ​மரண பயமல்ல. ஆனால் எப்போதும் அந்த எண்ணத்தைச் சுமந்துகொண்டு இருப்பது​?​ அதைத்தான் இந்தக் கதை சொல்கிறது. இது ஒரு கதையா அல்லது சம்பவங்களின் தொகுப்பா? நெல்லை தமிழ் தவிர இதைப் படிக்க எந்த முகாந்திரமும் இல்லை ஜெமோ சிபா​​ ​​ரிசைத் தவிர.

கன்னிப்படையல் – அறம் சார்ந்த விழுமியங்களுக்கும், சட்டத்தின் பார்வையில் குற்றம் என்று நிரூபிக்க முடியுமா முடியாதா ​ ​ என்ற கேள்விக்குமிடையேயா​ன போராட்டமாகத்தான் போகிறது. கதை ஆரம்பத்தில் வரும் இந்த வரிகள் இதைச் சுட்டிக் காட்டுகின்​றன.​

“ஆக உமக்கு அவனுவ வெளியே திரியுததுதாம் ஆத்தாமையா இருக்கு. அவனுவள உள்ள தூக்கி வச்சுட்டா நீரு எங்க வெசாரணய ஏத்துக்கிடுவீரு … அப்படித்தான?”
கணேசன் நீருக்குள் தலை அமிழ்த்தப்பட்டவராய் திணறினார். -”சார் ! அய்யா! அது அப்படி இல்லங்க .. தப்பு பண்ணுனது அவனுவளாச்சே …
“அத கோர்ட்டுல்லாவே சொல்லணும். ஒமக்கு இப்ப என்ன? வெசாரனதான ? நடத்திருவோம் .. உம்மட்ட இருந்தே ஆரம்பிப்போம் . என்ன ரைட்டரே, வெசாரனைய ஆரம்பியும் ..”
கடைசி வரை கணேசன் இதே நிலையைத் தான் கொண்டிருக்கிறார்.

 ராதாகிருஷ்ணன் பாத்திரம் மிக முக்கியமானது.

“நியாயத்தின் அணுகுமுறை ஒன்றுதான்.​ ​எவர் பலம் படைத்தவரோ அவருக்கேத்தான் நியாயம். ​ ​ஏனெனில் அரசாங்கம் பலமுள்ளவர்களால்தான் ​உருவா​க்கப்படுகிறது. ​ ​நாடும் அவர்களால்தான் ஏதோ ஒரு முறையில் ஆளப்படுகிறது” என்று ப்ளாட்டோ​ ​​ ரிபப்ளிக் புத்தகம் ஒன்றில் என்றோ எழுதி வைத்ததை​ எதிரொலிக்கும் கதை இது.​ . 
இது காலம்காலமாக நடந்துவரும் கொடுமைதான். இந்த இடத்தில் கதை உச்சத்தை​த்​ தொட்டுவிட்டது. கதாசிரியரும் இதுவரை மிக நன்றாக எழுதியுள்ளார். ஆனால் iபி​ ​​ன்னர் ​ கன்னி, கற்பு , படையல் என்று நீர்த்துப் போகச் செய்து விட்டார். நல்லாத்தானே போய்கிட்டிருந்தது என சொல்ல வைத்துவிட்டது. வெண்ணை திரண்டு வரும்போது தாழி​ ​ உடைந்தாற்போல். மன்னார்குடி சுவாமியே இப்படி செய்து விட்டாr​ரே​​!​ . ஆனால் அவர் கதை​,​​ ​ அவர் முடிவு. இந்தக் கடைசி பகுதி இல்லையெனில் iஇது ​மிகச் சிறந்த கதையாகியிருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்ததாக சுநீல் கிருஷ்ணன் எழுதிய வாசுதேவன். இந்தக் கதையிலும் டாக்டர்​ ​- ​ ​நோயாளி சிக்கல். ஒரு நோயாளிக்கு ஒரு விழுக்காடு பிழைக்கும் நம்பிக்கை இருப்பினும், மருத்துவர் அவருக்கு​ச்​ ​ சிகிச்சைக் கொடுக்க வேண்டுமா? மருத்துவர் முடியாது என்றாலும் அதற்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறதா? எந்த மருத்துவ முறை சிறந்தது? iஇ​து ​ போன்ற கேள்விகள் இந்தக் கதையின் மூலம் எழுகி​ன்றன​. அது எதற்கும் ஒரு பதிலை​​ காத்திரமாக, ஒரு தரிசனம் கிடைக்கும்படி ​சொல்ல​வில்லை. தாங்கள் பயிற்சி எடுக்கும்  மருத்துவர் நோயாளியை ​ ​பணத்திற்காக ஏமாற்றுகிறார் என நினைக்கிறார்கள். அதை “எத்​தைத் தின்னால் பித்தம் தெளியும்” என்றி ரு​க்கும் பெற்றோரிடம் சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் இளங்கோவும் அவன் நண்பனும் தவிக்கிறார்கள். வெறுமனே உயிரோடு இருந்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். 

“பிணத்துக்கெல்லாம் வைத்தியம் பார்க்க வேண்டி இருக்கிறது” என்ற வரி முகத்தில் அறைந்தாற் போல் இருக்கிறது. வைத்தியம் பார்ப்பதால் நோயாளி மேல் ஒருவித பற்று உண்டாகிறது. அந்தக் கரிசனம் உண்மையைச் சொல்ல வைக்கிறது. கதையில் நடை நன்றாக வந்துள்ளது. ஆனால் பூடகமாகக்கூட கதாசிரியர் என்ன சொல்ல முயல்கிறார் எனப் புரியவில்லை. ஏதோ அவசரத்தில் ஒரு அனுபவத்தைக் கதையாக மாற்ற முயன்றது போல் உள்ளது. அது நிச்சயம் முழுமை பெறவில்லை. கதை தொடக்கத்தில் இருந்த நிதானம் இறுதியில் இல்லாமல் போகிறது. ஜெமோ வாடை இருந்தாலும், எல்லோர் எழுத்தை விட இவருடையது எனக்குப் பிடித்திருந்தது. 

கடைசி இரண்டு தெலுங்கு வரிகளை தமிழ் படுத்துவோம்.

“யாலவே இட்ட செஸ்தா…தெப்பலு காவன்னா”  -- “எதுக்குடி இப்படி செய்யற ...அடி வேணுமா”.


“ஊரிக்க தா” – “ சும்மா தா”

இளம் எழுத்தாளர்களின் இசை கதைகள் இரண்டு

நண்பர் நட்பாஸ் அவர்கள் எழுதியது.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் புதியவர்களின் கதைகள் என்ற வரிசையில் பன்னிரெண்டு கதைகள் இடுகையிடப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வை இணையமே கொண்டாட வேண்டும் - அப்படி ஒரு அதிசயம் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் ஜெயமோகன் எழுதியிருக்கும் அத்தனையையும் தாண்டி. 

இளம் எழுத்தாளர்கள் எழுதுவதைத் தன் தளத்தில் பதிப்பித்து அவர்களின்பால் பெரும் கவனத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் ஜெயமோகன், அவருக்கு நம் நன்றிகள். ஆனால் வணிக இதழ்கள், சிற்றிதழ்கள், இணைய இதழ்கள், ப்ளாக்குகள், பேஸ்புக், டிவிட்டர் என்று தன் தளத்துக்கும் குழுமத்துக்கும் வெளியே உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றுமில்லாதபடிக்கு காலி செய்திருப்பது http://www.jeyamohan.in/?p=38334அவருக்கு மட்டுமல்ல, அவரது வாசகர்களுக்கும் அவரது தளத்தில் எழுதியிருப்பவர்களுக்கும் நன்மை செய்வதல்ல. இதற்காக அவருக்கு நம் கடும் வருத்தங்கள்.

இந்தக் கதைகள் அனைத்தையும் படித்தவன் என்ற வகையில் (இவற்றில் சில கதைகளைப் படிப்பதே பெரும்பாடாகப் போய் விட்டது- இதை ஒரு குறையாகச் சொல்லவில்லை), ஒரு விஷயம் முதலில். நிறைய பேர் ஜெயமோகன் மாதிரியே எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்களில் பலர் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அது ஒரு சந்தோஷமான விஷயமா என்றால் எனக்கு அப்படி தெரியவில்லை. அவர் ஒரு கதையை எடுத்துக் கொண்டு எப்படி எழுதியிருப்பாரோ அதே மாதிரி எழுதுங்கள், தப்பில்லை - ஆனால் அவர் எழுதிய கதையையே எடுத்துக் கொண்டு அவர் எழுதிய மாதிரியே, அதையும் இதையும் மட்டும் கொஞ்சம் மாற்றி எழுதினால் வாசிப்பவனுக்கு எப்படி இருக்கும்? இந்தக் கதையை ஏற்கனவே படித்து விட்டேனே, இதை ஏன் இவர் மறுபடியும் எழுதியிருக்கிறார் என்று தோன்றாது?

Imitation is not just the sincerest form of flattery - it's the sincerest form of learning, என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சொன்னதாக ஒரு மேற்கோள் உண்டு. சத்தியமான வார்த்தைகள், ஆனால் அதைச் சரியாகச் செய்யாவிட்டால் அது கல்வியாகவோ துதியாகவோ இருக்காது, பகடியாகப் போய் விடும். இந்த ஆபத்தை ஜெயமோகன் போல் எழுதும் இளம் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இளம் விமரிசகர்களும் உணர வேண்டும். 

நீங்கள் ஆழமில்லாமல் அடையும் உச்சங்கள் ஒவ்வொன்றும் ஆசானின் தாக்கத்தை நீர்க்கச் செய்கின்றன, அவரது பாணியை, அவரது சொல்லாடலை தேய்வழக்காக்குகின்றன. இதிலிருந்து மீண்டுவிடும் படைப்பூக்கம் ஜெயமோகனுக்கு உண்டு என்றாலும் நாம் ஆசை ஆசையாகப் போர்த்துக் கொள்ளும் சட்டையே காலப்போக்கில் கவசம் மாதிரி உடம்பில் ஒட்டிக் கொண்டு ஒருநாள் சிறையாக நெஞ்சுக்கூட்டை அழுத்த ஆரம்பித்தால் யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? ஜெயமோகனை போலி செய்யும் ஒவ்வொருவரும் அவரது எழுத்துலகை மலினப்படுத்துகிறார்கள் - இது எதிரிகள் செய்ய வேண்டிய வேலை, நண்பர்கள் அல்ல.

ஒரு நல்ல மாணவன் ஆசானின் அடியொற்றி நடக்க வேண்டும், அவரை போலி செய்யக்கூடாது. அதுதான் அவருக்கு மரியாதை. அப்படியில்லாமல் ஆசான் மாதிரி நடித்துக் காட்டிக் கொண்டேயிருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் அவர் டஸ்டரைத் தூக்கி தலைமேல் வீசுவார், அப்போது வருத்தப்பட வேண்டியிருக்கும். குழந்தை வீட்டுக்குள் நம்மை மாதிரி நடித்துக் காட்டினால் நன்றாக இருக்கும், ஆனால் போகிற இடமெல்லாம் அதையே செய்து நாலு பேர் நம்மைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொள்கிற மாதிரி ஆகிவிட்டால் அப்போது செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க முடியாது, இல்லையா?

மேற்கோள்கள் மற்றும் தரவுகளுடன் யாரையும் குறிப்பாகச் சுட்டிக் காட்டி அவர்களுக்கு வருத்தம் தருவதைத் தவிர்க்க விரும்புகிறேன். எனவேதான் பொதுப்படையாக, எல்லாருக்கும் பொருந்தும் கருத்தாக (ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அளவில் பொருந்தலாம், சிலருக்கு சுத்தமாகப் பொருந்தாமலும் போகலாம்), இதை முதற்குறிப்பாகச் சொல்கிறேன். இது சிலருக்கு பொருந்தாமல் இருக்கலாம் என்பது உண்மையாயின் அவர்களுடைய மகிழ்ச்சியில் நானும் பங்கேற்றுக் கொள்கிறேன். 

இனி கதைகள். நண்பர் பாஸ்கர் லக்ஷ்மன் எந்தக் கதைகள் பற்றி எழுதுகிறாரோ, அதைப் பற்றியே நானும் எழுதுவதாக ஏற்பாடு. எனவே இன்று இசை கதைகள்.

வேதா எழுதிய பீத்தோவனின் ஆவி http://www.jeyamohan.in/?p=36394 கதையைப் படிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. சுவாரசியமாகக் கடைசிவரை படிக்க முடிந்தது. கதை கொஞ்சம் didacticஆக இருந்ததாக எனக்கு ஒரு உணர்வு. அதில் தவறில்லை. ஆனால் இந்த மாதிரி நமக்குக் கற்பிக்கப்படும் பாடம் புதிய விஷயத்தைப் பற்றியோ புதிய படிப்பினையை உணர்த்துவதாக இருந்தாலோ நன்றாக இருக்கும். துரதிருஷ்டவசமாக இந்தக் கதை இந்திய இசை மேற்கத்திய இசையைவிட உயர்ந்தது என்ற தொனியைக் கொடுத்துவிட்டது, இதெல்லாம் நாம் எப்போதோ நம்பி ஏற்றுக் கொண்டுவிட்ட விஷயங்கள். 

ஜெயமோகனின் லங்கா தகனம் கதையில்கூட இந்த மாதிரியான ஒரு ஆவாகனம்தான் நிகழ்கிறது. ஆனால் அங்கு அது எவ்வளவு பெரிய உச்சத்தைத் தொடுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அது போன்ற ஒரு உயர்வு சேராவுக்குக் கிடைத்திருந்தால் புதுசாக இருந்திருக்கும். ஆனால் இங்கே கதையில் சேராவுக்குக் கிடைத்திருப்பதுகூட ஏதோ ஒரு ஆறுதல் பரிசு என்றுதான் தோன்றுகிறது.

இன்னொரு விஷயம். ஜெயமோகன் உண்மையைத் தோற்றுவிக்கிறார். நிஜ மனிதர்கள் என்று நம்பச் செய்ய நிஜ உலகை, அதன் மனிதர்களை, அதன் வட்டார வழக்கைப் பயன்படுத்திக் கொண்டாலும் சில கதைகளில் அவர் உணர்த்தும் உண்மை அசாதாரணமானது, அசாத்தியமானதும்கூட. எவ்வளவுக்கு எவ்வளவு அசாத்தியமான, நம்மால் கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒரு உண்மையை நாம் நம்ப வேண்டும் என்று அவர் முயற்சிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவரது கதைகளில் உள்ள விஷயங்கள் இயல்பாக, யதார்த்தமாக, முழு அளவில் விவரிக்கப்படுகின்றன. அதைச் செய்யாவிட்டால் அந்த மாதிரி கதைகள் ஒரு fantasyயாக நின்று விடும்.

சோபானம் கதையை எழுதிய ராம் http://www.jeyamohan.in/?p=36408 இந்த விஷயத்தைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நல்லது. நிஜ மனிதர்களைப் பயன்படுத்திக் கொண்டு சோபானம் கதையில் உள்ளது போல் எழுதுவது நல்ல ஒரு உத்தி (அந்த மனிதர்கள் பற்றி விஷயம் தெரிந்தவர்கள் கற்பனையின் சுதந்திரத்தை ரசிக்காமல் அடிக்க வருவார்கள் என்பது வேறு விஷயம்). இந்த நிஜ கதைமாந்தர்களுக்கு பதிலாக  கற்பனை பாத்திரங்களை வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஏன் இவர்கள் நிஜ மனிதர்களாக இருக்கிறார்கள், அதற்கான அவசியம் என்ன? பாஸ்கர் லக்ஷ்மன் சொன்ன மாதிரி இதில் வருவது போல் பாடிக் கொண்டே சாவது நிறைய கதைகளில் படித்தும் சினிமாவில் பார்த்தும் பழகிப் போன ஒன்றாகிவிட்டது. இதனால் மிக அருமையாகவும் பொறுமையாகவும் அவர் செய்திருக்கும் வர்ணனைகள், கொடுத்திருக்கும் விவரணைகள் எல்லாமே வீண் போய் விட்டன.

ஜெயமோகன் தளத்தில் எழுதியிருப்பதால் மட்டுமல்ல, அவரது கதைகளோடு இணைத்து வாசிக்கும் வகையில் எழுதப்பட்டிருப்பதால் இந்த ஒப்பீட்டைத் தவிர்க்க முடியவில்லை. அண்மைக்காலமாக ஜெயமோகன் எழுதிவரும் சிறுகதைகள் ஏதோ ஒரு leap of faithஐக் கோருகின்றன - நம் கண்களை மறிக்கும் அத்தனை முரண்பாடுகள், அசாத்தியங்கள், அசாதாரணங்களைத் தாண்டி கதை அளிக்கும் தரிசனத்தை நாம் உண்மை என நம்ப விரும்புகிறோம், நம்பவும் செய்கிறோம். ஜெயமோகனின் கதைகளின் உண்மை கதைகளுக்குள் இருக்கிறது, வெளியே அல்ல. ஒருவேளை, நாம் முயற்சித்தால் அப்படி ஒரு உண்மை உருவாகலாம். அல்லது வேறு சிலர் அப்படி ஒரு உண்மையை உருவாக்கியிருக்கலாம். ஆனால், அது இயல்பாக உருவான உண்மையல்ல- அப்படிப்பட்ட ஒரு இயல்பான உண்மையை அவரது கதைகள் விவரிக்கின்றன என்று நாம் நம்ப விரும்பினாலும். இவற்றில் கதைகளுக்கு வெளியே இருக்கும் உண்மை விவரிக்கப்படுவதில்லை, மாறாக, கதைகளைக் கொண்டு அசாதாரணமான ஆற்றல் கொண்ட ஒரு உண்மை உருவாக்கப்படுகிறது : அதன் அசாதாரணம், அது சாதாரணமான நம் தினசரி உலக வாழ்வின் யதார்த்த உண்மை என்று நம்மை நம்பச் செய்வதில்தான் இருக்கிறது.

இந்தப் பாடத்தை மட்டும் கற்றுக் கொண்டால் போதும், வேதாவும் ராமும் இதைவிடச் சிறந்த கதைகளை எழுதுவார்கள். அதற்கான மொழி இருக்கிறது, முயற்சி இருக்கிறது. துணிச்சலை மட்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

எழுத்தாளர் ஜெயமோகனின் அறிமுகச் சிறுகதைகள்

ஜெமோவை நினைக்கும் போது கர்நாடக இசைக் கலைஞர் எம்.டி. இராமநாதன் அவர்கள் நினைவு தான் வரும். MDR  பாடுவதைப் பிடித்தவர்கள் மற்றும் பிடிக்காதவர்கள் என இரண்டு பிரிவு தான் உண்டு. அது போல் தான் ஜெமோவும்.

ஜெமோ புதிய, இளம் எழுத்தாளர்கள் எழுதிய பன்னிரெண்டு சிறுகதைகளைத்  தன் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதை எழுதியவர்களுக்கு இது பெரிய ஊக்கம். அவர் கிட்டத்தட்ட 160 கதைகளில் இருந்து இதனை வடிகட்டியிருக்கிறார். நமக்கும் நோகாமல் நொங்கு தின்ற மாதிரி தான். மற்ற எழுத்தாளர்களும் இப்படி சிபாரிசு செய்தால் என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு வசதியாக இருக்கும். இந்தக் கதைகளை படித்தேன். சில கதைகளை இரண்டு தடவை கூட. சரி என் மனதில் தோன்றியதை எழுதுவோமே என்ற எண்ணம் தான்.

முதலில் இரண்டு கதைகளை எடுத்துக் கொள்கிறேன். இரண்டும் இசையோடு சம்மந்தப்பட்டது. சோபானம் மற்றும் பீத்தோவனின் ஆவி. ராம் மற்றும் வேதா எழுதியது. ராம் முன்பு ஜெமோ தளத்தில் கடுமையான இசை குறித்த விமர்சனங்கள் எழுதியதைப் படித்த நினைவிருக்கிறது. ஆனால் இந்த சோபானம் கதையை சங்கராபரணம் சினிமாவில் வரும் “மானச சஞ்சரரே” பாடல் காட்சி போல் மிகவும் ரம்யமாக எழுதியுள்ளார். இந்தக் கதையில் ராஜமையர் பாத்திரம் முழுமை பெற்று நன்றாக வந்திருக்கிறது. அவர் கான் சாகேபின் காலில் விழுவதைப் படித்த போது, ஏதோ உண்மை சம்பவத்தை புனைவில் முயல்கிறார் எனத் தோன்றியது. அது அவ்வளவு நன்றாக வந்ததாகத் தெரியவில்லை. கான் சாகேப் சங்கீதத்தில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு, தன்னையே அதில் இழந்து விடுகிறார். அது கச்சிதம். இதைக் கதைத் தலைப்பில் கூறிவிட்டார் எனத் தோன்றுகிறது. ஆனால் சாகேப் எண்ண ஓட்டம் சரியாகப் பிடபடவில்லை. அவருக்கும், அவர் சிஷ்யனுக்கும் உள்ள உறவு ஏதோ அந்தரத்தில் நிற்கிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை நெடுக்கதை எழுதி அதனை சிறு கதையாக மாற்றி இருப்போரோ? ஈஸ்வரோ ரட்சது. மோக முள் நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அடுத்ததாக வேதா அவர்கள் எழுதிய பீத்தோவனின் ஆவி. இந்தக் கதையைப் படித்தவுடன் பெரிய பூனை செல்ல பெரிய ஓட்டை, சிறிய பூனை செல்ல சிறிய ஓட்டை செய்து வைத்த மிகப் பெரிய விஞ்ஞானியின் நினைவு தான் வந்தது. காலமெல்லாம் பீத்தோவன் இசையை உலகமெல்லாம் வாசித்துப் புகழ் பெற்ற ஒருவருக்குத் தன் திறமையே தெரியாமல் அல்லது குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறார். ஆனால் இசையில் பெரிய அளவு பரிச்சியமில்லாத ஒருவனால் தன்னை அறிந்து கொள்கிறார். அடிப்படையில் கிழக்கு மற்றும் மேற்கின் இசை, இசை அனுபவம் எல்லாம் ஒன்று தான் என்கிறார் வேதா. கதையின் வடிவமைப்பு நன்றாக வந்துள்ளது.படிப்பதற்கு குழப்பமில்லாமல் சுகமாகச் செல்கிறது.  கதையை ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தி முடிவைக் கொடுக்காமல், வாசகனிடம் விட்டிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ? ஜெமோ அவர் தளத்தில் கூறியுள்ளதைப் போல் தி.ஜா வின்  கதை நினைவில் வராமல் போகாது.

இரண்டு கதைகளையும் படிக்கவில்லை என்றால், சுட்டிகள் கீழே:


 சரிதான். அவரவர் அனுபவம் அவரவருக்குஎன்றார் சாகேப் என சோபானம் கதையில் வருவது போல் இது எனது அனுபவம்.