வியாழன், 8 ஆகஸ்ட், 2013

புதிய எழுத்தாளர்கள் - ராஜகோபாலன் மற்றும் சுனில் கிருஷ்ணன் சிறுகதைகள்

நண்பர் நட்பாஸ் எழுதியது

இன்று காலை ராஜகோபாலன் மற்றும் சுனில் கிருஷ்ணன் சிறுகதைகள் குறித்த தன் பார்வையை பாஸ்கர் லக்ஷ்மன் இடுகையிட்டிருக்கிறார் - http://tlbhaskar.blogspot.in/2013/08/2.html . இனி எனது எதிர்வினை.

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் பாஸ்கர் லக்ஷ்மன், "ஜெமோ கதைக்கு விமர்சனம் படித்தது போல் இருக்கிறது. இரண்டு கதையை விட அதுவே முன்னால் நிற்கிறது...," என்று கருத்து தெரிவித்துள்ளார் - http://tlbhaskar.blogspot.com/2013/08/blog-post_7.html?showComment=1375932899052#c8631121924541024487 . சென்ற பதிவில் இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் போதிய கவனம் பெறவில்லை என்ற நண்பரின் ஆதங்கம் புரிகிறது. எனவே, "நீங்கள் ஆழமில்லாமல் அடையும் உச்சங்கள் ஒவ்வொன்றும் ஆசானின் தாக்கத்தை நீர்க்கச் செய்கின்றன, அவரது பாணியை, அவரது சொல்லாடலை தேய்வழக்காக்குகின்றன," என்ற அந்தப் பதிவில் விடுத்த எச்சரிக்கையை மட்டும் மீண்டும் உணர்த்தி கதைகளுக்கு வருகிறேன். இது தொடர்பான மேலதிக கருத்துகள் இங்கே இருக்கின்றன - http://tlbhaskar.blogspot.in/2013/08/blog-post_7.html

ராஜகோபாலனின் "வாயுக் கோளாறு" பலருக்கும் ஏமாற்றம் அளித்தது என்று நினைக்கிறேன். இதற்கு ஒரு காரணம் ராஜகோபாலனை இளம் விமரிசகராகவே நாம் அறிந்திருக்கிறோம். அவர் இது போன்ற ஒரு சாதாரணமான கதையை எழுதுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக கணபதி சாரின் முடிவு. அவரது மோசமான அச்சங்கள் மெய்ப்பட்டன என்ற அதிர்ச்சியைக் கொடுக்காமல் காற்று போன டயராக கதை திடீரென்று உட்கார்ந்து விட்டது. ஏன் இப்படி ஆயிற்று என்று யோசித்தால், அங்கே கதைக்கு அந்நியமாக deus ex machina மாதிரியான ஒரு வஸ்து கணபதி சாரின் கதையை முடித்து வைக்கிறது. கணபதி சாரின் அச்சங்கள் அல்லது பெருமிதங்கள் தொழில்நுட்பம் குறித்து இருந்திருந்தால் ஒரு வேளை ஏர் ப்ரேக் வேலை செய்திருக்கலாம். ஆனால் என்னால் ஏர் ப்ரேக்கை வாயுக் கோளாறு என்று சொல்ல முடியவில்லை. அதெல்லாம் மனித சங்கதிகள்.

பொதுவாகச் சொன்னால் நாமெல்லாம் கதைகளைக் குறித்து மிகையான எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லாக் கதைகளும் உலகளாவிய பெரிய ஒரு மானுட தரிசனத்தைக் கொடுத்துவிட முடியாது. மனித இயல்பு இப்படியும் இருக்கிறது என்று சொல்வதில் தப்பில்லை. மனித வாழ்வில் இப்படிப்பட்ட வினோதர்கள் இருக்கிறார்கள், இப்படிப்பட்ட வினோத நிகழ்வுகள் நடக்கின்றன என்று சொல்லும் கதைகளை மோசமான கதைகள் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு ஆழத்தைத் தொட வேண்டும், ஏதோ ஒரு உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும், ஏதோ ஒரு தரிசனத்தைக் காட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்வது எந்த அளவுக்கு சரி என்று யோசிக்க வேண்டும். வயலில் நெல்லுக்கு மட்டுமல்ல, புல்லுக்கும் இடமுண்டு.   ஏன், இப்போதுதான் ஒரு மண்புழு மாகாத்மியம் படித்துவிட்டு புல்லரித்துக் கிடக்கிறேன்.

ராஜகோபாலனின் இன்னொரு கதை "கன்னிப் படையல்" - http://www.jeyamohan.in/?p=36417 . இதுவும் முடிவின் காரணமாக கடும் கண்டனங்களைச் சந்தித்துள்ளது. காரணம், முன் சொன்ன அதே பிரச்சினைதான். ஒரு பிற்போக்குக் கருத்தை இந்தக் கதை முன்னிலைப்படுத்துகிறது என்பதாக ஒரு கண்டனம். வளர்ந்த சூழலின் காரணமாக சிலர் இது போன்ற எண்ணங்கள் கொண்டவர்களாக இருக்க முடியாதா? எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் எவ்வளவு இறுக்கமானதாக மாறி வருகின்றன என்பதை இந்தக் கதைக்கு வந்த எதிர்மறை விமரிசனங்கள் உணர்த்துகின்றன. ஆழங்கள், உச்சங்கள், தரிசனங்கள். தனி மனித உணர்வுகளுக்கும் தனித்தன்மைகளுக்கும் இலக்கியத்தில் இடமேயில்லை என்று முடிவாகிவிட்டதா என்ன?

இரண்டு கதைகளும் அப்படி ஒன்றும் பெரிய ஒரு அபார உண்மையைத் தம் கருப்பொருளாகக் கொண்டவையல்ல. இப்படியும் இருக்கிறார்கள் என்பதை இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன என்று வாசித்தால் வாசிக்கப்படக்கூடிய கதைகள்தான். இவ்விரண்டில் கன்னிப் படையலில் உள்ள அறம் அராஜகம் போலீஸ் அத்துமீறல் ரவுடி ராஜ்யம் போன்ற ஸ்டீரியோடைப்புகள் ரசக்கேடாக இருக்கின்றன என்பதையும் மீறி அந்த அப்பாவின் தவிப்பு நம்மை பதைக்கச் செய்கிறது என்பது ராஜகோபாலனின் வெற்றி. கதையை வாசிக்கும்போது ஜெயமோகன் நினைவுக்கு வருகிறார் என்பதை ஒரு குறையாகச் சொல்ல முடியாது - அப்படிச் சென்ற பதிவில் சொன்னதைதான் மறுபடியும் சொல்ல வேண்டியிருக்கும்.

சுனில் கிருஷ்ணனின் வாசுதேவன் கதைக்கும் அதுதான். யாரும் ஜெயமோகன் மாதிரி எழுதக்கூடாது என்று சொல்லவில்லை, அதற்குத் தகுந்த கதைக்களன் இருந்தால் நல்லது. சுனில் கிருஷ்ணனின் அதிர்ஷ்டம் அது ஓரளவுக்கு அமைந்துவிட்டது - இருந்தாலும் கதைசொல்லியின் மனக்குரலாக அது அவ்வப்போது வெளிப்படும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது, அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். "உன் கதைமாந்தர் அழும்போது நீ பெருமூச்சு விடுகிறாய்" என்று செகாவ் கண்டித்தது நினைவுக்கு வருகிறது ("When you describe the miserable and unfortunate, and want to make the reader feel pity, try to be somewhat colder — that seems to give a kind of background to another's grief, against which it stands out more clearly. Whereas in your story the characters cry and you sigh. Yes, be more cold. ... The more objective you are, the stronger will be the impression you make." - http://mockingbird.creighton.edu/NCW/chekwrit.htm )

வாசுதேவன் கதை ஆம்னிபஸ்ஸில் சுனில் எழுதிய "காப்காவின் உருமாற்றம்" என்ற பதிவில் துவங்குகிறது - http://omnibus.sasariri.com/2012/10/blog-post_5.html . "சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில் வாசுதேவனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தேன்," என்ற நேரடி அனுபவத்தில் துவங்கும் அந்தப் பதிவு, வாசுதேவனை கப்காவின் பூச்சி நாயகன் சம்சாவாக அடையாளப்படுத்திவிட்டு, "ஏன் சம்சாவிற்கு சிறகு முளைத்து பட்டாம்பூச்சியாக அவன் புதிய வானங்களை நோக்கிப் பறந்து செல்லவில்லை? ஏன் அவன் புழுவாகவே இருந்து மறைந்தான்?" என்ற கேள்விகளோடு முடிகிறது. ஏறத்தாழ பத்து மாதங்களுக்குப் பின் இப்போது இந்தக் கதையில் வாசுதேவனுக்கு விடுதலை தந்திருக்கிறார் சுனில் - "வெளிறிய, அந்த ஈர்குச்சி தேகத்தின் குத்திட்ட கண்களும், தலையில் ஓடில்லாத இடத்தில் குழிந்த பள்ளமும் பல இரவுகளின் கனவுகளைக் கலைத்திருக்கின்றன," - இனி அவர் இப்படிச் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்.

வாசுதேவன் கதையின் முடிவில் மானுடனல்ல. ஏதோ ஒரு இடத்தில் அவன் மானுட தளைகளிலிருந்து விடுபட்டு உறவுச் சங்கிலியின் வெறும் தளையாகிறான்.  பின்னர் அக்கா குழந்தை உருவில் அவனது பெற்றோரின் பாச உணர்வுகளுக்கு மாற்று கிடைத்தபின், அந்த உறவில் அவன் தொடர்கிறான். இது ஒரு உணர்வாக எந்த அளவுக்கு நம்மை வந்தடைகிறது என்பதையொட்டி இப்படிச் சொல்வது சரியாக இருக்கும். எனக்கே இது சில சமயம் சரியாக இருக்கிறது, சில சமயம் சந்தேகமாக இருக்கிறது. வேறெப்படியும் இது அர்த்தமாவதுமில்லை. இது குறித்து ஒரு முடிவுக்கு வர அவகாசம் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.

ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு விடுதலை வாசுதேவனுக்குக் கிடைக்கிறது என்றால், அப்படிப்பட்ட ஒரு முடிவு சுனில் கிருஷ்ணன் தன் துணிச்சலால் தந்தது அல்ல - "பல இரவுகளின் கனவுகளைக் கலைத்த" அந்த நிர்பந்தத்தால் தந்தது. அதையும் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. கதாசிரியனின் நோக்கத்தைத் தீர்மானிப்பது ஆபத்தான விஷயம் என்றால் அவனை உளபகுப்பு செய்வது அபத்தமான விஷயம்.

கோவையைச் சேர்ந்த ஒரு நண்பர் இன்று தொலைபேசியில் பேசும்போது, "இந்தக் கதை ஒரு தனி மனித அனுபவ பகிர்வாக மட்டுமே நின்று விடுகிறது, அனுபவப் பதிவைத் தாண்டிச் சென்றிருக்கலாம்," என்ற கருத்தை வெளிப்படுத்தினார். "ஆனால் பூடகமாகக்கூட கதாசிரியர் என்ன சொல்ல முயல்கிறார் எனப் புரியவில்லை. ஏதோ அவசரத்தில் ஒரு அனுபவத்தைக் கதையாக மாற்ற முயன்றது போல் உள்ளது. அது நிச்சயம் முழுமை பெறவில்லை," என்று பாஸ்கர் லக்ஷ்மனும் சொல்கிறார். தொடர் வாசிப்பு மட்டுமே இது உண்மையா என்ன என்று சொல்ல முடியும்.

ஆனால் அதற்கான அவசியம் இந்தக் கதைக்கு உண்டா என்பது யோசிக்க வேண்டிய கேள்வி

4 கருத்துகள்:

 1. //ஏதோ ஒரு தரிசனத்தைக் காட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்வது எந்த அளவுக்கு சரி என்று யோசிக்க வேண்டும். வயலில் நெல்லுக்கு மட்டுமல்ல, புல்லுக்கும் இடமுண்டு//
  நீங்கள் சொல்வது போல் எல்லாக் கதைகளிலும் தரிசனம் எதிர் பார்ப்பது தவறு என்பது உண்மை தான். ஆனால் அதை எங்கு எதிர் பார்க்கிறோம். எல்லாக் கதைகளிலும் இல்லை. அதற்கான சில கதைகள், எழுத்தாளர்கள், இதழ்கள் என வரையறுத்துக் கொள்கிறோம். இந்தக் கதைகள் ஜெமோ வின் சிபாரிசில் வந்தவைகள். அதனால் கவனம் பெறுகிறது.எனவே அதை சற்று உள்னோக்கிப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. விளையாடுவது ரஞ்சியா அல்லது டெஸ்ட் மாட்சா?

  //ஆழங்கள், உச்சங்கள், தரிசனங்கள். தனி மனித உணர்வுகளுக்கும் தனித்தன்மைகளுக்கும் இலக்கியத்தில் இடமேயில்லை என்று முடிவாகிவிட்டதா என்ன?//

  தனி மனித உணர்வுகள் உச்சத்தை அடையும் போது ஏற்படும் உணர்வு சொல்ல முடியாது. எது இலக்கியம் என்பதெல்லாம் அவரவர்கள் தேடுதலில் கண்டடைவது.

  //ஒரு பிற்போக்குக் கருத்தை இந்தக் கதை முன்னிலைப்படுத்துகிறது என்பதாக ஒரு கண்டனம்//

  பிற்போக்கு, முற்போக்கு ஒரு பிரச்சனையேயில்லை. என் புரிதலில் பெண் கற்பழிப்புக்குப் பதில் எந்த குற்றத்தையும் போட்டுக் கொள்ளலாம். அது உச்சத்தைக் கொடுக்காது. ராதா கிருஷ்ணன் பேசுவதோடு கதை முடிந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அது கதாசிரியரின் விருப்பம்.

  வாசுதேவன் கதையைப் பொறுத்த வரை புரிதலில் நமக்குள் பெரிய வித்தியாசம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.

   தரிசனம், உச்சம் இதையெல்லாம் தேடுவதற்கு நீங்கள் சொல்வது போல் இந்தக் கதைகள் ஜெயமோகனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தளத்தில் இடுகையிடப்பட்டவை என்பது ஒரு காரணம் என்றால் மற்றொன்று அவரது தளத்தில் எழுதப்படும் இச்சிறுகதை விமரிசனங்களில் பெரும்பான்மையானவை இப்படிப்பட்ட விஷயங்கள் கதைகளில் இருக்கின்றன என்ற சொல்வதும்தான். அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியிருக்கிறது.

   நுகர்வுப் பொருட்கள் போல் முன்கூட்டியே தரநிர்ணயம் செய்து விலைப் பட்டி ஒட்டப்பட்டு இலக்கியப் படைப்புகள் சந்தைக்கு வருவதில்லை - எவ்வளவு பெரிய படைப்பானாலும் அது தொடர்ந்த வாசிப்புக்கும் விமரிசனத்துக்கும் உட்படுத்தப்படுகிறது என்பது மட்டுமே அதன் சிறப்பாக இருக்க முடியும், வேறெதுவும் அல்ல. புளகாங்கிதங்களும் உச்சிமுகர்தல்களும் அறிவுசார் இயக்கம் அல்ல.

   ஒருத்தர் எழுதிய கதையைப் போன்ற அதே பாணியில், மக்கள் வேறு முடிவு வேறு, என்று மட்டும் மாற்றி இன்னொருத்தர் எழுதினால் அதற்கு இலக்கிய மதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும் என்பது ரொம்ப அடிப்படையான பாலபாடம். அதைக்கூட யாரும் லட்சியம் செய்வதாகத் தெரியவில்லை. அதைவிட மோசம், நீங்கள் சொன்னதுபோல் இந்தக் கதைகள் நிச்சயம் ஜெயமோகன் முன்னர் தேர்ந்தெடுத்த நூறு கதைகளை இப்போது நூற்றுப் பன்னிரெண்டாக்கும் பட்டியல் அல்ல. ஆனால் பின்னூட்டங்களையும் விமரிசனங்களையும் பார்த்தால் இவையே முதல் பன்னிரெண்டாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது.

   தெரியாமல்கூட ஒத்திசைவு ராமசாமி அவர்கள் இந்தக் கதைகளையும் இதற்கு வந்துள்ள விமரிசனங்களையும் படித்துவிடக் கூடாது :)

   நீக்கு
 2. பாஸ்,
  காப்காவின் சம்சா மற்றும் வாசுவை தொடர்புபடுத்தியது குறித்து யோசித்து வருகிறேன். இது கதையை மேலும் நெருங்கி புரிந்துகொள்ள உதவும். நான் இந்த கதைக்கு சொப்பு எனப் பெயர் வைத்திருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், சொப்பு எனும் வகையில் இக்கதையை வாசித்தால் இது கிரேகர் சம்சாவின் கதை..ஆனால் வாசுதேவனான பின்னர் இது வேறு கதை ஆவதாக எனக்கு தோன்றுகிறது. அதுவே வாசுவிற்கும் சம்சாவிற்குமான வேறுபாடு என தோன்றுகிறது. மற்றபடி, இக்கதை எழுதியதன் வழியாக என்னை லகுவாக உணர்ந்தேன். இன்னும் மேம்பட்டு எழுதியிருக்கலாம் தான். எழுதுவது மட்டுமே என் கடமை. அது நிற்பதும் நிற்காமல் போவதும் அதன் சக்தியைப் பொருத்து. போக வேண்டிய தொலைவு நிறைய இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சுனில்.

   மேலே சுட்டி தரப்பட்டுள்ள செகாவ் மேற்கோளுக்குச் சென்றால் அங்கே அவர் விமரிசகர்களை படு கேவலமாகத் திட்டியுள்ளார். என்ன செய்வது, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்! :)

   வலிய ஏற்படுத்திக் கொண்ட முனைப்புடன் யாரையும் எதையும் விமரிசிக்கவில்லை - இதில் உள்ள நியாய அநியாயங்களைப் பற்றி பேசும் தகுதியும் எனக்கில்லை.

   நன்றி, வாழ்த்துகள்.

   நீக்கு