புதன், 7 ஆகஸ்ட், 2013

இளம் எழுத்தாளர்களின் இசை கதைகள் இரண்டு

நண்பர் நட்பாஸ் அவர்கள் எழுதியது.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் புதியவர்களின் கதைகள் என்ற வரிசையில் பன்னிரெண்டு கதைகள் இடுகையிடப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வை இணையமே கொண்டாட வேண்டும் - அப்படி ஒரு அதிசயம் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் ஜெயமோகன் எழுதியிருக்கும் அத்தனையையும் தாண்டி. 

இளம் எழுத்தாளர்கள் எழுதுவதைத் தன் தளத்தில் பதிப்பித்து அவர்களின்பால் பெரும் கவனத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் ஜெயமோகன், அவருக்கு நம் நன்றிகள். ஆனால் வணிக இதழ்கள், சிற்றிதழ்கள், இணைய இதழ்கள், ப்ளாக்குகள், பேஸ்புக், டிவிட்டர் என்று தன் தளத்துக்கும் குழுமத்துக்கும் வெளியே உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றுமில்லாதபடிக்கு காலி செய்திருப்பது http://www.jeyamohan.in/?p=38334அவருக்கு மட்டுமல்ல, அவரது வாசகர்களுக்கும் அவரது தளத்தில் எழுதியிருப்பவர்களுக்கும் நன்மை செய்வதல்ல. இதற்காக அவருக்கு நம் கடும் வருத்தங்கள்.

இந்தக் கதைகள் அனைத்தையும் படித்தவன் என்ற வகையில் (இவற்றில் சில கதைகளைப் படிப்பதே பெரும்பாடாகப் போய் விட்டது- இதை ஒரு குறையாகச் சொல்லவில்லை), ஒரு விஷயம் முதலில். நிறைய பேர் ஜெயமோகன் மாதிரியே எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்களில் பலர் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அது ஒரு சந்தோஷமான விஷயமா என்றால் எனக்கு அப்படி தெரியவில்லை. அவர் ஒரு கதையை எடுத்துக் கொண்டு எப்படி எழுதியிருப்பாரோ அதே மாதிரி எழுதுங்கள், தப்பில்லை - ஆனால் அவர் எழுதிய கதையையே எடுத்துக் கொண்டு அவர் எழுதிய மாதிரியே, அதையும் இதையும் மட்டும் கொஞ்சம் மாற்றி எழுதினால் வாசிப்பவனுக்கு எப்படி இருக்கும்? இந்தக் கதையை ஏற்கனவே படித்து விட்டேனே, இதை ஏன் இவர் மறுபடியும் எழுதியிருக்கிறார் என்று தோன்றாது?

Imitation is not just the sincerest form of flattery - it's the sincerest form of learning, என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சொன்னதாக ஒரு மேற்கோள் உண்டு. சத்தியமான வார்த்தைகள், ஆனால் அதைச் சரியாகச் செய்யாவிட்டால் அது கல்வியாகவோ துதியாகவோ இருக்காது, பகடியாகப் போய் விடும். இந்த ஆபத்தை ஜெயமோகன் போல் எழுதும் இளம் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இளம் விமரிசகர்களும் உணர வேண்டும். 

நீங்கள் ஆழமில்லாமல் அடையும் உச்சங்கள் ஒவ்வொன்றும் ஆசானின் தாக்கத்தை நீர்க்கச் செய்கின்றன, அவரது பாணியை, அவரது சொல்லாடலை தேய்வழக்காக்குகின்றன. இதிலிருந்து மீண்டுவிடும் படைப்பூக்கம் ஜெயமோகனுக்கு உண்டு என்றாலும் நாம் ஆசை ஆசையாகப் போர்த்துக் கொள்ளும் சட்டையே காலப்போக்கில் கவசம் மாதிரி உடம்பில் ஒட்டிக் கொண்டு ஒருநாள் சிறையாக நெஞ்சுக்கூட்டை அழுத்த ஆரம்பித்தால் யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? ஜெயமோகனை போலி செய்யும் ஒவ்வொருவரும் அவரது எழுத்துலகை மலினப்படுத்துகிறார்கள் - இது எதிரிகள் செய்ய வேண்டிய வேலை, நண்பர்கள் அல்ல.

ஒரு நல்ல மாணவன் ஆசானின் அடியொற்றி நடக்க வேண்டும், அவரை போலி செய்யக்கூடாது. அதுதான் அவருக்கு மரியாதை. அப்படியில்லாமல் ஆசான் மாதிரி நடித்துக் காட்டிக் கொண்டேயிருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் அவர் டஸ்டரைத் தூக்கி தலைமேல் வீசுவார், அப்போது வருத்தப்பட வேண்டியிருக்கும். குழந்தை வீட்டுக்குள் நம்மை மாதிரி நடித்துக் காட்டினால் நன்றாக இருக்கும், ஆனால் போகிற இடமெல்லாம் அதையே செய்து நாலு பேர் நம்மைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொள்கிற மாதிரி ஆகிவிட்டால் அப்போது செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க முடியாது, இல்லையா?

மேற்கோள்கள் மற்றும் தரவுகளுடன் யாரையும் குறிப்பாகச் சுட்டிக் காட்டி அவர்களுக்கு வருத்தம் தருவதைத் தவிர்க்க விரும்புகிறேன். எனவேதான் பொதுப்படையாக, எல்லாருக்கும் பொருந்தும் கருத்தாக (ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அளவில் பொருந்தலாம், சிலருக்கு சுத்தமாகப் பொருந்தாமலும் போகலாம்), இதை முதற்குறிப்பாகச் சொல்கிறேன். இது சிலருக்கு பொருந்தாமல் இருக்கலாம் என்பது உண்மையாயின் அவர்களுடைய மகிழ்ச்சியில் நானும் பங்கேற்றுக் கொள்கிறேன். 

இனி கதைகள். நண்பர் பாஸ்கர் லக்ஷ்மன் எந்தக் கதைகள் பற்றி எழுதுகிறாரோ, அதைப் பற்றியே நானும் எழுதுவதாக ஏற்பாடு. எனவே இன்று இசை கதைகள்.

வேதா எழுதிய பீத்தோவனின் ஆவி http://www.jeyamohan.in/?p=36394 கதையைப் படிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. சுவாரசியமாகக் கடைசிவரை படிக்க முடிந்தது. கதை கொஞ்சம் didacticஆக இருந்ததாக எனக்கு ஒரு உணர்வு. அதில் தவறில்லை. ஆனால் இந்த மாதிரி நமக்குக் கற்பிக்கப்படும் பாடம் புதிய விஷயத்தைப் பற்றியோ புதிய படிப்பினையை உணர்த்துவதாக இருந்தாலோ நன்றாக இருக்கும். துரதிருஷ்டவசமாக இந்தக் கதை இந்திய இசை மேற்கத்திய இசையைவிட உயர்ந்தது என்ற தொனியைக் கொடுத்துவிட்டது, இதெல்லாம் நாம் எப்போதோ நம்பி ஏற்றுக் கொண்டுவிட்ட விஷயங்கள். 

ஜெயமோகனின் லங்கா தகனம் கதையில்கூட இந்த மாதிரியான ஒரு ஆவாகனம்தான் நிகழ்கிறது. ஆனால் அங்கு அது எவ்வளவு பெரிய உச்சத்தைத் தொடுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அது போன்ற ஒரு உயர்வு சேராவுக்குக் கிடைத்திருந்தால் புதுசாக இருந்திருக்கும். ஆனால் இங்கே கதையில் சேராவுக்குக் கிடைத்திருப்பதுகூட ஏதோ ஒரு ஆறுதல் பரிசு என்றுதான் தோன்றுகிறது.

இன்னொரு விஷயம். ஜெயமோகன் உண்மையைத் தோற்றுவிக்கிறார். நிஜ மனிதர்கள் என்று நம்பச் செய்ய நிஜ உலகை, அதன் மனிதர்களை, அதன் வட்டார வழக்கைப் பயன்படுத்திக் கொண்டாலும் சில கதைகளில் அவர் உணர்த்தும் உண்மை அசாதாரணமானது, அசாத்தியமானதும்கூட. எவ்வளவுக்கு எவ்வளவு அசாத்தியமான, நம்மால் கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒரு உண்மையை நாம் நம்ப வேண்டும் என்று அவர் முயற்சிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவரது கதைகளில் உள்ள விஷயங்கள் இயல்பாக, யதார்த்தமாக, முழு அளவில் விவரிக்கப்படுகின்றன. அதைச் செய்யாவிட்டால் அந்த மாதிரி கதைகள் ஒரு fantasyயாக நின்று விடும்.

சோபானம் கதையை எழுதிய ராம் http://www.jeyamohan.in/?p=36408 இந்த விஷயத்தைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நல்லது. நிஜ மனிதர்களைப் பயன்படுத்திக் கொண்டு சோபானம் கதையில் உள்ளது போல் எழுதுவது நல்ல ஒரு உத்தி (அந்த மனிதர்கள் பற்றி விஷயம் தெரிந்தவர்கள் கற்பனையின் சுதந்திரத்தை ரசிக்காமல் அடிக்க வருவார்கள் என்பது வேறு விஷயம்). இந்த நிஜ கதைமாந்தர்களுக்கு பதிலாக  கற்பனை பாத்திரங்களை வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஏன் இவர்கள் நிஜ மனிதர்களாக இருக்கிறார்கள், அதற்கான அவசியம் என்ன? பாஸ்கர் லக்ஷ்மன் சொன்ன மாதிரி இதில் வருவது போல் பாடிக் கொண்டே சாவது நிறைய கதைகளில் படித்தும் சினிமாவில் பார்த்தும் பழகிப் போன ஒன்றாகிவிட்டது. இதனால் மிக அருமையாகவும் பொறுமையாகவும் அவர் செய்திருக்கும் வர்ணனைகள், கொடுத்திருக்கும் விவரணைகள் எல்லாமே வீண் போய் விட்டன.

ஜெயமோகன் தளத்தில் எழுதியிருப்பதால் மட்டுமல்ல, அவரது கதைகளோடு இணைத்து வாசிக்கும் வகையில் எழுதப்பட்டிருப்பதால் இந்த ஒப்பீட்டைத் தவிர்க்க முடியவில்லை. அண்மைக்காலமாக ஜெயமோகன் எழுதிவரும் சிறுகதைகள் ஏதோ ஒரு leap of faithஐக் கோருகின்றன - நம் கண்களை மறிக்கும் அத்தனை முரண்பாடுகள், அசாத்தியங்கள், அசாதாரணங்களைத் தாண்டி கதை அளிக்கும் தரிசனத்தை நாம் உண்மை என நம்ப விரும்புகிறோம், நம்பவும் செய்கிறோம். ஜெயமோகனின் கதைகளின் உண்மை கதைகளுக்குள் இருக்கிறது, வெளியே அல்ல. ஒருவேளை, நாம் முயற்சித்தால் அப்படி ஒரு உண்மை உருவாகலாம். அல்லது வேறு சிலர் அப்படி ஒரு உண்மையை உருவாக்கியிருக்கலாம். ஆனால், அது இயல்பாக உருவான உண்மையல்ல- அப்படிப்பட்ட ஒரு இயல்பான உண்மையை அவரது கதைகள் விவரிக்கின்றன என்று நாம் நம்ப விரும்பினாலும். இவற்றில் கதைகளுக்கு வெளியே இருக்கும் உண்மை விவரிக்கப்படுவதில்லை, மாறாக, கதைகளைக் கொண்டு அசாதாரணமான ஆற்றல் கொண்ட ஒரு உண்மை உருவாக்கப்படுகிறது : அதன் அசாதாரணம், அது சாதாரணமான நம் தினசரி உலக வாழ்வின் யதார்த்த உண்மை என்று நம்மை நம்பச் செய்வதில்தான் இருக்கிறது.

இந்தப் பாடத்தை மட்டும் கற்றுக் கொண்டால் போதும், வேதாவும் ராமும் இதைவிடச் சிறந்த கதைகளை எழுதுவார்கள். அதற்கான மொழி இருக்கிறது, முயற்சி இருக்கிறது. துணிச்சலை மட்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

4 கருத்துகள்:

  1. நல்ல அறிமுகம். நன்றி நட்பாஸ்ஜி.

    பதிலளிநீக்கு
  2. ஜெமோ கதைக்கு விமர்சனம் படித்தது போல் இருக்கிறது. இரண்டு கதையை விட அதுவே முன்னால் நிற்கிறது. கதாசிரியர்களின் எதிர்வினை கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.

      இனிவரும் பதிவுகளில் இந்தத் தவற்றைத் தவிர்க்கிறேன்.

      நீக்கு