எழுத்தாளர் எஸ்ராவுடன் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுத்தாளர் எஸ்ராவுடன் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஜூலை, 2012

எழுத்தாளர் எஸ்ராவுடன் ஒரு சந்திப்பு - பாகம் 3

முதல் பாகம் 
இரண்டாவது பாகம் 

தனக்கு எழுதுவதில் எந்த சோர்வும் இல்லை எனவும் இப்போது அதிகம் எழுத வேண்டும் எனத் தோன்றுவதாகவும் கூறினார் எஸ்ரா. சமீபத்தில் பீகாரில் ஒரு பெண்ணை சிலர் துரத்திக் கொண்டு போக அதைப் பார்த்த வயலில் வேலை செய்து வந்த  விவசாயிகள் அவர்களை விரட்டி விட்டு அந்தப் பெண்ணை விவசாயிகளே வன்புணர்ச்சி செய்ததாக ஒரு செய்தி பார்த்ததாகக் கூறினார். இந்திய விவசாயிகள் மேல் வைத்திருந்த பிம்பம் உடைந்ததாகவும், இந்த அளவு சமுதாய சீர் கேட்டிற்கு மூல காரணம் என்னவாக இருக்கும் போன்ற எண்ணங்கள் தன்னை இப்போது எழுதத் தூண்டுவதாகவும் ஈஸ்ரா கூறினார். பிறகு அவருடைய உபபாண்டவம் நாவல் மொழி அதன் பிறகு கைகூடி வரவில்லையே என்ற கேள்விக்கு அந்த நாவலை எழுதும் போது தான் கடந்து வந்த துன்பங்கள் மற்றும் மனநிலை பற்றி தெளிவாக்கினார்.சுந்தர ராமசாமி பற்றி பேச்சு திசை மாறியது. அவரை சந்தித்த இனிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.பின் ஒவ்வொருவராக விடை பெற்ற பின் சினிமாவைப் பற்றி சிறிது நேரம் பேசினோம். ரஜினியுடனான தன்னுடைய நட்பை குறித்து சிலாகித்து  பேசினார். இரவு 2:30 மணிக்கு திருவும் எஸ்ராவும் விடை பெற்றார்கள்.

அடுத்த நாள் எனக்கு அலுவலகப் பணி நிமித்தம் எஸ்ராவுடன் செல்ல முடியவில்லை. ஆனால் அன்று  மாலை எஸ்ரா, திரு, என் மகன் ஸ்ரீஹரி மற்றும் நான் "Abraham Lincoln vampire hunter" திரைப்படம் பார்த்தோம். அந்த திரைப்படம் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது. அடுத்த நாள் திரு வீட்டிற்குச் சென்றேன். எஸ்ராவும் திருவும் நூலகம் சென்றிந்தார்கள். அங்கு சந்தோஷ் என்ற  இளைஞர் எஸ்ராவைப் பார்க்க நான்கு மணி நேரம் கார் பயணம் மேற்கொண்டு வந்திருந்தார். இலக்கியத்தில் ஆர்வமுள்ள துடிப்பான இளைஞர். எஸ்ராவும் திருவும் வந்தவுடன் கல்பனா மற்றும் ஹரிஹரன் வந்தார்கள்.

மீண்டும்  பேச்சு. அவர் எழுத்தைப் பற்றி கூறும் போது "தரையில் கப்பல் செய்து தண்ணீரில் விட்டு விடுகிறோம். அதில் யாராரோ பயணிக்கிறார்கள். எழுத்தின் தரம் பயணத்தையும், பயணிகளையும் நிர்ணயிக்கிறது." என்றார். பிறகு நகுலன் கவிதைகள் பற்றி பேசினோம். நகுலனுக்கு விளக்கு விருது வழங்கிய விழா குறித்து விரிவாகக் கூறினார். ஆத்மாநாம், தேவதச்சன் என ஒரு சுற்று வந்தோம். தேவதச்சனின் ஒரு கவிதையை விளக்கும் போது எஸ்ரா  "Mobius Strip" பை மேற்கோள் கட்டியது எனக்கு சந்தோஷமாகவும், ஆச்சிரியமாகவும் இருந்தது.


பிறகு எஸ்ரா, ஹரி, திரு,சந்தோஷ் மற்றும் நான் " Detriot  Institute of Arts" சென்றோம். அந்த அனுபவத்தை ஈஸ்ராவே தன் வலைப்பதிவில் விவரமாக எழுதியுள்ளார். அது ஒரு நல்ல படிப்பினை கலந்த அனுபவம். அதன் பின் காபி அருந்திக் கொண்டே எனக்கும் எஸ்ரவுக்கும் மிகவும் பிடித்த வண்ணநிலவன் குறித்து பேசினோம். அன்று இரவு கல்பனா ஹரிஹரன் வீட்டில் அருமையான விருந்து. ரசித்துச் சாப்பிட்டோம். உண்ணும் போது  சமீபத்தில் தமிழகத்தில் ஒரு பள்ளியில் பொதுத் தேர்வின் போது பள்ளி  நிர்வாகமே மாணவர்களை காப்பி அடிக்க அனுமதித்ததை நினைத்து வருந்தும் சமயம்  சுராவின் "எலிசபெத் டீச்சர்" என்ற அருமையான கதையை நினைவு கூர்ந்தார் எஸ்ரா. பின் மாமியார், மருமகள் உறவு, திரைப்படம் எடுப்பதில் இருக்கும் சிக்கல்கள் என பல விஷயங்கள் விவாதிக்கப் பட்டன.அப்போது தான் சந்தோஷ் தமிழின் எதிர்காலத்தைப் பற்றி வினவினார் . அதற்கு பதிலளித்த எஸ்ரா தமிழின் தொன்மையும், அதிலிருக்கும் இலக்கியத்தைப்  படிக்கவும் தொடர்ந்து இளைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் இன்று வீட்டில் தமிழ் மொழி புழங்குவது மிகவும் குறைந்து போய் , தமிழ் வீட்டை விட்டு வெளியேறுவதே கவலை அளிக்கக் கூடியது எனக் கூறினார்.

இன்னும் பல விஷயங்கள் பேசி இரவு இரண்டு மணிக்கு ஹரி அவர்கள் வீட்டிலிருந்து விடை பெற்றோம். என் மகன் ஸ்ரீ ஹரிக்கு "Hundred years of solitude" என்ற புத்தகத்தை எஸ்ரா பரிசாகக் கொடுத்தார். அவர் கொண்டு வந்திருந்த சில புத்தகங்களை வாங்கினேன். அவருடைய உறுபசி நான் படித்ததில்லை. நல்ல வேளை ஒரு பிரதி வைத்திருந்தார். அதை வாங்கினேன். இப்போது படித்தும் ஆகி விட்டது. அதைப் பற்றிய என் கருத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்

இந்த நேரத்தில் எஸ்ராவை அறிமுகப்படுத்திய நண்பர் திருமூர்த்திக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஓர் இனிய அனுபவத்தை கொடுத்த எஸ்ராவுக்கும் நன்றி. எங்கள் நட்பு தொடரும் என நினைக்கிறேன்.

நான் சுஜாதா பற்றி எழுதிய ஒரு கட்டுரையை எஸ்ராவுக்கு அனுப்பினேன். அதைப் படித்து அவர் நன்றாக (?) எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அதன் விளைவு தான் இந்த வலைத் தளம். அதற்கும் அவருக்கு நன்றிகள்.

வியாழன், 12 ஜூலை, 2012

வீட்டிலிருந்து வெளியேறும் தமிழே ஆபத்தானது - எழுத்தாளர் எஸ்ராவுடன் ஒரு சந்திப்பு - பாகம் 2

முதல் பாகம்: http://tlbhaskar.blogspot.com/2012/07/blog-post_08.html

இந்த பிரபஞ்ச உருவாக்கத்தையும், அதில் மனித சமுதாயத்தின் இருப்பைப் பற்றியுமான கேள்விகளுக்கு விடையை ஒரு பக்கம் தத்துவமும், மறு பக்கம் அறிவியலும் அளிக்க முயற்சிக்கின்றன. இப்படி இருக்கும் பட்சத்தில், சமீபத்தில் ஸ்டீபன் ஹாகிங் தத்துவம் செத்து விட்டது எனக் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு எஸ்ரா "நீட்சேக்கு பின் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்ட தத்துவவாதி வரவில்லை என்பதனால் அப்படிக் கூறியிருக்கலாம்" எனக் கூறினார். தத்துவம் குறித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தார் எஸ்ரா. அவருடைய இமயமலைப் பயணத்தைப் பற்றி சில சுவையானத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.



பழந்தமிழ் இலக்கியத்தைப் பற்றி உரையாடல் திசை மாறியது. ஒரு சங்க இலக்கிய பாடலின் விளக்கத்தை மிக அழகாக முன் வைத்தார் எஸ்ரா. தாயும், செவிலித் தாயும் (வளர்ப்புத் தாய்) மகளைப் பிரிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த மகளின் வெற்றிடத்தை நிரப்பும் விதமாக அவளைப் பற்றிய ஒரு நல்ல செய்தி வந்தடைகிறது. இதற்கு உவமையாக ஒரு மரத்தின் அடிபாகத்தில் காற்றால் அரிக்கப்படுவதால் ஏற்படும் குழியை அந்த மரத்திலிருந்து விழுகின்ற மென்மையான பூக்கள் மூடுகின்றன என்பதிற்கு ஒப்பிட்டிருக்கிறார் கவிஞர். இது பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கவிதையானாலும், சற்று முன் பூத்த மலர் போல் புதுமையாக இருக்கிறது. இதை எஸ்ரா சொல்லிய விதம் மிக அருமையாக இருந்தது. அதை என் எழுத்தில் கொண்டு வர முடியவில்லை. தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், அதன் பெருமையையும் கேட்கும் போது கிடைக்கும் சுகமே தனி தான். பிரிந்திருக்கும் தலைவன் வரவை எதிர்நோக்கி இருக்கும் வகையில் எழுதப் பட்ட பாடல்கள் அனைத்துக்கும் நகைச் சுவையாக  "அந்த காலத்தில் ஒரு செல் போன்" இருந்திருந்தால் அவசியமிருந்திருக்காது என்றார்.

இலக்கியம், எழுத்து குறித்து பேசும் போது, மேலோட்டமான எழுத்துக்கள் தேவை இல்லை எனக் கூற முடியாது. எல்லா கலாச்சாரத்திலும் மக்கள் இந்த வகையான எழுத்தைத் தான் அதிகம் படிக்கிறார்கள். நல்ல இலக்கிய எழுத்தைப் படிப்பவர்கள் மிகவும் குறைந்த அளவில் தான் இருப்பார்கள். இதனை ஒப்பிடும் போது "சினிமாவிற்கு போகும் போது அங்கு பாப் கார்ன் வாங்கி உண்கிறோம். அது போல் தான் வணிக எழுத்து. அதற்காக மதிய உணவிற்கும் பாப் கார்ன் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் எப்படி? " என்றார்.

தாங்கள்  எப்படி தமிழ் சூழலில் ஒரு முழு நேர எழுத்தாளராக இருக்க தேர்வு செய்தீர்கள் என்ற கேள்விக்கு - தனக்கு அமைந்த நான்கு அருமையான நண்பர்களும், அவருடைய மனைவியின் முழுமையான ஊக்குவிப்பும், ஆதரவும்  தான் காரணம் என்றார் எஸ்ரா. உடனே அனந்த் "நீங்கள் பல விதத்தில் அதிர்ஷ்டம் செய்தவர்" என்றவுடன், அரங்கம் (?) அதிர்ந்தது.



சென்னையில் நடைபெற்ற எஸ்ராவின் இயல் விருது பாராட்டு விழா குறித்து பேசினோம். அதில் அவர் தன்னுடைய வழிகாட்டியாக இருந்த, இருக்கின்ற இடது சாரி இயக்கத்தைச் சேர்ந்த முதியவரை அழைத்ததைப் பற்றி கூறினார். அந்த முதியவர் தான் எஸ்ராவின் இளமைக் காலத்தில் உலக இலக்கியத்திற்கு அவரை அறிமுகப் படுத்தி எழுத்தாளர் ஆவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். இன்றளவில் அவர் எஸ்ரா மீது அன்புடனும், அக்கறையுடனும் இருப்பதாகக் கூறினார்.

எழுத்தறிவித்தவன் இறைவன். எஸ்ரா தன் முதல் வகுப்பு ஆசிரியை சுப்பு லக்ஷ்மியை தான் எப்போதும் நினைவில் வைத்திருப்பதாகவும், அவரை சந்தித்தது குறித்தும் கூறினார்.

பொதுவாக 45 வயதில் எழுத்தளர்களுக்கு எழுதுவதில் ஒரு தேக்கம் ஏற்படுகிறதா? சுந்தர ராமசாமி ஓர் உதாரணம். தங்களுக்கு  என்ற கேள்விக்கு விடை

தொடரும்........

ஞாயிறு, 8 ஜூலை, 2012

வீட்டிலிருந்து வெளியேறும் தமிழே ஆபத்தானது - எழுத்தாளர் எஸ்ராவுடன் ஒரு சந்திப்பு

இயல் விருது பெற்றுக் கொண்டு எழுத்தாளர் எஸ்ரா டேட்டிராய்ட் வரவிருப்பதாக நண்பர் திருமூர்த்தி கூறினார். எழுத்தாளர் ஜெயமோகன் வந்த போது அவரை சந்தித்த நண்பர்கள் அனைவருக்கும் திருவும், அனந்தும் மின்னஞ்சல் அனுப்பினார்கள். நூலகம் போன்ற பொதுவான ஓர் இடத்தில் எஸ்ரா உடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முயற்சித்தோம். அந்த யோசனை நாம் எல்லோரும் அறிந்த காரணங்களுக்காக நடைமுறை படுத்த இயலவில்லை. இறுதியாக வியாழன் ஜூன் 28 ஆம் தேதி என் வீட்டின் அடித்தளத்தில் சந்திப்பதாக முடிவாகியது.


27 ஆம் தேதி திரு எஸ்ராவுடன் கனடாவிலிருந்து  காரில் பயணித்து வரும் போது அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். 28 ஆம் தேதி மதியம் திரு எஸ்ராவுடன் என் வீட்டிற்கு வந்து ஆனந்த் ஆர்டர் செய்த சப்பாத்தி கொடுத்து விட்டு செல்வதாகக் கூறினார். மற்ற படி இரவு கூட்டத்திற்கு தேவையான உணவு வகைகள் என் மனைவி லலிதாவின் உபயம்.. நான் அன்று வீட்டிலிருந்து என் அலுவலகப் பணியை செய்தேன்.. அதனால் திரு வரும் போது வீட்டில் இருப்பேன் எனத் தெரிவித்தேன். மாடியில் நான் ஏதோ வேலையில் மீழ்கி இருந்த போது, திருவும், எஸ்ராவும் வீட்டினுள் வந்திருக்கிறார்கள். என் மகன் வந்து என்னிடம் "The writer dude is here" எனக் கூறினான். அவனிடம் அப்படி "dude" என்றெல்லாம் கூறக் கூடாது எனக் கடிந்து கொண்டேன். அவனுக்குப் புரியவில்லை. மேலும் எழுத்தாளர் என்றால் வைரமுத்து போல் பெரிய ஜிப்பா போட்டுக் கொண்டு, கருணாநிதி குரலில் புரியாத தமிழில் பேசுவார் என்று மனச் சித்திரம் கொண்டிருந்ததாகவும், ஆனால் எஸ்ரா மிகவும் சிம்பிளாக இருப்பதாகக் கூறினான் என் மகன்.அதை நானும், என் வீட்டினரும் முழுவதும் ஒத்துக் கொண்டோம் . சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மாலை வருவதாகக் கூறிச் சென்றனர்.

மாலை சரியாக 6:30 மணிக்கு நண்பர் பாலநேத்ரம் வந்தார். இவர் மனைவி விஜியுடன் சேர்ந்து ஐந்து வருடங்கள் "தமிழ் அமுதம்" என்ற வானொலி நிகழ்ச்சி நடத்தி வந்தார்.. பின் கல்பனா (இவர் அமெரிக்காவில் பல இடங்களில் கவியரங்களில் கலந்து கொண்டு கவி பாடுபவர் ) மற்றும் அவர் கணவர் ஹரிஹரன் வந்தார்கள்.இவர்கள் மூன்று பேரும் நண்பர் ராஜாராமன் நடத்தும் "தமிழ் மறுமலர்ச்சி இயக்கம்" என்ற அமைப்பில் வெளிவந்த எஸ்ரா வருகையின் அறிவிப்பின் மூலம் கூட்டத்திற்கு வந்தார்கள். பகவதிபெருமாள் (இவர் சுருக்கமாக பில் என அறியப் படுகிறார் ) தொலை பேசியில் அழைத்து சிறிது நேரத்தில் என் வீட்டில் இருப்பதாகக் கூறினார். டேட்டிராய்ட் தமிழ் சங்கம் நடத்தும் கதம்பம் பத்திரிக்கையின் எடிட்டர் சரவணன் வந்தார். அவரைத் தொடர்ந்து அனந்த் இரண்டு நண்பர்களுடன் வந்து சேர்ந்தார். பில் வந்த கையோடு திருவும், எஸ்ராவும் உள் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் நண்பர் அருள் வந்து இணைந்து கொண்டார். என் மனைவி, மாமனார் மற்றும் மாமியார். கூட்டம் களை கட்டியது.



எஸ்ராவுடன் கழித்த மூன்று நாட்கள் மிகவும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது என்பதில் எந்த சந்தேகமும்  இல்லை.. மேலும் பல விஷயங்கள் நான் அறிந்து கொண்டேன். அவர் எழுத்தின் விமர்சனங்களைக் கூட மிகவும் மென்மையாகவும், கோபப்படாமலும் கையாண்டார். தனக்குத் தான் எல்லாம் தெரியும், எதிரில் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்கிற எண்ணமில்லை.  நாம் பேசுவதையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார்.. அவருடன் உரையாடியதில் எனக்கு நினைவில் இருப்பதை பகிர முயல்கிறேன்.

எஸ்ரா எழுதிய "காலம்" பற்றிய கட்டுரையுடன் உரையாடல் தொடங்கியது. காலம் என்பது நினைவுகளின் தொகுப்பு தான். நம் வசதிக்காகத் தான் நாள்,, கிழமை எனப் பிரித்துக் கொண்டுள்ளோம். அதனால் தான் தமிழில் இறந்தவர்களை காலத்தோடு இணைத்து காலமானார்கள் எனக் கூறுகிறோம் என்றார் எஸ்ரா.



உரையாடல் தொடரும்.... ......