வியாழன், 12 ஜூலை, 2012

வீட்டிலிருந்து வெளியேறும் தமிழே ஆபத்தானது - எழுத்தாளர் எஸ்ராவுடன் ஒரு சந்திப்பு - பாகம் 2

முதல் பாகம்: http://tlbhaskar.blogspot.com/2012/07/blog-post_08.html

இந்த பிரபஞ்ச உருவாக்கத்தையும், அதில் மனித சமுதாயத்தின் இருப்பைப் பற்றியுமான கேள்விகளுக்கு விடையை ஒரு பக்கம் தத்துவமும், மறு பக்கம் அறிவியலும் அளிக்க முயற்சிக்கின்றன. இப்படி இருக்கும் பட்சத்தில், சமீபத்தில் ஸ்டீபன் ஹாகிங் தத்துவம் செத்து விட்டது எனக் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு எஸ்ரா "நீட்சேக்கு பின் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்ட தத்துவவாதி வரவில்லை என்பதனால் அப்படிக் கூறியிருக்கலாம்" எனக் கூறினார். தத்துவம் குறித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தார் எஸ்ரா. அவருடைய இமயமலைப் பயணத்தைப் பற்றி சில சுவையானத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.



பழந்தமிழ் இலக்கியத்தைப் பற்றி உரையாடல் திசை மாறியது. ஒரு சங்க இலக்கிய பாடலின் விளக்கத்தை மிக அழகாக முன் வைத்தார் எஸ்ரா. தாயும், செவிலித் தாயும் (வளர்ப்புத் தாய்) மகளைப் பிரிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த மகளின் வெற்றிடத்தை நிரப்பும் விதமாக அவளைப் பற்றிய ஒரு நல்ல செய்தி வந்தடைகிறது. இதற்கு உவமையாக ஒரு மரத்தின் அடிபாகத்தில் காற்றால் அரிக்கப்படுவதால் ஏற்படும் குழியை அந்த மரத்திலிருந்து விழுகின்ற மென்மையான பூக்கள் மூடுகின்றன என்பதிற்கு ஒப்பிட்டிருக்கிறார் கவிஞர். இது பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கவிதையானாலும், சற்று முன் பூத்த மலர் போல் புதுமையாக இருக்கிறது. இதை எஸ்ரா சொல்லிய விதம் மிக அருமையாக இருந்தது. அதை என் எழுத்தில் கொண்டு வர முடியவில்லை. தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், அதன் பெருமையையும் கேட்கும் போது கிடைக்கும் சுகமே தனி தான். பிரிந்திருக்கும் தலைவன் வரவை எதிர்நோக்கி இருக்கும் வகையில் எழுதப் பட்ட பாடல்கள் அனைத்துக்கும் நகைச் சுவையாக  "அந்த காலத்தில் ஒரு செல் போன்" இருந்திருந்தால் அவசியமிருந்திருக்காது என்றார்.

இலக்கியம், எழுத்து குறித்து பேசும் போது, மேலோட்டமான எழுத்துக்கள் தேவை இல்லை எனக் கூற முடியாது. எல்லா கலாச்சாரத்திலும் மக்கள் இந்த வகையான எழுத்தைத் தான் அதிகம் படிக்கிறார்கள். நல்ல இலக்கிய எழுத்தைப் படிப்பவர்கள் மிகவும் குறைந்த அளவில் தான் இருப்பார்கள். இதனை ஒப்பிடும் போது "சினிமாவிற்கு போகும் போது அங்கு பாப் கார்ன் வாங்கி உண்கிறோம். அது போல் தான் வணிக எழுத்து. அதற்காக மதிய உணவிற்கும் பாப் கார்ன் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் எப்படி? " என்றார்.

தாங்கள்  எப்படி தமிழ் சூழலில் ஒரு முழு நேர எழுத்தாளராக இருக்க தேர்வு செய்தீர்கள் என்ற கேள்விக்கு - தனக்கு அமைந்த நான்கு அருமையான நண்பர்களும், அவருடைய மனைவியின் முழுமையான ஊக்குவிப்பும், ஆதரவும்  தான் காரணம் என்றார் எஸ்ரா. உடனே அனந்த் "நீங்கள் பல விதத்தில் அதிர்ஷ்டம் செய்தவர்" என்றவுடன், அரங்கம் (?) அதிர்ந்தது.



சென்னையில் நடைபெற்ற எஸ்ராவின் இயல் விருது பாராட்டு விழா குறித்து பேசினோம். அதில் அவர் தன்னுடைய வழிகாட்டியாக இருந்த, இருக்கின்ற இடது சாரி இயக்கத்தைச் சேர்ந்த முதியவரை அழைத்ததைப் பற்றி கூறினார். அந்த முதியவர் தான் எஸ்ராவின் இளமைக் காலத்தில் உலக இலக்கியத்திற்கு அவரை அறிமுகப் படுத்தி எழுத்தாளர் ஆவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். இன்றளவில் அவர் எஸ்ரா மீது அன்புடனும், அக்கறையுடனும் இருப்பதாகக் கூறினார்.

எழுத்தறிவித்தவன் இறைவன். எஸ்ரா தன் முதல் வகுப்பு ஆசிரியை சுப்பு லக்ஷ்மியை தான் எப்போதும் நினைவில் வைத்திருப்பதாகவும், அவரை சந்தித்தது குறித்தும் கூறினார்.

பொதுவாக 45 வயதில் எழுத்தளர்களுக்கு எழுதுவதில் ஒரு தேக்கம் ஏற்படுகிறதா? சுந்தர ராமசாமி ஓர் உதாரணம். தங்களுக்கு  என்ற கேள்விக்கு விடை

தொடரும்........

5 கருத்துகள்:

  1. எஸ் ரா அவர்கள் பேசும்போது சட் சட் என்று மாறும் முகபாவனையையும், அவர் கைகள் பிடிக்கும் அபிநயத்தையும் கவனித்தீர்களா?

    அவருடைய ஒரு மேடைப்பேச்சில் தொடர்ச்சியாக எடுத்த படங்களை கணினியில் ஏற்றும்போதுதான் கவனித்தேன்!

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் துளசி. அவர் கையசைவு ஒரு மனரிசம் போல்.

    பதிலளிநீக்கு
  3. எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நாவல்களையும் வாசித்துவிட்டேன். அடுத்த நாவல் எப்போது வருமென்று காத்துக்கொண்டிருக்கிறேன். அடுத்த நாவல் குறித்து அல்லது இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நூல் குறித்து எஸ்.ரா' ஏதேனும் பகிர்ந்து கொண்டாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இந்த வருடம் வெளிவரும் எனக் கூறினார். அந்த நாவலைப் பற்றி சிறிது கூறினார். அவராகக் கூறும் வரை சற்று பொறுத்திருக்கலாம். என்ன சொல்கிறீர்கள்? எப்படியும் எஸ்ராவின் அடுத்த நாவல் படிக்க தயாராக இருங்கள்.

      நீக்கு
  4. மூன்றாவது பாகம் செல்கிறேன்... நன்றி சார்.

    பதிலளிநீக்கு