புதன், 4 ஜூலை, 2012

கொலம்பஸ் பயணம்

கொலம்பஸ் என்றவுடன் நமக்கு பல நினைவுகள் உதிக்கும். பொதுவாக "இவன் பெரிய கொலம்பஸ்" என்ற ஏளனமான சொற்றொடர் பயன்பாடு. நான் வாழும் அமெரிக்கப் பகுதியில் உறைக்கும் வெயில் அடிப்பது அதிகபட்சம் மூன்று மாதங்கள். அந்த சமயத்தில் மேற்கொள்ளும் பயணம் சுகமானதாக இருக்கும். காரில் பயணம் மேற்கொள்ளும் போது குடும்பம் முழுவதும் சேர்ந்து பேசிக்கொண்டும், பிடித்த பாடல்கள் கேட்டுக் கொண்டும், எண்ணப் பரிமாற்றங்கள் செய்து கொண்டும் செல்வதற்கு ஒரு பெரிய வாய்ப்பாகிறது.
மூன்று மணி நேர பயணம். கொலம்பஸ் அருகில் டெலவர் என்ற இடத்தில் அமெரிக்க இந்தியர்கள் வாழ்ந்த குகை ஒன்றுள்ளது. அதற்கு முதலில் சென்றோம். இந்த குகை இயற்கையாக உருவான ஒன்று. 1810 ஆம் ஆண்டு வரை இங்கு அமெரிக்க இந்தியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த குகை வாழ்விடம் எதேச்சையாக ஆடம்ஸ் என்பவரால் 1821 ஆண்டு கண்டறியப்பட்டது. ஆடம்ஸ் அவர் குழுவினருடன் குகை இருக்கும் பகுதியில் முகாமிட்டிருந்த போது, அவருடைய தப்பித்துச் சென்ற ஓர் எருது இந்த குகையின் வாயிலில் இறந்து கிடந்திருக்கிறது. அதில் உள்ளிறங்கிப் பார்த்த ஆடம்ஸ் த ன் பெயரை உள்ளிருக்கும் பாறையில் எழுதிச் சென்றுள்ளார்.
இது சுண்ணாம்புக் கல் பாறைகளில் ஆனது. சுத்தமான காற்று சுத்தி வருவதற்கு ஏதுவாக மேல் பக்க பாறையில் உடனே அறிந்து கொள்ள முடியாத நூலிழை போன்ற ஒரு விரிவு உள்ளது. அதே போல் நெருப்பின் புகை வெளியேற ஏதுவாக வேறு இடத்தில் புகைபோக்கி போன்ற பாறை அமைப்புள்ளது. இந்த பாறைகளில் வடியும் தண்ணீர் மிகச் சுத்தமானது. இந்தியர்கள் தங்களைக் காத்துக் கொள்ள மிக ஏதுவான இடம். இங்கு அவர்கள் வில், அம்பு போன்ற ஆயுதங்கள் செய்திருக்கிறார்கள்.
மேலும் ஒரு பாறையின் அமைப்பே இருவர் அமரும் வகையில் பெஞ்சு போன்று அமைந்துள்ளது. அதில் அமரும் பெண் தனக்குப் பிடித்தமான காதலனைக் கைப்பிடிக்கிறாள். இந்த பெஞ்சுக்கு "இந்தியன் காதலர்கள் பெஞ்சு"" எனப் பெயர். இங்குள்ள ம்யுசியத்தில் இந்தியர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். வித்தியாசமான அனுபவம்.
அதற்கு அடுத்து கொலம்பஸ் 15 ஆம் நூற்றாண்டில் பயணித்தது மாதிரியான ஒரு கப்பலை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். கிரேக்க நாடு இதைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பெயர் Santa Maria. இந்த கப்பலைப் பற்றி பல தகவல்கள் இன்று இணையத்தில் கிடைக்கிறது. நாங்கள் பார்த்ததில் சில சுவாரஸ்யமான விஷயங்கள். நம்மூரில் வைத்திருக்கும் எலிப் பொறி வைத்து எலியைப் பிடித்திருப்பதைப் பார்த்தால் சிரிப்பு வந்தது.
குளிக்காமல் ஒரே படுக்கையை உபயோகித்தது. "ஹவர் கிளாஸ்" பயன்படுத்தி அரை மணிக்கு ஒரு முறை பயணம் செய்யும் திசையை குறித்து வந்திருகிறார்கள். வழி தவறினால் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு சென்றடைய வசதியாக.
இதைப் போன்ற இடங்களுக்கு செல்வதால் நமக்கு சரித்தரத்துடன் உரையாடும் தருணம் அமைகிறது. எனக்கு கொலம்பஸ் பற்றிய சித்திரம் ஒரு தீரச் செயல், சாகசம் என்றளவில். இங்கு படிக்கும் என் 13 வயது மகன் நினைப்பது "Columbus was a failure. He just got lost". இது அவன் தன் சரித்தர ஆசிரியர்கள் மூலம் வந்தடைந்த இடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக