செவ்வாய், 29 ஏப்ரல், 2014

புரியாத உறவுகள்

வாழ்க்கையில் எத்தனையோ சந்திப்புகள், உரையாடல்கள்அதுவும் இன்று சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகும் முகமறியாத நண்பர்கள் வேறு.  ஆனால் இவற்றில் ஒரு சில மட்டுமே அந்தரங்க மகிழ்ச்சி அளிக்கும் உறவாக பரிமளிக்கிறது. அப்படியான என் முன்னால் மேலாளருடனான ஓர் உறவு குறித்த நினைவுகளின் பதிவு தான் இது.

2007 ஆம் ஆண்டு முதல் 2009 முடிய அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மிக மிக மோசமாக இருந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. அப்போது எந்நேரம் வேலை போகுமோ என்ற மன அழுத்தத்துடனே கடந்த நாட்கள். நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்பதின் முழு அர்த்தமும் தெளிவான காலம்.இந்த நிலையில் நான் வேலை பார்த்து வந்த அந்த கார்பரேட் கம்பெனியில் என் பழைய மேலாளர் விருப்ப ஓய்வு வாங்கிச் செல்ல, புது மேலாளருடன் வேலை செய்ய வேண்டிய நிலைமை

 நான் ஒப்பந்த முறையிலும், மேலாளர் நிரந்தர(?) ஊழியராகவும்  வேலை பார்த்து வந்தோம். நிரந்தர ஊழியர் என்றாலும், மேலாளரின் நாற்காலி சிறிது ஆட்டத்துடன் தான் இருந்தது. கார்பரேட் நிறுவனங்கள் ஒருவர் சாதித்ததையோ, சாதிக்க முடியக் கூடியதையோ பற்றி கவலைப்படாது.அதுவும் பொருளாதாரம் தள்ளாடும் போது அதற்கு தினமும் தங்க முட்டையிடும் வாத்து தான் தேவை. செலவைக் குறைக்கும் முகமாக கணணி தொடர்பான வேலைகளின் பெரும் பகுதியை இந்தியாவிற்கு அனுப்பும் வேலை மிகவும் வேகமாக நடந்து வந்தது. போறாதா காலம் என் மேலாளரிடம் இருந்த சில கணணி சார்ந்த அப்ளிகேஷன்களை இந்தியாவிற்கு அனுப்புவதில் பெரிய சிக்கல்கள் இருந்தது

ஒரு நாள் மதியம்பேச்சுவாக்கில்,ஒருகுழப்பத்திலிருந்த அப்ளிகேஷன் குறித்த பேச்சு வந்தது. அந்த அப்ளிகேஷன் பயன்படுத்தும் தொழில்நுட்பம் உனக்குத் தெரியாதெனெனினும், உன்னால் அதை இந்த வருட இறுதிக்குள் இந்தியா அனுப்ப உதவ முடியுமா? எனக் கேட்டார். அந்த சமயத்தில் நான் ஏற்கனவே வேலை பார்த்து வந்த அப்ளிகேஷன் இந்தியா அனுப்பும் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. இதை ஒரு நல்ல சந்தர்பமாக நினைத்தேன். வேலை உறுதி மற்றும் புதிய தொழில் நுட்பம் கற்க ஒரு வாய்ப்பு. சரி என ஒப்புக் கொண்டு விட்டேன்.  கடுமையான வேலை. இந்தியாவில் ஆட்கள் கிடைப்பது சுலபமாக இல்லை.அப்படியே கிடைத்தாலும் நிரந்தரமாக இருப்பதில்லை.
தங்கப்பதக்கம் சிவாஜி போல் சோதனை மேல் சோதனை. ஆனால் என் மேலாளர் மிகவும் நல்ல மனமுடையவர். ஒரு நாள் கூட அழுத்தம் கொடுத்ததில்லை. நீண்ட நாட்கள் பழகிய நண்பரைப் போல் பேசிக் கொண்டிருப்பார். “என்ன அதிகபட்சம் என் வேலை போகலாம். கவலைப்படாதே. பார்த்துக் கொள்ளலாம்” எனக் கூறுவார். இத்தனை புரிதலுடனும், சகஜமாகவும் அவர் இருந்ததால்,வேலை பளுவெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. எங்கள் சொந்த விஷயங்களைக் கூட பகிர்ந்து கொள்வோம்

சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு வேறு பிரிவில் வேலை மாற்றலானது. இருந்தாலும் ஒரே கட்டிடத்தில் தான் வேலை பார்த்து வந்தோம். வாரத்திற்கு ஒரு முறையாவது என் இருப்பிடம் வந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போவார். மற்றபடி எங்களுக்குள் தொலைபேசி எண்கள் கூட பரிமாற்றம் இல்லை

இரண்டரை ஆண்டுகளுக்கு முன் நான் அந்த அலுவலகத்தை விட்டு வந்து வேறிடம் சேரும் போது அவரிடம் விடை பெற்று வந்தேன். அதற்குப் பிறகு ஒரு முறை எங்கோ சந்தித்தோம். தீடிரென சென்ற திங்கள்(ஏப்ரல் 21 ) காலை பொது நண்பரிடம் இருந்து குறுச்செய்தி. உன் முன்னால் மேலாளர் இரண்டு ஆண்டுகளாக கான்சருடன் போராடி நேற்றிரவு உயிரழந்தார் என்று. அதிர்ச்சி,வருத்தம் கூடவே அவருடன் கழித்த அந்த நாட்கள் குறித்த நினைவுகள்.

சென்ற சனி காலை அவருக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்றிருந்தேன். அங்கு யாரையும் எனக்குத் தெரியாது. மெலிந்த உடம்புடன் அமைதியாக உறங்குவது போல் பூக்களுக்கு நடுவே படுத்திருந்தார். அப்போது மனதில் தோன்றியது"இவரை தெரியாமலே இருந்திருக்கலாமே?  இப்படி ஒரு நல்ல மனிதர் தொடர்பு, அதிர்ஷ்டமா அல்லது சாபமா?  எனக்கும் அவருக்குமான இந்த உறவு வேறு யாருக்கும் தெரியாதது.புரியவும் புரியாதது. இந்த உறவை என்னவென்று அழைப்பது."

இப்போது ஒரு வாரம் மேலாகியும், கண்ணில் விழுந்த மணல் போல் மனதில் நெருடல். தேங்கிப் போன நினைவுகளுடன் தொடரும் வாழ்க்கை .


திங்கள், 28 ஏப்ரல், 2014

கரும்புனல் குறித்த சிறிய குறிப்பு

இந்தப் புனைவைப் படிக்கத் தொடங்கியவுடன் 1980 களில் மேற்கொண்ட பீகார் மற்றும் உத்திரப்பிரதேச பயணம் தான் நினைவில் வந்தது. துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டு சாதாரணமாக திரிந்து கொண்டிருந்த குண்டர்களை பாட்னா இரயில் நிலையத்தில் காண நேர்ந்ததை இன்று நினைத்தாலும் மனம் பதறுகிறது. ஆனால் அதெல்லாம் சகஜம் போல அங்கிருந்தவர்களின் நடவடிக்கைகள் இருந்தன. வாரணாசி கடைத்தெருவில் ஒரு குண்டா ஐந்தாறு பேர்களுடன் வருவதைப் பார்த்து எல்லாக் கடைகளும் மூடப்பட்டன, அவர்கள் கடந்து சென்றவுடன் மீண்டும் திறந்தார்கள். அப்போது தான் தமிழ்நாட்டில் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறோம் என உணர முடிந்தது.
தன் பீகார் அனுபவத்தை மையமாகக் கொண்டு நாவலாசிரியர் ராம்சுரேஷ் தன் புனைவை கனகச்சிதமாக எழுதியுள்ளார். மிக எளிமையான, சரளமான நடை. சிக்கலில்லாத, திட்டமிட்டு அமைக்கப்பட்ட கதைக்களம். இந்தியாவில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜாதியம் மூன்றும் தான் அரசாங்கம், அதிகாரவர்க்கம் மற்றும் மக்கள் எனும் முக்கோணப் புள்ளிகளை இணைக்கும் கண்ணிகளாக இருக்கின்றன. அதிலும் பீகாரில் கேட்கவே வேண்டாம். இதனுடைய ஓர் அனுபவப் புனைவு தான் கரும்புனல் எனலாம்.
Karumpunal
வக்கீலான சந்துரு பீகாரில் நிலக்கரி சுரங்கத்திற்காக 20 வீடுகள் கொண்ட கிராமத்தை கையகப்படுத்தும் பணியில் அனுப்படுகிறான். முதல் இரயில் மற்றும் பஸ் பயண அனுபவத்திலேயே பீகாரில் நிலவும் அடிப்படை வசதிக் குறைவுகள், மக்களின் ஏழ்மை முதலியவற்றை உணர்ந்து வருந்துகிறான்.
பீகாரின் ஜாதிய அடுக்குகளில் இருக்கும் சிக்கல்களை அறியாத ஒரு நபர் கீழ்த்தட்டு கிராம மக்களுடன் தீர்வு பேசி அவர்களை வேறு இடத்திற்கு இடம்பெயரச் செய்ய வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்துரு தேவைப்படுகிறான். சந்துருவுக்கு ஊழலைவிட ஜாதிய வெறி எந்தளவு வர்மாக்களிடமும் பானர்ஜிகளிடமும் இருக்கிறது என புரிவதற்கே சில காலம் பிடிக்கிறது. சந்துரு முன்வைக்கும் இறுதித் தீர்வு அதிகாரவர்க்க ஊழலுக்கும், கிராம மக்களுக்கு நல்ல விவசாய மாற்று நிலம் கிடைக்குமாறும் இருந்தாலும், ஜாதியின் உச்சபட்ச பழிவாங்கல் தவிர்க்க முடியாதாகிறது.
இந்த வறண்ட, கருமை சூழ்ந்த கதைக்களனுக்கு சிறிது பசுமை சேர்க்கும் விதமாக ராம்சுரேஷ் இழையோட விட்டிருக்கும் சந்துரு- தீபா காதல், கதையோடு ஒட்டாமல் தேவையற்றதாகவே தோன்றுகிறது. அதை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
ஊழல் மற்றும் சாதியச் சுரண்டல்களினால் சில பாத்திரங்கள் சந்திக்கும் துன்பங்களை ஆசிரியர் மேலோட்டமாகவே சொல்லி இருந்தாலும், அவற்றின் தாக்கம் புரியுமளவு இருக்கின்றது. சாதியக் கொடுமைகளால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மிக ஆழமாகவும், நுண்மையாகவும் எழுதி இருந்தால் ஒரு நல்ல இலக்கிய வாசிப்பு அனுபவமாகவும் இருந்திருக்கும். நூல் முன்னுரையில் வெங்கடேஷ், "இந்நாவல், பல விஷயங்களை விவாதிப்பதற்கான களத்தை அமைத்துத் தந்திருக்கிறது. இதில் எழுதப்பட்டதை விட, வெளியே இருக்கும் செய்திகளும் வலிகளும் அதிகம்" எனக் கூறியுள்ளது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை.
இந்த வாரப் "பதாகை"யில் வெளியானது.