திங்கள், 13 மார்ச், 2017

அ முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைமுறை சிக்கல்கள் 


நான் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த புதிதில், கென் என்ற ஒரு மிக நல்ல மனிதருடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடமிருந்து அமெரிக்க வாழ்க்கை முறைகள் குறித்து பல விஷயங்கள் கற்றறிந்தேன். அவருடைய தந்தை வழிவந்தவர்கள் இத்தாலியையும், தாய் வழிவந்தவர்கள்  போலந்தையும் சேர்ந்தவர்கள். அவருடைய பெற்றோர்களுக்கு ஓரளவு இத்தாலி மற்றும் போலந்துடன் தொடர்பு இருந்தது எனவும், தானும் தன் மகளும் முழுமையான அமெரிக்கர்கள் எனவும் சொன்னார். அதிகபட்சம் புலம்பெயர்ந்த மூன்றாம் தலைமுறையினர்கள் அமெரிக்க கலாசாரத்துடன் ஒன்றி வாழப் பழகிக்கொள்கிறார்கள்  இன வேற்றுமை உணர்வுச் சிக்கல்களைப் பற்றி விவாதித்தபோது “இன்று கடுமையானச் சட்டஙகள் உள்ளன. எல்லா இனத்தவரும் வெளித் தோற்றத்தில் ஒற்றுமையாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மனதளவில் வித்தியாசப்படுத்துதல், பாரபட்சம் பாராட்டுதல், உயர்வு மனப்பான்மை மற்றும் தாழ்வு மனப்பான்மை மறைந்ததாகக் கூற முடியாது. விரைவில் மறையும் வாய்ப்பு குறைவுதான்” என்று கென் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாகத்தான் இருக்கிறது.
. அ.முத்துலிங்கத்தின் “அமெரிக்கக்காரி” படித்தவுடன் நினைவில் வந்தது கென்னுடன் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த உரையாடல்தான். புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர்கள் கடந்து செல்லும் அனைத்தையும் மதியின் வாழ்க்கையில் காண முடிகிறது. பிரச்சினைகளின் தொடக்கம் ஆங்கில மொழி உச்சரிப்பு மற்றும் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு வார்த்தைகளின் பயன்பாடு. புலம்பெயரும் ஊரைப் பொறுத்து எதிரெதிர் துருவத்தில் அமையும் சீதோஷ்ண நிலைக்கு சரிசெய்து கொள்வதும் கடினமானது. சிறு வயதில் அறிந்தும் அறியாமலும் மனதில் ஆழப் பதிந்துவிட்ட சில எண்ணங்களை விடவும் முடியாமல் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவும் முடியாமல் ஒருவித குழப்பமான சூழலுடன்தான் முதல் சில துவக்க ஆண்டுகள் செல்லும். மேலும் புதிய கலாச்சாரத்தின் சில நல்ல கூறுகளைக் கடைபிடிப்பதிலும் மனச் சிக்கல்கள் தோன்றுவதைக் காண முடியும். இந்தியாவில் எப்படி கிரிக்கெட் குறித்து  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் விவாதிப்போமோ அதே போன்று பேஸ்பால், பேஸ்கட்பால், அமெரிக்க ஃபுட்பால் பற்றிய விவாதங்கள் நடக்கும். முழுவதும் பங்கு பெற முடியாவிட்டாலும், விவாதத்தைப் புரிந்து கொள்ளவாவது  நாம் அந்த விளையாட்டுகளைக் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. என் மகன் பள்ளியில் படிக்கும்போது, காலை அவசரத்திலும் இணையத்தில் விளையாட்டு முடிவுகள், அது சம்பந்தமான கட்டுரைகள் படித்து விட்டுத் தான் கிளம்புவான். அவன் வயதொத்த மாணவர்களிடையேயான அழுத்தமே இதற்கு காரணம். இந்த விஷயத்தில் மதியின் அறியாமையை அ. முத்துலிங்கம் அழகாக சித்தரித்திருக்கிறார்.
அமெரிக்கக்காரியின் கதைக்களம் 90-களின் இறுதியில் அமெரிக்காவில் நடந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருபது ஆண்டுகளில் இன வேற்றுமைச் சிக்கல்கள் அதிகமாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது. என்னுடன் பணிபுரியும் சக அமெரிக்கர் பதினைந்து வயதான தன் பெண்ணிற்கு இன்னும் ஒர் ஆண் நண்பர் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டார். ஆனால் இலங்கையில் வளர்ந்த மதி பதினெழு ஆண்டுகள் தரை பார்த்து நடந்திருக்கிறாள். இந்த கலாச்சார வேறுபாட்டின் விளைவே, மதியால் தன் காதலர்களைத் தக்க வைத்துக் கொள்வதிலோ அல்லது காதலர்களைத் தேர்வு செய்வதிலோ வெற்றி காணாமல் இருந்ததற்கான காரணம் எனலாம். தன்னைத் தேடி வந்த மூன்று ஆண்களுக்கும் உறவின் ஆரம்பமாக இருந்தது, மதிக்கு உறவின் முடிவானது. இந்த நாட்டில் குழந்தைகளுடன் கூட தொடர்ந்து உரையாடவும், அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. தனி மனித சுதந்திரத்துக்கு குழந்தைப்பருவத்தில் இருந்தே இங்கு மதிப்பளிக்கப்படுவதால், அவர்கள் சுதந்திரமாய் முடிவெடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். நாம் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும், எதையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் மதி பெரியவர்களின் சொல்படியும், கட்டளைகளுக்கு அடிபணிந்தும் வாழ வேண்டும் என வளர்க்கப்பட்டவள். புலம் பெயர்ந்தவுடன் சொந்தமாக முடிவுகளை எடுத்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவதில் சங்கடங்களை எதிர் கொள்கிறாள். முதல் காதலன் தன் அறைக்கு அழைத்தவுடன், அவனுடன் உரையாடி அவனைப் புரிந்து கொள்ளவோ அல்லது தன் தரப்பை விளக்கவோ மதி முயலவில்லை. தன் குடும்பத்தாரை அறிமுகப்படுத்திய மூன்றாவது காதலனுடனாவது இரண்டு மணி நேர கார் பயணத்தில் தன் மனநிலையை விளக்கியிருக்கலாம். இந்த உரையாடல்கள் மூலம் அமெரிக்க வாழ்வின் யதார்த்தாங்களை ஓரளவுக்காவது புரிந்து கொண்டிருக்கலாம்.
மதி புலம் பெயர இலங்கையின் உள் நாட்டுப் போரும் ஒரு காரணி. தன் தாயைத் தவிர வேறு உறவும் இல்லை. இலங்கையிலிருந்து அமெரிக்கா வந்து அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரே நபர். இத்தனைச் சிக்கல்களிருந்தும் விடுபட்டு தெளிவு பெற மூன்று ஆண்டுகள் மதிக்குத் தேவைப்படுகிறது. மதிக்கு வியட்நாமைச்  சேர்ந்த லாங்ஹன் பிடித்ததற்கு காரணம், அவன் தன்னை படுக்கை அறைக்கு அழைக்காததா அல்லது தனிமையும், சிறிது முதிர்ச்சியும் கொடுத்த புரிதலா? வேறு காரணங்களும் இருக்கலாம். திருமணத்திற்கு பின்பான லாங்ஹன்னின் அன்பும், அரவணைப்பும் மதிக்குத் தன் இலட்சியத்தை அடைய உதவுகிறது.  நான்கு ஆண்டுகளாக குழந்தை பிறக்காததற்கு தான் மட்டுமே காரணம் என்பதால், தன்னைப் பிரிந்து செல்லலாம் என லாங்ஹன் சொல்வதை மதி நிராகரிப்பது கதையில் ஓர் அருமையான தருணம். பொதுவாக அமெரிக்கர்களிடையே திருமண பந்த்ததின் பிணைப்பு மிகவும் மெலிதானது என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இங்கு வருவதற்கு முன் என் எண்ணமும் இதையொட்டித் தான் இருந்தது. ஆனால் இருபந்தைத்து வருடத்திற்கு மேல் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக தொடரும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
தன்னால் முடியவில்லை என்றாலும் வியட்நாமியுடன் சேர்ந்து வாழும் இலங்கைக்காரியான தனக்கு ஆப்பிரிக்க இனத்தவரின் விந்தீடு மூலம் பிறக்கும் பெண் குழந்தை கலாச்சார சிக்கல்கள் எதிர்கொள்ளாமல் சுதந்திரமாக வாழும் என்பதே மதிக்கு பெரியளவில் நிம்மதியைக் கொடுக்கிறது.
இலக்கியம் பற்றிப் பேசும்போது நாம் பொதுமைப்படுத்திப் பேசுவது இயல்பு. ஆனால், மதி புலம்பெயர்ந்தவர்களின் மனநிலையை வெளிப்படுத்தினாலும் அவள் அவர்களின் பிரதிநிதியல்ல. இனத்தேசீயவாதம் காரணமாக போர் நிகழ்ந்த இலங்கைச் சூழலில் மதியின் தேர்வுகள் கவனிக்கத்தக்கவை. அவள் வியட்நாமியனைக் காதலித்து மணம் புரிந்து, ஆப்பிரிக்கரின் விந்தணுவை ஏற்று பிள்ளை பெற்றுக் கொள்கிறாள். எத்தனை தமிழர்கள் இப்படிச் செய்வார்கள்? தன் பின்னணியையும் தன் தாயகத்தையும் பார்த்து தன் பெண்ணைப் பார்க்கும்போது மதியின் மனநிலை என்னவாக இருக்கும்?
மதி அமெரிக்கக்காரியோ இல்லையோ, அவளை ஒரு தனித்துவம் கொண்ட மனுஷியாகப் படைத்திருப்பதில் அ. முத்துலிங்கம் வெற்றி பெறுகிறார். அதுவே இதை ஒரு உயர்ந்த படைப்பாகவும் ஆக்குகிறது.
"பதாகை" இணைய இதழில் வெளியானது.
அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்கக்காரி‘ சிறுகதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக