வியாழன், 3 ஜனவரி, 2013

வயலின் மேதை எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நினைவில்

வயலின் மேதை எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் மன வருத்தமாக இருக்கிறது. ஒரு சகாப்தத்தின் முடிவு. இவர் தன் தந்தையாரிடம் வயலின் கற்றுக் கொண்டார். ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக சங்கீத முறைகள் இரண்டிலும் முழுமையான பயிற்சியும், ஞானமும், திறமையும் பெற்றவர்.சென்னையில் படிக்கும் சமயம் இவருடைய பல கச்சேரிகளை கேட்கும் வாய்ப்பு பெற்றேன். சில மாதங்கள் சென்னை விவேகானந்தா கல்லூரியில்  பகுதி நேர ஆசிரியர் பணி செய்து வந்தேன். அப்போது மயிலாபூரில் மாலையில் செல்லும் சமயம் எம்.எஸ்.ஜி அவர்கள் நெற்றியில் பட்டை, முகத்தில் புன்னைகை சகிதம் கையில் ஒரு மஞ்சள் பையுடன் ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிரில் காய்கறி வாங்கிக் கொண்டிருப்பார். வணக்கத்திற்கு புன்முறுவலுடன் ஒரு வணக்கம். கச்சேரிகளிலும் அதே புன்முறுவலைக் காணலாம். பரூர் வழி வயலின் மகுடத்தில் ஒரு ஜொலிக்கும் வைரம். சென்ற வருடம் அவர் பத்ம பூஷன் விருது வாங்கிய போது ஹிந்துவில் வந்த அவருடைய பேட்டி அருமையான ஒன்று.

அவர் தனி வயலின் கச்சேரிகள் அமிர்தம் தான். அவருடைய வயலின் பக்க வாத்தியம் தனக்குத் தான் தெரியும் என்பது போல் இல்லாமல் அன்று பாடுபவருக்கு உறுதுணையாகவும், அதனை மேம்படுத்தும் வகையிலும் இருக்கும்.ஒரு கச்சேரியில் என் அருகில் அமர்ந்திருந்த முதியவர் அருமையான சங்கதிகள் விழும் இடங்களில் செல்லமாக எம்.எஸ்.ஜி யைத் திட்டிக் கொண்டே ரசித்தது இன்றும் நினைவில் உள்ளது.

அவர் வாசிப்பைப் பற்றி என்ன சொல்ல? திருநெல்வேலி அல்வாவை சாப்பிட்டால் தான் அதன் சுவை  தெரியும்.  ருசி மறக்கவும் மறக்காது.

எம்.எஸ்.ஜி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

அவர் வாசித்த காணொளி ஒன்று.

1 கருத்து:

  1. இசைக்குப் பெருமை சேர்த்தவர். இவர் மறைவு இழப்பே!
    அவர் ஆத்மா அமைதியுறட்டும். இவர் கச்சேரி எதுவும் நேரில் கேட்டதில்லை. வானொலி, ஒலிப்பதிவுகள் மூலம் அவர் அர்பணிப்பை அறிவேன்.
    அருமையான தர்ப்பார் இட்டுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு