சுஜாதா - ஒரு வாசகனின் அஞ்சலி
சுஜாதாவின் மறைவுச் செய்தியை அறிந்தவுடன் கவிஞர் கண்ணதாசன் கூறிய "சாவே உனக்கு ஒரு சாவு வரதா" என்று எழுதியது தான் நினைவுக்கு வந்தது. ஒரு சிறந்த பொறியியல் வல்லுநர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் தமிழில் அறிவியலை மிகவும் எளிதாக கூறும் திறமை என்று பல சிறப்புகளை பெற்றவர். இவருடைய நைலான் கயிறு, கனவு தொழிற்சாலை, ரத்தம் ஒரே நிறம், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று பிரபலமான நூற்று கணக்கான கதைகள், நாவல்கள் படைத்தவர். இவருடைய முதல் சிறுகதை "சிவாஜி" என்ற பத்திரிகையில் வெளி வந்தது. பிற்காலத்தில் ஒரு பேட்டியில் முதல் கதை பிரசுரமானத்தில் ஏற்பட்ட சந்தோஷம் அளவிட முடியாதது என்றும், அதை யாராவது பெற்று தந்தால் தன் சாம்ராஜ்யத்தில் பாதியை கொடுப்பதாகவும் கூறி இருந்தார். தமிழில் கதை எழுதிவதில் "விஸுஅல் ரைடிங்" என்ற புதிய அணுகு முறையை கையாண்டார். அறிவியல் புனைக் கதைகள் (science fiction) மற்றும் அறிவியல் சார்ந்த இவருடைய கட்டுரைகள் தான் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து இவரை மிகஉம் வேறுபடுத்தி காட்டியது. தமிழில் "அறிவியல் கதைகளின் முன்னோடி" என்ற பட்டம் இவருக்கு சரியாக பொருந்தும். எழுவதுகளில் வந்த சுஜாதாவின் "கணையாழிஇன் கடைசி பக்கங்கள்" அவருடைய பரந்த அறிவையும், புத்திகூர்மையையும் வெளி படுத்துவதாக இருந்தன. கவிதை மற்றும் நாடகங்கள் படைப்பதிலும் கூட இவருடைய திறமையை காண முடிந்தது. "ஹைக்கூ" கவிதைகளை தமிழில் பிரபல படுத்தினார். பல வாசகர்களை கவிதை எழுதும் முயற்சியில் எடுபடச் செய்து சிறிதளவு வெற்றியும் பெற்றார். தமிழ் இலக்கியத்தின் பால் இவருடைய எழுத்தால் பல இளைய தலை முறையினர் கவர்ந்து இழுக்கப்பட்டனர் என்பது தான் இவர் தமிழுக்கு ஆற்றிய மிகப் பெரிய சேவை.
எண்பதுகளில் இருந்து எழுதுவதற்கு கணணி உபயோகித்தார் என்பது ஓர் ஆச்சிர்யமான விஷயம். "கணணியில் தமிழ்" என்பதிற்கு உண்மையான முயற்சி மேற்கொண்டவர். வைஷ்ணவ பக்தி இலக்கியத்தை பற்றி நிறைய எழுதினார். குறிப்பாக ஆண்டாள் பற்றிய கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது. சிறு கதைகள் மற்றும் கதைகள் எழுதும் நுணுக்கங்களை அழகான கட்டுரைகள் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சிற்றிதழ்களில் இடம் பெற்ற அருமையான கதைகள்,கட்டுரைகள் மற்றும் கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள தவறியதே இல்லை. உதாரணமாக விழுப்புரம் கல்லூரி பேராசிரியர் பழமலை எழுதிய "சனங்களின் கதை" என்ற யதார்த்தமான கவிதை தொகுப்பை பாராட்டி எழுதி சாதாரண வாசகனை அடையச்சைதார். தமிழ் பழங்கால இலக்கியத்தையும் இவர் விட்டுவைக்கவில்லை. கடுமையான விமர்சனகளுக்கிடையே ("இந்தியா டுடே", காலச்சுவடு" ) "புறநானூறு ஓர் எளிய அறிமுகம்" என்ற நூலை இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டார். இவருடைய எளிமையான உரைநடை, சிறு வாக்கியங்களாக செய்தியைச் சொல்லும் முறை மற்றும் நகைச் சுவை உணர்வு ("குதிரை" சிறு கதை, அந்நியன் சினிமாவில் விக்ரம் எழுதும் காதல் கடிதம்) திரை உலக வசனகர்த்தாவாக பிரகாசிக்க உதவியது. மணிரத்தினம், சங்கர் போன்ற இயக்குனர்கள் இவரை நன்கு பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் கதைகள் சினிமாவில் சிதைக்கபடுவதை கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், எழுத்து மற்றும் திரைக்கு இடையே உள்ள ஊடக வித்தியாசங்களை புரிந்து கொண்டு யதார்த்த நிலையை கையாண்டார் என்றால் மிகையாகாது. காச்மாலாஜி (cosmology) , குஅந்டொம் ப்ஹைசிச்ஸ் (quantum physics) முதலிய சிக்கலான விஷயங்களை தமிழில் என்னைப் போன்ற சாதரணமான வாசகனுக்கும் புரியும் வகையில் பகிர்ந்து கொண்டார். முதலில் இவருடைய கதைகளை நல்ல இலக்கியமாக விமர்சகர்கள் ஏற்க மறுத்தாலும், காலப் போக்கில் தமிழ் சிறுகதை இலக்கியத்தில் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் போன்ற தலை சிறந்த எழுத்தாளர்களுடன் சுஜாதா பெயர் இடம் பெறுவது தடுக்க முடியதாகி விட்டது.
ஓட்டு போடும் இயந்திரம் கண்டு பிடித்ததற்கு, அறிவியலை (ஏன், எப்படி, எதற்கு) பிரபலமான ஊடகங்கள் மூலமாக பிரபலப்படுதியதற்கு சுஜாதாவிற்கு பரிசுகள் கிடைத்தன. தன்னுடைய தொழிலையும், சொந்த வாழ்க்கையையும் மற்றும் எழுத்தாளர் என்ற அடையாளத்தையும் குழப்பிக் கொள்ளாமல் எளிமையான, இறுதிவரை உற்சாகமான ஒரு வித இளமையுடன் வாழ்ந்து வந்தார். சுஜாதாவை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்தார்க்கும், வாசக நண்பர்களுக்கும் அவருடைய எழுத்துக்களில் வாழ்கிறார் என்பது தான் ஒரே ஆறுதல்.
இறுதியாக சுஜாதா இறப்பு பற்றி அவர் எழுத்தில்:
"செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை ,என் புத்தகங்கள் ,என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும் .செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.
நான் நானாகவே தொடர வேண்டும் . அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும் . கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும் . அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன , முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்."
சுஜாதா நினைவாக ஒரு கவிதை முயற்சி:
சுஜாதா மரணம்
பூஜ்ஜியத்தால் வகுத்து பிரபஞ்சத்தை
படைத்த ஆண்டவனுக்கே ஆசை
அறிவியல் தமிழில் அறிய
கணணி கற்க கதைகள் கேட்க
ஆள் தேவை விளம்பரம் கண்ட
காலன் பாசக்கயிற்றுக்கு விடை