செவ்வாய், 25 நவம்பர், 2008

மனக்கிறுக்கல்கள் - 2

கர்நாடக இசை


பல விதமான ரசிகர்கள்

நண்பர் அழைப்பை ஏற்று செல்லும் குழந்தை பிறந்தநாள் விழாவோ, நல்ல இயக்குனரின் விரைவில் வர இருக்கும் திரைப்பட வெளியீடோ, அபிமான எழுத்தாளரின் புதிய புத்தக வரவோ மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் தரக் கூடியவைகள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமோ, ஏதாவது புதிய உத்தியைக் கையாண்டு அசர வைத்து விடுவாரோ இயக்குனர், புதிய கதைக் களம் என்னவாக இருக்கும் என்று பல விதமான கற்பனைகள் மனதில் ஓட ஆரம்பித்து விடும். சில சமயங்களில் இதனால் ஏமாற்றம் ஏற்படுவதும் இயற்கை தான். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகி விடுகிறது. குறிப்பாக கர்நாடக இசை நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தால் தோன்றும் எண்ணங்களுக்கு அளவே கிடையாது. இன்று பிரதான ராகம் என்னவாக இருக்கும், "ராகம் தானம் பல்லவி" இடம் பெறுமா, அப்படியானால் என்ன ராகத்தில் அமையும், துக்கடா பாடல்கள், தனி ஆவர்த்தனம், வயலின் ஒத்துழைப்பு என்று பெரிய பட்டியல் போடலாம்.

மாம்பலம் நடேசன் மாமா ஒரு தனி ரகம். கர்நாடக இசை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மனிதர். ஆனால் அவர் மனைவிக்கு அபார சங்கீத ஞானம். தாழ்வு மனப்பான்மையோ என்னவோ, "ஒரே வரியை நான்கு முறை மாற்றி மாற்றி பாடினால் அதற்குப் பெயர் கர்நாடக சங்கீதம்" என்று கூறும் கட்சி அவர். ஒரு முறை அவரை ஓர் இசை கச்சேரியில் பார்த்த போது, "என்ன மாமா இங்கே" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். "ராஜம் (பொண்ணு) ஊரிலிருந்து வந்திருக்கா, கச்சேரிக்கு போகனும்னா" என்றார். "எப்படி மாமா இருந்தது' என்ற கேள்விக்கு "நன்னா இருந்துடா. எதோ அந்த ராகம் இந்த ராகம் அப்படினா ராஜம், ஆனா எனக்கு எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தது" என்று சொல்லி சிரித்தார்.


சில விஷயங்கள் வாழ்கையில் எத்தனை முறை எதிர் கொண்டாலும் ஓர் இனம் புரியாத சந்தோஷ உணர்வு மனதைக் கவ்விக் கொள்கிறது. தோடி ராகத்தை எத்தனை முறை கேட்டாலும் உதாரணமாக ஐன்ஸ்டைனின் இயற்பியல் தத்துவம், திருக்குறள்,பாரதியின் கவிதைகள், தி.ஜா. வின் மோக முள் என்று பெரிய பட்டியலே போடலாம். இந்த வகையைச் சேர்த்தது தான் தோடி ராகமும். குறிப்பாக ஒ.எஸ். தியாகராஜன் அவர்கள் தோடி ராகத்தில் ராகம்,தானம்,பல்லவி பாடியது மிகச் சிறப்பாக அமைந்த நிகழ்ச்சியின் உச்ச கட்டம் என்றால் மிகையாகது. ஓர் அழகான சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் கை வண்ணத்திற்கு இணையானது பாடகரின் கற்பனையும், ராகத்தை கையாண்ட விதமும். வயலின் வித்வான் ராகவேந்திரர் மற்றும் மிருதங்கக் கலைஞர் முருகபூபதி அவர்களின் சமமான பங்களிப்பு ரசிகர்களின் மகிழ்ச்சியையும், பாடலின் இறுதி வடிவத்தையும் மெருகேற்றியது என்பது நிதர்சனமான உண்மை. "ஹனுமனை தினம் நினை மனமே" என்று பக்தி ரசம் சொட்ட இறுதியாக பாடி நிகழ்ச்சியை அமைதியான, மன நிறைவான சூழலில் முடித்தார் வித்வான். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த GLAC அன்பர்களுக்கு பாராட்டுக்கள். இருபது அல்லது இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொலை நோக்கு பார்வையுடன் GLAC என்ற அமைப்பை உருவாக்கியவர்களையும், அதை இன்று வரை தொடர்ந்து நடத்தி வருபவர்களையும் நினைக்கும் போது "எந்தரோ மகானு பாவலு அந்தரிக்கு மா வந்தனமு" என்று சொல்லத் தோன்றுகிறது.