வியாழன், 3 செப்டம்பர், 2009

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஓர் இனிய மாலைப் பொழுது

ஜெயமோகனும் நானும்



எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அமெரிக்க பயணத் திட்டத்தை அவர் வலைப் பக்கத்தில் பார்த்தவுடன், அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு இருக்கும் என்று தோன்றியது வீண் போகவில்லை.அருள் பிரசாத் என்ற அருமையான மனிதரின் முயற்சியில் ஆகஸ்ட் 25 ம் நாள் "ஜெயமோகனுடன் வாசகர்கள் சந்தித்து உரையாடல்" (டெட்ராயிடில்)ஏற்பாடாகியது.இந்த சந்திப்பு நடைபெற்ற இடம், பிரபல நாவலான "கல்லுக்குள் ஈரம்" எழுதிய ரா.சு.நல்லபெருமாள் அவர்களின் மகள் அம்மு சுப்ரமணியம் அவர்களின் வீடு. நானும் அம்முவின் கணவர் சுப்ரமணியமும் சிறு வயதில் பாளையங்கோட்டை மகாராஜ நகரில் அருகருகில் வசித்தவர்கள் என்று அறிந்தவுடன் பரஸ்பர மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


நான் ஜெயமோகனை சந்தித்த போது அனந்த், அண்ணாமலை மற்றும் அருளின் மனைவி அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.அவர் மிகவும் இயற்கையான புன்னகையை அணிந்து வரவேற்று அறிமுகப் படுத்திக் கொண்டது, ஒரு சுமூகமான சூழ்நிலையை அங்கு ஏற்படுத்தியது.இதுவரை அமெரிக்க விஜயம் மிகவும் ரசிக்கத்தக்க,வெற்றிகரமான ஒன்றாக இருந்ததாக கூறினார்.


அனந்த் பகவத் கீதையைப் பற்றி கேட்டவுடன், ஜெயமோகனுக்கு திருநெல்வேலி அல்வா சாப்பிட்டது போல் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.பொறுமையாக நல்ல விளக்கம் கொடுத்தார்.அதற்குள் இந்து மதம் பௌத்த மதத்தை இந்தியாவில் அழித்ததா என்ற கேள்வி எழுந்தது. அந்த விவாதத்தின் போது ஜெயமோகன் இந்து மதம் நுண்கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது அதனுடைய வளர்ச்சிக்கும்,நிலைத்தலுக்கும் ஒரு முக்கிய காரணியானது என்ற கருத்து கவனிக்கக் கூடியதாக இருந்தது.ஜெயமோகனுடைய உரையாடலில் அவருக்கு "அத்வைத" சித்தானந்தத்தின் மீது உயர்வான கருத்து இருப்பது தெரிய வந்தது.


தன்னுடைய இந்து மதத்தைப் பற்றிய பார்வை வரலாற்று நோக்குடையது என்றும், ஆனால் சோவின் அணுகுமுறையில் அது இல்லை என்பது பெரிய வேற்றுமை என்றார் ஜெயமோகன். ஜெயமோகனுக்கு இந்து ஞான மரபில் நம்பிக்கையும்,கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமையும், எனக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சுப்பிரமணியம் சந்திரசேகரை நினைவு படுத்தியது. சந்திரசேகர் தன்னை ஒரு நாத்திகவாதி என்று சித்தரித்த போதும், பகவத் கீதையை தினமும் படிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்திருக்கிறார்.மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்.


ஜெயமோகனுடைய படைப்புக்களைப் பற்றி பேச்சு திசைமாறிய போது பீர்டினா சலீம் என்ற அமெரிக்கப் பல்கலைகழகம் ஒன்றில் வேலை பார்க்கும் ஆங்கிலக் கவிஞர் வந்தார்.அவருடைய ஓர் ஆங்கிலக் கவிதை புத்தகத்தை ஜெயமோகனுக்குப் பரிசளித்தார்.பின்பு அவருடைய படைப்புக்களைப் பற்றி கேட்டறிந்தார்.வெவ்வேறு மொழிகளில் எழுதும் இரண்டு எழுத்தாளர்கள் சந்திப்பு ஒரு புதுமையான அனுபவம்.

ஜெயமோகன் பீர்டினா சலீம்



இதற்கு நடுவே அம்மு அவர்களின் உபயத்தால் அருமையான உணவு பரிமாறப்பட்டது. அம்முவும்,சுப்ரமணியமும் வந்தவர்களை உபசரித்த விதம் விருந்தோம்பலுக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

அம்முவும்,சுப்ரமணியமும் (அமர்ந்திருப்பவர்)


அலமேலு மங்கை என்று பெயர் வைத்த தன் தந்தை தன்னை அம்மு என்று அழைத்ததாகக் கூறினார் அம்மு. உடனே ஜெயமோகன் ஜெயலலிதாவிற்கு அம்மு என்ற ஒரு பெயர் உண்டு என்றார்.ஜெயலலிதாவுடன் ஒப்பீடா என்று விளித்தார் அம்மு. வேதாந்தம், சித்தாந்தம், கவிதை, படைப்புகள் என்று ஆழமான விஷயங்களில் இருந்து நகைச்சுவையை நோக்கி உரையாடல் நகர்ந்தது.சினிமா உலகில் எம்.ஜி.யார் சின்னவர் என்றே அறியப்படுவார் என்ற ஜெயமோகன், எம்.ஜி.யாரைப் பற்றி சினிமாத் தொழிலாளர்கள் மிகவும் உயர்வாகப் பேசும் பல சம்பவங்களைக் கூறினார்.(அதைப் பற்றி அவரே விரிவாக எழுதுவார் என்று நம்புவோம்.Let us hear from horse's mouth).


இறுதியாக ஜெயமோகனிடம் விடை பெறும் போது எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் "வண்ண நிலவனைப்" பற்றி தாங்கள் எழுத வேண்டும் என்ற என் வேண்டுகோளுக்கு அவர் சம்மதித்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.வண்ண நிலவனைப் பற்றிய எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் உயிர்மைக் கட்டுரை ஆகச் சிறந்தது என்றால் மிகையாகாது.தமிழ கூறும் நல்லுலகம் வண்ண நிலவனுக்கு பரிசுகளும்,பாராட்டுகளும் கொடுத்து கௌரவிக்கவில்லை என்ற எண்ணம் என்னைப் போன்ற அவர் வாசகர்களுக்கு இருப்பது நியாயம் தான்.அவருக்கு அடுத்த தலைமுறை எழுத்தளார்களான ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்றோர் அவரை அங்கீகரித்தல் ஒரு சிறப்பான விஷயம் என்று கருதுகிறேன்.

எந்த எழுத்தாளருக்கும் வாசகர் வட்டம் மாறலாம்.வாசகனும் குறிப்பிட்ட எழுத்தாளரை கடந்து செல்லலாம்.எழுத்தின் மூலம் இருக்கும் தொடர்புடன், வாசகனாக நேரில் பார்த்து எழுத்தாளருடன் உரையாடுவது ஓர் இன்பமான அனுபவம் என்று தெரிந்து கொண்டேன்.
சமகால பிரபலமான எழுத்தாளரை நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியான ஒன்றென்றால், பாளையங்கோட்டை நண்பர்களுடன் புதிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெற்றது ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.

4 கருத்துகள்:

  1. பாஸ்டன் பாலா மிக்க நன்றி தங்கள் வருகைக்கு.

    பதிலளிநீக்கு
  2. எழுத்தாளரையும், நண்பர்களை சந்திப்பதில் இருக்கும் அளவில்லா மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி பாஸ்கர் அவர்களே.

    ஆங்கிலக் கவிஞரின் அறிமுகமும், வண்ணநிலவன் எனும் எழுத்தாளர் பற்றியும் அறிந்துகொண்டேன். இந்த உரையாடல் மூலம் பல விசயங்களை எளிதாகத் தெரிந்து கொண்டேன்.

    ஒரு வாசகனாக மாறும் முன்னர் எழுதுபவனாக நான் மாறிப் போனதில் எனக்கு வருத்தமே, வாசகனாக மாறிட ஆசைதான்!

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி இராதகிருஷ்ணன்.
    வண்ண நிலவன் ஓர் அருமையான எழுத்தாளர்.அவர் கதைகளைப் படித்துப் பாருங்கள்.ஓர் இனிமையான அனுபவமாக இருக்கும.

    பதிலளிநீக்கு

  4. மிக்க நன்றி. நான் ரா.சு.வின் ரசிகன். அவரின் பிர்ம்ம ரகசியம் என்ற நூல் இந்திய சமய்ங்களின் அடிப்படை கோட்பாடுகளை அழகாக தொகுத்து எனக்கு விளக்கியது.

    ரவி,மும்பை.

    பதிலளிநீக்கு