திங்கள், 29 டிசம்பர், 2008

பணம் படுத்தும் பாடு

"பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை" என்று திருவள்ளுவர் கூறினார். ஆனால் இந்த பொருள் படுத்தும் பாடு சொல்லி முடியாது. பணம் சேமிக்க வேண்டும். நியாயம் தான். அந்த பணத்திற்கு அதிக வட்டி கிடைக்க வேண்டும்.குறுகிய காலத்தில் பணத்தை பல மடங்கு ஆக்க வேண்டும் என்ற எண்ணம். இந்த பேராசையின் விளைவு உள்ளதும் போய் மிஞ்சுவது துன்பமும்,வருத்தமும் தான்.பலருக்கு 1995-1996ம ஆண்டில் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியின் போது காளான் போல் முளைத்த தனியார் முதலீடு நிறுவனங்கள் நினைவிலிருக்கும்.அதனால் சீரழிந்த குடும்பங்கள் கணக்கில் அடங்கா. அதே போல் இன்று உலகளவில் ஒரு பெரிய பண மோசடி வேலை நடந்திருக்கிறது.இந்த மோசடியின் வில்லன் "பெர்னார்ட் மெடாப்"(Bernard Medoff)..இன்று இணையத்தில் அதிகமாக உலா வரும் இரண்டு பெயர்கள் "சார்லஸ் பாஞ்சி"(Charles Ponzi)மற்றும் "பெர்னார்ட் மெடாப்"(Bernard Medoff). மெடாப் இந்த மாதம் 11ம் தேதி நியூயார்க்கில் கைது செய்யப் பட்டார். இவர் "மெடாப் முதலீடு பாதுகாப்பு" நிறுவனத்தின் தலைவர். இவர் செய்த குற்றம் உலகின் பலதரப்பட்ட முதலீட்டாளர்களை 50 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி)டாலர்கள ஏமாற்றி இருக்கிறார்.இது எப்படி முடிந்தது என்பதின் பிண்ணணியை பார்ப்போம்.

1960௦ம் ஆண்டு மெடாப் பங்குகளை வாங்கி விற்கும் ஒரு சிறிய நிறுவனத்தை ஆரம்பித்தார். 1970௦ களின் மத்தியில் சின்சினாட்டி பங்கு சந்தையை 21/௨ லட்சம் டாலர் செலவில் கணணி மயமாக்கினர். 1989ம் ஆண்டில் அவருடைய நிறுவனம் நியூயார்க் பங்கு சந்தையில் கிட்டத்தட்ட 5% பங்குகளை வாங்கி விற்கும் நிறுவனமாக உயர்ந்தது.கணணி மயத்தின் பலனால் நியூயார்க் பங்கு சந்தையில் பங்குகளை வாங்கி விற்பதை விரைவாகவும்,குறைந்த செலவிலும் செயல் படுத்த முடிந்தது.அதனால் மெடாபின் புகழ் பொருளாதார வர்த்தகத் துறையில் விரிவடைந்தது.மெடாப் ஒரு யூதர். யூத தொண்டு நிறுவனங்களுக்கு அதிகமாக நிதியுதவி கொடுத்து வந்தார்.பல யூத தொண்டு அமைப்புகள் மெடாப் நிறுவனத்திற்கு அதிக அளவிற்கு பண முதலீடு செய்தன.மெடாப் மீது நம்பிக்கை வைத்திருந்த வக்கீல்கள்,டாக்டர்கள் மற்றும் அக்கௌன்ட்டென்ட்கள் மூலமாக மேலும் மூதலீடுகள் வந்து குவிந்தன.சில பல்கலைகழகங்களும் பணத்தை இவர் நிறுவனத்தில் மூதலீடு செய்ததை விதி என்று தான் கூற வேண்டும்.அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகின் பல நாடுகளில் இருந்து வந்த மூதலீடுகள் ஏராளம். ஆண்டிற்கு 10% முதல் 12% வரை முதலீட்டின் பெருக்கம் இருந்தது. பொருளாதாரம் நன்றாக இருந்தாலும் இல்லையென்றாலும் இந்த அளவு முதலீட்டின் மதிப்பு உயர்ந்தது எல்லோரையும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதைப் பற்றி மெடாப் "என் நிறுவனத்திற்கே உரிய தொழில் முறை ரகசியம். வெளியில் சொல்ல முடியாது" என்று கூறி கேள்வி கேட்டவர்களை சமாதான படுத்திவிட்டார்.நம்பக்கூடிய வகையில் பொய்யான கணக்கு விவர அறிக்கையை (account statement) மூதலீடாளர்களுக்கு அனுப்பினார்.மேடாபின் நம்பகத் தன்மை பல மடங்கு உயர்ந்தது. பணம் பண்ணத் தெரிந்த ஒரு பண்பாளர் என்ற உருவம் (இமேஜ்) அவருக்கு கிடைத்தது. உலக நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து வங்கிகள், மூதலீட்டு நிறுவனங்கள் மூலம் பண மழை பெய்தது. இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அமெரிக்கா பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. கடன் கிடைப்பது அரிதானது.மெடப்ப் நிறுவனத்தில் மூதலீடு செய்வது பெருமளவில் குறைந்தது.அதே சமயத்தில் மூதலீடாளர்களுக்கு கையிருப்பில் பணமாக தேவைப்பட்டது. ஒரே நேரத்தில் பல முதலீட்டாளர்கள் ஏழு பில்லியன் டாலர் பணத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினர். மேடாபிற்கும் அவர் நிறுவனத்திற்கும் பெரும் சிக்கல் உண்டானது.பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.மெடாப் தன் மகன்களிடம் தான் நடத்தி வந்தது "பாஞ்சீ திட்டமுறை" (Ponzi scheme) என்று ஒத்துக் கொண்டார்.

பாஞ்சீ திட்டமுறை என்பது முதல் சில மூதலீடாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்து நம்பக தன்மையை ஏற்படுத்தி, அதிக முதலீட்டையும்,மூதலீடாளர்களையும் கவர்வது.பின்னால் வரும் மூதலீட்டை வைத்து முன்னால் மூதலீடாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது.இந்த முறையில் மூதலீடு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்க வேண்டும்.இது நடை முறையில் சாத்தியமில்லை.இதை தான் மெடாப் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் செய்து வந்தார்.இதன் தோல்வியில் தனிமனிதர்கள்,தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பெருமளவில் பணத்தை இழந்தன.ஏழைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களின் பண இழப்பு தான் மிகவும் வருத்தம் தரக் கூடியது. எந்த தவறிலும் முழுவதும் பாதிக்க கூடியவர்கள் ஏழைகள் தான் என்பது மீண்டும் நிறுபனமாகி உள்ளது.இங்கிலாந்து,ஸ்பெயின்,ஜப்பான் போன்ற பல நாட்டு நிறுவனங்களின் இழப்பு பல பில்லியன் டாலர்களாக கணக்கிடப் பட்டுள்ளது.மெடாப் நியூயார்க்,ப்ளோரிடா,பிரான்ஸ் என்று பல இடங்களில் சொகுசு பங்களாக்களை வாங்கி அனுபவித்திருக்கிறார். பெரிய எல்லா வசதிகளும் கொண்ட படகு வாங்கி அதில் சமுதாயத்தின் முக்கிய புள்ளிகளுக்கு ஆடம்பரமான விருந்து கொடுத்து தனது நிறுவனத்திற்கு போதுமான அளவில் மூதலீடை பெற்றிருக்கிறார்.இன்றுள்ள இவருடைய சொத்தின் மதிப்பு 15 பில்லியன் என்று கணக்கிடப் பட்டுள்ளது.70 வயதான இவர் தண்டிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும்.இவரின் இந்த செயல் பல விடை காண முடியாத கேள்விக்களை எழுப்பியுள்ளது.

பங்குச் சந்தை பரிமாற்ற பாதுகாப்பு ஆணைக்குழு (securities exchange commission - SEC) என்ற அமெரிக்கா அரசின் நிறுவனம் தான் இதை போல நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும். 1999ல் இருந்து வந்த குற்றச் சாட்டுகளை சரியாக விசாரிக்கவில்லை இந்தநிறுவனம்.மேலும் SEC 2005 மற்றும் 2007 ஆண்டுகளில் "ஆடிட்" செய்து, மெடாப் நிறுவனத்தின் கணக்கில் எந்த குறையுமில்லை என்று சான்று கொடுத்தது.இதை உலகே ஆச்சிரியமாக பார்க்கிறது. SECன் தலைவர் கிறிஸ்டோபர் காக்ஸ் "இந்த குற்றம் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை" என்று கூறி இருக்கிறார்.முழு விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. புஷ் அரசு நிர்வாகம் செயல்பட்ட லட்சணத்திற்கு மேலும் ஒரு சாட்சி.இதில் வெளிநாட்டு அரசுகளின் மூதலீடு மேற்பார்வை அமைப்புகளின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தான் தனி மனிதனாக இந்த குற்றத்தை செய்ததாக மெடாப் கூறியுள்ளார். இது நம்பக் கூடியதாக இல்லை.போகப் போக தெரியும்.

இது போல் தவறுகள் நடக்க மூதலீடு செய்யும் பொது மக்களும், மூதலீட்டு நிறுவனங்களும் தான் காரணம். பொது மக்கள் விழிப்புணர்வு மிகவும் முக்கியம்.நண்பன் சொன்னான், மாமன் சொன்னார் என்று மூதலீடு செய்வது பெரிய தவறு. நடைமுறைக்கு ஒத்து வராத வட்டி விகிதங்கள் அறிவிக்கும் நிறுவனங்களை முழுவதும் நிராகரிக்கப் பட வேண்டும். இந்த மாதிரி குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும். பொருளாதார தாராள மயமாக்கப் பட்ட இன்றைய உலகில் பணம் உலகம் முழுதும் புழங்கும் போது,இழப்பும் உலகளவில் பரவி இருப்பது தவிர்க்க முடியாதது.மிகவும் உலகில் நம்பகத் தன்மை குறைந்து வருவதற்கு மேலும் ஓர் உதாரணம்.

பணம் படுத்தும் பாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக