வெள்ளி, 9 ஜனவரி, 2009

இன்றைய நாட்காட்டியின் கதை




உலகில் தான் எத்தனை நாட்காட்டிகள்(calendars). எகிப்து,பாபிலோனியன்,ரோமன்,யூத என்று பல நாட்காட்டிகள் இருந்தன.சில நாட்காட்டிகள் இன்றும் புழக்கத்தில் உள்ளது. எகிப்து நாட்காட்டி தான் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.கி.மு.4236ம் ஆண்டு தான் இன்று எழுதிவைக்கப்பட்ட (documented) முதல் வருடமாக அறியப்படுகிறது.பெரும்பாலானவைகள் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் அமைந்தது. விவசாயிகளுக்கு நாட்காட்டிகள் பயிரிடும் காலத்தை சரியாக அறியவும், சமயம் சார்ந்த திருவிழா கொண்டாட்டங்களைக் கணிக்கவும் தேவைப்பட்டது.எகிப்து நாட்காட்டி 10 நாட்கள் ஒரு வாரமாகவும்,30 நாட்கள் ஒரு மாதமாகவும்,4 மாதங்கள் ஒரு பருவமாக 3 பருவங்களை கொண்டிருந்தது.அதாவது 360 நாட்கள் வருடத்திற்கு.ஆனால் வருட ஆரம்பத்தில் 5 விடுமுறை நாட்களை சேர்த்து 365 நாட்கள் கொண்ட நாட்காட்டியை உபயோகித்து வந்தார்கள். லீப் வருடம் என்ற சித்தாந்தம் இல்லாதது தான் ஒரே குறை.

ஆனால் இன்று உலகம் முழுதும் உபயோகத்தில் இருக்கும் நாட்காட்டி ரோம் நாட்டில் இருந்து வந்தது தான்..இந்த நாட்காட்டி பல திருத்தங்களுக்கு உள்ளானது.மிகப் பழைய ரோமன் நாட்காட்டி 304 நாட்களையே வருடத்திற்கு கொண்டிருந்தது. மார்ச்சிலிருந்து டிசம்பர் வரை பத்து மாதங்களே இருந்தன.குளிர் காலத்தின் 60 நாட்களை கணக்கில் எடுக்காமல் விட்டு விட்டார்கள்.

ஆரம்ப காலத்து நாட்காட்டிகள் சந்திரனின் சூழற்சி சூரியனைப் பொறுத்து அமைந்த 29.5 நாட்களை வைத்து வடிவமைக்கப் பட்டன.
அதனால் மாதத்தின் ஆரம்ப நாட்கள் அமாவாசை அல்லது முழு நிலவாக இருந்தது. மேலும் மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்கள் என்றிருந்தது.
ஆனால் பூமி சூரியனை சுற்றி வருவதற்கு கிட்டத்தட்ட (approximately) 365.25 நாட்கள் ஆகிறது. இதை ஒரு சூரிய ஆண்டு (solar year) என்று கொள்ளலாம். .அதனால் சந்திரனின் சூழற்சியை ஒருங்கிணைத்து அமைக்க முற்பட்ட நாட்காட்டிகள் மூன்று நான்கு வருடத்திற்கு ஒருமுறை சில நாட்களை இடைச் செருகல் செய்ய வேண்டியதாகியது. உதாரணமாக ஆந்திராவில் இன்று வழக்கத்தில் உள்ள நாட்காட்டி இந்த முறையை இன்றும் கையாள்கிறது.இஸ்லாமியர்கள் பின்பற்றும் நாட்காட்டி சந்திரனின் சுழற்சியை மையமாகக் கொண்டது. அதனால் தான் ரம்ஜான் பண்டிகை எல்லா காலங்களிலும் மாறி மாறி வருவதைக் காணலாம்.

கி.மு.700 ஆண்டு வாக்கில் நும போம்பிலயுஸ் (Numa Pompilius ) ஆட்சி காலத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்டது. மேலும் நான்கு மாதங்கள் 31 நாட்களையும்,பிப்ருவரி 28 நாட்களையும் மற்றும் அனைத்து மற்ற மாதங்களும் 29 நாட்களைக் கொண்டு வருடத்திற்கு 355 நாட்களாக மாற்றி அமைக்கப் பட்டது.இருந்தாலும் சூரிய ஆண்டுடன் நாட்காட்டி ஒத்ததாக இல்லை.பிப்ருவரி மாதத்தில்வேண்டிய அளவிற்கு நாட்களை கூட்டி பருவ காலத்திற்கு இணையாக நாட்காட்டியை உபயோகித்து வந்தார்கள்.இது போல் செய்ததில் கி.பி.190௦ இல் கிட்டததட்ட 115 நாட்கள் பருவ காலத்துடன் வித்தியாசம் இருந்தது உணரப்பட்டது.

சீசர் ரோமை ஆள வரும் போது "ரோமன் ரிபப்ளிக்" என்ற சூரியன்-சந்திரன் சுழற்சியின் ஒருங்கிணைந்த ஓர் நாட்காட்டி பழக்கத்தில் இருந்தது.சூரிய ஆண்டுடன் ஒத்ததாக அமைப்பதற்காக பிப்ரவரி மாதம் 23ம் தேதிக்குப் பிறகு 22 நாட்களை தேவைப்படும் போது இடை செருகல் செய்யும் பழக்கம் இருந்தது. இதை செய்வதற்கு என்று ஒரு குழு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதனை செயல் படுத்துவதில் நிறைய ஊழல் மற்றும் முறை கேடுகள் நடை பெற்றன.இந்த நாட்காட்டியில் உள்ள குறைகளை நிபுணர்கள் சீசரிடம் கூறினார்கள்.

சீசர் கி.பி 45ம் ஆண்டு நாட்காட்டியில் பெரிய சீர்திருத்தங்களை அமல்படுத்தினார்.90 நாட்களை இடைச் செருகல் செய்ததால் ஒரு வருடத்தில் 445 நாட்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.இந்த ஆண்டை "குழப்பத்தின் ஆண்டு"(year of confusion) என்று அழைக்கப்படுகிறது.மேலும் லீப் வருடம் என்ற புதிய வருடத்தை அறிமுகப் படுத்தினார்.10 நாட்களை கூட்டி, வருடத்திற்கு 365 நாட்கள் என்றும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ருவரிக்கு 29 நாட்கள் என்று இன்று உபயோகத்தில் உள்ள நாட்காட்டியை வடிவமைத்தார்.ஜனவரி 1ம் தேதி ஆண்டின் முதல் நாள் ஆக்கப்பட்டது.அடுத்த வருடம் சீசர் இறந்தவுடன்,Quinctilis என்ற மாதம் "ஜூலை" என்று மாற்றி அமைக்கப்பட்டது. அன்று ரோமில் கணக்கிடும் போது,கி.பி.45 - கி.பி.42 ஐ நான்கு ஆண்டாக கணக்கிட்டு லீப் வருடத்தை கணித்தனர்.இதனால் மேலும் நாட்காட்டியில் அதிக நாட்கள் சேர்ந்ததில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தவறை அகஸ்டஸ் சீசர் திருத்தினார். அதனால் கி.மு.9 இல் இருந்து கி.பி. 8 வரை லீப் வருடம் இருக்கவில்லை.இதற்கு பிரதிபலனாக "Sextilis" என்ற மாதத்தை "ஆகஸ்ட்" என்று மாற்றி வைக்கப் பட்டது.
முதல் லீப் வருடமாக கி.பி 8ம் ஆண்டு ஆனது.சூரிய ஆண்டு ஜுலியன் நாட்காட்டியை ஒப்பிடும் போது 128 வருடத்திற்கு ஒரு முறை ஒரு நாள் பின் தங்கியது. ஈஸ்டர் பண்டிகையை கணிப்பதில் தவறு நேரிட்டது. அதனால் ஜுலியன் நாட்காட்டியில் மாறுதல் தேவைப்பட்டது. அதிக நாட்கள் சேர்க்கப்பட்டதை குறைக்க வேண்டியதாகியது. ஜுலியன் நாட்காட்டியை மாற்றுவதை ஆலோசயுஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்பவர் முன்மொழிய போப் கிரெகோரி (Gregory) செயல் படுத்தினர்.

ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும் 97 லீப் வருடங்கள் இருக்க வேண்டும் என்ற மாற்றம் செய்யப்பட்டது. அதாவது 4அல் வகுபடும் வருடங்கள் மற்றும் 400அல் வகுபடும் நூற்றாண்டுகள் லீப் வருடங்களாக அறிவிக்கப் பட்டது. இந்த மாற்றத்திற்கு உறுதுணையாக மார்ச் 21ம் தேதியை "Vernal Equinox" (அதாவது இரவும் பகலும் சமமாக இருக்கும் நாளே வெர்னால் எகிநோக்ஸ் என்று கொள்ளலாம்) என்று கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் 1582ம் ஆண்டு 10 நாட்களை நாட்காட்டியில் இருந்து எடுக்க முடிவு செய்யப் பட்டது. இத்தாலி,போர்துகீஸ்,ஸ்பெயின் போன்ற நாடுகள் கிரெகோரியன் நாட்காட்டியை உடனடியாக அமல் படுத்தின.இந்த நாடுகளில் 1582ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதிக்குப் பிறகு 15ம் தேதி பிறந்தது. இந்த மாற்றத்தை போப் அறிவித்ததால் கத்தொலிக்க நாடுகள் ஏற்றுக் கொண்டன.

ஆனால் இங்கிலாந்து,ரஷ்ய போன்ற நாடுகள் இதனை வெவ்வேறு நூற்றாண்டுகளில் செயல் முறை ஆக்கியது. குறிப்பாக இங்கிலந்தில் 1782லும்,ரஷ்யாவில் 1918லும் நடைமுறை படுத்தப் பட்டன.இந்த கிரெகோரியன் நாட்காட்டியிலும் சிறு பிழையும்,சிக்கலும் உள்ளது. 3300 ஆண்டுகளில் ஒரு நாள் வித்தியாசம் மீண்டும் வரும்.ஜான் ஹெர்ஷல் என்ற வானவியல் நிபுணர் 4000 ஆண்டுகளுக்கு 369 லீப் வருடங்கள் இருந்தால் இந்த பிழை நீக்கப்படும் என்றார். அதாவது 4000 வருடங்களில் ஒரு லீப் வருடத்தை நீக்குவது. ஆனால் இதை இன்னும் அதிகாரப் பூர்வமாக உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.மேலும் ஈஸ்டர் பண்டிகை வரும் நாள் வருடத்திற்கு வருடம் மாறுபடுவது குறையாக கருதப் படுகிறது. மார்ச் 21ம் தேதிக்குப் பிறகு 32 நாட்களில் என்று வேண்டுமானாலும் ஈஸ்டர் வரலாம். கிரெகொரியின் நாட்காட்டியை ஸ்விடநில் (Sweden) செயல் படுத்தும் போது நடந்த சுவையான சம்பவம்.செயல்முறையில் ஏற்பட்ட குளறுபடியால் 1712ம் ஆண்டு பிப்ருவரியில் 30 நாட்களாக இருந்தது.அன்று பிறந்தவர்கள் வாழ்கையில் பிறந்த நாள் கொண்டாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது..

ஆறாம் நூற்றாண்டில் தான் கி.மு. மற்றும் கி.பி என்று ஆண்டுகளைக் குறிக்கும் வழக்கம் ஏற்பட்டது. Dionysius Exiguus என்பவர் தான் கி.பி.525ல் .கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு),கிறிஸ்து பிறப்பதற்கு பின் (கி.பி) என்ற இன்றுள்ள முறையை நிறுவியவர்.இதில் கி.மு 1ம் ஆண்டிற்குப் பிறகு கி.பி 1ம் ஆண்டு தான்."பூஜ்ஜியம்" ஆண்டு என்று ஒன்றில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக