திங்கள், 26 ஜனவரி, 2009

இஸ்ரேல் பாலஸ்தீனிய தீராத பிரச்சனை


காஸா ஸ்ட்ரிப் என்பது 140 சதுர மைல்கள் பரப்பளவே கொண்ட இஸ்ரேலுக்கும்,எகிப்துக்கும் இடையே உள்ள கடலோரப் பகுதியாகும். கிட்டத்தட்ட 15 லட்சம் பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.இந்த பகுதியில் பெரிய அளவு இயற்கை வளங்கள் இல்லை. அத்தியாவசப் பொருட்கள் வருவதற்கு இஸ்ரேல் மற்றும் எகிப்து மூலமாக தான் வரவேண்டும்.காஸாவிற்குள் நுழையும் எகிப்து எல்லை மூடப்பட்டுள்ளது..இஸ்ரேலோ 2005இல் காஸா வை விட்டு வெளியேறினாலும்,இஸ்ரேலில் இருந்து காஸாவிற்குள் நுழையும் எல்லையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதனால் காசாவில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலை.இந்த சூழ்நிலையில் தான் ஹமாஸ் போன்ற ஆயுதம் ஏந்திய குழுக்கள் மக்களின் ஆதரவை பெற்றது.இஸ்ரேலை அழிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் மேல் ராக்கிட்டுகளை ஏவியது.அடிப்படை பிரச்சனையை தீர்க்காமல்,ஹமாஸை ஒழித்துக் கட்டுகிறேன் என்ற பெயரில் அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்குக் பயமும்,தன்நம்பிக்கை இழப்பும் தான் காரணம். மேலும் தன் நாட்டின் மீது இருந்த பயம் அண்டை நாடுகளுக்கு போய் விட்டது என்ற நினைப்பும் சேர்ந்து கொண்டது.2006ம் ஆண்டு ஹெசபெல்ல உடன் நடந்த சண்டையில் ஏற்பட்ட பின்னடைவு இஸ்ரேலை உறுத்திக் கொண்டே இருந்தது.
ஹமாஸின் முக்கிய கோரிக்கை காசாவின் எல்லை மூடலை முழுவதும் அகற்ற வேண்டும் என்பது தான்.இஸ்ரேல் இதை கடுமையாக எதிர்க்கிறது.குறிப்பாக எகிப்தின் எல்லையின் வழியாக ஆயுதம் கடத்தலை ஹமாஸ் செய்து,அதனை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்துகிறது என்பது முக்கிய குற்றச்சாட்டு.எகிப்து காஸா எல்லையை உலக நாடுகள் கொண்ட குழு கண்காணிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்துகிறது.இதனை எகிப்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

ஹமாஸை அமைதி படுத்திவிட்டோமே தவிர அதனை முழுவதும் அழிக்கவில்லை என்று இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.இதிலிருந்து இந்த மாதிரி ஆயுதம் ஏந்திய குழுக்களை வழக்கமான போர் முறையில் முற்றிலும் ஒழிக்க முடியாது என்பதை இஸ்ரேல் முக்கியமாக புரிந்து கொள்ளவேண்டும்..எகிப்தின் "RAFAH" வழியாக சுரங்கங்களைத் தோண்டி ஹமாஸ் ஆயுதங்களை தொடர்ந்து கடத்தி வந்தது இஸ்ரேலுக்கு பெரிய எரிச்சலையும்,தொல்லையையும் கொடுத்து வந்தது.அதனால் அந்த எல்லைப் பகுதியில் 60% சுரங்கங்களை அழித்து விட்டதாக இஸ்ரேல் கூறுகிறது

இஸ்ரேல் 27 நாட்களாக காஸா பகுதியில் தொடர்ந்து குண்டு மழை பெய்து,.20000 ஹமாஸ் இயக்கத்தினரில் 500 பேரை கொன்றிருக்கிறது.கிட்டதட்ட 700 பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.5000 அப்பாவிப் பொதுமக்கள் காயமடைந்திருக்கிறார்கள்.இன்று தானாக முன்வந்து தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.இதை ஹமாஸ் ஆதரிக்கவில்லை.ஆனால் இஸ்ரேலுடைய படைகள் காஸாவை விட்டு வெளியேறுவதாக இல்லை.அதனால் இந்த பிரச்சனை மேலும் சிக்கலாகி இருக்கிறது.தன்னுடைய அழிக்கும் சக்தியை மீண்டும் நிலை நாட்டியதாக இஸ்ரேல் கருதுகிறது.தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்ததால்,இஸ்ரேல் தற்காலிகமாக சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறது எனலாம்.இந்த கண்மூடித்தனமான காஸாவின் மீதான தாக்குதலினால் உலக நாடுகளின் குறிப்பாக அரபு நாடுகளின் கோபத்திற்கும்,எதிர்ப்புக்கும் உள்ளாகியது.அதனை தணிக்க இந்த முடிவு உதவும்.ஹமாஸை தான் அங்கீகரிக்கவில்லை என்ற நிலையை இஸ்ரேல் மீண்டும் நிலை நிறுத்திருக்கிறது.இஸ்ரேல் படைகள் தொடர்ந்து காஸாவில் இருக்கப் போவதால் ஹமாஸ் உடனான சண்டை தொடரும் வாய்ப்புள்ளது.மேலும் பாலஸ்தீனிய மக்கள் நிம்மதியாக் வாழ முடியும் என்று தோன்றவில்லை.மேலும் எகிப்து காஸா எல்லையையும் கண்காணித்து ஹமாஸை எதிர்த்து ஒடுக்க இஸ்ரேலுக்கு இந்த ஆக்ரமிப்பு ஏதுவாக இருக்கும்.

அரபுக் கூட்டமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இருந்த பிரச்சனை இப்போது அதையும் தாண்டி,ஈரான் நுழைந்ததில் இந்த நீண்ட நாளைய பிரச்சனைக்கு விரைவில் ஒரு நிரந்தர தீர்வு காண முடியும் என்று தோன்றவில்லை.ஈரானின் அதிபர் "ஹோலகாச்ட்" என்பதே ஒன்று நடக்க வில்லை என்று கூறியதோடு நில்லாமல்,இஸ்ரேலை அழித்து விடவேண்டும் என்று கூறியது எரிகிற விளக்கில் எண்ணையை ஊற்றிய கதை ஆகியது.ஈரான் ஹமாசுக்கும்,இசெபெல்லாவுக்கும் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகிறது.அதனால் தான் ஈரானின் அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் இடத்தை இஸ்ரேல் சென்ற ஆண்டு தாக்குவதற்கு அமெரிக்காவிடம் அனுமதி கேட்டது.நல்ல வேலை புஷ் மறுத்துவிட்டார்.ஆனால் அடுத்த கட்டமாக இஸ்ரேல் ஈரானைத் தாக்கவும் வாய்ப்பிருக்கிறது.இப்போது நடந்து வரும் ஈரானுடனான நிழல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் நினைத்தால் இது நடக்கும். அமெரிக்கா வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்கும் ஹிலாரி க்ளின்டன் இந்த பிரச்சனையை அணுகும் முறை இஸ்ரேலின் இந்த முடிவை தீர்மானிக்கும்.

புஷ் ஆட்சியின் கடைசி நாளன்று இஸ்ரேல் அமெரிக்காவுடன் "வேவு பார்க்க தேவையான உபகரணங்களை அளிப்பது மற்றும் காஸாவின் நிலம்,கடல் எல்லைகளை கண்காணிக்க இஸ்ரேல்,எகிப்து முதலிய நாடுகளுக்கு தேவையான பயிற்சிகளை கொடுப்பதற்கு ஒத்துக்கொண்டது" என்று ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.அதாவது ஒபாமா பதவி ஏற்பதற்கு முன்பு காஸா மீது தாக்குதலையும் நடத்தி ஆக்ரமித்துக் கொண்டு, ஒரு ஒப்பந்தத்தையும் அமெரிக்காவுடன் செய்து கொண்டதைப் பார்க்கும் போது பெரிய அளவில் இஸ்ரேலும், அமெரிக்காவும் திட்டமிட்டு இதை செய்தது போல் தெரிகிறது.

இஸ்ரேல் என்ற நாடு தோன்றியதிலிருந்து அதற்கு நிம்மதி கிடையாது.பாலஸ்தீன பகுதியில் யூதர்களுக்கு ஒரு நாடு அமைக்க ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட போது,ரஷ்யாவும்,அமெரிக்காவும் தான் இஸ்ரேலை முதலில் அங்கீகரித்தன.அரபு நாடுகள் இதை யூதர்களின் ஒரு ஆக்ரமிப்பாகவே கருதின.பின்பு பல நாடுகள் இஸ்ரேலை ஒப்புக் கொண்ட போதும், அரபு நாடுகள் குறிப்பாக பாலஸ்தீனியர்களுக்கு இது யூதர்களின் ஆக்ரமிப்பு என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கிறது. அதனால் தான் ஹமாஸ்,ஹெசபெல்ல போன்ற அமைப்புகள் மற்றும் ஈரான்,சிரியா போன்ற நாடுகள் கடுமையாக இஸ்ரேலை எதிர்ப்பதோடல்லாமல் அதனை அழிக்கவும் நினைக்கிறது.அதே நேரத்தில் இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்ள தன் ராணுவத்தை மிகவும் வலிமையாக வைத்துக் கொண்டு,மத்திய கிழக்கு பகுதியையே மிரட்டி வருகிறது.அமெரிக்கா மற்றும் இரோப்பிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பு இஸ்ரேலுக்கு முழுவதும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தன்னை நிலைப் படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது,அதே நேரத்தில் இஸ்ரேலை ஒழிக்க ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. இதற்கு முடிவு தான் என்ன?மத்தியக் கிழக்குப் பிரச்சனையைப் பற்றி சொல்லாத யோசனைகள் கிடையாது,எழுதாத புத்தகங்கள் இல்லை.ராணுவ நடவடிக்கையோ,தீவிரவாதமோ இதற்கு தீர்வு ஆகாது.இஸ்ரேல் தான் பாலஸ்தீனிய பகுதியில் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.இஸ்ரேல் ராணுவத்தால் விரட்டப் பட்ட பலர் தான் இன்று காஸா பகுதியில் உள்ளார்கள்.அவர்களுக்கு அந்த மனவருத்தம் இருப்பதில் நியாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்கள் மனதில் ஒரு நம்பிக்கையை உண்டு பண்ண வேண்டும்.வெஸ்ட் பேங்க்(West bank) மற்றும் காசாவிலும் சுதந்திரமான அரசு அமையவும், மக்கள் நிம்மதியாக வாழவும் வழி செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் மக்கள் தீவிரவாதிகளை ஆதரிப்பதை முற்றும் நிறுத்தி விடுவார்கள்.இல்லை என்றால் இப்படி சண்டை போட்டே வாழ்க்கையை நடத்துவதைத் தவிர இஸ்ரேல் மக்களுக்கு வேறு வழி இல்லை.

அதே போல் பாலஸ்தீனியர்களும்,அரபு நாடுகளும் பழமையும்,சரித்தரமும் பேசிக்கொண்டிருக்காமல்,இன்றுள்ள நிலையை பற்றி சிந்திக்க வேண்டும்.இஸ்ரேல் என்பது இன்று ஒரு நிஜம்.அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.அதனுடன் சேர்ந்து அமைதியான,சுமுகமான் வாழ்க்கை வாழ நினைக்க வேண்டும்.இதெல்லாம் சொல்வது சுலபம் என்று தெரிகிறது.இது ஒரு நாளில் நடந்து விடாது.அதற்கான சூழ்நிலையை இஸ்ரேல்,அரபு நாடுகள் மற்றும் உலக நாடுகள் உருவாக்க வேண்டும்.இல்லை என்றால் இஸ்ரேல் தாக்குவதும்,அப்பாவி மக்கள் பாதிக்கப் படுவதும்,ஐ.நா.சபை தீர்மானங்கள் இயற்றுவதும்,உலக நாடுகள் கண்டனம் தெரிவிப்பதும்,மனித உரிமைக் குழுக்கள் போர்க்கொடி தூக்குவதுமாக காலத்தைக் கழிக்க வேண்டியது தான்.பாலஸ்தீனியர்களும்,இஸ்ரேலும் சேர்ந்த ஒரு நாடாக இருப்பது ஒரு தீர்வு என்றாலும்,அதில் நடைமுறை சிக்கல்கள் நிறையவே இருக்கும். அதனால் இரண்டு தனிப்பட்ட,சுதந்திரமான நாடுகள் தீர்வு தான் ஒரே வழி.இதை விட்டு ஒருவரை ஒருவர் அழிக்க நினைப்பது உலக நிம்மதியையும் சேர்த்து கெடுப்பதில் தான் போய் முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக