செவ்வாய், 9 டிசம்பர், 2008

மும்பை தாக்குதலும் பாகிஸ்தானின் நெருக்கடிகளும்

மும்பை நகரம் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாவது ஆண்டிற்கு ஒரு முறை வரும் நிகழ்வு போல் ஆகி விட்டது. இந்திய அரசின் மெத்தனப் போக்கு, பொறுப்பின்மை மற்றும் அலட்சியத்திற்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டு. தீவிரவாதம் தான் கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய நாட்டின் முக்கியப் பிரச்சனை என்று கூறி வந்த பிரதமர் நிர்வாகத் திறமையில்லாத சிவராஜ் படேலை உள்துறை அமைச்சராக தொடர்ந்து வைத்திருந்தது மன்னிக்க முடியாத குற்றம். கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கைகள் இருந்தும் அதனை உதாசீனப் படுத்தியதின் விளைவு ௨00கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்சேதம். நாட்டின் பாதுகாப்புப் படை (NSG) சம்பவ இடத்திற்கு வருவதற்கு 10 மணி நேரம் தாமதம், தொலை நோக்கி (telescopic) துப்பாக்கி இல்லாததால் பிணைக் கைதிகளை பாதுகாப்புப் படையினரே தாக்கும் அபாயம்,மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அரசியல்வாதிகளின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் மக்களுக்கு அரசாங்கம் மற்றும் அரசியல் வாதிகளின் மேல் இருந்த கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் இழந்து வெறுப்பு மேலிட்டது. அதனை கேரளா முதலமைச்சர் விவகாரத்தில் தெளிவாக காண முடிந்தது.மேடைக்கு மேடை இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்று முழங்கிய உள்துறை பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கடைசியில் பெரிய நாமம் போட்டது தான் மிச்சம்.

மும்பை போன்ற தீவிரவாத தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகும் நகரங்களில் தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவு இல்லாதது பெரிய அதிசியம் தான். தீவிரவாத தாக்குதல்களின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய பயிற்சி, சந்தேகப் படும் நபர்களைக் கண்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அணுகு முறை முதலியவைகள் விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் தீவிரமாக முயல வேண்டும்.மேலும் உளவியல் ரீதியாக பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் முன் வர வேண்டும். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றதோடல்லாமல், பிணைக் கைதிகளை வைத்து மூன்று நாட்களுக்கு ஆடிய வெறியாட்டம் உலக அளவில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை கையாளும் முறையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல நாடுகளின் தவறான வெளிநாட்டுக் கொள்கை, சந்தர்ப்பவாதம் காரணமாக மிகவும் சிக்கலாகி விட்ட இந்த தீவிரவாத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுவதுமாக இந்த நூற்றாண்டில் ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. எனவே இந்தியா தன்னுடைய உள்நாட்டு பாதுகாப்பில் மிக அதிகம் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.குறிப்பாக உளவுத் துறையை பலபடுத்துதல், பலவிதமான உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் பிரதானமானது. மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழும் பரிதாப நிலை தான்.தீவிரவாதமே கொடுமை என்றால் அதனை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்களை என்ன செய்ய. அவர்களுடன் ஓர் ஆக்கப்பூர்வமான உரையாடலில் மாற்றுக் கருத்து சிந்தனையாளர்கள் ஈடுபட்டு ஒரு தெளிவை ஏற்படுத்துவது தீவிரவாத எதிர்ப்பை வலுப்படுத்த உதவும்.

தீவிரவாத தாக்குதலுக்குப் பின் தொலைக் காட்சியில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இந்த தாக்குதலுக்கு "வெளிநாட்டு சக்திகள்" தான் காரணம் என்று பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியது இன்று விசாரணையில் உண்மையாகிவிட்டது. பாகிஸ்தான் பல்முனை தாக்குதலுக்கு உள்ளான ஒரு பரிதாபமான நாடக உள்ளது. அதன் மேற்குப் பகுதியில் தலிபான்களால் தொல்லை. கிழக்கில் காஷ்மீர், பிரச்சனை. உள்நாட்டில் அடிக்கடி நடக்கும் வன்முறைகள். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இன்றுள்ள சிவில் அரசாங்கம் நேரடியான ஈடுபட்டதற்கு சாட்சி இருப்பதாக தெரியவில்லை. இந்த ஈனச் செயலால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அரசு அதனுடைய உளவுத் துறை தலைவரை இந்தியா அனுப்ப முதலில் சம்மதித்தது. ஆனால் இன்னும் உள்நாட்டு விவகாரத்தில் வலுவான ஆளுமையை வெளிப்படுத்தும் பாகிஸ்தானின் ராணுவ எதிர்ப்பால் பாகிஸ்தான் அரசு பின்வாங்கியது.பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதன் உளவுத் துறைக்கு தீவிரவாத இயக்கங்களுடன் உள்ள தொடர்பு உலகறிந்த ஒன்று. இராணுவம் ஆதரித்த தீவிரவாத இயக்கம் தான் மும்பை தாக்குதலை திட்டமிட்டு அதனை செயல் படுத்தியது என்பதற்கான ஆதாரங்கள் வலுக்கிறது. இராணுவம் தனக்கு எந்த பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லை என்று உடனே அறிவித்து அதை செயல் படுத்தினால் இந்திய பாகிஸ்தான் உறவு வலுப் பெற உதவும். இந்தியா தன்னிடம் கிடைத்த தடயங்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும். எல்லா லக்ஷர் தோய்பா தீவிரவாத பயிற்சி முகாம்களையும் மூட வேண்டும். அந்த இயக்கம் வேறு எந்த பெயரிலும் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். எல்லாவற்றிகும் மேலாக பாகிஸ்தான் மக்கள் இந்த தீவிரவாத இயக்கங்களையும் முழுவதும் நிராகரிப்பது அவசியம். பாகிஸ்தானைத் தாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இதுவரை இந்தியா அரசு மிகவும் பொறுப்பான முறையில் நடந்து கொண்டுள்ளது. பாகிஸ்தானின் சிவில் அரசு மிகவும் வலுவிழந்து உள்ளது. அதற்கு மேலும் நெருக்கடி கொடுப்பது எதிர்மறை விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் உள்ள பாகிஸ்தானின் பொருளாதரத்தை மனதில் கொண்டு தீவிரவாதிகளை ஆதரிப்பதால் தன் நாட்டிற்கே பெரிய தீங்கிழைக்கிறோம் என்பதை பாகிஸ்தான் ராணுவமும், உளவுத் துறையும் உணர வேண்டியது அவசியம். இறுதியாக இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இந்த தீவிரவாத கெடுதலை முறியடிக்க வேண்டும்.

மும்பை தாக்குதலும் பாகிஸ்தானின் நெருக்கடிகளும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக