வெள்ளி, 19 டிசம்பர், 2008

டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள்

டேட்டிராயிட் கார் தொழிற்சாலைகளின் துயரம் தொடருகிறது. நவம்பர் ஏழாம் தேதி போர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் என்ற இரண்டு நிறுவனங்களும் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும், ஜூலை,ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 14.6 பில்லியன் டாலர் அளவு பணத்தை கையிருப்பில் இருந்து கரைத்ததாகவும் அறிவித்தது.கிர்ரைச்ளர் (Chrysler) என்ற மூன்றாவது நிறுவனத்தின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது.இந்நிலைக்கு நிர்வாகக் கோளாறு,தொலைநோக்குப் பார்வை இல்லாதது, ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பின் (United Worker's Union) செயல்பாடுகள், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான மருத்துவச் செலவுகள், ஓய்வூதியம் போன்ற பல காரணங்கள் முன் வைக்கப்படுகிறது. இதோடல்லாமல் ஆண்டு மத்தியில் கடுமையாக உயர்ந்த கச்சா எண்ணை விலை மற்றும் அமெரிக்கா பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு இந்த நிறுவனங்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கி விட்டது.இந்த நிலையில் தான் அமெரிக்கா அரசாங்கத்தின் உதவியை நாடியது கம்பெனிகள்.


மூன்று கம்பெனியின் தலைமை நிர்வாகிகளும் இரண்டு முறை டேட்டிராயிட்யில் இருந்து வாஷிங்க்டனுக்கு யாசகம் கேட்டு படையெடுத்து ஆகிவிட்டது. முதல் முறை பண உதவி கிடைத்தால் அதை உபயோகிக்கும் முறைகளை பற்றி செனட் சபையில் சரியான விளக்கங்களை கொடுக்கத் தவறினார்கள். அதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளனார்கள் இந்த தலைமை நிர்வாகிகள்.முறையான செயல் திட்டத்துடன் வருமாறு திருப்பி அனுப்பப் பட்டனர். மீண்டும் டிசம்பர் 2ம் தேதி செயல் திட்டத்தை சமர்ப்பித்து, 34 பில்லியன் டாலர் பண உதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதில் ஜெனரல் மோட்டார்ஸ் இந்த ஆண்டு இறுதிவரை தான் கம்பெனியை நடத்த பணம் இருப்பதாக அறிவித்தது. உடனே அமெரிக்கா காங்கிரஸ் 15 பில்லியன் டாலர் உதவி கொடுப்பதற்கு வகை செய்யும் மசோதா ஒன்றை தயாரித்து அதற்கு புஷ்ஷின் ஆதரவையும் பெற்றது. பண உதவி மசோதாவை ஆதரிக்க ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு தன் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்க, ஆள் குறைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளை குடியரசுக் கட்சியினர் முன் மொழிந்தனர். அதனை தொழிலாளர் கூட்டமைப்பு முற்றிலுமாக நிராகரித்தது.மேலும் இந்த கம்பெனிகள் திவாலாகி விட்டோம் என்று அறிவித்து, கடுமையான சீர்திருத்தங்களை செய்து லாபத்தை அடைய வேண்டும் என்று பெரும்பாலான குடியரசுக் கட்சியின் செனேட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருதலானார்கள். அந்த மசோதா குடியரசுக் கட்சியனரின் ஆதரவு இல்லாததால் தோல்வியை தழுவியது. பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த தொழிலாளர்களும், கம்பெனியின் நிர்வாகிகளும் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர்.


ஒரு நாளைக்கு 200 மில்லியன் டாலர்கள் செலவு செய்யும் இந்த நிறுவனங்கள் "எதைத் தின்னால் பித்தம் தெளியும்" என்கிற பரிதாப நிலை.மசோதா தோல்வி அடைந்ததும், பொருளாதாரக் நிறுவனங்களின் சிக்கலை தீர்க்க அமெரிக்கா செனேட் அனுமதித்துள்ள 700 பில்லியன் டாலரில் இருந்து, 15 பில்லியன் பண உதவி செய்ய வேண்டும் என்று புஷ்ஷிடம் நேரடியாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.. புஷ்ஷும் அமெரிக்க நிர்வாகமும் இன்னும் முடிவெடுக்காமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. "ரோம் நகரம் எரியும் பொது நீரோ மன்னன் பிடில் வாசித்த" கதை தான்.இந்த நிறுவனங்களை திவாலாக விட்டால் அதனால் ஏற்படும் இழப்பு நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் அளிக்கும் பல தொழிற்சாலைகளில் வேலை இழப்பு ஏற்படும். இந்த தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள அத்தனை வியாபாரமும் பாதிக்கப்படும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.ஏற்கனவே மூச்சு திணறிக் கொண்டிருக்கும் அமெரிக்கா பொருளாதாரம் மேலும் மோசமடையும். கனடாவிலும் வேலை இழப்பு பெரிய அளவில் இருக்கும்.திவாலான கம்பெனியின் கார்களை வாங்க மக்கள் முன் வர மாட்டார்கள். ஒரு கார் வாங்கினால் ஏழு முதல் பத்து வருடம் வைத்திருக்க நேரிடும். கார் உற்பத்தி செய்த நிறுவனமே இல்லை என்றால், உதிரி பாகங்கள் கிடைக்காது. அந்த காரை விற்க முடியாது என பல சிக்கல்கள்.


ஜப்பானில் இருந்து 1980ல் கார்களை இறக்குமதி செய்து வந்த நிறுவனங்கள், இன்று அமெரிக்காவிலேயே கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. அவர்கள் நிலைமை மிகவும் மோசமாக இல்லை என்றாலும், உதிரி பாகங்கள் விநியோகிக்கும் நிறுவனங்கள் எல்லா கார் நிறுவனங்களுக்கும் பெரும்பாலும் பொதுவானவையே.அதனால் டேட்டிரோஇட் கார் நிறுவனங்களின் வீழ்ச்சி டொயோடா,ஹோண்டா மற்றும் நிசான் போன்ற நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும்.நிசான் நிறுவனம் ஜப்பானில் தன் உற்பத்தியை குறைக்கப் போவதாகவும்,500 தற்காலிக ஊழியர்களை இடை நீக்கம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. டொயோடா நிறுவனமோ ஜப்பான் மற்றும் இந்தியாவில் தன் விரிவாக்கத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. போர்ட் தன் தொழிற்சாலைகளுக்கு கிறிஸ்துமஸ் கால இரண்டு வார விடுமுறையை மூன்று வாரங்களாக நீட்டித்துள்ளது. கிர்ரைச்ளர் (Chrysler) ஒரு மாத விடுமுறையை அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் என்பது அமெரிக்காவின் முக்கியமான கலாச்சார திருவிழா. அதற்கு பரிசுப் பொருள்கள் வாங்கக் கூட பணமில்லாமல் தொழிலாளர்கள் அவதிப் படுகிறார்கள். முன்பெல்லாம் டேட்டிராயிட்ல் நண்பர்களைப் பார்த்தால் வேலை இருக்கிறதா என்று விசாரிப்போம். இன்று நிறுவனமே இருக்கிறதா என்று கேட்கும் நிலை.


இந்த கொடுமையான சூழ்நிலையை தற்காலிகமாக எதிர்கொள்ள புஷ் அரசு இந்த மூன்று நிறுவனங்களுக்கும் உடனடியாக பண உதவியை செய்ய வேண்டும். இடது சாரி,வலதுசாரி போன்ற மனப்பான்மையை மூட்டை கட்டி வைத்து, மனிதாபிமானத்துடன் அரசு செயல் பட வேண்டும். இந்த பண உதவியால் மூன்று கார் நிறுவனங்களின் பிரச்சனைகள் முழுவதும் தீர்ந்து விடாது. சிறிது மூச்சு விட நேரம் கிடைக்கும். மீண்டும் கிர்ரைச்ளர் (Chrysler) ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைவது குறித்து பேச்சு வார்த்தையை துவங்கி உள்ளது. கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்த நிறுவனங்கள் முன் வர வேண்டும். தரமான, பெட்ரோலை குறைந்த அளவில் பயன்படுத்தும், சுற்றுப் புற சூழலை அதிகம் பாதிக்காத, மிகவும் தரமான கார்களை உற்பத்தி செய்து மக்களை மீண்டும் கவர வேண்டும். தொழிலாளர் கூட்டமைப்பும் தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். முழுவதும் வேலை இழப்பதை விட, சில சலுகைகளை விட்டு கொடுத்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவது தான் விவேகம்.டேட்டிராயிட்ல் இன்றுள்ள மூன்று கார் நிறுவனங்கள் இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ மாறுமா? இல்லை டேட்டிராயிட் "கார்களின் நகரம்" என்ற பாரம்பரியத்தை இழக்கும் காலம் வந்துவிட்டதா?டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக