புதன், 9 ஜூன், 2010

என் பெயர் ராமசேஷன் - ஆதவனின் ஆக்கம்


மனிதனுக்கு மன நிலை மாறுதல்கள் ஒரு தொடர்கதை. அதிலும் கல்லூரியில் நுழையும் பருவத்திலும், அங்கு ஏற்படும் அனுபவங்களும், கவரும் நோக்கத்துடன் ஆணுக்காக பெண்ணும், பெண்ணுக்காக ஆணும் செய்து கொள்ளும் சமரசங்களும், போடும் போலி வேஷங்களும், அதனால் ஏற்படும் மன உளைச்சல்களையும் மிகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆதவன்.

ராமசேஷன் தான் கதை சொல்லி மற்றும் கதாநாயகன். கல்லூரி வாழ்க்கை முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவன் கல்லூரியில் சேரும் தருணத்தையும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது தான் கதை.

கதை ஆரம்பத்தில் அவன் குடும்பத்தில் அம்மா ஒருபுறமும், பாட்டி (அப்பாவின் அம்மா) மற்றும் விதவையாகி வீட்டில் இருக்கும் அத்தையும் சேர்ந்து அப்பாவை படுத்தும் பாட்டை லேசான நகைச்சுவையுடன் அழகாகக் கூறியிருக்கிறார். ராமுக்கு ஒரு தங்கை வேறு. அவன் கல்லூரியில் சேர்ந்தவுடன் அறிமுகமாகும் பணக்கார ராவ் மற்றும் மூர்த்தி பற்றிய சித்தரிப்பு கச்சிதம். ராவின் தங்கை மாலாவுடன் ராமுக்கு ஏற்படும் பரிச்சயம், அவர்கள் வயதின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இட்டுச் செல்கிறது. அந்த உறவின் முறிவில் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சிறிது "இண்டேலேசுவல்" பெண்ணான பிரேமாவுடன் உண்டாகும் தொடர்பு மற்றும் பிரேமாவுக்கும், மாலாவுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்று கதையை மிக சுவாரசியமாக எடுத்துச் செல்கிறார் ஆசிரியர்.
வி.எஸ்.வி என்ற சினிமா இயக்குனரை அறிமுகம் செய்து அவர் மூலமாக படைப்பாளியைப் பற்றி பேச வைப்பது தான் கதையில் நான் மிகவும் ரசித்துப் படித்தது.

ஓர் இடத்தில வி.எஸ்.வி இப்படிக் கூறுகிறார் "கலைஞனின் ஹிபோக்ரசியைப் பற்றி பேசுகிறவர்கள், தாங்களும் ஹிபோக்ரசி இல்லாதவர்கள் தானா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். சொந்த வாழ்கையில் புரட்சிகரமாக எதையும் சாதித்திரதாவர்களும், சந்தித்திரதாவர்களும் தான் கலைப் படைப்புகளில் காரசாரமாக, புரட்சிகரமான அம்சங்களை நாடுகிறார்கள் - அப்போது தானே இவற்றை ஆரவாரமாகப் புகழ்வதன் மூலம் தனக்கென ஒரு புரட்சிகரமான பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்."

இது விமர்சிக்கும் பலருக்கும் எந்த காலத்திலும் பொருந்தும். இந்த நாவலில் ஒவ்வொருவரின் மனவோட்டங்களையும், அதற்கான காரணங்களையும் துல்லியமாக எழுதி உள்ளார். எந்த பாசாங்குகளும், தேவையில்லாத வர்ணனைகளும் எங்குமே காண முடியவில்லை. 1970-80 களில் மத்திய தர, குறிப்பாக பிராமண குடும்பத்தில், இருந்த எண்ணவோட்டங்களை சிறப்பாக அனுபவித்து எழுதி உள்ளார் ஆதவன்.

ஒரு கணிதப் பேராசிரியர், மற்றும் "out of the world" அறிவு ஜீவியாக ராமபத்திரன் என்ற மற்றுமொரு பேராசிரியர், ராமின் பெரியப்பா, ராவின் அம்மா, முக்கியமாக பங்கஜம் மாமி என்று ஒரு பட்டாளமே வந்த கதையை நகர்த்திச் செல்கிறது.

உறவின் சிக்கல்களை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம். மேலும் கல்லூரியில் தனிமனிதனாக மட்டுமில்லாமல் கூட்டமாக சேரும் போது உண்டாகும் குழு மனப்பான்மையை படம் பிடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இதுவரை படிக்காமல் இருந்தால் இந்த நாவல் நிச்சியம் படிக்கத் தகுந்தது.

பதிப்பகம்: உயிர்மை
புத்தகம் வாங்கியது: udumalai.com மூலமாக

2 கருத்துகள்:

  1. ஆதவன் எழுத்துக்களில் படிப்பு முடிந்ததற்கும் பின்னர் திருமணமாகி செட்டில் ஆகுவதற்கும் இடையே ஆன வாழ்க்கை, குறிப்பாக படிப்பு முடிந்த பின்னரான 'bachelor life" அழகாகக் வெளிக்காட்டப்பட்டிருக்கும்.

    அது போலவேலைக்காக நகரங்களில் நண்பர்களுடன் தங்கி வாழும் காலமும்

    பதிலளிநீக்கு
  2. நன்றி அருண்மொழிவர்மன்

    பதிலளிநீக்கு