திங்கள், 8 நவம்பர், 2010

தொலைக் காட்சியில் தீபாவளிஎன் தொழில் முறை குடும்ப உறவுகள் எல்லாம் சிங்காரச் சென்னையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் போது, இங்கு அலுவலகத்தில் கடமை தவறாமல் வேலை. (யாருமே இல்லாத டீ கடைல யாருக்குடா டீ ஆத்தர? உன் கடமை உணர்ச்சிக்கு ஓர் அளவே இல்லையடா? - என்று விவேக் புலம்பல் நினைவுக்கு வருதா?). புலம் பெயர்ந்ததிலிருந்து தீபாவளி அப்படி ஒன்றும் மெய்சிலிர்க்கும் அனுபவமாக இல்லை. உறவினர்கள் இல்லாத தீபாவளி பெரிதாக ரசிக்காது. விடுமுறை இல்லை. நான்கு மணிக்கு எழுந்து வீடு முழுவதும் விளக்கைப் போட்டு, என்னை தேய்த்து குளித்து, பட்டாசுகளை பங்கு போட்டு - ஒரு முறைக்கு நூறு முறை சரி பார்த்து - தனி சுகம். நினைவில் வாழ்வதை யார் தான் தடுக்க முடியும்.

தொலைக் காட்சி மூலம் தீபாவளி தமிழகத்தை காணுவது தான் சிறந்த வழி. விடுமுறை இல்லாததால் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் DVR - இல் பதிவு செய்து பார்த்தேன். எல்லா நிகழ்ச்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் சினிமா தொடர்பு கொண்டவைகள்.

சன் தொலைக் காட்சியில் "சூப்பர் ஹிட்" (அப்படின்னா சன்னின் விளக்கம் என்ன என்று கேட்க வேண்டும்) முதன் முறையாக (கடைசியாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்) "தீராத விளையாட்டுப் பிள்ளை" சினிமா. சகிக்கவில்லை. பத்து நிமிடம் கூட பார்க்க முடியவில்லை.அடுத்த படம் "சுறா புகழ்" விஜய் நடித்தது. சுறா வந்த பிறகு இணையத்தில் வெளிவந்த ஜோக்குகள் படித்ததிலிருந்து சுறா விஜய் தான் கண் முன் வந்துத் தொலைக்கிறார். விஜய் படமும் ruled out.பிறகு ஒரே எந்திரன் மயம் தான். எந்திரன் உருவான விதம் கொஞ்சம் பார்த்தேன்.நிறைய உழைப்பு தெரிந்தது. விளம்பர இடை வேளையின் போது ஜெயாமாக்ஸ் (கொஞ்ச நாட்களுக்கு இலவசம்) பார்த்தால், யாரோ ராகவேந்திரர் (புதிய பாடகர் போல) பேட்டி. சிரமப்பட்டு பழைய யேசுதாஸ் பாடலை பாட முயற்சித்துக் கொண்டிருந்தார். சிரமப்பரிகாரம் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். ரஜினியின் பேட்டி சொதப்பல். பேசாமல் ரஜினியே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி இருக்கலாம். புதிதாக ஒன்றும் இல்லை. ஆக மொத்தம் "ஒரு நட்சத்திர" தீபாவளி கொண்டாட்டம் தான் சன்னுக்கு.ஜெயாவில் விவேக் எப்போதும் போல வந்து போனார். சுமார் தான். கார்த்திக் நிகழ்ச்சியை விட பிரபு பேட்டி பரவாயில்லை.கமலஹாசன் கலந்துரையாடலில் தமிழைக் காப்பாற்ற அறைகூவல் விடுத்தார். அதை இன்று யாரெல்லாம் காப்பாற்றி வருகிறார்கள் என்று அடையாளம் வேறு காட்டினார். சுகாசினியின் சித்தப்பா சந்தேகமில்லாமல். நல்ல நடிகர். இவர் நடிப்பு ரசிக்கக் கூடியது.

"Kings in Concert" என்ற ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் இணைந்து வழங்கிய இசை நிகழ்ச்சி தான் எனக்கு மிகவும் பிடித்த உருப்படியான ஒன்று. இருவரும் பின்னி எடுத்து விட்டார்கள். ஹிந்துஸ்தானி வேறு தெரிந்ததால் சங்கதிகள் வந்து விழுகின்றன. சங்கரின் "பெஹாக்" மற்றும் ஹரியின் "சுட்டும் சுடர் விழி" (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) அமர்க்களம். இறுதியில் இருவரும் சேர்ந்து "சிந்து பைரவியில்"(ஹிந்துஸ்தானியில் "பைரவியா"?) பாடியது ஆனந்தம் ஆனந்தம் தான். இந்த இசை மழையை தவற விட்டிருந்தால் இங்கே கிளிக்கவும்.

ஒன்றிரண்டு சினிமா தொடர்புள்ள தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுடன் தீபாவளி கொண்டாடும் நாள் வருமா?

6 கருத்துகள்:

 1. //ஒன்றிரண்டு சினிமா தொடர்புள்ள தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுடன் தீபாவளி கொண்டாடும் நாள் வருமா? //

  பட்டாசு, பலகாரம் இல்லாமல் தீபாவளி கொண்டாடினாலும்..சினிமா தொடர்பில்லாமல்
  தொலைக்காட்சி தீவாவளி...நீங்க பகிடி விடுகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. யோகன் நன்றி. சினிமா நிகழ்ச்சிகளுக்கு நான் எதிரி இல்லை. அதனுடன் வேறு சில நல்ல நிகழ்ச்சிகள் கொடுக்க முற்படலாமே? கொஞ்சம் தமிழ் இலக்கியம். கொஞ்சம் தமிழ் வளர்த்தவர்கள்.

  பதிலளிநீக்கு
 3. அன்பான பாஸ்கர்!
  உங்கள் கருத்துக்கு எதிரானதல்ல என்கருத்து. உங்கள் கருத்தை நான் வெகுவாக ஆதரிப்பவன்.
  இத் தமிழ் தொலைகாட்சியே என்னிடம் இல்லை. காரணமே இந்த சினிமா....
  இவற்றைக் கூட சில சமயம் நண்பர் வீடுகளில் கண்டு நொந்தவன். எனக்கு நமது பாரம்பரிய இசை வடிவங்கள், பரதம், கதகளி; குச்சுப்பிடி; நாட்டுபுறக் கலைகள்; நாதஸ்வரக் கச்சேரிகள் பிடிக்கும்; எந்தத் தமிழ் தொலைக்காட்சியாவது இவற்றைக் காட்டுகிறார்களா?
  நான் ஈழத்தவன் என் இளமைக்காலத்தில் தொகா இல்லை. வானொலியே தைப்பொங்கல் அன்று இலங்கை வானொலி காலை ஆறிலிருந்து எட்டு வரை காரைக்குருச்சி அருணாசலம் அவர்கள் நாதஸ்வர இசையை வருடாவருடம் ஒலிபரப்புவார்கள்.அப்படி தேர்ந்த பாரம்பரிய அறிவு; இசை ஞானம்; இடம் பொருள் ஏவல் தெரிந்தோர்...கடமையில் இருந்தார்கள்.
  இன்று தமிழை உச்சரிக்கத் தெரியாத ஞானசூனியமெல்லாம் நிகழ்ச்சி தர நம் தமிழ்ச் சமுதாயம் அப்படியே சுருண்டு கிடக்கிறது.
  நீங்கள் பாருங்கள்...பரபரப்புக்காகவாவது; வரும் தீபாவளிக்கு 'நித்தி' புகழ் ரஞ்சிதாவைத்...தீபாவளி நல்லாசி வழங்கக் கூப்பிட்டாலும் ஆச்சரியமில்லை. அதுவும் எந்தக் கூச்சமுமின்றி இந்த தமிழ் சனத்தை
  வாழ்த்தும். நம் சனமும் பிறவிப்பயன் போல் அதையே பேசி மகிழும்.
  தமிழ் தொலைக்காட்சி என்றால் சினிமா தவிர ஏதுமில்லை. என்பது என்னாலும் சகிக்கமுடியா விடயமே!
  தமிழகத்திலோ; ஈழத்திலோ வாழ்வோர்; விரும்பினால் வெளியே சென்று வேண்டியதைக் காணலாம்.
  எமக்கு அந்தக் கொடுப்பனவு இல்லை.
  எனவே உங்கள் சாட்டையை அப்பப்போ சுழட்டுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி யோகன். சன்னில் நாதஸ்வரம் மற்றும் சுதா ரகுநாதன் பாட்டு சம்பிரதாயமாக ஒளிபரப்பினார்கள். ஆனால் பொதுவாக சினிமா முகம் தான். விளம்பரதாரர்கள், RTP ரேடிங் என்று போட்டி. காதலும் வீரமும் அந்தக் கால தமிழர்களுக்கு. சினிமாவும், அரசியலும் இன்றைய தமிழர்களின் அடையாளம். மாற்றம் என்பது மிக மெதுவாகத் தான் நிகழக் கூடும்.

  பதிலளிநீக்கு
 5. Hi, I fully agree with you that "Kings in Concert" was the best of all programs for Diwali...

  Though film music has no grammar in it, doesn't really mean that you can sing the way you want to... Hariharan seems to be singing film songs like gahzals ... Sangathi's inbetween the songs would sound music to the ears..But,Hari seems to be over doing it...
  Hari also needs to improve on his tamil pronounciation ...Many a times lyrics are not clear... Sussela, PBS, SPB, Janaki, Chitra are all not tamilians and their pronounciation in concerts have always been impeccable...

  On the other hand, Shankar's singing was too good... A combination/ mix of entertainment and perfection... Shankar clarity on pronounciation is far far better..

  The punch of the whole show was couple of other things as well...

  1) Chinni Jeyanths comments...
  2) Sivaji Ganesan's son Ramkuma's comments...

  Over all, it was a good entertainment on one of the most celebrated festival days in India...

  Best Reagrds,

  T.L.Kumaramurthi

  பதிலளிநீக்கு
 6. குமார், இன்று பல பாடகர்களின் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. gazhal ஹரிஹரனின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது. அதனால் தானோ என்னோவோ இளைய ராஜா,MSV என யாருமே ஹரிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை போல் உள்ளது. ஆனால் ஹரிஹரனின் குரலில் ஒரு சொல்ல முடியாத இனிமை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சங்கர் பற்றி கூறவே வேண்டாம். கருத்து விட்டுச் சென்றதிற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு