செவ்வாய், 30 நவம்பர், 2010

சுஜாதாவின் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

சுஜாதாவைப் பற்றி இன்று பலவித விமர்சனங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவருடைய இலக்கிய இடம் குறித்து பல சர்ச்சைகள். ஆனால் காலம் எல்லோரையும் ஏமாற்றி தனக்கே உரிய தீர்ப்பை வழங்கும். அவருடைய பன்முக ஆளுமையால் சுஜாதா தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக என்றும் இருப்பார் என்பது தான் என் கணிப்பு. இதற்கான என் காரணங்களை தனிப் பதிவாகத் தான் போட வேண்டும்.

சுஜாதா வைணவத்தின் மீது தீராத பற்றும், ஆழ்வார்கள் மீது, குறிப்பாக நம்மாழ்வார் மேல், தணியாத காதலும் கொண்டிருந்தார் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. இந்த அறிமுக நூலை அருமையாகவும், தனக்கே உரிய எளிமையுடனும் எழுதி இருக்கிறார். வைணவத்தைப் பற்றி நன்கு தெரிந்தவகள் அறிமுக நூல் படிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வைணவத்தைப் பற்றியும் ஆழ்வார்கள் குறித்தும் அறிய விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டய நூல் இது. கடவுள் மற்றும் வைணவ நம்பிக்கை இல்லை என்றாலும் தமிழின் சுவைக்காக படித்து பருக வேண்டிய ஒன்று. இதில் உள்ள சில முக்கிய விஷயங்கள்.

1. ஆழ்வார்கள் என்றால் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் என்று பொருள்.

2. மொத்தம் 10 ஆழ்வார்கள்.அவர்கள் பெயர்கள்:
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார்.
நம்மாழ்வாரைப் பற்றிப் பதினோரு பாடல்கள் பாடிய மதுரகவியாழ்வாரையும் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பாடிய பெண்பாற் புலவரான ஆண்டாளையும் சேர்த்துக் கொண்டு ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர் என்று கூறுகிறார்கள்.

3. ஆழ்வார்கள் எல்லோரும் சேர்ந்து மொத்தம் 4000 பாடல்கள் எழுதியுள்ளார்கள். இதற்கு நாலாயர திவ்யப் பிரபந்தம் என்று பெயர்.

4. இந்தப் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்தவர் நாதமுனி.

5. ஆழ்வார்கள் பல ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

6. 4000 பாடல்களும் அவர்கள் எழுதிய வரிசையில் தொகுக்கப் படவில்லை. பெரியாழ்வார் இயற்றிய "திருப்பல்லாண்டு" நாலாயர திவ்யப் பிரபந்தந்தின் தொடக்கமாக உள்ளது.

7. மதுரகவியாரின் நம்மாழ்வாரைப் பற்றி பாடிய 11 பாடல்கள் நாலாயர திவ்யப் பிரபந்தந்தின் மத்தியில் அமைக்கப் பட்டுள்ளது.

8. நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடிய விதத்தை வைத்து சுஜாதா இவ்வாறு கூறுகிறார் "வாலண்டைன்ஸ் டே-காதலர் தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதற்கு ஆண்டாள் தினம் என்று பெயர் மாற்றலாம்"

9. இதை எழுதும் போது தீவிர வைணவர்களிடம் இருந்து கடுமையான ஆட்சேபணைகள் மற்றும் எதிர்ப்பு வந்திருக்கிறது. அதற்கு சுஜாதா விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

10. ஆழ்வார்களில் முதன்மையானவர், மிகச் சிறந்தவர் நம்மாழ்வார் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்கிறார் சுஜாதா.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப் படித்து ஓரிருவராவது இந்த புத்தகத்தை படித்தால் எனக்கு சந்தோசம் தான்
இந்த அறிமுக நூலைப் படித்தால் நிச்சியம் 4000 பாடல்களையும் படிக்கும் ஆர்வம் வரும். எனக்கு பிடித்த பாடல்களில் சில இங்கே.

கண்ணன் பிறந்ததை பெரியாழ்வார் கொண்டாடும் விதம்:

''ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே''


அதற்கு பிறகு சுகமான தாலாட்டு

''மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையமளந்தானே தாலேலோ''


ஆண்டாளின் சிறப்பான பாடல்.

'வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்த என்தட முலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே'


சில பொய்கையாழ்வார் கொடுக்கும் கடவுளின் 'பயோடேட்டா''

'அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல்மறை உறையும் கோயில் - வரைநீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரிகார் மேனி ஒன்று'


இறுதியாக நம்மாழ்வாரின் மாஸ்டர் பீஸ்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே


இதை இணையத்தில் தேசிகனின் பக்கங்களில் படிக்கலாம்.

11 கருத்துகள்:

 1. //சுஜாதா தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக என்றும் இருப்பார்//

  நிச்சயமாக! இருக்கிறார், இருப்பார் என்பதுதான் உண்மை..ஏற்றுக்கொள்ள எலக்கியவாதிகளால்(?!) முடியவில்லை!!
  நல்ல பகிர்வு! :-)

  பதிலளிநீக்கு
 2. சுஜாதாவை பற்றி யார் எழுதினாலும் படித்து விடுவேன். பதிவுக்கு நன்றி நண்பா

  பதிலளிநீக்கு
 3. எளிய அறிமுகத்துக்கே எளிய அறிமுகமா? நன்றாக இருக்கிறது, நன்றி.,

  பதிலளிநீக்கு
 4. நம்மாலே முடிந்தது அவ்வளவு தான் பாஸ். நன்றி

  பதிலளிநீக்கு
 5. உங்கள் சுஜாதா பதிவையும் படித்தேன் ஜீ. நன்றி..

  பதிலளிநீக்கு
 6. Please read my blog on Sujatha and Alwars

  http://mowlee.blogspot.com/2008/04/cc-to_13.html

  http://mowlee.blogspot.com/2008/04/cc-to.html

  பதிலளிநீக்கு