வெள்ளி, 12 நவம்பர், 2010
பிடித்த சிறுகதைகள் - கு.ப.ரா. வின் விடியுமா?
1986 ஆம் வருடம். மே மாதம் இரண்டாம் நாள். மதியம் மூன்று மணி அளவில் சேப்பாக் கிரிக்கெட் மைதானத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ராமானுஜன் இன்ஸ்டிடுட்யில் படிக்கும் மாணவனைப் பார்க்க அவன் அக்காவின் கணவர் (அத்திம்பேர்) வருகிறார். அவரை அதிசியத்துப் பார்த்து
"என்ன இப்போ இங்கே?" என்று மாணவன் கேட்க
"ஒண்ணுமில்லை அப்பாவுக்கு திடீர்ன்னு கொஞ்சம் மார்வலின்னு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கா? போன் வந்தது".
" ஏன் என்னாச்சு ரொம்ப சீரியஸா?".
"நீ உடனே மதுரைக்குக் கிளம்பு".
"மதுரைலையா?
"ஆமாம் மதுரையில தான் எதோ பாண்டியன் நர்சிங் ஹோமாம்"
மதுரை செல்லும் திருவள்ளுவர் பேரூந்து. இப்ப தான பதினைந்து நாட்களுக்கு முன் பார்த்து வந்தோம்.நெல்லை ஜங்ஷன் ஒரு சுற்று வந்தோமே? நல்லாத்தான இருந்தார். அம்மா பதறிப் போயிருப்பாலே? தம்பியும், தங்கையும் திருநெல்வேலியில் இருக்கா. அம்மா மட்டும் மதுரைக்கு வந்திருக்கா. அப்படீன்னு ரொம்ப பெருசா ஒன்னும் இருக்காது. அடுத்த நொடி ஒருவேளை அப்பாவுக்கு எதாவது ஆயிட்டா? ஐயோ அம்மாவை நினைத்தாலே பதறுகிறதே. ஒன்னும் ஆயிடாது. தங்கை கல்யாணம்? தம்பி படிப்பு? கொஞ்சம் தூக்கம் நடுவில். மீண்டும் பல என ஓட்டங்கள். விடியும் வேளையில் மதுரை ஆஸ்பத்திரியில் நுழையும் போது அம்மா நிற்பது தெரிந்தது. சரி அப்பா இருக்கிறார்.
கண்ணீருடன் என்னைப் (ஆமாம் இது சொந்த அனுபவம் என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது நிகழ்ந்தது) பார்த்து அம்மா "அப்பாவைப் பாத்துட்டு வா" என்றாள். பொழுது விடிந்தது.
இப்படி பலருக்கு பல விதமான அனுபவங்கள். இதே போன்ற ஒரு நிகழ்ச்சியைத் தான் கு.ப.ரா. மிக நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறார் "விடியுமா" என்ற சிறுகதையில்.
"சிவராமையர் - டேஞ்சரஸ்" என்ற தந்தி வருகை. மொத்த குடும்பத்தையும் ஒரு ஆட்டு ஆட்டி விடுகிறது. அக்கா குஞ்சம்மாவைக் கூட்டிக் கொண்டு கும்பகோணத்திலிருந்து சென்னை செல்கிறார் கதை சொல்லி. தந்தி கிடைத்தவுடன் ஏற்படும் மனநிலை, பிரயாணத்திற்கு எடுத்துக் கொள்ளும் சகுனங்கள், ஆழ் மனதில் உண்மை உறுமிக் கொண்டிருக்கையில் புறச் செய்கைகளில் நம்பிக்கையுடன் இருப்பது போல் காட்டிக்கொள்வது, இறைவனிடம் தஞ்சம் அடைவது, பூவும் பொட்டும் பெறுகின்ற பிரதானம், தொடர்ந்து மனநிலை சோகத்தோடு இருக்க முடியாது என்ற சித்தரிப்பு என்று அழகாக வடிவமைத்திருக்கிறார். தினமும் தான் விடிகிறது. ஆனால் வாழ்க்கையில்ஒரு சில நாட்களே மிகவும் மகிழ்ச்சியாகவோ, மனத் துயரத்துடனோ விடிகிறது. குஞ்சம்மாளுக்கு துயரமாக முடிகிறது அந்த விடியல். இத்தனை மனச் சிக்கல்களும் அத்திம்பேர் இறப்பதில் ஒரு முடிவுக்கு வருகிறது. சம்பவங்களை தன் போக்கில் போக விட்டு, பயணிக்கும் இரயிலுடனே படிப்பவரின் மனதையும் பல திசைகளில் பயணிக்கச் செய்திருக்கிறார் கு.ப.ரா. தினமும் தவறாமல் நடைபெறும் விடியலில் தான் எத்தனை உணர்ச்சிகள் ஒளிந்திருக்கின்றன?
கட்டாயம் படித்து பாருங்கள். இந்தக் கதையை அழியாச்சுடர் ராமின் தளத்தில் இங்கே படிக்கலாம். மேலும் இந்தக் கதை இவர்களின் சுஜாதா, எஸ்ரா.ஜெமோ பரிந்துரைகளில் ஒன்று.
Labels:
பிடித்த சிறுகதைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்.... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
பதிலளிநீக்குஅருமை... பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு.
பதிலளிநீக்குமிக்க நன்றி உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு
பதிலளிநீக்குphilosophy பிரபாகரன்
மற்றும் பார்வையாளன் அவர்களே.
கதையைக் குறித்து வாசித்திருக்கிறேன். கதையை வாசித்ததில்லை. அழியாச்சுடரில் சென்று வாசிக்கிறேன். பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்கு