புதன், 6 மே, 2009

பேசாமல் பேசினாள்

சென்ற வாரம் ஆறாம் வகுப்பு செல்லப் போகும் என் இளைய மகன் ஸ்ரீ ஹரியின் பள்ளியில் பெற்றோர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறை (Orientation) மாலை 7:00 மணிக்கு இருந்தது.பள்ளியின் விளையாட்டுக் கூடத்தில் வைத்து நிகழ்ச்சி நடந்தது.பள்ளியின் முதன்மை ஆசிரியர், உதவி முதன்மை ஆசிரியர் மற்றும் மாணவ ஆலோசகர்கள் மிகவும் எளிமையாக நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். ஒரு மைக் பேசுவதற்கு இருந்தது.சரியாக 7:00 மணிக்கு முதன்மை ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.அத்தனை பெற்றோரும் மிக ஆர்வத்துடன் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் மூன்றாவது வரிசையில் ஒரே ஒரு பெண் மட்டும் சிறிது நாற்காலியை வளைத்துப் போட்டு முதன்மை ஆசிரியருக்கு முதுகைக் காட்டிக் கொண்டும்,பெற்றோர்களைப் பார்த்தும் அமர்ந்திருந்தார்.அந்த பெண்ணிற்கு வயது இருபது இருக்கலாம்.மிகவும் அழகான முகம்.கண்கள் மிகவும் துறுதுறுப்பாக காட்சி அளித்தன.அரபு நாட்டுப் பெண் போல் தோன்றினாள்.பாரதிராஜா பார்த்திருந்தால் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருப்பார்.திடீரென அந்தப் பெண் தனக்கு எதிரில் உட்காந்திருந்த அவள் அம்மாவைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.ஆனால் அது எந்த விதத்திலும் முதன்மை ஆசிரியர் பேச்சுக்கு இடையுறாக இல்லை.அதே நேரத்தில் அந்தப் பெண்ணுக்கும் முதன்மை ஆசிரியர் பேசியது ஒரு பொருட்டாக இல்லை.அவள் பேசுவதற்கு கை விரல்களையும்,முக பாவனையையும் முழுவதும் நம்பி இருந்தாள்.அவள் தாயார் அவள் பேச்சைப் பார்த்துக் கொண்டும்,முதன்மை ஆசிரியரின் பேச்சைக் கேட்டுக் கொண்டும் இருந்தது மிகவும் ஆச்சிரியமாக இருந்தது.

ஆமாம் நீங்கள் யூகித்திருப்பீர்கள்.அந்தப் பெண் பிறவியில் பேச முடியாமல்,கேட்க முடியாமல் இந்த உலகத்தைப் பார்க்க வந்திருக்கிறாள்.அந்த அரங்கமே கைதட்டி அல்லோகலப் பட்ட போது அந்த பெண் மட்டும் மௌன மொழியில் பேசியது எங்கோ மனதில் தைத்தது.

2 கருத்துகள்:

  1. // ஆமாம் நீங்கள் யூகித்திருப்பீர்கள்.அந்தப் பெண் பிறவியில் பேச முடியாமல்,கேட்க முடியாமல் இந்த உலகத்தைப் பார்க்க வந்திருக்கிறாள்.அந்த அரங்கமே கைதட்டி அல்லோகலப் பட்ட போது அந்த பெண் மட்டும் மௌன மொழியில் பேசியது எங்கோ மனதில் //

    அருமை... மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. நன்றி கண்ணா மீண்டும் உங்கள் வருகைக்கு.

    பதிலளிநீக்கு