புதன், 6 மே, 2009

ஆர்ப்பட்டமில்லாத இசைக் கலைஞர்




1987 ஆம் ஆண்டு என்று நினைவு.சென்னை மயிலையில் உள்ள சாஸ்திரி ஹால்.மிகச் சிறிய அரங்கம்.சங்கீத கலாநிதி ராஜம் ஐயர் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி.6:30 மணிக்கு தொடங்க வேண்டும்.ஆனால் தொடங்கவில்லை.மிருதங்க வித்வான் பாலக்காடு ரகு அவர்கள் வரவில்லை.கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் தொடர்பு கொண்ட போது,அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளதால் வருகை தாமதமாகும் எனத் தெரியப்படுத்தப் பட்டது.சிறிது நேரம் காத்திருந்து, பின் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களின் வற்புறுத்தலின் பேரில் ராஜம் ஐயர் அவர்களும், வயலின் வாசிப்பவரும்(பெயர் நினைவில் இல்லை) மேடையில் வந்து அமர்ந்தார்கள்.பாலக்காடு ரகு அவர்கள் வந்த உடன் நேரம் வீணாகாமல் கச்சேரி ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு. இந்த அரங்கில் திரை எல்லாம் கிடையாது.



மிருதங்க வித்வான் இல்லாமல் பாடகரும்,வயலின் வாசிப்பவரும் அமர்ந்திருந்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது.7:00 மணி வாக்கில் பாலக்காடு ரகு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.ஆனால் மேடைக்கு வரவில்லை.தாமதமாக வந்தது அவர் தவறில்லை.எனவே எப்போதும் போல் பாடகரும் பக்க வாத்தியக் காரர்களும் சேர்ந்து மேடைக்கு செல்வது போல் செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம்.அவர் மன வருத்தத்தை அறிந்த ராஜம் ஐயர் அவர்கள் உடனே எழுந்து உள்ளே சென்று பாலக்காடு ரகு மற்றும் வயலின் வித்வான்களுடன் மீண்டும் மேடையில் வந்து அமர்ந்தார்.



இந்த நிகழ்ச்சி ராஜம் ஐயர் அவர்களின் பெருந்தன்மையையும்,சக கலைஞரின் மேல் அவர் வைத்திருந்த அன்பையும் எடுத்துக் காட்டுகிறது.காதில் கடுக்கன்,நெற்றியில் திருநீறு மற்றும் சிரித்த முகத்துடன் கச்சேரி துவங்கியது.மிக அருமையாகப் பாடினார்.ரகு அவர்களின் மிருதங்கம் பற்றி சொல்லவே வேண்டாம்.



ரசிகர்களை மிரட்டாமல் அதே நேரத்தில் கலப்பிலாத சுத்தமான சங்கீதம் கொடுப்பதில் ராஜம் ஐயர் அவர்கள் மிகச் சிறந்த விற்பன்னர்.மேலும் இவர் மிக நல்ல சங்கீத ஆசிரியரும் கூட.இரண்டு நாட்களுக்கு முன் காலமான இவர் ஒரு பெரிய பாரம்பரியத்தை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.ஆர்ப்பட்டமில்லாத மிகச் சிறந்த கர்நாடக இசைக் கலைஞரை நாம் இழந்துள்ளோம்.இவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக