வாழ்க்கையில் சில அனுபவங்கள் தோளில் ஏறி அமர்ந்து கூடவே பயணிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் என் இளமையில் நடந்தேறியது. அப்போது நான் ஈரோட்டில் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மாலை என் பெரியம்மா ஓர் இசைக் கச்சேரிக்கு செல்கிறேன் நீயும் வா எனக் கூடிச் சென்றார். ஆண் பிள்ளை துணைக்காக என்று நினைவு. அந்த இசைக் கச்சேரி திருமதி எம்.எஸ் அவர்களது தான். அன்று அவர் பக்க வாத்திய வித்வான்களுடன் அமர்ந்திருந்தது இன்றும் பசுமையாக என் நினைவில் விரிகிறது. அன்று எனக்கு இசை மேல் பெரிய ஈடுபாடு இருந்ததாக நினைவில்லை. ஆனாலும் அன்று எம்.எஸ் அவர்களின் குரல், அவர் பாடிய விதம் ஒரு சொல்லொணா பரவசத்தைக் கொடுத்தது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
அதன் பிறகு பல வருடங்களாக அவருடைய இசையை கேட்ட வண்ணம் இருக்கிறேன். எம்.எஸ் அவர்கள் 13 வயதில் தொடங்கிய தன் இசை வாழ்கையை எழுபது வருடங்கள் இடைவிடாமல் தொடர்ந்திருக்கிறார். கர்நாடக இசையை பாடுவதில் வெவ்வேறு இசை விற்பன்னர்கள் பல வித விதமான பாணியை பயன்படுத்துகிறார்கள். எம்.எஸ் அவர்களைப் பொறுத்த வரை அவரின் தனித்துவமான குரல் வளமும், பக்தியுடன் கூடிய ஆத்மார்த்தமான பாடும் முறையே தனிச் சிறப்பு. செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்கள் இசையமைத்த ஸ்வாதித் திருநாள் அவர்களின் “பாவயாமி ரகுராமம்” என்ற ராகமாலிகையில் அமைந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒன்று.ராகமாலிகை என்றால் பல ராகங்களின் தொகுப்பாக அமைந்த பாடல் எனலாம். இந்தப் பாட்டு சாவேரி, நாட்டக்குறிஞ்சி ,தன்யாசி,மோகனம்,முகாரி,பூர்விகல்யாணி மற்றும் மத்தியமாவதி ராகங்களைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது, இந்த பாடல் இராமயணத்தை சுருக்கிக் கொடுத்துள்ளது. மேலும் பிருந்தாவன சாரங்கா ரா கத்தில் அமைந்த “ஸ்ரீ ரங்க புரவிஹாரா” என்ற பாடலும் எம்.எஸ் அவர்கள் பாடிக் கேட்பது ஒரு தனி சுகம். சங்கராபரண ராகத்தில் அமைந்த “சரோஜா தள நேத்ரி” என்ற ஷ்யாமா சாஸ்திரிகள் இயற்றிய கிருதி எம்.எஸ் அவர்களின் குரலில் தேனாக இனிக்கும்.இப்படி பல பாடல்கள், பஜனைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.இந்த பாடல்கள் யூ டூபில் கேட்கக் கிடைக்கிறது. எம்.எஸ். அவர்களின் இசையைக் கேட்டு மகிழ இறை நம்பிக்கை தேவையில்லை என்பது நேருவின் ரசனையின் மூலம் அறியலாம். கர்நாடக இசை நுணுக்கங்களும் கூட தேவையில்லை. இசை ரசனை ஒன்றே போதுமானது.
இவர் தன் நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் பொருளை பல தொண்டு நிறுவனங்களுக்குக் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்கள் கொடுத்திருக்கிறார் . ஆனால் தன் வாழ்வில் பொருள் சிக்கல் வந்த போதும் அதற்காக வருந்தியதில்லை. அவர் கணவர் சதாசிவம் அவர்கள் தன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் கல்கி கார்டன்ஸ் விற்கப்பட்டு வாழ்வின் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார்கள். அந்த சமயத்தில் தான் திருப்பதி தேவஸ்தானம் எம்.எஸ் அவர்களை “அன்னமாச்சாரியார்” தெலுங்கில் எழுதிய கீர்த்தனைகளைப் பாடிக் கொடுக்குமாறு கேட்டது. கடவுளுக்காக பாடுவதால் சன்மானம் பெற மாட்டேன் என்று மறுத்திருக்கிறார். ஆனால் திருப்பதி தேவஸ்தானம் அந்த பாடல்களைப் பதிவு செய்து விற்பனை செய்து பணம் ஈட்டப் போகிறது என்று அவரை ஒரு சிறிய தொகையைப் பெறும்படி வற்புறுத்திக் கொடுத்தார்கள். அன்னமாச்சாரியார் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் 36000 பாடல்கள் எழுதியுள்ளார். எம்.எஸ் அவர்கள் பாடிய “நானாடி பெதுகு நாடகமு ” (அன்றன்றைக்கு பிழைப்பு நாடகம்) என்ற ரேவதி ராகத்தில் அமைந்த பாடல் தத்துவ பொருள் செறிவு கொண்டது. அதை எம்.எஸ் அவர்கள் குரலில் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இயற்கை தனக்குக் கொடுத்த திறமையை பயன்படுத்தி சமுதாயத்திற்கு உதவும் நோக்கத்துடன் எம்.எஸ் அவர்கள் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதோடு, பல லட்சம் இசை ரசிகர்களை காலத்துக்கும் மகிழ்விக்கும் இசைத்தட்டுக்களை சந்ததியனருக்கு விட்டுச் சென்றுள்ளார். பொருளை தானமாகக் கொடுத்து தன் வாழ்வை பொருள் பட அமைத்துக் கொண்டார்.
டிசம்பர் இசை சீசனும், எம்.எஸ் அவர்களின் டிசம்பர் 11 நினவு நாளும் அவரைப் பற்றிய சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தூண்டுகிறது.
நீர் பள்ளத்தை நோக்கிப் பாயும். நெருப்பு வானத்தைப் பார்த்து எழும். ஆனால் சப்தம் எங்கும் நிறைந்திருக்கும். எம்.எஸ் அவர்களின் இனிமையான இசை காற்றினிலே கீதமாக வாழ்ந்து கொண்டேயிருக்கிறது.
நீர் பள்ளத்தை நோக்கிப் பாயும். நெருப்பு வானத்தைப் பார்த்து எழும். ஆனால் சப்தம் எங்கும் நிறைந்திருக்கும். எம்.எஸ் அவர்களின் இனிமையான இசை காற்றினிலே கீதமாக வாழ்ந்து கொண்டேயிருக்கிறது.
***
எம்.எஸ்.அவர்களைப் பற்றி பகிர்ந்ததற்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஅவர் பாடிய வெங்கடேச சுப்ரபாதத்தின் ராயல்டி தொகையை என்றுமே திருப்பதியின் வேத பாட சாலைக்கு செல்லும்படி செய்திருக்கிறார் எம் எஸ். எவ்வளவு பெரிய சேவை!
பதிலளிநீக்கு