செவ்வாய், 18 டிசம்பர், 2012

இசை பாமரர் முதல் பண்டிதர் வரை பயணிக்கும் இசை – மதுரை மணி ஐயர்

தன்னுடைய திறமை, உழைப்பு என அனைத்தையும் ஒரு துறையில் ஒருமுகப்படுத்தி தன் வாழ்க்கையை முழுதும் அர்பணித்த ஆளுமைகள் பலர். அப்படிப்பட்ட ஒருவர் தான் மதுரை மணி ஐயர் அவர்கள். அவர் கொடுத்துச் சென்ற இசை இந்த நிமிடத்திலும் எங்கோ ஒலித்துக் கொண்டு இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. சமீப காலத்தில் மதுரை மணி ஐயர் அவர்களை நினைக்கும் சமயம் க.நா.சு வைப் பற்றிய எண்ணங்கள் வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.. இருவரின் நூற்றாண்டும் ஒரே வருடத்தில் வந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.க.நா.சுவும் தன் வாழ்நாள் முழுதும் இலக்கிய சிந்தனையுடன் கழித்த ஓர் ஆளுமை. இருவரின் வாழ்க்கையும் பொருள் பட அமைந்தது என்பதை மறுக்க முடியாது.




மதுரை மணி அவர்கள் மிகவும் புகழ்பெற்ற பாடலாசிரியர் மற்றும் கர்நாடக இசை விற்பன்னர் ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதிரிடம் சங்கீதம் பயின்றார். தனெக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு ஓர் உயர்ந்த சங்கீதத்தை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார். இவரைப் பற்றி பல தகவல்கள் என் வீட்டுப் பெரியோரிடம் இருந்து கேள்விப் பட்டிருக்கிறேன். அவற்றில் சில. தான் பணம் வாங்கிக் கொண்டு பாடுவதால் கல்யாணியில் அமைந்த “நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவை சுகமா” (பணம் பெரிதா இல்லை ராமனுக்கு சேவை செய்வது பெரிதா) பாடலை பாடியதே இல்லை. பணம் பெற்றாலும் கொடுப்பதை வாங்கிக் கொள்வர் என்பார்கள். சாதாரண பிள்ளையார் கோவிலில் பாடச் சொன்னாலும் வெறும் தேங்காய் மூடி வாங்கிக் கொண்டு மணிக்கணக்கில் பாடுவார்என்பார்கள். ஒரு முறை ஒரு ரிக்க்ஷா ஓட்டுனரிடம் சவாரிக்கு வருவாயா எனக் கேட்டவரிடம், இல்லை “ஐயர் பாடப் போகிறார்” வர முடியாது என்றாராம். மகாராஜபுரம் விஸ்வநாதையர் (மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் தந்தை) மோகனம், ஆரபி போன்ற ராகங்களை மிகவும் தேர்ந்த முறையில் கையாள்பவர். அவரே ஒருமுறை மணி அவர்கள் மோகனம் பாடியதைக் கேட்டு அவரை “மோகன மணி” என்றாராம். கர்நாடகா சங்கீதத்தின் மிகப் பெரிய ஆளுமையான அரியக்குடி அவர்கள் மணியின் பாடல் “மணி”யாக இருக்கும் என்றிருக்கிறார். ஒரு முறை மணி அவர்கள் திருவல்லிக்கேணி ஹிந்து பள்ளியில் “அபராம பக்தி எந்தோ” என்ற பந்துவாரளியில் அமைந்த கீர்த்தனையில் “கபி (குரங்கு)வாரிதி தாடுணா” என பக்தியுடன் பாடும் சமயம் எங்கிருந்தோ ஒரு குரங்கு ஒரு நிமிடம் வந்து காட்சியளித்து மறைந்ததாம்.

மணி அவர்கள் கற்பனை ஸ்வரம் பாடுவதைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு நல்ல பேச்சாளர் பேச்சை நிறுத்தும் போது இன்னும் சிறிது பேச மாட்டாரா என்று நினைக்கத் தோன்றும். அதுபோல் தான் மணி அவர்களின் ஸ்வரம் பாடுதலும். மடை திறந்த வெள்ளம் போல் ஸ்வரங்கள் வந்து விழும். சிலர் பாடும் போது ரசிகர்களும் சேர்ந்து கற்பனை ஸ்வரம் பாடுவதைக் காணலாம். இவர்கள் ஒரே மாதிரி எல்லா கச்சேரிகளிலும் பாடுவதின் விளைவு. ஆனால் மதுரை மணி அவர்கள் பாடுவதைக் கேட்கும் சமயம் வெவ்வேறு ஸ்வரங்கள் வந்து விழும் போது ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.

“தாயே யசோதா எந்தன்” என்ற தோடி ராகத்தில் அமைந்த பாபநாசம் சிவன் அவர்களின் பாடலில் “காலினில் சிலம்பு” என்ற இடத்தில் மணி அவர்களின் நிரவல் கேட்கக் கேட்க இன்பம். சிவனின் மற்றொரு பாடலான “கா வா வா கந்தா வா வா” என்ற வராளி ராகத்தில் அமைந்த பாடலை அருமையாகப் பாடி பிரபலப்படுத்தினார். மற்றுமொரு தமிழ் பாடலான “சேவிக்க வேண்டும் அய்யா” என்ற ஆந்தோளிகா ராகத்தில் அமைந்த முத்துத் தாண்டவர் பாடலை சிறப்பாக பாடியிருப்பார். தியாகராஜரின் “நன்னு பாலிம்ப நடசி ஓச்சி” என்ற மோகன ராகப் பாடல் மற்றும் “சக்கணி ராஜ மார்கமு” என்ற கரகரப் பிரியா ராகத்தில் அமைந்த பாடலும் எனக்கு மிகவும் பிடித்தவைகள்.

கச்சேரியின் இறுதியில் முக்கிய பாடல் பாடிய பிறகு தனி ஆவர்தனத்திற்குப் பின் “துக்கடா” எனப்படும் பிற பாடல்கள் பாடப்படும். இந்த துக்கடா பாடல்களைக் கேட்க என்றே ஒரு ரசிகர் கூட்டம் வரும். இந்த வகையில் மணி அவர்களின் “வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்”, “கற்பகமே கடைக் கண் பாராய்” மற்றும் “எப்போ வருவாரோ” முதலிய பாடல்கள் மிக முக்கியமானவைகள். மணி அவர்களின் ஆங்கில நோட்ஸ் மிகவும் பிரபலம். அதை இயற்றியவர் ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதராக இருந்தாலும் அதை மணி அவர்கள் பிரபலப் படுத்தியதால் மணி நோட்ஸ் என்றே வழக்கிலுள்ளது.

அவருடைய நூற்றாண்டுக் கொண்டாட்ட வருடத்தில், டிசம்பர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் தருணம் மணி அவர்களின் இசையைப் பற்றி பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம்.

இந்த கட்டுரை மலைகள்.காம் இணைய இதழில் வெளியானது.

1 கருத்து: