வியாழன், 4 அக்டோபர், 2012

மதுரை மணி 100-வது ஆண்டுக் கொண்டாட்ட டி .வி.சங்கரநாராயணன் இசைக் கச்சேரி

நான் சென்னையில் படிக்கும் போது என் நண்பன் யோகானந்தா ஒரு முறை கூறினான் "கர்நாடக இசை மீது ஆர்வமும், ஈடுபாடும் வரவேண்டுமென்றால் மதுரை மணி அவர்களின் இசையை கேட்டால் போதுமானது" என. அது 100% உண்மை. பாமரனுக்கும் பரவசத்தைக் கொடுக்கும் இசை அவருடையது. இசையை இசைக்காகவும், இசை ரசிகர்களுக்காகவே பாடியவர். ஐந்து மணி நேரம் வெறும் தேங்காய் மூடி வாங்கிக் கொண்டு தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் பாடுவார் என என் தாத்தா கூறி கேட்டிருக்கிறேன். இலக்கியத்திற்காகவே வாழ்ந்த க.நா.சு வைப் போன்றே மணி அவர்களும் கர்நாடக இசைக்காகவே வாழ்ந்தார். இருவர் 100 ஆண்டும் இந்த வருடமே வருவது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

சென்னையில் என் நண்பர் ஒருவர் மதுரை மணியின் பல கச்சேரிகளை அந்த காலத்து ஸ்பூல் வகை டேப்பில் பதிவு செய்து வைத்திருந்தார். அதில் மணி அவர்கள் ஏழு வெவ்வேறு விதமான விதங்களில் ஸுவரத்துடன்  "வாதாபி கணபதிம்" என்ற கிருதியை பாடியிருந்தது பிரமிப்பாகவும், சந்தோஷமான அனுபவமாகவும் இருந்தது என்றால் மிகையாகாது. "ஆத்திச்சூடி" சொல்வது போல் ஒரே மாதிரி பாடினால் நன்றாகவா இருக்கும். மதுரை மணியின் கற்பனை ஸ்வரம்கேட்பதில் இருக்கும் ஆனந்தமே ஆனந்தம்.. அவர் எத்தனையோ பாடியிருந்தாலும், எனக்குப் பிடித்தது அவர் பாடிய "சக்கணி ராஜ மார்கமு" என்ற கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த தியாகராஜர் க்ருதி தான்.மதுரை மணி அவர்களின் நூறாவது பிறந்த வருடத்தைக் கொண்டாடும் விதமாக டெட்டிராயிட் நகரில் "Great Lakes Aradhana Committee" என்ற அமைப்பின் முயற்சியில் T.V.. சங்கரநாராயணன் அவர்களின் இசைக் கச்சேரி சென்ற செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற்றது. T.V.. சங்கரநாராயணன் அவர்கள் தன்னுடைய மாமாவான மதுரை மணியின் நினைவிலேயே லயித்து அவருடைய சில பாடல்களை மணி அவர்கள் பாடுவது போலவே பாடினார்.  தன் மாமாவுடன் பள்ளிப் பருவத்தில் திருவல்லிக்கேணி ஹிந்து பள்ளியில் ஆயிரம் பேர் முன்னினலையில் "அபராமா பக்தி" என்ற பந்துவாரளியில் அமைந்த கீர்த்தனையில்   "கபி (குரங்கு)வாரிதி தாடுணா"  என பக்தியுடன் பாடும் சமயம் எங்கிருந்தோ ஒரு குரங்கு ஒரு நிமிடம் வந்து சென்றதை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது  எனக் கூறினார் சங்கரநாராயணன் அவர்கள்.இந்த பாடலை   அன்று  பாடும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு "கபி வாரிதி தாடுணா" என ஐந்து நிமிடங்களுக்கு மேல் அங்கே சஞ்சாரம் செய்தார். பொதுவாக மணி அவர்கள் கச்சேரி நாளைப் பொறுத்து நவகிரக கீர்த்தனைகள் பாடுவது வழக்கம். அதை ஒட்டி T.V.. சங்கரநாராயணன் எல்லா கிரகத்தையும் உள்ளடக்கின "சகல கிரஹ" என்ற அடானா ராகத்தில் அமைந்த கீர்த்தனையைப் பாடினார். அன்று மாலையின் முக்கியத் தேர்வாக மோகன ராகத்தில் அமைந்த "கபாலி" யை மிகவும் விரிவாக மதுரை மணியின் முத்திரையுடன் வழங்கினார். எந்த கச்சேரியிலும் ராகம், தானம், பல்லவி பாடிக் கேட்பதில் இருக்கும் சுவையே தனி. அன்று சங்கரநாராயணன் அவர்கள் காபி ராகத்தில் "ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம சிங்கரா ராம "
" என்ற பல்லவியை "கண்ட  திரிபுட(இரண்டு களை  )"   தாளத்தில் (எனக்கு மொத்தம் 5+4=9X 2=18 - அதை எப்படி அழகுத் தன்மையுடன் பிரித்துப் போட்டு பாடுகிறார்கள் என  ரசிப்பேன் - முறையான சங்கீதம் கற்காததின் விளைவு ) எடுத்துக் கொண்டு விஸ்தாரமாக பாடினார். அதில் குறிப்பாக சிந்து பைரவியில் ஸ்வரம் பாடியது மணி அவர்களை மிகவுமே நினைவு படுத்தியது. பல்லவியில் வயலினில் விட்டல் ராமமூர்த்தி மிக மிக நன்றாக வாசித்து ரசிகர்களை குளிர வைத்தார். சேவிக்க வேண்டுமையா, எப்போ வருவாரோ மற்றும் இங்க்லீஷ் நோட்ஸ் எனத் தொடர்ந்து "வாழிய செந்தமிழ் வாழிய தமிழர் " என மங்களத்துடன் கச்சேரி முடிவுக்கு வந்தது.


திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கத்தில் பின்னி எடுத்து விட்டார். தனியின் போது வெளியே இருந்தவர்கள் கூட அரங்கத்தினுள் வந்தமர்ந்து ரசித்தார்கள் என்றால் வேறு என்ன சொல்ல. ஒரே ஒரு குறை சென்னை சபா கச்சேரி போல் மூன்று மணித் துளிகளில் கச்சேரி முடிந்தது சற்று ஏமாற்றமாக இருந்தது. மற்றபடி மதுரை மணி அவர்களின் 100- வது ஆண்டு நினைவைக் கொண்டாடிய GLAC க்கு நன்றிகள்.

இப்போது மதுரை மணி அவர்களின் "சக்கணி ராஜா மார்கமு" என்ற கிருதியைக் கேட்டு மகிழுங்கள்.


15 கருத்துகள்:

 1. என்னுடைய இளம் வயதில் மதுரை மணி அய்யரின் கச்சேரிகளை பல தடவை நேரில் கேட்டிருக்கிறேன். சில சமயம் அவர் ராகத்தை இழுக்கும்போது வண்டு ரீங்காரமிடுவது போலவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் கொடுத்து வைத்தவர். எனக்கு அந்த பாக்கியமில்லை.

   நீக்கு
 2. மதுரை மணி அய்யரின் 'எப்போ வருவாரோ' வை ரசிக்காதவர் யார்? டி வி எஸ் அவர் பெயருக்கு மேலும் பெருமை சேர்க்கிறார்.

  பதிலளிநீக்கு
 3. Very nice. I could not follow the full post, but got the gist. It was a delightful concert.

  பதிலளிநீக்கு
 4. திரு பாஸ்கர் இலக்குவன்,
  கர்நாடக சங்கீதக் கூறுகளை எளிதாக அறிந்து புரிந்து கொள்ள,இணையம் மூலம் சாத்தியம் இருக்கிறதா?
  ராக,தாளங்களின் கூறுகள் அவற்றை இனப் பிரித்துப் பார்க்கும் வகை இது போன்ற நோக்கில் கேட்கிறேன்.

  nanbann@gmail.com க்கு மின்மடலிட்டால் இன்னும் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு மின்மடல் இடுகிறேன் எனக்குத் தெரிந்ததை.

   நீக்கு
 5. நீங்கள் கொடுத்து வைத்தவர். எனக்கு அந்த பாக்கியமில்லை.

  பதிலளிநீக்கு
 6. Bhaskar,

  Good Job! I could not attend the concert due to another committment but enjoyed reading your fond memory!

  Ramanathan

  பதிலளிநீக்கு
 7. மதுரையிலிருந்தும் மதுரை மணி அவர்களின் இசையை கேட்கும் வாய்ப்பு என் வயதிற்கு எட்டவில்லை. தங்கள் பதிவின் மூலம் இந்த வருடம் அவரது நூறாவது ஆண்டு என்பதை அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி. பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. T.V. சங்கரநாராயணன் அவர்கள் பாடியதை வலையேற்ற முயல்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

   நீக்கு