செவ்வாய், 30 அக்டோபர், 2012

முடிவு

 பயணத் தொடக்கம்
எல்லையற்ற வாசல்கள்
நுழைந்த ஒன்றில் பயணம்
மீண்டும் வாசல்கள் ..
நுழையும் வாசல் .
யாரோ சொல்ல
மலர்ந்த ஆசைகள்
துளிர்விட்ட  எண்ணங்கள்
மொட்டாகி உதிர்ந்த  நம்பிக்கைகள்
தோளோடு பயணித்த நட்புகள்
தோன்றி மறைந்து
தோன்றிய உறவுகள்
பாதையில் சுமைகள்
கடக்க கடக்க
ஒரு வழிப் பாதை
என் ஆசை
பாசம்
கோபம்
படிப்பு
பயம்
பெயர்
புகழ்
பணம்
உழைப்பு
நினைவுகள்
சிந்தனைகள்
கற்பனைகள்
எழுத்துக்கள்
உறவுகள்
நட்புகள்
சுமைகள்
அனைத்திற்கும்
முடிவு ஒன்றே.



புதன், 24 அக்டோபர், 2012

எழுத்தாளனும் வாசகனும்



முகம் அறியாத வாசகனுக்கு எழுதும்
எழுத்தாளன் - எழுத்தில் தன் முகவரியைத்
தேடும் வாசகன்

எழுத்தாளனை கடந்து செல்லும்
வாசகனின் மாறும் முகவரிகள்

எழுத்தாளன் பயணத்தில் உதிர்ந்து போகும் வாசகன்
வாசகன் தேடுதலில் மறைந்து போகும் எழுத்தாளன்

பூத்துக் குலுங்கி புவி போற்றிய
சருகாகி மக்கிப் போன எழுத்துக்கள்

வண்டுகள் மொய்க்கும் பூக்களாக
காலம் கடந்து வாசகர்கள் கண்டறியும்
நிலைத்த முகவரிகள் இலக்கியத்தின் அடையாளம்



திங்கள், 22 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம் - 6


இன்று பதிவில் டெட் ராயிடில் நடைபெற்ற நவராத்திரி விழாவிலிருந்து ஒரு பாடலைக் கேட்டு மகிழ்வோம். GLAC என்ற அமைப்பு இந்த ஆண்டு நவராத்திரியைக் கொண்டாடவும், மிருதங்கக் கலைஞர் டாக்டர்  திருச்சி சங்கரன் அவர்கள் பெற்ற சங்கீத கலாநிதி விருதுக்காக அவரை கௌரவிக்கவும் வித்வான் மதுரை சுந்தர் அவர்களின் கச்சேரியை அக்டோபர் 6 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.  அந்த நிகழ்ச்சியில் மதுரை சுந்தர் அவர்கள் மிக நன்றாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அன்று அவர் பாடிய "பைரவி" ராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரிகளின் "காமாட்சி அம்பா" வைக் கேட்டு ரசிப்போம். குறிப்பாக இதில் திருச்சி சங்கரன் அவர்களின் சுகமான  தனி ஆவர்த்தனமும் இடம் பெற்றுள்ளது. ஜெய்சங்கர் பாலன் அவர்களின் வயலின் ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்தது.  சுந்தர் அவர்களின் சுந்தரமான மாணவர் (புகழ் பெற்ற Yale - இல் பட்டம்  பெற்று, கூகுளில் வேலை பார்க்கும ) சுதீர் ராவ் சுந்தர் அவர்களுடன் பின்னணியில் பாடினார்.


சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன் அவர்களின் தனி ஆவர்த்தனம். கேட்டு மகிழ்வோம்.


ஞாயிறு, 21 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம் - 5

இன்று சங்கீத கலாநிதி டி.என். சேஷகோபாலன் அவர்களின் மிக அருமையான கீரவாணி ராகத்தில் அமைந்த பாடலைக் கேட்டு  மகிழ்வோம். "அம்பவாணி " என்ற இந்த பாடல் கேட்க மிக மிக சுகமாக இருக்கிறது. மனதார கேட்டு  ரசிக்கவும்.




அடுத்து சங்கீத கலாநிதி செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்களின் ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த "மரிவே" என்ற பாடலை கேட்டு மகிழ்வோம். பாலமுரளி அவர்கள் வயோலா வாசித்துள்ளார்கள்.


வெள்ளி, 19 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம் - 4

இன்றைய நவராத்திரி பகிர்வில் அரியக்குடி ராமானுஜ  ஐயங்கார்   அவர்களின் மத்யமாவதி ராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரிகளின்  கீர்த்தனை இடம் பெறுகிறது. கேட்டு மகிழுங்கள். மிக சுகமாகப் பாடியுள்ளார்.



அடுத்ததாக ஆலத்தூர் சகோதரர்கள் பாடிய "அம்பா பர தேவதே" என்ற "ருத்ரப்ரியா" ராகத்தில் அமைந்த பாடல்.  அருமையாகப் பாடியுள்ளார்கள். கேட்டு மகிழுங்கள்.

வியாழன், 18 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம் - 3

இன்றைய நவராத்திரி பகிர்வில் மதுரை மணி ஐயர் அவர்களின் "கமலா அம்பிகே" என்ற தோடி ராகத்தில் அமைந்த பாடல் இடம் பெறுகிறது. கேட்டு மகிழுங்கள்.


அடுத்து மணி அவர்களின் உறவினரும், மாணவருமான T.V. சங்கரநாராயணன் அவர்கள் பாடிய "வெள்ளைத் தாமரையில்" என்ற பாரதியாரின் பாடலைக் கேட்டு மகிழுங்கள். 

புதன், 17 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம் - 2

நவராத்திரி பாடல்களில் இன்று எம். டி. ராமநாதன் அவர்களின் "ஜனனி நினுவினா" என்ற ரீதிகௌளை ராகத்தில் அமைந்த பாடல் இடம் பெறுகிறது. MDR என அவர் ரசிகர்களால் பிரியமாக அழைக்கப்படும் இவர், சௌக்க காலத்தில் பாடுவதில் வல்லவர். எனக்கு மிகவும் பிடித்த ஓர் இசைக்கலைஞர்.


அடுத்து மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய "உன்னையல்லால்" என்ற கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம் - 1

நவராத்திரியில் சில தேவி பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற  எண்ணம் தொடர்கிறது. இன்று ஜி.என்.பி அவர்கள் பாடிய "ஹிமகிரி தனையே" மற்றும் M.L. வசந்தகுமாரி அவர்களின் "பாஹிமாம் பார்வதி பரமேஸ்வரி " என்ற பாடலும் இடம் பெறுகிறது.  MLV பாடலின் காணொளி பொதிகை டிவியில் இருந்து எடுக்கப்பட்டது. குரு - சிஷ்யை பாடியது. இரண்டு பாடல்களுமே மிக நன்றாக உள்ளது. கேட்டு மகிழுங்கள்.

திங்கள், 15 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம்

நவராத்திரியில் சில தேவி பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஓர் எண்ணம். இப்போதெல்லாம் இசை கேட்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக யூடூபில் கிடைக்காத பாடல்களே கிடையாது. அதிலிருந்து சில பாடல்கள். இந்த பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் ஒரு தனி சுகமிருக்கும். "யாம் பெற்ற இன்பம்....."

முதலில் எல்லோரும் அறிந்த M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் இந்தப் பாடலுடன் தொடங்குவோம்.  அடுத்ததாக டி.கே. பட்டம்மாள் அவர்கள் பாடிய "நான் ஒரு விளையாட்டு பொம்மையா" என்ற பாடலைக் கேட்போம்.








சனி, 13 அக்டோபர், 2012

தி.ஜா.’வின் மோகமுள் ரங்கண்ணா


என் எந்த ஒரு பழக்கத்திற்கும், நல்லதோ இல்லை கெட்டதோ, அதற்கான விதை இடப்பட்டது என் கல்லூரி நாட்களில்தான். என் தமிழாசிரியர் ஒரு வகுப்பில் ஜானகிராமனின் நாவல்கள் தன்னுள் பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தியதில்லை. ஆனால் அவருடைய சிறுகதைகள் பலதும் இலக்கியத் தரமானவை என்றார். அன்றுதான் முதல் முறையாக தி.ஜா என்ற எழுத்தாளரின் பெயர் பரிச்சயமானது. பிறகு நூலகத்தில் மோகமுள் பார்த்ததும், அதை எடுத்துப் படித்தேன். மோகம் முப்பது நாட்கள். மோகமுள்ளின் மீதுள்ள மோகம் முப்பது ஆண்டுகளாகியும் இன்னும் தீர்ந்த பாடில்லை.

மோகமுள்ளில் பாபு, யமுனா, ராஜம், பாபுவின் தந்தை, ரங்கண்ணா, சாம்பன் என பலர் வலம் வந்தாலும் ரங்கண்ணா பாத்திரப் படைப்புதான் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. மோகமுள்ளை Cantor கணத்தைப் (set) போல் மூன்றாகப் பிரித்தால் மத்திய பகுதியில் தோன்றி மறைவதுதான் ரங்கண்ணா பாத்திரம்.

மோகமுள்ளில் ரங்கண்ணாவின் அறிமுகமே சிறப்பான குறியீட்டுத் தன்மை கொண்டது. கர்நாடக இசையின் ஞானப் பிழம்பான ஆளுமையாக. நாம் அவரை முதன்முறையாக அறிகிறோம், அப்போது அவரின் பின்னிருந்து பாபு அவரைப் பார்க்கிறான். ரங்கண்ணாவின் சங்கீத ஞானத்தை எதிர் காலத்தில் அவன் தன் தோளில் தாங்கிச் செல்ல ஏற்பதற்கான அறிகுறியாக இது இருக்கிறது - நம் பார்வையில் ரங்கண்ணாவை அடுத்திருப்பவனாக பாபு புலப்படுகிறான்.



ராஜத்தின் தந்தை தியாக ராமன் பாபுவை ரங்கண்ணாவிடம் அறிமுகப்படுத்தும்போது நடைபெறும் உரையாடல்கள் ரங்கண்ணாவின் குணாதிசயங்களைத் தெளிவாக்குகின்றன. பாபுவிடம் ரங்கண்ணா சங்கீதம் குறித்து கேள்விகள் கேட்கும்போது அவருடைய மேதைமை வெளிப்படுகிறது. தியாக ராமனின் துறை சார்ந்த திறமையை பாராட்டும் சமயம், தான் என்னதான் சங்கீதத்தில் உச்ச ஞானத்தைப் பெற்றிருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் தன்மை அவருக்குள்ளது என்பதை நாம் அறிய வருகிறோம். எல்லாம் தெரியும் என்ற தோரணையில் எல்லா விஷயங்களிலும் தீர்மானமான முன்முடிவுகள் இல்லாதவராக, அவற்றில் தன் சிந்தையை செலுத்துபவராக இல்லாமல் சங்கீத சாம்ராஜ்யத்தை மட்டுமே தன் வாழ்வின் எல்லையாகக் கொள்கிறார் ரங்கண்ணா.

பொதுவாக, கச்சேரிகளில் பாடகரின் ஸ்ருதிக்கு ஏற்றாற்போல் வயலின் மற்றும் மிருதங்கம் ஸ்ருதி சரி செய்து ஒன்றினைந்து ஸ்ருதி சுத்தமாக கச்சேரி துவங்கும்போது கிடைக்கும் சுகம் எப்படிப்பட்டது என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஆனால், முதல் நாள் பாபு பாட்டு கற்றுக்கொள்ள வரும்போது ரங்கண்ணா ஸ்ருதி சேர்ப்பதை விவரிப்பதின் மூலம் தி.ஜா அந்த அந்தரங்கமான இசை அனுபவத்தை சொற்களில் வெளிக் கொணருகிறார். இந்த இடத்தில் என் தந்தை பல முறை கூறிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஈரோட்டில் ஒரு சபாவில் M.S. சுப்புலட்சுமி அவர்களின் இசைக் கச்சேரியில் கலைஞர்கள் ஸ்ருதி சேர்ப்பதில் சிறிது கால தாமதம் ஆகியுள்ளது. அந்த சபாவின் காரியதரிசி, "ஏன் கச்சேரி நேரத்தில் தொடங்கவில்லை?" என்று விசாரித்திருக்கிறார். அதற்கு விஷயம் தெரிந்த நபர் ஒருவர், "ஸ்ருதி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்," என்று பதில் சொன்னதும் காரியதரசிக்கு கோபம் வந்துவிட்டது. "இரண்டு மாதம் முன்பே கச்சேரிக்கு அட்வான்ஸ் கொடுத்தாகி விட்டது. ஊரிலேயே ஸ்ருதி சேர்த்துக்கொண்டு வந்திருக்கக் கூடாதா?" என்று கூச்சலிட்டாராம் அவர்! அவருக்கு அவ்வளவுதான் அதன் முக்கியத்துவம்.

பாபு பாடும் சமயம் ஒவ்வொரு சங்கதியிலும் திருத்தம் செய்யும்போது அவனுக்கு தன் முந்தைய பாட்டு ஆசிரியருக்கும், ரங்கண்ணாவுக்கும் இருக்கும் வித்தியாசம் ஒரு மலைக்கும், மடுவுக்கும் இடையே இருப்பது போல் தோன்றுகிறது. ஒரு நாள் பாபு வகுப்பிற்கு வரவில்லை என்றால் "ஏன்டா ஜடாயு மாதிரி இங்கு ஒரு கிழம் காத்துக் கொண்டிருக்கிறது, வர மாட்டேன் என முதல் நாளே சொல்லக்கூடாதா?" என கடிந்து கொள்ளும்போது ரங்கண்ணாவின் கோபத்தை விட ஏக்கம் வெளிப்படுவதைக் காணலாம். ஸ்ருதி சேராதபோதும் சேர்ந்து விட்டது என சாம்பன் கூறுவதைக் கேட்டு அவனை ரங்கண்ணா திட்டும் இடத்தில் அவருக்கு சாம்பன் மீது இருக்கும் அதீத வாஞ்சை வெளிப்படுகிறது.

ரங்கண்ணா சொல்லிக் கொடுக்கும் பாடத்திற்கு பாபுவால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் கொடுக்க முடியும் என தியாகராமன் கூறும்போது, அதை யார் கேட்டார்கள் என ரங்கன்னா பற்றற்று கூறும் இடம் பால் ஏற்டோஸ் (Paul Erdos), நோபல் (Nobel), க.நா.சு போன்ற ஆளுமைகளின் நினைவுதான் வருகிறது. ஆனால் ரங்கண்ணாவின் மனைவி பாபுவிடம் கறாராக பதினைந்து ருபாய் கொடுத்து விட வேண்டும் எனக் கூறுவதற்கான காரணத்தை சண்முகம் பாபுவிடம் சொல்கிறான் - ரங்கண்ணா இந்த வயதில் இப்படிக் கஷ்டப்படுகிறாரே என்ற ஆதங்கத்தில்தான் ரங்கண்ணாவின் மனைவி அவ்வளவு கறாராக இருக்கிறார் என்ற உண்மை வெளிப்படுகிறது, உண்மையில் அவரது மனைவியும் மிகவும் மென்மையான மனம் கொண்டவர் என்பது தெளிவாகிறது. ரங்கண்ணாவிற்கும் அவர் மனைவிக்கும் இடையே இருக்கும் பரிவும், பாசமும் வெளிப்படும் இடம் இது.

பாபு எதற்காக சங்கீதம் கற்றுக் கொள்கிறான் என ரங்கண்ணா கேட்டவுடன் பாபுவிற்கு ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறார் என்ற குழப்பம். ஆனால் பாபு, "ஞானம்" பெறத்தான் எனக் கூறியவுடன் ரங்கண்ணா பெருமகிழ்ச்சி அடைகிறார். அறைகுறையாக கற்றுக் கொண்ட தன் சிஷ்யன் "பாலு" இன்று பெரிய பாடகர் என சொல்லிக் கொண்டு அலைவதை கிண்டல் செய்கிறார் ரங்கண்ணா.
 
சஞ்சய் சுப்ரமணியன் சென்ற ஆண்டு ஜெயா தொலைகாட்சி மார்கழி மகோற்சவத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் "கச்சேரி செய்வது ஒரு வித்தைதான். மேடைக்கு வந்து பாடினால் அது வித்தை காட்டுவது போல்தான்," என பொருள்படக் கூறினார். (அவர் சொன்ன சரியான வார்த்தைகள் என் நினைவிலில்லை.) ஆனால் வித்தை காட்ட மிக நல்ல ஞானம் வேண்டும். அதுதான் ரங்கண்ணாவின் கருத்தாகவும் இருக்கிறது. ஏனோதானோ என கற்றுக் கொண்டு மேடை ஏறி ஏதோ முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் நீதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பாடுவதை ரங்கண்ணா விரும்புவதில்லை. எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து நல்ல திறமையுடனும், ஞானத்துடனும் பாடுவதைக் கேட்க விரும்பும் ரசிகனுக்காகவே பாட வேண்டும் என்கிறார் ரங்கண்ணா. இந்தக் கருத்து இசைக்கு மட்டுமில்லாமல் எந்தத் துறைக்கும் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது. தன தலையில் தானே அட்சதைப் போட்டுக் கொள்வதில் என்ன பயன்?

வடக்கிலிருந்து வரும் பாடகர்களின் கந்தர்வ குரலில், அவர்களுடைய அசுர சாதகத்தில், ரங்கண்ணா மகிழ்ந்து அவர்களைப் பாராட்டும்போது, பாபுவுக்கு இசை குறித்த தன் எண்ணத்தைத் தெளிவாக்குகிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் பாலு வடக்கத்தியர்களின் குரு ஒன்றும் பெரிய பெயர் பெற்றவரில்லை எனக் கூறும் போதும், அது முக்கியமில்லை என மறுதலிக்கிறார் ரங்கண்ணா. அந்த இடத்தில் அருமையான தரமான மற்றும் சுமாரான சங்கீதத்திற்கும் இடையேயான வேறுபாட்டை அழகாக ஒப்பிட்டுக் காட்டுகிறார் தி.ஜா.

ஸ்லோகங்களை சொல்லும் வழக்கத்திற்கு பதிலாக, எல்லோரும் பாடுகிறார்கள். சாவேரி பாடும்போது சாந்தமாக ரங்கண்ணாவின் உயிர் பிரிகிறது. அதை வாசிக்கும் சமயம் திருவிளையாடல் சினிமாவில் "நான் அசைந்தால் அசையும்" பாடலில் வருவது போன்று இந்த உலக இயக்கமே ஒரு நொடி நிற்கும் உணர்வைத் தந்தது.

மோகமுள் நாவல் முழுதும் கர்நாடக இசை பின்னணியில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அதில் ரங்கண்ணா பாத்திரம் மூலமாக தி. ஜா. நல்ல சங்கீதத்தின் கூறுகளை அமர்க்களமாக எழுதிச் செல்கிறார்.கர்நாடக சங்கீதம் உள்ளவரை ரங்கண்ணா பாத்திரம் மூலம் தி.ஜா. வாழ்ந்துக் கொண்டிருப்பார். அதில் சந்தேகமில்லை.

இந்த கட்டுரையை வெளியிட்ட ஆம்னிபஸ் நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி.


மோகமுள் - தி.ஜானகிராமன்


புதினம், ஐந்திணைப் பதிப்பகம்


பக்கங்கள்: 686. விலை.ரூ.300/-


இணையம் மூலம் வாங்க: கிழக்கு / உடுமலை

வெள்ளி, 5 அக்டோபர், 2012

தேறாத கவிதை ஒன்று


ஏதோ ஓர் உள்ளணர்வு எழுதத் தூண்டுகிறது. அதை எழுதி விடுகிறோம். அதைக் கவிதை என  நினைத்து ஆத்மார்த்தமான நண்பனுக்கு அனுப்பினால், இது கவிதையா எனக் கேள்வியே பதிலாக வருகிறது. இதை இருவருக்கு படித்துக் காட்டினேன் "
Are you ok?" எனப் புலன் விசாரிக்கும் ஒரு பார்வை. ஆனாலும் தோன்றியதை எழுதத் தானே என் வலைத்தளம். பதிவு செய்து வைப்போம். சரி கவிதைக்கு(?) வருவோம்.



எறும்பும் கடவுளும் 

 எங்கிருந்து வந்தது  இந்த எறும்பு 

ஏன்  இத்தனைப் பெரிய கூடத்தில் 
தனியே ஊர்ந்து செல்கிறது.

எதையோ தேடி பயணிக்கிறது.

திசை மாறி தேடியும் 
ஏமாற்றமே

உதவியின்றி சுவரில் முட்டி 
அதைப் பற்றி ஏறுகிறது 

 ஒரு கடவுளின் படத்தில் தஞ்சம் 
முகத்தருகே கடவுளை ஒரு பார்வை 
மெதுவாக இறங்கி கடவுளின் 
பாதத்தில் 

வியாழன், 4 அக்டோபர், 2012

மதுரை மணி 100-வது ஆண்டுக் கொண்டாட்ட டி .வி.சங்கரநாராயணன் இசைக் கச்சேரி

நான் சென்னையில் படிக்கும் போது என் நண்பன் யோகானந்தா ஒரு முறை கூறினான் "கர்நாடக இசை மீது ஆர்வமும், ஈடுபாடும் வரவேண்டுமென்றால் மதுரை மணி அவர்களின் இசையை கேட்டால் போதுமானது" என. அது 100% உண்மை. பாமரனுக்கும் பரவசத்தைக் கொடுக்கும் இசை அவருடையது. இசையை இசைக்காகவும், இசை ரசிகர்களுக்காகவே பாடியவர். ஐந்து மணி நேரம் வெறும் தேங்காய் மூடி வாங்கிக் கொண்டு தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் பாடுவார் என என் தாத்தா கூறி கேட்டிருக்கிறேன். இலக்கியத்திற்காகவே வாழ்ந்த க.நா.சு வைப் போன்றே மணி அவர்களும் கர்நாடக இசைக்காகவே வாழ்ந்தார். இருவர் 100 ஆண்டும் இந்த வருடமே வருவது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

சென்னையில் என் நண்பர் ஒருவர் மதுரை மணியின் பல கச்சேரிகளை அந்த காலத்து ஸ்பூல் வகை டேப்பில் பதிவு செய்து வைத்திருந்தார். அதில் மணி அவர்கள் ஏழு வெவ்வேறு விதமான விதங்களில் ஸுவரத்துடன்  "வாதாபி கணபதிம்" என்ற கிருதியை பாடியிருந்தது பிரமிப்பாகவும், சந்தோஷமான அனுபவமாகவும் இருந்தது என்றால் மிகையாகாது. "ஆத்திச்சூடி" சொல்வது போல் ஒரே மாதிரி பாடினால் நன்றாகவா இருக்கும். மதுரை மணியின் கற்பனை ஸ்வரம்கேட்பதில் இருக்கும் ஆனந்தமே ஆனந்தம்.. அவர் எத்தனையோ பாடியிருந்தாலும், எனக்குப் பிடித்தது அவர் பாடிய "சக்கணி ராஜ மார்கமு" என்ற கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த தியாகராஜர் க்ருதி தான்.



மதுரை மணி அவர்களின் நூறாவது பிறந்த வருடத்தைக் கொண்டாடும் விதமாக டெட்டிராயிட் நகரில் "Great Lakes Aradhana Committee" என்ற அமைப்பின் முயற்சியில் T.V.. சங்கரநாராயணன் அவர்களின் இசைக் கச்சேரி சென்ற செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற்றது. T.V.. சங்கரநாராயணன் அவர்கள் தன்னுடைய மாமாவான மதுரை மணியின் நினைவிலேயே லயித்து அவருடைய சில பாடல்களை மணி அவர்கள் பாடுவது போலவே பாடினார்.  தன் மாமாவுடன் பள்ளிப் பருவத்தில் திருவல்லிக்கேணி ஹிந்து பள்ளியில் ஆயிரம் பேர் முன்னினலையில் "அபராமா பக்தி" என்ற பந்துவாரளியில் அமைந்த கீர்த்தனையில்   "கபி (குரங்கு)வாரிதி தாடுணா"  என பக்தியுடன் பாடும் சமயம் எங்கிருந்தோ ஒரு குரங்கு ஒரு நிமிடம் வந்து சென்றதை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது  எனக் கூறினார் சங்கரநாராயணன் அவர்கள்.இந்த பாடலை   அன்று  பாடும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு "கபி வாரிதி தாடுணா" என ஐந்து நிமிடங்களுக்கு மேல் அங்கே சஞ்சாரம் செய்தார். பொதுவாக மணி அவர்கள் கச்சேரி நாளைப் பொறுத்து நவகிரக கீர்த்தனைகள் பாடுவது வழக்கம். அதை ஒட்டி T.V.. சங்கரநாராயணன் எல்லா கிரகத்தையும் உள்ளடக்கின "சகல கிரஹ" என்ற அடானா ராகத்தில் அமைந்த கீர்த்தனையைப் பாடினார். அன்று மாலையின் முக்கியத் தேர்வாக மோகன ராகத்தில் அமைந்த "கபாலி" யை மிகவும் விரிவாக மதுரை மணியின் முத்திரையுடன் வழங்கினார். எந்த கச்சேரியிலும் ராகம், தானம், பல்லவி பாடிக் கேட்பதில் இருக்கும் சுவையே தனி. அன்று சங்கரநாராயணன் அவர்கள் காபி ராகத்தில் "ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம சிங்கரா ராம "
" என்ற பல்லவியை "கண்ட  திரிபுட(இரண்டு களை  )"   தாளத்தில் (எனக்கு மொத்தம் 5+4=9X 2=18 - அதை எப்படி அழகுத் தன்மையுடன் பிரித்துப் போட்டு பாடுகிறார்கள் என  ரசிப்பேன் - முறையான சங்கீதம் கற்காததின் விளைவு ) எடுத்துக் கொண்டு விஸ்தாரமாக பாடினார். அதில் குறிப்பாக சிந்து பைரவியில் ஸ்வரம் பாடியது மணி அவர்களை மிகவுமே நினைவு படுத்தியது. பல்லவியில் வயலினில் விட்டல் ராமமூர்த்தி மிக மிக நன்றாக வாசித்து ரசிகர்களை குளிர வைத்தார். சேவிக்க வேண்டுமையா, எப்போ வருவாரோ மற்றும் இங்க்லீஷ் நோட்ஸ் எனத் தொடர்ந்து "வாழிய செந்தமிழ் வாழிய தமிழர் " என மங்களத்துடன் கச்சேரி முடிவுக்கு வந்தது.


திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கத்தில் பின்னி எடுத்து விட்டார். தனியின் போது வெளியே இருந்தவர்கள் கூட அரங்கத்தினுள் வந்தமர்ந்து ரசித்தார்கள் என்றால் வேறு என்ன சொல்ல. ஒரே ஒரு குறை சென்னை சபா கச்சேரி போல் மூன்று மணித் துளிகளில் கச்சேரி முடிந்தது சற்று ஏமாற்றமாக இருந்தது. மற்றபடி மதுரை மணி அவர்களின் 100- வது ஆண்டு நினைவைக் கொண்டாடிய GLAC க்கு நன்றிகள்.

இப்போது மதுரை மணி அவர்களின் "சக்கணி ராஜா மார்கமு" என்ற கிருதியைக் கேட்டு மகிழுங்கள்.