செவ்வாய், 30 நவம்பர், 2010

சுஜாதாவின் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

சுஜாதாவைப் பற்றி இன்று பலவித விமர்சனங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவருடைய இலக்கிய இடம் குறித்து பல சர்ச்சைகள். ஆனால் காலம் எல்லோரையும் ஏமாற்றி தனக்கே உரிய தீர்ப்பை வழங்கும். அவருடைய பன்முக ஆளுமையால் சுஜாதா தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக என்றும் இருப்பார் என்பது தான் என் கணிப்பு. இதற்கான என் காரணங்களை தனிப் பதிவாகத் தான் போட வேண்டும்.

சுஜாதா வைணவத்தின் மீது தீராத பற்றும், ஆழ்வார்கள் மீது, குறிப்பாக நம்மாழ்வார் மேல், தணியாத காதலும் கொண்டிருந்தார் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. இந்த அறிமுக நூலை அருமையாகவும், தனக்கே உரிய எளிமையுடனும் எழுதி இருக்கிறார். வைணவத்தைப் பற்றி நன்கு தெரிந்தவகள் அறிமுக நூல் படிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வைணவத்தைப் பற்றியும் ஆழ்வார்கள் குறித்தும் அறிய விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டய நூல் இது. கடவுள் மற்றும் வைணவ நம்பிக்கை இல்லை என்றாலும் தமிழின் சுவைக்காக படித்து பருக வேண்டிய ஒன்று. இதில் உள்ள சில முக்கிய விஷயங்கள்.

1. ஆழ்வார்கள் என்றால் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் என்று பொருள்.

2. மொத்தம் 10 ஆழ்வார்கள்.அவர்கள் பெயர்கள்:
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார்.
நம்மாழ்வாரைப் பற்றிப் பதினோரு பாடல்கள் பாடிய மதுரகவியாழ்வாரையும் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பாடிய பெண்பாற் புலவரான ஆண்டாளையும் சேர்த்துக் கொண்டு ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர் என்று கூறுகிறார்கள்.

3. ஆழ்வார்கள் எல்லோரும் சேர்ந்து மொத்தம் 4000 பாடல்கள் எழுதியுள்ளார்கள். இதற்கு நாலாயர திவ்யப் பிரபந்தம் என்று பெயர்.

4. இந்தப் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்தவர் நாதமுனி.

5. ஆழ்வார்கள் பல ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

6. 4000 பாடல்களும் அவர்கள் எழுதிய வரிசையில் தொகுக்கப் படவில்லை. பெரியாழ்வார் இயற்றிய "திருப்பல்லாண்டு" நாலாயர திவ்யப் பிரபந்தந்தின் தொடக்கமாக உள்ளது.

7. மதுரகவியாரின் நம்மாழ்வாரைப் பற்றி பாடிய 11 பாடல்கள் நாலாயர திவ்யப் பிரபந்தந்தின் மத்தியில் அமைக்கப் பட்டுள்ளது.

8. நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடிய விதத்தை வைத்து சுஜாதா இவ்வாறு கூறுகிறார் "வாலண்டைன்ஸ் டே-காதலர் தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதற்கு ஆண்டாள் தினம் என்று பெயர் மாற்றலாம்"

9. இதை எழுதும் போது தீவிர வைணவர்களிடம் இருந்து கடுமையான ஆட்சேபணைகள் மற்றும் எதிர்ப்பு வந்திருக்கிறது. அதற்கு சுஜாதா விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

10. ஆழ்வார்களில் முதன்மையானவர், மிகச் சிறந்தவர் நம்மாழ்வார் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்கிறார் சுஜாதா.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப் படித்து ஓரிருவராவது இந்த புத்தகத்தை படித்தால் எனக்கு சந்தோசம் தான்
இந்த அறிமுக நூலைப் படித்தால் நிச்சியம் 4000 பாடல்களையும் படிக்கும் ஆர்வம் வரும். எனக்கு பிடித்த பாடல்களில் சில இங்கே.

கண்ணன் பிறந்ததை பெரியாழ்வார் கொண்டாடும் விதம்:

''ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே''


அதற்கு பிறகு சுகமான தாலாட்டு

''மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையமளந்தானே தாலேலோ''


ஆண்டாளின் சிறப்பான பாடல்.

'வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்த என்தட முலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே'


சில பொய்கையாழ்வார் கொடுக்கும் கடவுளின் 'பயோடேட்டா''

'அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல்மறை உறையும் கோயில் - வரைநீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரிகார் மேனி ஒன்று'


இறுதியாக நம்மாழ்வாரின் மாஸ்டர் பீஸ்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே


இதை இணையத்தில் தேசிகனின் பக்கங்களில் படிக்கலாம்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

தொலைத்த தலைமுறை - வித்தியாசமான கவிதை


ஜோனதன் ரீட் (Jonathan Reed) என்கிற ஒரு பல்கலைக் கழக மாணவர் எழுதிய ஒரு ரசிக்கத்தக்க கவிதை இதன் சிறப்பு என்னவென்றால் கிட்டத்தட்ட இது ஒரு முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள் (palindrome) எனலாம். இதை மேலிருந்து கீழே படித்தால் ஒரு பொருளும், தலை கீழாக படித்தால் தலை கீழான பொருள் கிடைக்கிறது. இதைப் படித்து விட்டு நீங்கள் நம்பிக்கையானவரா இல்லை நம்பிக்கை அற்றவரா என்றும் எந்த தலை முறையைச் சேர்த்தவர் என்றும் கூறுங்களேன்.

முதலில் என் தமிழ் மொழி பெயர்ப்பு. பிறகு இதனுடைய ஆங்கில மூல வடிவம்

தொலைத்த தலைமுறை

நான் ஒரு தொலைத்த தலைமுறையின் அங்கம் என

நம்ப மறுக்கிறேன்.

இந்த உலகை என்னால் மாற்றி அமைக்க முடியும்

இதை ஓர் அதிர்ச்சியாக உணர்கிறேன் ஆனால்

"சந்தோசம் உள்ளிருந்து வருகிறது."

என்பது ஒரு பொய், மேலும்

"பணம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்"

அதனால் முப்பது வருடங்களில் என் குழந்தைகளிடம் கூறுவேன்

என் வாழ்க்கையில் அவர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள் இல்லை என்று

என் வேலை அமர்த்துநர்களுக்குக் கூடத் தெரியும்

என்னுடைய முன்னுரிமைகள் நேர்மையானது அதனால்

வேலை

முக்கியமானது அதை விட முக்கியமானது இல்லை

குடும்பம்

நான் உங்களுக்கு சொல்கிறேன்

ஒரு காலத்தில்

குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக இருந்தன

ஆனால் என் காலத்தில் இது உண்மையாக இருக்கப் போவதில்லை

இது ஓர் அவசரத்தில் ஒட்டி வைக்கப்பட்ட சமூகமென

வல்லுனர்கள் சொல்கிறார்கள்

இப்போதிலிருந்து 30 வருடத்தில், நான் என்னுடைய 10 வது திருமண முறிவு நாளைகொண்டாடிக் கொண்டிருப்பேன் என்று

நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்

நான் என்னால் உருவாக்கப்பட்ட நாட்டில் வாழ்வேன்

எதிர் காலத்தில்

சுற்றுப்புற நாசம் ஒரு நெறிமிறையாகும் என

இனி எப்போதும் சொல்ல முடியக் கூடியதில்லை

என்னை ஒத்தவர்களும் நானும் புவியின் மீது அக்கறை கொண்டுள்ளோம் என்று

அது தெளிவாகத் தெரியும்

என்னுடைய தலைமுறை ஒரு விளக்கஇயலா அசட்டை மனப்பான்மையுள்ள ஒன்று என்று

அதை ஊகிப்பது முட்டாள்தனமானது

நம்பிக்கை இருக்கிறது.


Lost Generation by Jonathan Reed

I am part of a lost generation
and I refuse to believe that
I can change the world
I realize this may be a shock but
“Happiness comes from within.”
is a lie, and
“Money will make me happy.”
So in 30 years I will tell my children
they are not the most important thing in my life
My employer will know that
I have my priorities straight because
work
is more important than
family
I tell you this
Once upon a time
Families stayed together
but this will not be true in my era
This is a quick fix society
Experts tell me
30 years from now, I will be celebrating the 10th anniversary of my divorce
I do not concede that
I will live in a country of my own making
In the future
Environmental destruction will be the norm
No longer can it be said that
My peers and I care about this earth
It will be evident that
My generation is apathetic and lethargic
It is foolish to presume that
There is hope.




இதனுடைய காணொளி (video) இங்கு பார்க்க கிடைக்கிறது.

செவ்வாய், 23 நவம்பர், 2010

எந்திரனில் ஜெனோவின் முரண்படு மெய்ம்மை (paradox) மற்றும் குவிகிற தொடரும்



எந்திரன் சினிமாவில் ரோபோவிடம் பல கேள்விகள் கேட்கப்படும். அதில் ஒன்று இந்த ஜெனோவின் முரண்படு மெய்ம்மை. அதாவது ஒரு ஆமை இரண்டு மைல்கள் செல்ல வேண்டும். முதலில் அது செல்ல வேண்டிய தூரத்தில் பாதியைக் கடக்கிறது. பின்பு மீதுள்ள தூரத்தில் பாதியைக் கடக்கிறது. மீண்டும் அதில் பாதி. மீண்டும் அதில் பாதி.....இப்படியே தொடர்ந்தால் அது தன் இலக்கை அடையவே முடியாது என்பது.

ஆனால் ஆமை கட்டாயம் அதன் இலக்கைச் சென்று அடைய முடியும் என்பது தான் உண்மை. இந்த முரண்பாட்டைத் தான் ஜெனோவின் முரண்படு மெய்ம்மை என்று கூறுகிறோம்.

இந்தக் கேள்விக்கு பதிலாக ரோபோ "அது ஒரு குவிகிற தொடர் (convergent series)" என்ற பதிலைக் கொடுக்கும்.

குவிகிற தொடர் என்றால் என்ன?

சரி. இது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம். ஆமை முதலில் செல்வது ஒரு மைல்,பிறகு 1/2 மைல், பின்பு 1 /4 ......என்று செல்ல வேண்டும்.

அதாவது

1+ 1/2+1/4+1/8+1/16+1/32+......

என்பதின் கூட்டுத் தொகையைக் கண்டறிய வேண்டும்.

S1 = 1 <2
S2 = 1+1/2 < 2
S3 = 1+1/2+1/4 < 2
S4 = 1+1/2+1/4+1/8 < 2
...
.
.
S10 = 1+1/2+1/4+.........1/512 < 2

...என்று தொடரும். .

எனவே இந்த தொடரில் உள்ள எத்தனை எண்களைக் கூட்டினாலும் அந்த கூட்டுத் தொகை 2 என்ற எண்ணிற்கு அருகில் செல்லுமே தவிர அது 2 டை விட அதிகமாகாது. அதனால் இந்த தொடர் இரண்டை நோக்கிக் குவிகிறது என்கிறோம்.

இந்தத் தொடரை ஒரு பெருக்குத் தொடர் (Geometrc series) என்கிறோம்.

அதாவது

1+ 1/2+1/4+1/8+1/16+1/32+...... = 2
.

அந்த = என்பதற்கு இங்கு சிறிது வித்தியாசமான பொருள். இந்தத் தொடர் 2 டை நோக்கிக் குவிகிறது என்று பொருள். இது எப்போதும் இரண்டிற்கு சமமாகாது.

கண்ணதாசனும் குவியும் தொடரும்




கண்ணதாசன் இருவர் உள்ளம் படத்திலேயே "குவியும் தொடர்" பற்றி அழகாக எழுதி உள்ளார்.

நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி

வெள்ளி, 19 நவம்பர், 2010

இளைப்பாற கொஞ்சம் கணிதமும் புதிரும்


புதிர் 1: அண்ணாச்சிக்கு மூன்று மகன்கள். அவருக்கு நெல்லையில் சொத்தாக சொந்தமாக 17 வீடுகள். அவருடைய உயிலில் சொத்தில் மூத்த மகனுக்கு 1 /2 பங்கும், இரண்டாவது மகனுக்கு 1 /3 பங்கும் மற்றும் மூன்றாவது மகனுக்கு 1 /9 பங்கும் கொடுப்பதாக எழுதி வைத்தார். முழு வீடுகளாக வேறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு நிபந்தனை. மகன்களுக்கு ஒரே குழப்பம். அப்பாவிற்கு இருந்த கணித அறிவு நமக்கு இல்லையே என்று.உங்களைக் கூப்பிட்டு இந்த பிரச்சனையைத் தீர்க்கச் சொன்னால் எப்படி தீர்த்து வைப்பீர்கள்?



புதிர் 2: முப்பது ஆடுகளும், முப்பது மாடுகளும் ஒரு புல்வெளி மைதானத்தை மேய்ந்து முடிக்க 60 நாட்கள் ஆகிறது.
அதே மைதானத்தை எழுபது மாடுகளும், எழுபது ஆடுகளும் மேய 24 நாட்கள் பிடிக்கிறது. ஒவ்வொரு நாளும் புற்கள் ஒரே மாதிரி அளவில் வளருகிறது. அதே புல்வெளியை 96 நாட்களில் மேய்ந்து முடிக்க எத்தனை ஆடுகளும், மாடுகளும் தேவைப்படுகின்றன?

வியாழன், 18 நவம்பர், 2010

Piet Hein - இரண்டு கவிதைகள்


டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிட் ஹீன் (Piet Hein ) ஒரு கணிதவியலாளர்,தத்துவஞானி மற்றும் கவிஞர். அவர் கவிதைகளில் இரண்டு மொழி பெயர்ப்புடன் கீழே. மேலும் படிக்க விருப்பமென்றால் இங்கே கிளிக்கவும்.ஏனோ இவர் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கிறது.

Parallelism


"Lines that are parallel
meet at Infinity!"
Euclid repeatedly,
heatedly,
urged.
Until he died
and so reaching that vicinity
in it he
found that the damned things diverged.

ஒருவழி இணைவுநிலை


"இணை கோடுகள் சந்திக்கின்றன
முடிவிலியில்!" என யுக்லிட்
மீண்டும் மீண்டும்
தீவிரமாக வலியுறுத்தினார்
அவர் சாகும் வரை.
ஆனால் அதன் அணிமையில்
சென்ற போது கண்டறிந்தார்
சபிக்கப்பட்ட அவைகள்
விலகிச் செல்கின்றன என்று.

Constitutional Point


Power corrupts,
whereas sound opposition
builds up our free
democratic tradition.
One thing would make
a democracy flower:
having a strong opposition-
in power.


அரசியலமைப்பு கருத்து


அதிகாரம் சீரழிக்கிறது,
அதே வேளையில் வலுவான எதிர்ப்பு
கட்டமைக்கிறது நம்முடைய சுதந்திரமான
ஜனநாயக மரபை.
பயனுள்ள காரியம் ஒன்று முடியுமானால்
ஒரு ஜனநாயகத்தை மலர வைக்க:
வலுவான ஓர் எதிர்க்கட்சி இருந்தால்-
ஆட்சி பீடத்தில்.

என் மொழி பெயர்ப்பில் தவறு இருந்தாலோ அல்லது நல்ல மொழிபெயர்ப்பு கொடுக்க முடிந்தாலோ தவறாமல் மறு மொழியில் குறிப்பிடவும். நன்றி.

வெள்ளி, 12 நவம்பர், 2010

பிடித்த சிறுகதைகள் - கு.ப.ரா. வின் விடியுமா?


1986 ஆம் வருடம். மே மாதம் இரண்டாம் நாள். மதியம் மூன்று மணி அளவில் சேப்பாக் கிரிக்கெட் மைதானத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ராமானுஜன் இன்ஸ்டிடுட்யில் படிக்கும் மாணவனைப் பார்க்க அவன் அக்காவின் கணவர் (அத்திம்பேர்) வருகிறார். அவரை அதிசியத்துப் பார்த்து

"என்ன இப்போ இங்கே?" என்று மாணவன் கேட்க

"ஒண்ணுமில்லை அப்பாவுக்கு திடீர்ன்னு கொஞ்சம் மார்வலின்னு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கா? போன் வந்தது".

" ஏன் என்னாச்சு ரொம்ப சீரியஸா?".

"நீ உடனே மதுரைக்குக் கிளம்பு".

"மதுரைலையா?

"ஆமாம் மதுரையில தான் எதோ பாண்டியன் நர்சிங் ஹோமாம்"

மதுரை செல்லும் திருவள்ளுவர் பேரூந்து. இப்ப தான பதினைந்து நாட்களுக்கு முன் பார்த்து வந்தோம்.நெல்லை ஜங்ஷன் ஒரு சுற்று வந்தோமே? நல்லாத்தான இருந்தார். அம்மா பதறிப் போயிருப்பாலே? தம்பியும், தங்கையும் திருநெல்வேலியில் இருக்கா. அம்மா மட்டும் மதுரைக்கு வந்திருக்கா. அப்படீன்னு ரொம்ப பெருசா ஒன்னும் இருக்காது. அடுத்த நொடி ஒருவேளை அப்பாவுக்கு எதாவது ஆயிட்டா? ஐயோ அம்மாவை நினைத்தாலே பதறுகிறதே. ஒன்னும் ஆயிடாது. தங்கை கல்யாணம்? தம்பி படிப்பு? கொஞ்சம் தூக்கம் நடுவில். மீண்டும் பல என ஓட்டங்கள். விடியும் வேளையில் மதுரை ஆஸ்பத்திரியில் நுழையும் போது அம்மா நிற்பது தெரிந்தது. சரி அப்பா இருக்கிறார்.
கண்ணீருடன் என்னைப் (ஆமாம் இது சொந்த அனுபவம் என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது நிகழ்ந்தது) பார்த்து அம்மா "அப்பாவைப் பாத்துட்டு வா" என்றாள். பொழுது விடிந்தது.

இப்படி பலருக்கு பல விதமான அனுபவங்கள். இதே போன்ற ஒரு நிகழ்ச்சியைத் தான் கு.ப.ரா. மிக நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறார் "விடியுமா" என்ற சிறுகதையில்.
"சிவராமையர் - டேஞ்சரஸ்" என்ற தந்தி வருகை. மொத்த குடும்பத்தையும் ஒரு ஆட்டு ஆட்டி விடுகிறது. அக்கா குஞ்சம்மாவைக் கூட்டிக் கொண்டு கும்பகோணத்திலிருந்து சென்னை செல்கிறார் கதை சொல்லி. தந்தி கிடைத்தவுடன் ஏற்படும் மனநிலை, பிரயாணத்திற்கு எடுத்துக் கொள்ளும் சகுனங்கள், ஆழ் மனதில் உண்மை உறுமிக் கொண்டிருக்கையில் புறச் செய்கைகளில் நம்பிக்கையுடன் இருப்பது போல் காட்டிக்கொள்வது, இறைவனிடம் தஞ்சம் அடைவது, பூவும் பொட்டும் பெறுகின்ற பிரதானம், தொடர்ந்து மனநிலை சோகத்தோடு இருக்க முடியாது என்ற சித்தரிப்பு என்று அழகாக வடிவமைத்திருக்கிறார். தினமும் தான் விடிகிறது. ஆனால் வாழ்க்கையில்ஒரு சில நாட்களே மிகவும் மகிழ்ச்சியாகவோ, மனத் துயரத்துடனோ விடிகிறது. குஞ்சம்மாளுக்கு துயரமாக முடிகிறது அந்த விடியல். இத்தனை மனச் சிக்கல்களும் அத்திம்பேர் இறப்பதில் ஒரு முடிவுக்கு வருகிறது. சம்பவங்களை தன் போக்கில் போக விட்டு, பயணிக்கும் இரயிலுடனே படிப்பவரின் மனதையும் பல திசைகளில் பயணிக்கச் செய்திருக்கிறார் கு.ப.ரா. தினமும் தவறாமல் நடைபெறும் விடியலில் தான் எத்தனை உணர்ச்சிகள் ஒளிந்திருக்கின்றன?

கட்டாயம் படித்து பாருங்கள். இந்தக் கதையை அழியாச்சுடர் ராமின் தளத்தில் இங்கே படிக்கலாம். மேலும் இந்தக் கதை இவர்களின் சுஜாதா, எஸ்ரா.ஜெமோ பரிந்துரைகளில் ஒன்று.

செவ்வாய், 9 நவம்பர், 2010

புதுமைப்பித்தனின் கொடுக்காய்ப்புளி மரம்



விசா பதிப்பகம் வெளியீட்டில் புதுமைப்பித்தனின் 16 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு தான் கொடுக்காய்ப்புளி மரம். நல்ல அருமையான கதைகள்.

புதுமைப்பித்தனுக்கு தமிழ் உரைநடை கையைக் கட்டிக் கொண்டு சேவகம் செய்திருக்கிறது. எந்த அளவுக்கு புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இத்யாதிகளை நினைத்து தமிழர்கள் பெருமைப் படுகிறோமோ அதே அளவு புதுமைப்பித்தன் எழுத்துக்களும் தமிழின் ஓர் உச்சம் தான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து (வாசகன் என்ற ஒரே தகுதி தான்).

தொகுப்பில் முதல் கதை - கொடுக்காய்ப்புளி மரம். பணக்கார கிறிஸ்துவர் தான தருமம் செய்கிறார் மோட்ச சாம்ராஜ்யத்தை எதிர் பார்த்து. அவர் வீட்டில் உள்ள கொடுக்காய்ப்புளி எடுத்து உண்ணும் பிச்சைக்காரனின் நான்கு வயது பெண்ணை அடித்துக் கொல்கிறார். பதிலுக்கு பிச்சைக்காரனும் பணக்காரரை கொன்று விடுகிறார். நன்றாக எழுதியுள்ளார்.மணிக்கொடியில் 1934 ஆம் ஆண்டு பிரசுரமான கதை.

நியாயந்தான் - வடலூர் குமாரப் பிள்ளை நேர்மையாக இருந்த போது கஷ்டப் பட்டு கொழும்பு சென்று நேர்மையற்ற செயல்களால் வாழ்வில் சுகமாக இருப்பது தான் கதை. ஜோதி இதழில் 1938 ஆம் ஆண்டு வெளியானது.

சாமியாரும், குழந்தையும், சீடரும் இது ஒரு சூப்பர் கதை. உன்னிகிருஷ்ணன்  குரல் நன்றாக  இருக்கும்.கேட்டால் சுகம் தெரியும். இந்தக் கதையைப் படித்தால் தான் அருமை புரியும். படித்துப் பாருங்கள்.

நினைவுப் பாதை : வள்ளியம்மையாச்சி மரணத்தைப் பற்றிய அருமையான சித்தரிப்பு.வைரவன் பிள்ளை மன ஓட்டம் சிறப்பாகப் சித்தரிக்கப் பட்டுள்ளது. (உ-ம்) "ஏறக்குறைய இந்த ஐம்பது வருஷ காலத்தில் அவர் வள்ளியம்மையாச்சியைப் பற்றி அவ்வளவாக - முதல் பிரசவத்தில் தவிர - பிரமாதமாக நினைத்தது கிடையாது.....மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி, உடலோடு ஒட்டின உறுப்பாகி விட்டது. ஒவ்வொருவரும் தமக்கு ஐந்து விரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்ட இருக்கிறார்கள்?...விரல் ஒன்று போனால் ஐந்தென்ற நினைப்பு பிறக்கும்....."

மகாமசானம்: நெருக்கடியான சென்னையில் இறந்து போகும் பிச்சைக்காரன். இது ஒரு மாஸ்டர் பீஸ். இந்தக் கதைக்கு எப்படித்தான் இப்படி ஒரு தலைப்பு தோன்றியதோ? இன்று சென்னை அல்ல உலகமே அப்படி இருப்பதாகக் கொள்ளலாம் போல. தலைப்புக்கு பரிசு உண்டென்றால், இந்தத் தலைப்பு பரிசு பெற மிகவும் தகுதியான ஒன்று. உலகம் உள்ள வரை வாழும் இந்த சிறுகதை. இதை படித்த போது வண்ண நிலவனின் எஸ்தர் மற்றும் லா.ச.ரா.வின் பச்சைக் கனவு கதைகள் நினைவிற்கு வந்தது. இந்தக் கதை ஜெமோ,எஸ்ரா,சுஜாதா என்று யாருடைய பரிந்துரையிலும் இல்லாமல் இருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது. இதை வேறு யாராவது இன்ப அனுபவமாக படித்தது உண்டா?

காலனும் கிழவியும் மற்றும் அபினவ் ஸ்நாப் சுமாராகத் தான் இருந்தன.

வேதாளம் சொன்ன கதை: மிகவும் பிடித்திருந்தது. ஒரு பறவையின் மூலம் கதையை நகர்த்தியிருக்கிறார். கட்டாயம் படிக்க வேண்டிய கதை.

விநாயகர் சதுர்த்தி: கடவுள் நம்பிக்கை, மறுப்பு வைத்து பின்னப்பட்ட சூப்பர் கதை.

ஒரு நாள் கழிந்தது எழுத்தாளளின் வறுமை கதைக் கரு. அவர் வாழ்க்கை அனுபவமா?

மனித இயந்திரம்: 45 வருட ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்டோர் குமாஸ்தா மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு கணப் பிழை பற்றிய விவரிப்பு தான் கதை. மற்றுமொரு மாஸ்டர் பீஸ்.

நாசக்கார கும்பல்: அந்த கால கட்டத்தில் இருந்த ஜாதி வித்தியாசங்கள் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கதையை தமிழ் நடைக்காகவே படிக்கலாம். புதுமைப் பித்தனின் எழுத்து நடையின் உச்சம் (நான் படித்த வரை) என்று இதைக் கூறலாம்.

உபதேசம், புரட்சி மனப்பான்மை எனக்கு ரொம்ப ரசிக்கவில்லை.

மனக்குகை ஓவியங்கள் () : இதில் ஏசுவில் ஆரம்பித்து சிவன் வரை எல்லா கடவுளையும் ஒரு பிடி பிடித்துள்ளார். சுவையாக இருந்தது.

சாப விமோசனம் இராமாயணத்தில் வரும் அகலிகையை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறப்பான கற்பனை. இதில் கைகேயி - அகலிகை மற்றும் சீதை - அகலிகை விவாதங்கள் சிந்தனை தூண்டுவதாக உள்ளது. இதை வைத்து ஒரு நாவல் எழுதி இருக்கலாம்.இந்தத் தொகுப்பிலேயே மிகச் சிறந்த கதை என்று கூறலாம்.

இவர் கதைகளில் வறுமை, இழப்பு, கடவுள் நம்பிக்கை அல்லது மறுப்பு பற்றிய தேடல் மிக அழகாக, இயற்கையாகக் கை கூடி வருகிறது.

படிக்கவில்லை என்றால் கட்டாயம் படித்துப் பார்க்கவும்.

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகளில் ஒன்று மனித இயந்திரம்.

ஜெயமோகன் சிபாரிசில் இடம் பெறும் கதைகள்:


ஒருநாள்கழிந்தது
சாமியாரும் குழந்தையும் சீடையும்
காலனும் கிழவியும்
சாபவிமோசனம்
வேதாளம் சொன்ன கதை

இங்கே கொடுக்கப்பட்டுள்ள சிறுகதைகள் இணைப்புக்களுக்கு அழியாச்சுடர் ராமுக்கும், சுஜாதா பரிந்துரைக்கு சிலிகான் ஷெல்ப் RV,chennailibrary.com க்கும் நன்றிகள்.

திங்கள், 8 நவம்பர், 2010

தொலைக் காட்சியில் தீபாவளி



என் தொழில் முறை குடும்ப உறவுகள் எல்லாம் சிங்காரச் சென்னையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் போது, இங்கு அலுவலகத்தில் கடமை தவறாமல் வேலை. (யாருமே இல்லாத டீ கடைல யாருக்குடா டீ ஆத்தர? உன் கடமை உணர்ச்சிக்கு ஓர் அளவே இல்லையடா? - என்று விவேக் புலம்பல் நினைவுக்கு வருதா?). புலம் பெயர்ந்ததிலிருந்து தீபாவளி அப்படி ஒன்றும் மெய்சிலிர்க்கும் அனுபவமாக இல்லை. உறவினர்கள் இல்லாத தீபாவளி பெரிதாக ரசிக்காது. விடுமுறை இல்லை. நான்கு மணிக்கு எழுந்து வீடு முழுவதும் விளக்கைப் போட்டு, என்னை தேய்த்து குளித்து, பட்டாசுகளை பங்கு போட்டு - ஒரு முறைக்கு நூறு முறை சரி பார்த்து - தனி சுகம். நினைவில் வாழ்வதை யார் தான் தடுக்க முடியும்.

தொலைக் காட்சி மூலம் தீபாவளி தமிழகத்தை காணுவது தான் சிறந்த வழி. விடுமுறை இல்லாததால் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் DVR - இல் பதிவு செய்து பார்த்தேன். எல்லா நிகழ்ச்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் சினிமா தொடர்பு கொண்டவைகள்.

சன் தொலைக் காட்சியில் "சூப்பர் ஹிட்" (அப்படின்னா சன்னின் விளக்கம் என்ன என்று கேட்க வேண்டும்) முதன் முறையாக (கடைசியாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்) "தீராத விளையாட்டுப் பிள்ளை" சினிமா. சகிக்கவில்லை. பத்து நிமிடம் கூட பார்க்க முடியவில்லை.அடுத்த படம் "சுறா புகழ்" விஜய் நடித்தது. சுறா வந்த பிறகு இணையத்தில் வெளிவந்த ஜோக்குகள் படித்ததிலிருந்து சுறா விஜய் தான் கண் முன் வந்துத் தொலைக்கிறார். விஜய் படமும் ruled out.



பிறகு ஒரே எந்திரன் மயம் தான். எந்திரன் உருவான விதம் கொஞ்சம் பார்த்தேன்.நிறைய உழைப்பு தெரிந்தது. விளம்பர இடை வேளையின் போது ஜெயாமாக்ஸ் (கொஞ்ச நாட்களுக்கு இலவசம்) பார்த்தால், யாரோ ராகவேந்திரர் (புதிய பாடகர் போல) பேட்டி. சிரமப்பட்டு பழைய யேசுதாஸ் பாடலை பாட முயற்சித்துக் கொண்டிருந்தார். சிரமப்பரிகாரம் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். ரஜினியின் பேட்டி சொதப்பல். பேசாமல் ரஜினியே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி இருக்கலாம். புதிதாக ஒன்றும் இல்லை. ஆக மொத்தம் "ஒரு நட்சத்திர" தீபாவளி கொண்டாட்டம் தான் சன்னுக்கு.



ஜெயாவில் விவேக் எப்போதும் போல வந்து போனார். சுமார் தான். கார்த்திக் நிகழ்ச்சியை விட பிரபு பேட்டி பரவாயில்லை.கமலஹாசன் கலந்துரையாடலில் தமிழைக் காப்பாற்ற அறைகூவல் விடுத்தார். அதை இன்று யாரெல்லாம் காப்பாற்றி வருகிறார்கள் என்று அடையாளம் வேறு காட்டினார். சுகாசினியின் சித்தப்பா சந்தேகமில்லாமல். நல்ல நடிகர். இவர் நடிப்பு ரசிக்கக் கூடியது.

"Kings in Concert" என்ற ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் இணைந்து வழங்கிய இசை நிகழ்ச்சி தான் எனக்கு மிகவும் பிடித்த உருப்படியான ஒன்று. இருவரும் பின்னி எடுத்து விட்டார்கள். ஹிந்துஸ்தானி வேறு தெரிந்ததால் சங்கதிகள் வந்து விழுகின்றன. சங்கரின் "பெஹாக்" மற்றும் ஹரியின் "சுட்டும் சுடர் விழி" (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) அமர்க்களம். இறுதியில் இருவரும் சேர்ந்து "சிந்து பைரவியில்"(ஹிந்துஸ்தானியில் "பைரவியா"?) பாடியது ஆனந்தம் ஆனந்தம் தான். இந்த இசை மழையை தவற விட்டிருந்தால் இங்கே கிளிக்கவும்.

ஒன்றிரண்டு சினிமா தொடர்புள்ள தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுடன் தீபாவளி கொண்டாடும் நாள் வருமா?