திங்கள், 13 ஏப்ரல், 2009

நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -1


உயிரோசை இதழில் வெளியானது
பொதுவாகத் தமிழ்நாட்டில் அந்த நாட்களில் நகரப் புறங்களில் இருந்த குடும்பங்களில் தவறாமல் மாநில மற்றும் அகில இந்திய செய்திகள் வானொலியில் கேட்பது,நடைமுறை அரசியல் மற்றும் கிரிக்கெட் பற்றி விவாதிப்பது,தினசரி பத்திரிகைகள் படிப்பது வாழ்க்கையின் அங்கமாக இருந்தது.எனவே சிறு வயது முதலே இயற்கையாகவே எனக்கு அரசியல் மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டானது. என் நினைவில் இருக்கும் முதல் பொதுத் தேர்தல் நடந்த வருடம் 1971. அப்போது நான் படித்த முனிசிபல் உயர்நிலைப் பள்ளி ஈரோட்டில் உள்ள கருங்கல் பாளையத்தில் இருந்தது.ஒரு நாள் நடந்து செல்லும் போது,காமராஜ் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்று மிகப் பெரிய கூட்டம் காத்திருந்தது. ஈ.வி.கே.சம்பத் தான் காங்கிரஸ் சார்பில் நின்ற வேட்பாளர்.சிவாஜியும் பிரச்சாரத்திற்கு வந்த போது முதன் முறையாக அவரைப் பார்த்தேன்.காமராஜுக்கும்,சிவாஜிக்கும் கூட்டம் வந்ததே தவிர தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து சந்தித்த முதல் தேர்தல். இந்திரா காந்தி ஒரு புறம். மற்ற காங்கிரசின் மூத்த தலைவர்களான காமராஜ்,நிஜலிங்கப்பா,மொரார்ஜி போன்றவர்கள் மற்றொரு புறம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திராவை முழுவதும் ஆதரித்தது.தமிழ் நாட்டில் அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு கருணாநிதி தலைமையில் தி.மு.க. தேர்தலைச் சந்தித்தது. இந்திரா காங்கிரசுடன் தி.மு.க கூட்டணி அமைத்திருந்தது.தமிழ் நாடு சட்ட மன்றத்தைக் கலைத்து பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் தி.மு.க சந்தித்தது. தி.மு.க எல்லா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட சம்மதித்து,இந்திரா காங்கிரஸ் 20௦ நாடாளு மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டதாக நினைவு.இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது.அகில இந்திய அளவில் இந்திராவுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.தனிப் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் மத்தியிலும்,தி.மு.க மற்றும் கருணாநிதியின் மீது கடுமையான ஊழல் மற்றும் நிர்வாகச சீர் கேடுகள் கூறப்பட்ட போதும் 184 சட்டமன்றத் தொகுதிகள் வென்று தி.மு.க தமிழ் நாட்டிலும் ஆட்சி அமைத்தன.பாராளுமன்ற வெற்றியைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டு இறுதியில் நடந்த பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்றதில்,இந்திராவின் மதிப்பு மக்கள் மத்தியில் பெருமளவு உயர்ந்தது.




இந்திராவின் ஆட்சியில் வெளிநாட்டுக் கொள்கையில் மிக உறுதியாக இருந்தார்.பாகிஸ்தானுடனான போருக்கு முன்பு உலகத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியது மற்றும் ரஷ்யாவுடனான உடன்பாடு,போரில் வெற்றி அவருக்கு மிக நல்ல பெயரையும்,மக்கள் மத்தியில் ஆதரவையும் பெருக்கியது.பசுமைப் புரட்சித் திட்டத்தை அமல்படுத்தியதும் அவர் ஆட்சியின் சிறப்பு அம்சமாகும்.மிகவும் சர்ச்சைக்கு உள்ளான பொக்ரானில் 1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நடந்த அணுகுண்டு சோதனை இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் உயரச் செய்தது.

அதே நேரத்தில் 1972ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி விலைவாசி ஏற்றத்திற்கு வித்திட்டது.பணவீக்கம் அதிகமானது.அரசின் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தன."ஏழ்மையை விரட்டுவோம்" என்ற முழக்கத்துடன் 1971ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும்,அது ஒரு கனவாகவே இருந்தது.இதற்கு நடுவில் குஜராத்தில் மொரர்ஜியும்,பீகாரில் ஜெயப்ரகாஷ் நாராயணனும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெரிய அளவில் மக்களைத் திரட்டினார்கள். இந்தப் பலமுனைத் தாக்குதலை இந்திரா காந்தியின் அரசு தாக்குப் பிடிக்க முடியாமல் திண்டாடியது.பலவிதமான தொழிலாளர் போராட்டங்கள்,நிறுவன மூடல்கள் மற்றும் மிகப் பெரிய அளவிலான இரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் என்று நாடே அல்லோகலப் பட்டது.வலுவான எதிர்கட்சி இல்லாத நிலையிலும்,விலைவாசி ஏற்றம்,பணவீக்கம் மற்றும் ஊழல் முதலியவைகளால் காங்கிரஸ் ஆட்சி மிகவும் தொல்லைக்கு உள்ளானது.

அதிகார பலம்,பதவி மோகம்,அவருக்கு எதிராக வந்த அலகாபாத் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு,வேகமாக இழந்து வந்த மக்கள் ஆதரவு இந்திரா காந்தியை யாரும் நினைத்துப் பார்க்காத முடிவை எடுக்க வைத்தது.இந்திய ஜனநாயகத்தின் அனைத்துக் கதவுகளையும் மூடும் விதமாக 1975ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி ‘அவசரநிலை பிரகடனத்தை’ அமல்படுத்தினர் இந்திரா.எல்லா முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களையும் சிறையில் அடைத்தார். கடுமையான பத்திரிகைத் தணிக்கை அமலானது.வானொலியில் சதா சர்வ காலமும் இந்திராவின் புகழ்தான். நல்ல வேளை அந்தக் காலத்தில் தொலைக்காட்சி இல்லை.20௦ அம்சத் திட்டம் என்ற ஒன்று தாரக மந்திரம் ஆன காலகட்டம் அது.ஆனால் எந்த வேலை நிறுத்தமும் நடக்கவில்லை.ஆண்டின் வளர்ச்சி 8% உயர்ந்தது.அரசு அலுவலங்களில் தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு வந்தது மிகவும் ஆச்சரியமாகப் பேசப்பட்டது அந்தக் காலத்தில்.

அவசர நிலை பிரகடனத்தைப் பயன்படுத்தி அதிகார துஷ்ப்ரயோகம் பெரிய அளவில் நடந்தது.சஞ்சய் காந்தி குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையை மக்கள் விருப்பத்திற்கு மாறாக பெரிய அளவில்,குறிப்பாக,வடஇந்தியாவில் செயல் படுத்தினார். மக்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.ஆனால் தமிழ் நாட்டில் நிலைமை வேறு மாதிரி இருந்தது. கருணாநிதி இந்திராவையும்,அவசர நிலையையும் கடுமையாக எதிர்த்தார். ஜார்ஜ் பெர்னண்டோஸ் போன்ற இந்திரா எதிர்ப்பாளர்கள் தமிழ் நாட்டில் தங்கி இருந்தார்கள். மேலும் தமிழ் நாட்டில் அரிசிப் பஞ்சம் தலை விரித்தாடியது.அப்போதுதான் படி (ஒன்றரைக் கிலோ) என்று விற்கப்பட்டு வந்த அரிசி கிலோ என்ற அளவுடன் மார்க்கெட்டில் வாங்கும் நிலை ஏற்பட்டது.1975ஆம் ஆண்டு கிலோ அரிசியின் விலை 8/= ரூபாய் அளவுக்கு விற்றது.எம்.ஜி.ஆர் இந்திரா காந்தியை ஆதரித்தார்.இந்திரா காந்தி கருணாநிதியின் அரசை 1976ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கலைத்து,ஆயிரக்கணக்கான தி.மு.க வினரை ‘மிசா’ சட்டத்தில் சிறையில் அடைத்தார்.மத்தியத் தொகுப்பில் இருந்து இந்திரா காந்தி அரிசி கொடுத்து தமிழ்நாட்டில் நிலைமையை சீர் செய்ய முயன்றார். அப்போது இருந்த கருணாநிதியின் தைரியத்தையும்,போர்க்குணத்தையும் இன்று காங்கிரஸ் மற்றும் சோனியாவின் முன்பு பாதிரியார் முன் மண்டியிட்டு பாவமன்னிப்பு கேட்கும் பக்தன் இருப்பதைப் போல் உள்ள கருணாநிதியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகவும் பரிதாபமாகவும்,வேதனையாகவும் உள்ளது.என்ன செய்வது காலத்தின் கட்டாயம்.



அவசர நிலையை ஜன சங்கம் (அன்றைய பா.ஜ.க.),இடது கம்யூனிஸ்ட்,தி.மு.க மற்றும் சோசலிஸ்டுகள் கடுமையாக எதிர்த்தார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் துக்ளக்,பத்திரிகைத் தணிக்கையை மீறியும் அரசுக்கு எதிராகச் செய்திகள் வெளியிட்டார்கள். ‘சர்வாதிகாரி’ என்று என்றோ வந்த படத்தின் விமர்சனம் வெளியிட்டு சோ தன் எதிர்ப்பைத் தெரிவித்தது இன்றும் மறக்க முடியாதது.

மொரார்ஜி தேசாய் தனிமைச் சிறையில் இருந்த போது பன்சிலால் என்ற காங்கிரஸ் அமைச்சர் அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.அந்த அறை வசதி குறைவாக இருந்ததைப் பார்த்து மொரார்ஜியிடம் "இந்த அறையில் போதுமான வசதி செய்து கொடுக்கட்டுமா" என்று வினவியுள்ளார்.அதற்கு மொரார்ஜி எனக்குத் தேவையில்லை.ஆனால் நீங்கள் இன்னும் சிறிது நாளில் இங்கு வரப் போகிறீர்கள்.அறையை மேம்படுத்தினால் உங்களுக்கு வேண்டுமானால் அது உதவும் என்று கூறியதாகச் செய்திகள் வந்தன.

உலக நாடுகளின் அழுத்தத்தால் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையிலிருந்து விடுவித்து பொதுத் தேர்தலை அறிவித்தார் இந்திரா காந்தி.அவசர நிலையை எதிர்த்த கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘ஜனதா கட்சி’ உருவானது.வட இந்தியாவில் காங்கிரஸ் படு தோல்வியைத் தழுவியது.இந்திரா காந்தி ரேபரிளியில் தோற்றது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் தென் மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.அவசர நிலையின் அத்து மீறல்கள் பெருமளவு தென் மாநிலங்களில் இல்லாதது முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. தமிழ் நாட்டில் அண்ணா தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.காமராஜ் இல்லாத பழைய காங்கிரஸ் தி.மு.க உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. வட சென்னையில் அன்று எம்.ஜி.ஆரின் வலது கரமாக இருந்த நாஞ்சில் மனோகரனைத் தோற்கடித்ததுதான் ஒரே சாதனை.

தொடரும் ........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக