வெள்ளி, 11 ஜூன், 2010

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை..




ஒவ்வொரு நாட்டில் வாழும் போதும் வெவ்வேறு பிரச்சனைகள். சில நன்மைகள்.சில கஷ்டங்கள்.சில இழப்புக்கள்.தேடிராயிடின் (Detroit) பிரச்சனைகள் உலகப் பிரசித்தம். வேலை இழப்புக்கள். வீட்டின் விலைகள் படு வேகமாக சரிதல். பள்ளிகள் மூடுதல். இன்று வேலை இருக்கும். நாளை என்னவாகுமோ என்ற கவலை. பல நண்பர்கள் இந்த ஊரை விட்டுப் போதல். சம்பளக் குறைப்பு. அதே நேரத்தில் விலைவாசி ஏறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் முதல் முதலாக இந்த ஊருக்கு வந்த போது நிலைமை இதற்கு நேர்மாறாக இருந்தது.

இந்த பத்து வருடத்தில் பல சொந்த நன்மைகளும் நானும் என் குடும்பத்தாரும் அடைந்துள்ளோம். குறிப்பாக சில மறக்கவே முடியாத நண்பர்கள் கிடைத்தார்கள். என் பெரிய மகனுக்கு ஒரு சிறந்த, உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது. அவன் பாஸ்டன் செல்வதற்கு முன் இந்தியா சென்று உறவினர்களையும் சந்தித்து, நாம் வசித்து வளர்ந்த ஊரை எல்லாம் பார்த்து வரலாம் என்று முடிவு செய்தோம்.

இதற்கிடையில் சிங்கப்பூரில் என் மச்சினன் குடும்பம் மற்றும் மாமியார், மாமானார் அவர்களின் அன்பான அழைப்பை மறுக்க முடியவில்லை. எங்களுக்கும் அவர்களைப் பார்த்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை. அவர்களைப் பார்த்து சில நாட்கள் தங்கிச் செல்லலாம் என்று ஒரு திருப்பம். ஆகா சிங்கப்பூரில் ஆறு நாட்கள் வாசம். பிறகு சிங்காரச் சென்னைக்கு ஜூன் 24 ஆம் தேதி வருகை.

ஐந்து வருடத்திற்குப் பின் உறவினர்களை பார்ப்பதற்கு மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி.
சென்னை எப்படி இருக்கும்? விலைவாசி மிகமிக ஏறிவிட்டதாக என் அம்மா கூறினார்கள். மற்ற படியுள்ள மாறுதல்களைக் கண்டுகொள்ள ஆவலாக் உள்ளது. சென்னையைத் தவிர தாராபுரம் (ஈரோடு), கொடைக்கானல் மற்றும் திருநெல்வேலி சென்று வர உத்தேசம். சில பதிவர்களைக் கூட பார்க்க ஆவல் தான். ஆனால் நான் ஒன்றும் பிரபல பதிவர் அல்ல. ஏதோ நேரம் கிடைத்தால் எழுத வேண்டும் என்ற ஆவலை பூர்த்தி செய்து கொள்கிறேன்.



எழுபதிகளில் நெல்லைக்கு புகை வண்டி ரயில் தான். ஒரேயொரு வண்டிதான். ஐந்து மணி வாக்கில் சென்னையில் கிளம்பினால் மறு நாள் காலை 11:30 மணிக்கு புகைவண்டி நெல்லையை அடையும். இன்று எத்தனை மாறுதல்கள். பேருந்து நிலையம் கூட இடம் மாறிவிட்டது என்று கூறுகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது ஊசி கோபுரத்தில் இருந்து சுலோச்சனா பாலம் வரை இரு பக்கமும் பெரிய பெரிய மரங்கள். பகலில் வெயிலே தெரியாமல் சைக்கிளில் சுகமாக பயணம் செய்ய முடியும்.



தாராபுரம் இன்றும் ரயில் வண்டி இல்லாத ஓர் ஊர் தான். ஆனால் மற்றபடி முன்னேறியிருக்கும் என்று நினைக்கிறன். தாரையிலிருந்து பழனிக்குப் போவது ஒரு சுகமான அனுபவம். அந்தப் படிக்கட்டில் ஏறுவது சுவையான அனுபவம். வேகமாக மேலே ஏறி வயதானவர்கள் வருவதற்கு காத்திருத்தல் ஒரு பெருமை கலந்த சந்தோஷம்.

எல்லா இடமும் சுற்றி மீண்டும் அமெரிக்கா வந்தவுடன் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று உள்ளேன்.

9 கருத்துகள்:

  1. பொயிட்டு வந்திட்டு அவசியம் அனுபவங்களை எழுதுங்க...

    பதிலளிநீக்கு
  2. cant believe man, 5 years not seen parents.

    Dude money is not the only thing in the life.

    பதிலளிநீக்கு
  3. தேகா, கட்டாயம் எழுதுகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ராம்ஜி. ஆனால் பெற்றோர்கள் இங்கு வந்து செல்லலாம் என்பதை மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் பணமே எல்லாம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. தாராபுரத்திற்கு வாங்க..வரவேற்க காத்திருப்போம்ல்ல.

    பதிலளிநீக்கு
  6. //என் பெரிய மகனுக்கு ஒரு சிறந்த, உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது//
    Is that Harvard? Convey my best wishes to your son!
    Thyagarajan

    பதிலளிநீக்கு
  7. நன்றி ஐயா. நிச்சியம் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஐயா. என் தாய் மாமா தாராபுரத்தில் வசிக்கிறார். அங்கு வரும் போது சந்திக்கலாம். உங்கள் அலைபேசிக்கு அழைப்பு கொடுக்கிறேன்.

    நட்புடன் பாஸ்கர்,

    பதிலளிநீக்கு