செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஓர் ஆசிரியரின் நினைவாக ....4

எத்தனையோ ஆசிரியர்கள் கல்வி கற்றுக் கொடுக்கிறார்கள். பலரையும் நினைவில் வைத்திருப்போம். ஆனால் அதில் சிலர் மட்டும் ஏனோ அடிக்கடி நினைவில் வந்து மறைவார்கள். அப்படிப் பட்ட ஓர் ஆசிரியர் பற்றிய சிறிய குறிப்பு. அதிலும் இந்த ஆசிரியர் எனக்கு பாடம் நடத்தியதில்லை. இருந்தும் ஏன் நினைவில் இருக்கிறார்?

என்னுடைய ஐந்தாம் வகுப்பை ஈரோடிலுள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் படித்தேன். நாங்கள் இருந்த வீடு சண்முகம்  தெருவில் இருந்தது. அந்தத் தெருவில் ஒரு கோடியில் "நம்நாடு" முடிதிருத்தகமும், அடுத்தக் கோடியில் "சாந்தி" ஐஸ்கிரீம் கடையும்  இருந்தது என நினைவு. தெருவின் நடுவில் "சிங்காரம் சலூன்" என்ற கடை. எங்கள் வீட்டிலிருந்து ஐந்து நிமிடத்தில் பள்ளியை அடைந்து விடலாம். பள்ளியிலிருந்து ஐந்து நிமிடத்தில் பழைய ஈரோடு மார்கட்டையும், பஸ் ஸ்டாண்டையும் அடைந்து விடலாம். அங்கு கிருஷ்ணா என ஒரு சினிமா தியேட்டர் இருந்தது என நினைக்கிறேன். அப்போது தான் கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவி வகித்து " ஓஹோ " என்று கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்.

என் வகுப்பிற்கு தலைமை ஆசிரியை தான் வகுப்பாசிரியரும். அவரை பெரியக்கா என அழைப்போம். பெரியக்கா எனில் வேறு பொருள் உண்டு என கல்லூரியில் படிக்கும் பொது தான் தெரிந்தது. தலைமை ஆசிரியைக்கு முதன்மையான இடம் இருந்தாலும், மாணவர்களைப் பொறுத்த வரை "ஆதி நாராயணன்" என்ற ஆசிரியர் தான் பெரிய ஆளுமை. கொஞ்சம் குட்டையாக கருப்பாக கூர்மையான பார்வை உண்டு. அவர் நடந்து வந்தாலோ, கால்  மேல் கால் போட்டுக் கொண்டு அமர்திருப்பதைப் பார்க்கில்லோ  மாணவர்கள் மிகவும் சமர்த்தாக நடந்து கொள்வார்கள். அவர் கணிதப் பாடம்  சொல்லிக்கொடுப்பார். வீட்டுக் கணக்கு செய்யா  விட்டால் தண்டனை கடுமையாக இருக்கும் என அவரிடம் படிக்கும் நண்பர்கள் கூறுவார்கள்.

மேலும் எந்த மாணவர்கள் பிரச்சினை ஆனாலும் அது ஆதி வாத்தியாரிடம் தான் பஞ்சாயத்துக்குப் போகும்.. அவர் பெயரைக்  கேட்டாலே மனதில் பயம் படர்ந்து விடும். அவருக்கு எப்படி அப்படி ஒரு இமேஜ் உண்டாகியது என்று இன்று நினைத்தாலும் ஆச்சிரியமாக இருக்கிறது. இதற்கும் அவர் அடிக்கக் கூட மாட்டார். கண்ணாடியை சற்று தளர்த்தி பார்த்து கேட்கும் கேள்வியில் உண்மை வெளி வந்து விடும். வேறு என்ன அரை மணி முட்டி போடா வேண்டும் இல்லை பெஞ்சில் ஏறி  நிற்க வேண்டும். அதிகபட்சம் "அப்பாவக் கூப்டு பேசவா" என்ற மிரட்டல். நானும் ஒரு முறை அவர் முன் சென்று நிற்கும் நிலைமை ஏற்பட்டது.

அப்போது பள்ளியில் சில மாணவர்களுக்கு மந்திரி பதவிகள் கொடுப்பது வழக்கம். அது படிப்பு, நடத்தை பொறுத்தது. ஜெகதீசன் என்பவன் முதலமைச்சர். எனக்கு விளையாட்டு மந்திரி ஆகா வேண்டும் என்று ஆசை. ஏனெனில் அப்போ தான் ஒவ்வொரு வகுப்பு முடிந்தவுடனும் வட்டமாக பித்தளை நிறத்தில் தொங்க விடப் பட்டுள்ள இரும்பில் மணி அடிக்கலாம். காலை  இரண்டாவது வகுப்பு முடிந்ததும் இரண்டு மணி அடித்தால் இடைவேளை விடப்படும். ஒரு நாள் நான் ஆர்வக் கோளாரில் ஒரு மணி அடிப்பதற்கு பதில் இரண்டு மணி அடித்து விட்டேன். மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறி விட்டார்கள். இன்னும் இரண்டு நாளில் இன்ஸ்பெக்டர் வேறு வருவதாக இருந்தது. அவ்வளவு தான். ஆதி வாத்தியார் முன்பு ஆஜர். ஏதோ அழுது மன்னிப்புக் கேட்டு அவர் வீட்டிற்கு சொல்லாமல் பார்த்துக் கொள்ள பட்ட பாடு  இன்னும் மறக்க வில்லை. இன்று நினைத்தால் சிரிப்பாக வருகிறது.

ஆனால் அந்த ஆதி வாத்தியார் என் பெரியப்பாவுக்கு நண்பர். அவர் இந்த விஷயத்தை அவரிடம் பகிர்ந்து இருவரும் சிரித்துள்ளர்கள். அதன் பிறகு நான் ஆறாம் வகுப்பு சென்ற போது என் பெரியப்பா என்னிடம் சொல்லிச் சிரித்தார். மேலும் ஆதி ஒரு மென்மையான குணம் கொண்டவர். அவருக்கு எப்படி இப்படி ஓர்  ஆளுமை என பெயரெடுத்தார் என  என் பெரியப்பாவும் கேட்டார். ஆதி வாத்தியார் இன்று இருந்தால் குறைந்தது 80 வயதிருக்கும்.தங்க ராஜ் என ஒரு நண்பனும் இருந்தான். ஈரோடிலிருந்து இடம் பெயர்ந்தவுடன் நண்பன் பெயரோடு நட்பு நின்று விட்டது.........

1 கருத்து:

  1. அருமை...

    தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    பதிலளிநீக்கு