சனி, 29 செப்டம்பர், 2012

அனிதா இளம் மனைவி - சுஜாதா


குமுதத்தில் வந்த நைலான் கயிறு சுஜாதாவின் முதல் தொடர்கதை. சுஜாதா எழுதிய அடுத்த தொடர்கதை அனிதா. அன்றிருந்த எஸ்.ஏ பி குமுதம் அனிதா என்ற பெயரை "அனிதா - இளம் மனைவி" எனப் பெயரிட்டு வெளியிட்டது. கொலை - கொலையாளி யார்? இதுதான் கதைக்கரு. தமிழில் இதைப் போன்ற கதைகளை இறுதிவரை சுவை குறையாமலும், சஸ்பென்ஸுடனும் எழுதுவதில் சுஜாதாவுக்கு நிகர் எவருமில்லை என நினைக்கிறேன்.
 
ஷர்மா - கொலை செய்யப்பட்டவர் - கடுமையான உழைப்பாளி.- ஏகப்பட்டச் சொத்து. 
அனிதா - ஷர்மாவின் 29 வயதான இளம் இரண்டாவது மனைவி. 
மோனிக்கா - ஷர்மாவின் ஒரே மகள் - தன் அம்மாவை குழந்தைப் பருவத்தில் இழந்தவள் - ஹாஸ்டலில் வளர்ந்து அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்கிறாள்.
பாஸ்கர் - ஷர்மாவின் செக்ரடரி 
கோவிந்த் -  விசுவாசமான வேலையாள் 
வசந்த் இல்லாத கணேஷ் - வக்கீல் 
ராஜேஷ் - அவ்வப்போது வந்து போகும் இன்ஸ்பெக்டர் 
 
காரில் கோவிந்துடன் 14 ஆயிரம் (அந்த காலகட்டத்தில் பெரிய பணம்) எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் ஏற்படும் விபத்தில் ஷர்மா இறந்து போகிறார். இறந்த உடலில் சாட்டையால் அடித்த குறிகள் இருக்கின்றன. இறந்தது ஷர்மாதான் என அவரது இளம் மனைவி அனிதா அடையாளம் காட்டுகிறாள்.  கோவிந்தின் உடல் சம்பவ இடத்தில் இல்லை, அவன் காணாமலும் போய் விடுகிறான். எனவே அவன்தான் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கிறான் என எல்லோரும் கருதுகிறார்கள். ஆம், அது விபத்தல்ல கொலையாகவே இருக்கும், என போலீஸுக்கும் சந்தேகம். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்தான் இந்தக் கேஸை எடுத்து நடத்துகிறார். 
 

தாமத தகவல் கிடைத்து ஷர்மாவின் முதல் மனைவிவழி மகள் மோனிக்கா இந்திய வருகிறாள். அவளுக்கு அனிதாவைப் பிடிக்கவில்லை. நாய்க்குட்டியை  செயினில் கட்டிப் போடுவது போல் அனிதா தன் அழகால் தன் தந்தையைக் கட்டிவைத்து  விட்டாள் என அவளுக்குக் கோபம். மோனிக்காவுக்கும் அவள் தந்தை மீது எந்த பாசமும் இல்லை. அவள் ஷர்மாவின் சொத்தில் தன் பங்கைப் பெற்றுச் செல்ல முயல்கிறாள். ஆனால் ஷர்மா எழுதிய உயிலில் உள்ள பிரச்னையை முன்னிட்டு வக்கீல் கணேஷை சந்திக்கிறாள். கணேஷும் ஷர்மாவின் சாவில் ஏதோ மர்மம் இருப்பதாக நினைத்து  துப்பறியும் வேலையைத் தொடங்குகிறான். 
 
அனிதா, மோனிக்கா, பாஸ்கர் என எல்லோரையும் விசாரித்துப் பார்க்கிறான் கணேஷ். எல்லோருமே பொய் சொல்கிறார்கள். கணேஷுக்கு எல்லோர் மீதும் சந்தேகம். கோவிந்தும் கிடைத்தபாடில்லை. அனிதா மற்றும் ஷர்மாவின் அறைகளை சோதனை செய்கிறான் கணேஷ். எப்படியோ கோவிந்தின் ஒரு புகைப்படத்தை கண்டெடுக்கிறான். சாட்டையால் அடித்த காயங்கள் இருப்பதால் யாரோ ஷர்மாவைப் பழிவாங்கவே கொலை செய்திருக்கிறார்கள் என கணேஷ் நினைக்கிறான். அனிதாவின் இளமை மற்றும் கொள்ளை கொள்ளும் அழகும் அவளது பாத்திரப்படைப்புக்கு உயிரூட்டி இந்தக் கதையில் ஒரு முக்கியமான முடிச்சுக்குக் காரணமாக இருக்கின்றது. கணவனின் சொத்தே தனக்குத் தேவையில்லை, நிம்மதிதான் முக்கியம் என மிக அதிகப்படியாகவே அனிதா சொல்வதால் அவள் மீது சந்தேகம் வலுக்கிறது. 
 
கணேஷுக்கு இந்த விவகாரத்தில் இருந்து விலகும்படி மிரட்டல் வருகிறது. பாஸ்கர் மீது சந்தேகமுற்று அவன் வீட்டுக்குச் செல்லும் கணேஷ் அங்கு பாஸ்கரும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். எதுவும் புரியாத புதிராக இருக்கிறது. இதை அனிதாவிடம் தெரிவிக்க கணேஷ் தொலைபேசும்போது அனிதா தனக்கு பயமாக இருப்பதாகவும், அவனிடம் எல்லா உண்மையையும் சொல்வதாகவும் கூறுகிறாள். அவள் வீட்டிற்கு வந்தால் அங்கு அனிதா இல்லை தொலைபேசி மட்டும் தொங்கிக் கொண்டிருக்கிறது. கணேஷ் இறுதியில்  கொலையாளியைக் கண்டு பிடிக்கிறான். அது ஒரு எதிர்பாராத முடிவு, கணேஷுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.
 
சுஜாதாவின் எழுத்திலிருந்து சில வரிகள்:
 
"அனிதா அந்த அறையில் பாடிக் கொண்டிருந்தாள். சந்தன மணமும் ஷவரிலிருந்து பெருகும் இதமான வென்னீரும் மிக மென்மையான பதிந்த கற்களும், மிக மெதுவாக அவள் தன உடலைத் திரும்பித் திரும்பிச் சுடுநீரின் தொடுகையில் ஓர் அரை மயக்கத்தில் பாடிக் கொண்டிருந்தாள்.

தண்ணீர் துளிகள் அவள் உடம்பின் வளைவுகளில் சரிந்தன நேர்பட்டன தழைந்தன சொட்டின." 

சுஜாதாவின் இந்த வர்ணனைக்கு ஜெ. படம் வரைந்தால் எப்படியிருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!.
 
சுஜாதா எழுதியவற்றில் மிகச்சிறந்த கதை இது எனக் கூறமுடியாது. அவரது நடைதான் நம்மைப் படிக்கத் தூண்டுகிறது.  விஷுவல் ரைட்டிங்கை மிகச் சரளமாகக் கையாள்பவர் சுஜாதா. டெல்லியைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. இந்திராகாந்தி, அந்தக்கால டெல்லியின் அமைப்பு, M.D. ராமநாதன் சௌக்க காலத்தில் வானொலியில் பாடுவது என சமகால நிகழ்வுகள் நம்மைப் பின்னோக்கிக் கொண்டு செல்கின்றன. இன்றைக்கு சுஜாதாவைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு என் இளமைக் காலத்தில் சுற்றித் திரிவது போல இருக்கிறது.  

இந்தக் கட்டுரை ஆம்னிபஸ் வலைத் தளத்தில் ஏற்கனவே பதிவாகியது.

வியாழன், 27 செப்டம்பர், 2012

ஒரு கணிதக் கவிதை

மிக எளிய  கணிதக் கோட்பாட்டை பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தக்
கவிதையைப் படித்தேன்.(http://mathematicalpoetry.blogspot.com/) அதனை தமிழிலும் மொழி பெயர்க்க முயற்சித்தேன். ஆனால் மூலத்தின் இனிமையை என்னால் அடைய முடியவில்லை(என் நண்பர் உதவி செய்தும்). இருந்தாலும் இரண்டு விதமான  தமிழின் மொழி பெயர்ப்பைக் கொடுத்துள்ளேன். உங்களால் அதைச் செம்மைப் படுத்த முடிந்தால் பகிர்ந்து கொள்ளவும். கவிதை இங்கே.

 Outside, cold rain
maps a deep night's constants
around a (couple)^0    

x ^௦ = 1 என்ற மிக எளிய, அறிமுகக் கணிதத்தை பயன்படுத்தி கவிதைக்கு மேருகேற்றியுள்ளார்  கவிஞர். அதாவது எந்த ஒரு எண்ணின் அடுக்குக்குறியும் பூஜ்யமாக இருக்கும் போது அதன் மதிப்பு ஒன்றாகும்.


தமிழில்:

வெளியே, குளிர் மழை

(ஜோடி)^Oவைச் சுற்றி

அடர் இரவின் மாறிலிகள் வரையும் 

அல்லது

வெளியே, குளிர் மழை


வரையும் ஓர் அடர் இரவின் மாறிலிகள்

(ஜோடி)^Oவைச் சுற்றி

 மழை பெய்யும் போது அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஓர் அலாதி அனுபவம். அதுவும் குளிருடன் கூடிய மழையெனில் கேட்கவே வேண்டாம். தனிமையில் சூடான டீ அல்லது காபி குடித்துக் கொண்டே இனிமையான இசையுடன் ஒன்றரக்  கலந்து மழையை ரசித்தல்....இது ஒரு புறம்.

எந்த ஓர் அடர் இரவிலும் தனிமையும், பயமும் மாறாத தன்மை கொண்டவைகள்.அதில் துணையுடன் இணைந்து  மகிழ்வது .....மற்றொரு வகை ஆனந்தம்.

மழையே பனிமழையாக இருந்திருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும். கற்பனைக்கு எல்லை ஏது?

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

கணிதம் ஒரு சமயம்

கணிதமும் கவிதையும் மனதிற்கு இன்பம் தருபவை. அதிலும் இரண்டும் சேர்ந்தால் அதன் சுவையே தனி தான். நான் மிகவும் விரும்பி படிக்கும் ஒரு தளம் http://mathematicalpoetry.blogspot.com/. அதில் கீழே கொடுத்துள்ள சிந்தனைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் உகந்த ஒரு கார்டூன் பார்த்தேன். அதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கணிதம் விழுமியன்களால் கட்டப்பட்டது. சமயமும் அதே போல் தானா? இந்த கார்டூன் படித்து கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மூன்று விரல் - இரா.முருகன்

வேலையில்லாத் திண்டாட்டம் 1970 மற்றும் 80களில் ஒரு பெரிய சமூகப் பிரச்சனையாக இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில், இருந்தது என்பதை மறக்க முடியாது. பாலச்சந்தரின் "வறுமையின் நிறம் சிகப்பு" மற்றும் பாரதிராஜாவின் "நிழல்கள்" இந்தக் கருத்தை பிழியப்பிழிய மக்கள் முன் வைத்தன. அன்றைய முதல்வர் கருணாநிதி ஒரு பேட்டியில் வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு "திறமையுள்ளவர்களுக்கு இன்றும் வேலை கிடைக்கிறது" என்று பதிலளித்ததாக நினைவு. அப்போதெல்லாம் வங்கியில் வேலை கிடைத்துவிட்டால் அதிர்ஷ்டசாலி, புண்ணியவான் என்று பாராட்டு கிடைக்கும், கூடவே பெண்ணும் கிடைக்கும், கூடவே பணம், பொருள், வாகனம் இத்யாதி இத்யாதி.


ஆனால் 90 களில் நிலைமை முற்றிலும் மாறியது.எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற இருளில் இளைஞர்களுக்கு கணினி உலகம் விடிவெள்ளியாய் உதித்தது. கணிதம், அறிவியல், பொறியியல்,தமிழ், தெலுங்கு என எது படித்திருந்தாலும் கணினி உலகம் எல்லோரையும் பாகுபாடில்லாமல் அணைத்துக் கொண்டது."Trespassers will be appointed" என்ற கார்ட்டூன் பார்த்ததாக நினைவு. வருமானம் அதிகம். வெளிநாட்டுப் பயணம்.வெளிநாட்டு வாழ்க்கை என்று யாரும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டது.


ஆனால் அந்த கணினி உலகின் மறுபக்கம் பலருக்கும் தெரியாதது. அதுவும் ஒரு இருள்தான்.அந்த இருண்ட பகுதியைப் பேசுபொருளாகக் கொண்டதுதான் இரா.முருகனின் மூன்று விரல்கள் நாவல். கணினித் துறையில் வேலை பார்ப்பவர்களின் மன அழுத்தங்கள், மனிதாபிமானம் இல்லாமை, குறிப்பிட்ட வேலை நேரம் என இல்லாமல் தொடரும் வேலை பளு, தன் ஊழியர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் போதுநிறுவனங்கள் காட்டும் அலட்சியப் போக்கு போன்ற சகல பிரச்சனைகளையும் இந்தப் புதினம் தொட்டுச் செல்கிறது.

கணினி உலகில் கோவர்தன் கார்டன் எனவும்,ஸ்ரீராம் ஸ்ரீ என மாறுவது போல் சுதர்சன் சுதாவாகிறான் இங்கு. ஏதேதோ தொழில்கள் செய்யும் ரங்கா மென்பொருள் செய்யும் நிறுவனம் ஒன்றையும் நடத்துகிறான். அதில் வேலை பார்க்கும் சுதா இங்கிலாந்து பயணம். அங்கு சந்தியா என்ற மலேசிய தமிழ் பெண்ணின் சந்திப்பு காதலில் முடிகிறது. இங்கிலாந்திலிருந்து சுதா இந்தியா திரும்பி வருமுன் அவன் வேலை பார்க்கும்கம்பெனி வேறு ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. விமான சந்திப்பில் ஏற்பட்ட ஒரு தொடர்பின் விளைவு சுதாவின் வேலை மாற்றத்தில் முடிகிறது.

பிரபந்தம் படித்துக்கொண்டு அம்மா பேச்சைக் கேட்டு வாழ்ந்து வரும் அப்பா என சுதாவின் குடும்பம் ஊரில். பெற்றோரைச் சந்திக்க வருகிறான் சுதா. நண்பரின் மகளான புஷ்பவல்லியை திருமணம்செய்து வைக்க எத்தனிக்கும் பெற்றோர். சுதாவைத் திருமணம் செய்து கொள்ளத் துடிக்கும் புஷ்பவல்லி. தன் சந்தியாவுடனான காதலை வெளிப்படுத்த சுதாவிற்கு வாய்ப்பு கொடுக்காமல் அம்மாவுக்கு வரும் ஹார்ட்அட்டாக் எனச் செல்கிறது கதை.

புது வேலையில் தன் குழுவின் தலைவனாகத் தாய்லாந்து செல்கிறான் சுதா. அங்கு அவனும் அவனுடைய குழு உறுப்பினர்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதையொட்டி ஏற்படும் மனஅழுத்தங்கள் என்று விலாவாரியாக எழுதிச்செல்கிறார் ஆசிரியர். குறிப்பாக ராவின் கைது விவகாரம், அதே சமயம் திருமணம் செய்துகொள்ளுமாறு வரும் புஷ்பவல்லியின் தொலைபேசி போன்ற சுதாவின் சங்கடங்களையும், அதை அவன் எதிர்கொள்ளும் விதமும் மிக அழுத்தமாக இரா.முருகனால் சொல்லப்பட்டுள்ளன. புஷ்பவல்லியையும் திருமணம் செய்துகொள்ளாமல், சந்தியாவையும் செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர விபத்தில் இழக்கிறான் சுதா. பிறகு தன்னுடன் பணிபுரியும் வேறு பெண்ணை மணந்து அமெரிக்காவில் குடியேறுகிறான். இன்னொருவனைத் திருமணம் செய்து கொண்டுவசிதியாக வாழும் புஷ்பவல்லியை அங்கு சந்திக்கிறான்.

மூன்று விரல்கள் என்பது கணினியின் கீபோர்டிலுள்ள Ctrl+Alt+deleteஐக் குறிக்கிறது. பல சமயங்களில் விண்டோஸில் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு காரணம் அறிய முடியாது. ஆனால் தீர்வோ ஒன்றுதான். எல்லா பிரச்சனைகளுக்கும் சகல ரோக நிவாரணி Ctrl+Alt+deleteஐ இரண்டு முறை பயன்படுத்துதல். அது கணினியின் நினைவில் இருக்கும் எல்லாவற்றையும் அழித்து தன்னைப் புதிப்பித்துக்கொண்டு செயல்படத் துவங்கும். அதுபோல் இந்த நாவலில் சுதா, புஷ்பா என பலர் வாழ்க்கையிலும் நிகழ்வுகள் வந்து செல்கின்றன. இதைப் பொதுவாக எந்த மனித வாழ்க்கைக்கும் பொருத்திக் கொள்ளலாம். எல்லாருக்கும் எப்போதும் மூன்றுவிரல்கள்தான் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொண்டு தொடர உதவுகின்றன - Control+Alter+Delete.

இரா முருகன் சுஜாதாவின் நடையைப் பின்பற்ற முயன்றுள்ளார். வெகுசில இடங்களில் அது நன்குபொருந்தி வந்துள்ளது. மென் பொருள் தொழிலில் இருப்பவர்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் ஆற்றல் உறிஞ்சப்படுகிறது என்பதை நன்கு கூறியுள்ளார். ஆனால் இன்னும் அழுத்தமும், ஆழமும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பல இடங்களில் கதை மாந்தர்களின் எண்ணங்களும், செயல்களும் மேலோட்டமாகச் சொல்லப்பட்டுள்ளன. சிக்கல்கள் தீர்க்கும் இடங்கள் இன்னும் எதார்த்தமாக இருந்திருக்கலாம்.

இந்த நாவல் சினிமாவாக வந்துள்ளதா எனத் தெரியவில்லை. வரவில்லை எனில் ஆச்சரியம்தான். ஒரு சினிமாவிற்குத் தேவையானவை எல்லாம் இந்தக் கதையில் உள்ளன. கணினி தொழில்நுட்பம் சார்ந்த, முற்றிலும் புதிதான வாழ்க்கை முறையை ஆவணப்படுத்தும் நாவல்களில் இது முதன்மையான ஒன்று.

மூன்று விரல் - இரா.முருகன்கிழக்கு பதிப்பகம்368 பக்கங்கள். விலை ரூ. 150/-இணையத்தில் வாங்க: கிழக்கு / உடுமலை

இந்தக் கட்டுரை இந்த புத்தகங்கள் விமர்சிக்கும் http://omnibus.sasariri.com/2012/09/blog-post_4125.html தளத்தில் பதியப்பட்டது.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

வாழ்விலும் தாழ்விலும், மாறாத சிறந்த குண நலன்களும் மனித நேயமும் கொண்ட மனிதர்களை இன்றும் நாம் எதிர்கொள்கிறோம். ஆனால் அதன் சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். முப்பது வருடங்களுக்குமுன்கூட ஒரே தெருவிலோ, கிராமத்திலோ இருப்பவர்கள் ஒரே குடும்பம் போல் தான் இருந்து வந்தார்கள். இன்று , குறிப்பாக, நகரங்களில் பக்கத்து வீட்டில் கூட யார் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலைதான் உள்ளது. குடும்பத்துடன் வெளியூருக்குச் செல்ல நேர்ந்த என் நண்பர் ஒருவர் ஒரு வாரம் தன்னுடைய மீன் வளர்க்கும் தொட்டியைப் பாதுகாத்துக் கொள்ளச் சொல்லிக் தன் பிளாட்டில் இருக்கும் பலரிடம் கேட்டபோது ஒருவரும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதான் இன்றைய நிலை.


ஆனால் பாப்பி அம்மாள் மேல் பல குற்றங்களையும், வசவுகளையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கும் அண்டை வீட்டார்கள், பாப்பி அம்மாள் பிரசவ வேதனையில் அவதிப்படும்போது, அனைத்து வேற்றுமைகளையும் மறந்து நடு இரவில் அவளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். அந்த மனித நேயத்தை மிகவும் விரிவாக இந்தப் புனைவில் தகழி விவரித்துள்ளார்.


பாப்பி அம்மாள் தன் முதல் குழந்தையான பத்மநாபனைப்  பெற்ற  கையோடு கணவனை இழக்கிறாள். பாப்பி அம்மா தன் குழந்தையுடன் மிகவும் சிரமமான வாழ்க்கையை மேற்கொள்கிறாள். அப்போது தன் அண்டை வீட்டர்களான குட்டி அம்மா, நாணி அம்மா, பாரு அம்மா, காளியம்மா முதலியவர்கள்தான் பத்மநாபன் பசியறியாமல் வளர உதவுகிறார்கள். அவன் அந்த அன்பின் ருசியை இறுதி வரை மறக்காமல் இருக்கிறான்.

சூழ்நிலை காரணமாக நான்கு சக்கரம் (பழைய திருவாங்கூர் நாணயம்) கொடுத்த பாச்சு பிள்ளையுடன் உறவு கொண்டு பாப்பி அம்மாளுக்கு கார்த்தயாயினி என்ற மகள் பிறக்கிறாள். ஆனால் பாச்சுப் பிள்ளை தான் கார்த்தயாயினியின் தகப்பன் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறான். அதன் பிறகு பாப்பி அம்மாளுக்கு கோவிந்த நாயர் தொடர்பு நாராயணன் என்ற குழந்தையின் பிறப்பில் முடிகிறது.


பாப்பி அம்மாவின் முதல் மகனான பத்மநாபன் கோயம்பத்தூரில் வேலைக்குச் செல்கிறான். அவன் இரண்டு ஓணம் பண்டிகைக்கு வீட்டில் இல்லாமல் அந்த வருட ஓணத்திற்கு வரும் சமயம்தான் பாப்பி அம்மாள் கோவிந்தா நாயர் மூலம் கர்ப்பமாகி இருக்கிறாள் அவள் இதை எப்படி பத்மநாபனிடம் தெரிவிப்பது என்று தவிக்கிறாள். அண்டை வீட்டாரை பார்க்கச் செல்லும் போது தான் கேட்க நேரிடும் கேலிப் பேச்சுக்கு அவன் பொறுமை காக்கிறான். மேலும் அவனது காது பட பாட்டி (தந்தையின் அம்மா) வீட்டில் பேசப்படும் கூர்மையான சொற்களினால் மனம் நொந்து, அங்கு எதுவும் சாப்பிடாமல் வெளியேறுகிறான். பத்மநாபன் ஊர் செல்லும் வரை பாப்பி அம்மா வீட்டில் இருக்கும் கோவிந்த நாயர் அதன் பிறகு அங்கு வருவதை நிறுத்திக் கொள்கிறார். இதை நோட்டம் விடும் அண்டை வீட்டார் குட்டி அம்மா கணவன் குட்டன் உதவியுடன் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். அதற்கு பாப்பி அம்மாவின் சம்மதம் இல்லை எனத் தெரிந்தவுடன் அந்த முயற்சியை பாதியில் முடிகிறது.

இதன் நடுவில் பாலகிருஷ்ணன் நன்கு முன்னேறி பாண்டி நாட்டில் டீக்கடை வைத்து பணம் சம்பாதித்து சொந்தமாக நிலம் வாங்குகிறான். பாரு அம்மாவின் மகனான பரமேஸ்வரன் பிள்ளையைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அவனும் வீட்டிற்கு பணம் அனுப்புகிறான். இதைக் கேட்டு குட்டி அம்மாவும், குட்டன் பிள்ளையும் தங்கள் பிள்ளையான வாசுதேவனை பாலகிருஷ்ணனுடன் அனுப்ப முடியவில்லையே என்று சண்டை இடுகிறார்கள். ஆனால் ஒரு நாள் வீட்டில் பணத்தைத் திருடிக் கொண்டு வீட்டை விட்டு வாசுதேவன் ஓடிவிடுகிறான். அவனைக் காணும் பத்மநாபன் வாசுதேவனையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு வேலை போட்டுத் தருகிறான்.

பத்மநாபனை பாரு அம்மாவின் மகளான பங்கஜாக்ஷிக்கும், பரமேஸ்வரன் பிள்ளையை கார்த்தியாயினிக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என நாணியம்மா யோசனை கூறுகிறாள். இன்று வசதியாக இருக்கும் பாப்பி அம்மாள் இந்த சம்மந்தத்தை ஏற்றுக் கொள்வாளா என யோசிக்கிறார்கள். அவள் பத்மநாபனும், பாச்சுப் பிள்ளையும் தான் இதனை முடிவு செய்ய வேண்டும் என்றும், தனக்கு இதில் சம்மதம் எனவும் கூறுகிறாள். பத்மநாபனுடன் இருக்கும் வாசுதேவன் அங்கிருந்து மீண்டும் ஊர் திரும்பி பத்மநாபனைப் பற்றி அவதூறு கூறுகிறான்.

ஆனால் பத்மநாபனிடமிருந்து வரும் கடிதம் வாசுதேவன் பணத்தைத் திருடிக் கொண்டு ஓடி வந்துவிட்டான் என்ற செய்தியைத் தெளிவாக்குகிறது. பத்மநாபன் பரமேஸ்வரனுக்கு ஒரு ஓட்டல் வைத்துக் கொடுக்க முயற்சிப்பதாகவும், தானும் சிறிது பணம் சம்பாதித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கடிதத்தில் கருத்துத் தெரிவிக்கிறான். பாச்சுப் பிள்ளை பாப்பி அம்மாவின் வசதியைப் பார்த்து அங்கு வந்து ஒட்டிக் கொள்கிறார். அவர் முடிவும் பாப்பி அம்மாவின் வீட்டிலேயே நடக்கிறது. பாச்சுப் பிள்ளையை எரித்து இறுதிச் சடங்கை நாராயணன் செய்கிறான்.


இந்தப் புதினத்தைப் பொறுத்தவரை அந்தக்காலத்து கேரள மக்கள் வாழ்கையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. மனித நேயம், அண்டை வீட்டார் பொறாமை, தொழிலுக்காக இடம் பெயர்தல், தன்  இன மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல் என்ற பண்புகளை முன் வைக்கிறது.

பாப்பி அம்மாள் போல் பொறுமையும், சகிப்புத் தன்மையும் இருக்கும் ஒரு பாத்திரப் படைப்பு இன்றுள்ள சூழ்நிலையில் எந்த அளவுக்கு ஒத்து வரும் எனக் கூற முடியாது. ஆனால் கேரள மக்களின் கடும் உழைப்பு மற்றும் தொடர் முயற்சி ஒரு தொடர்கதை என்பதில் சந்தேகமில்லை. தமிழில் சு.ரா. வின் மொழிபெயர்ப்பும் வாசிக்க ருசியாகத்தான் இருக்கிறது. இதைக் காலத்தைக் கடந்து நிற்கும் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு எனக் கூற இயலவில்லை. இருந்தாலும் பாத்திரச் சித்தரிப்புகள் மேலோட்டமானவைகளாக இல்லை. ஒரு முறையேனும் படிக்கப்பட வேண்டிய நாவல்.

புதன், 12 செப்டம்பர், 2012

நயாகராவும் குற்றாலமும்


கனடா பகுதியில் இலாடம் வடிவில் இருக்கும் நயாகரா நீர்விழ்ச்சியின் அழகே அழகு. இயற்கையின் உயர்ந்த வரப் பிரசாதம். 173 அடி உயரத்திலிருந்து அடர்த்தியாக விழும் நீரைப் பார்க்கும் போது ஏற்படும் ஆச்சிரியம் அலாதியானது. சமீபத்தில் அமெரிக்க பகுதியில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் செல்லும் வாய்ப்பு  கிடைத்தது.











பயணப் படகில் நீர்விழ்ச்சியின் அருகில் செல்லும் சமயம், தண்ணீர் தெளிக்கும் சுகம் எழுத்தில் வடிக்க முடியாது. நயாகராவில் பல இந்தியர்களைப் பார்க்க முடியும். நானும் சென்னை தான். மந்தவெளி. நா பல்லாவரம். பெங்களுரு. பாம்பே என்று ஒரு மினி  பாரத விலாஸ்  வாழ் நாள் முழுது உழைத்து பெண்ணையோ, பையனையோ பொறியியல் படிக்க வைத்து டாலர் தேசம் அனுப்பி தங்கள் கடமையை நன்கு செய்து விட்டோம் என்ற பெருமிதம் பல பெற்றோர்களின் முகங்களில். முக்கால் வாசி பெண்ணிற்கு குழந்தை பேறு இல்லை மகனுக்கு இப்போது தான் குழந்தை பிறந்தது என்பதைக் கேட்கலாம். கடந்த 15 வருடத்தில் தான்  எத்தனை மாற்றங்கள்.

நயாகரா செல்லும் போது குற்றாலம் நினைவில் வராமல் போகாது. என்னடா நயாகராவைப் போய் குற்றலத்துடன் ஒபபிடுகிறானே என நினைக்கலாம். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.திருநெல்வேலி வாசம், தவறாமல் வருடா வருடம் செல்வதுடுண்டு. அது ஒரு காலம். அதிகாலை கிளம்பி ஒரு எட்டு மணி வாக்கில் குற்றாலம் சென்றடையலாம்.  இதமான தென்றல். காலை பசி. குற்றால ஓட்டலில் நல்ல அருமையான தோசை, இட்லி, வடை, பூரி என பல வித டிபன் வகைகள். வயிறார உண்டு, அருவியில் குளிக்கச் செல்வது ஒரு மறக்க முடியாத அனுபவம்.



அதிலும் குற்றாலத்தில் அந்த எண்ணை தேய்த்து மசாஜ் செய்து கொண்டு குளித்து வந்தால், மீண்டும் பசி தலை தூக்கும். மதிய உணவு அருந்தி விட்டு ஊர் திரும்பி வர பேருந்தில் ஏறி அமர்ந்தால், திருநெல்வேலி ஜங்ஷன் வந்து தான் உறக்கத்திலிருந்து கண் விழிக்கும்.அதெல்லோம் ஒரு கனாக்  காலம். அக்கறைக்கு இக்கரை பச்சை. சரி.  நயாகரா படங்கள் சிலதை பகிர்ந்து இருக்கிறேன்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

தகழியின் குணவதி - தமிழில் சு.ரா


புனைவுகளைக் கொண்டு  மனிதனின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கி அவை சார்ந்த சிக்கல்களையும், முரண்பாடுகளையும் வாசகனின் கண் முன்பு நிறுத்தும்போது எழுத்தாளன் இலக்கியத்தின் உச்சத்தை நோக்கிச் செல்கிறான். அவனது எழுத்தின் ஆழத்தைப் பொறுத்து படைப்பின் நிரந்தரத்தன்மையும், எழுத்தாளனின் இடமும் உறுதி செய்யப்படுகின்றன. வெகு சில எழுத்தாளர்களே சிறந்த இலக்கியங்களைப் படைத்தவர்கள் என்ற அங்கீகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட ஓர் எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை என்பதில்  எந்த சந்தேகமுமில்லை.

தகழியின் இரண்டாவது புதினமான "பதிதபங்கஜம்" 1934 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதனை சு.ரா தமிழில் "குணவதி" என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இதில், தகழி ஒரு விலைமாதுவின் மன ஓட்டத்தையும், உணர்ச்சிப் போராட்டங்களையும் ஆழமாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
"சொர்க்கத்திலிருந்து கேட்பதைப் போன்று இனிமையான குரலால் அமைந்த பாட்டு. காண்போரைக் கவரக் கூடிய அருமையான நடனம். பெண்மை என்றால் என்ன என்பதை அவளிடம் இறைவன் முழுமையாகச் செதுக்கி வடித்திருந்தான் என்பதே உண்மை. மனம் திறந்து கூறுவதாக இருந்தால் அவள் ஒரு பேரழகி." எனத் துவங்குகிறது குணவதி.. இந்த குணவதியைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ரதீசன், அவளைக் கண்டு மனவேதனைப்படும் வினயன் இவர்களின் மன ஓட்டம்தான் கதையின் களம்.

பலரும் குணவதியின்  குரலின் இனிமையிலும், நடனத்தின் நளினத்திலும் அவளது அழகின் சுவையிலும் தோய்ந்து களிக்கிறார்கள், அவள் மட்டுமே மன வேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறாள்.. ரதீசன் குணவதியின் மன நிலையையோ, அவள் கடந்து செல்லும் துன்பத்தையோ சிறிதும் கண்டுகொள்ள மறுக்கிறான். ரதீசனுக்கு குணவதி பணம் செய்யும் ஒரு இயந்திரம்குணவதியின் துன்பத்தைக் கண்டு மனமுருகி அவள் மேல் உண்மையான அன்பைச் செலுத்துகிறான் ரதீசன். எத்தனையோ ஆண்கள் குணவதியை அனுபவித்துச் சென்றிருந்தாலும், அவளிடம் வினயன்  காட்டும் பரிவில்தான் உண்மையான அன்பின் இயல்பை உணர்கிறாள் குணவதி. அவளது மென்மையான கரங்களைப் பற்றி "நீ தேவடியா இல்ல..." எனக் கூறுகிறான் வினயன். தன மீது பரிவு காட்டுவும் ஓருயிர் இந்த உலகத்தில் இருப்பதை குணவதியால்  நம்ப முடிவதில்லை.

ஊரில் இருப்பவர்கள் குணவதியைப் பார்க்கும் பார்வையில் அவள் கூசிப் போகிறாள். அதே சமயம் அவளிடம் ஒரு சிறுமி வந்து நாலு காசு வேண்டும் எனப் பிச்சைக் கேட்கிறாள். அப்போது குணவதி தனக்கு எப்படி இந்த மரியாதை வந்தது என  நினைத்துப் பார்க்கிறாள்தான் அணிந்திருக்கும் நகையே இதற்குக் காரணம் என மடிவு செய்கிறாள். இதைப் போன்ற பல நுணுக்கமான உணர்வுகளை மிக அழகாக எழுதிச் செல்கிறார் தகழி.

மற்றொரு சமயம் ஒரு பெண் குணவதியிடம் தன் கணவன் எங்கே என வினவுகிறாள். தன்  சாகப்  போகும் மகளைப் பார்க்கத் தன் கணவன் வர வேண்டும் என்று மன்றாடுகிறாள். ஆனால் குணவதிக்கோ அவள் எந்த ஆணைத் தன் கணவன்என்று சொல்கிறாள்  என்றே தெரிவதில்லை. தன் கணவனை மயக்கி தன் குடும்பத்தின் இந்த பரிதாபக நிலைக்குக் காரணமாக இருக்கிறாள் என்று குணவதியை சபிக்கிறாள் அவள். தன் செயல்களுக்கு இப்படிப்பட்ட பின்விளைவுகள் இருப்பதை அப்போதுதான் உணர்கிறாள் குணவதி. தன்மீதே அவளுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.

எத்தனையோ ஆண்களின் துளைக்கும் கண்களையும், உடல் பசியின் விருந்தாகவும்உணர்ச்சியற்று  வாழ்ந்து வரும் குணவதிக்கு வினயனின் பார்வையும், நடத்தையும் வேறு உலகை அவள் கண் முன் நிறுத்துகின்றன. வினயனும் குணவதியும் நெருங்கி வருகிறார்கள். குணவதி உண்மையான காதலையும், அன்பையும் தன் வாழ்வில் முதல் முறையாக, அனுபவிக்கிறாள். குணவதியைத் தூங்க வைத்து அவளுக்கு விசிறியும் விடுகிறான் வினயன். இந்த அன்பின் விவரணை தகழியின் மொழியில் சிறப்பாக உள்ளது. குணவதியைத் தன்னுடன் வந்து விடும்படி அழைக்கிறான் வினயன்..

குணவதி, தான் இனி இந்தத் தொழிலைச் செய்யப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாள். ரதீசன் அவளின் அனைத்து நகைகளையும் பெற்றுக் கொள்கிறான். குணவதியை கட்டாயப்படுத்தி பெருவியாதி பிடித்தவனின் இச்சைக்கு இரையாக்குகிறான். அதன் பிறகு குணவதி தன்னைப் பார்க்கவோ, நெருங்கவோ வினயனை அனுமதிப்பதில்லை. வினயன் குணவதியின் நிலையை உணர்ந்து ரதீசன்மீது தீராக் கோபம் கொள்கிறான். குணவதியின் அத்தனை துன்பங்களுக்கும் பழி வாங்க ஒரே வழி ரதீசனைக் கொல்வதே  என்ற எண்ணம் வினயனது உள்ளத்தில் மேலோங்குகிறது. அதை நிறைவேற்றுகிறான். மிகுந்த அன்புடனும், நெருக்கத்துடனும் இருக்கும் தன் தாயிடம் கூட இதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறான்.

தலை துண்டிக்கப்பட்டு ரதீசன் இறந்ததை நினைத்து குணவதி வருந்துவதைப் பார்த்து வினயன் ஆச்சரியமடைகிறான். ரதீசன் சுயநலத்திற்காக குணவதியைப் பயன்படுத்திக் கொண்டாலும், அவன் கொலை செய்யப்பட்டது தவறு எனக் கூறுகிறாள். அந்தக் கொலையை செய்தது வினயன் எனத் தெரிந்தவுடன் மிகவும் வருந்துகிறாள். அவனை போலீசில் சென்று உண்மையை ஒப்புக் கொள்ளச் சொல்கிறாள். வினயனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது.

அவன் சிறையிலிருந்து விடுதலையாகி திரும்பி வந்து பார்க்கும் சமயம் குணவதியின் வீட்டில் யாரும் இருப்பதில்லை. தாயும் இறந்துவிட்டாள் என்று அறிகிறான். அவளது இறுதி காலத்தில் யாரோ ஓர் இளம் பெண் அருகிலிருந்து அவளுக்கு சேவை செய்திருக்கிறாள் எனப் பிறர் சொல்லக் கேள்விப்படுகிறான். குணவதியைத் தேடி ஊர் ஊராக அலைந்தும் அவளைக் காணும் ஏக்கம் நிறைவேறாமல் நிராசையில் முடிகிறது அவனது வாழ்வு.

இந்தப் புனைவை தகழி எழுதியவிதம் மிகவும் அற்புதமாக உள்ளது. ஓரு  துளையிடும் கருவியைக் கொண்டு இதயத்தைத் துளைத்ததைப் போன்ற ஓர் உணர்வு. பெண்களின் துயரமும், தியாகமும் தொடந்து இலக்கியத்திற்கான ஒரு பொருளாக அமைகிறது. கண்ணீரைப் பின்தொடர்தலில் எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார் "இலக்கியத்துக்கு எப்போதுமே துயரமே கருப்பொருளாகிறது. துயரக்கடலில் எழும் உதயமே அதனால் மானுட சாரமாக கண்டடையப்படுகிறது". இது இந்த தகழின் நாவலைப் படிக்கும் போது நன்கு உணர்ந்தேன்.

மலையாளம் தெரிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சு. ரா வின் அழகான மொழியாக்கத்தில் தமிழில் படித்து அனுபவிக்க முடிகிறது. இந்தக் கதையை படித்து மனம் மிகவும் வேதனைக்கு உள்ளானது.

குணவதியை எழுதி இன்று ஏறக்குறைய 80 ஆண்டுகள் ஆகிவிட்டன.அன்று இருந்த பெண் குலத்தின் நிலைமையும் இன்றைய நிலையும் வேறானவை. இன்றும் பெண்களுக்கான சுதந்திரம் முழுதும் கிடைத்ததாகச் சொல்ல முடியாது. சிலருக்கு பொருளாதார சுதந்திரம் இருந்தாலும், ஆணாதிக்கம் முழுவதும் நீங்கி விட்டது எனக் கூற முடியாது. இன்றுள்ள பெண் குணவதி போலில்லாமல் நிச்சயம் ரதீசனின் கொடுமையை எதிர்க்கலாம். இந்தப் புதினம் அந்தக்கால விழுமியங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இன்றும் பெண்களை போகப் பொருளாக நடத்துபவர்கள் இல்லாமல் இல்லை. இன்றும் குணவதியின் மன உளைச்சலும், துன்பமும் அனுபவிக்கும் பெண்கள் இருப்பதால் இன்றும் இந்தப் புதினம் அதன் காலத்தைக் கடந்து இயல்பு நிலையையே பேசுகிறது. என்ன ஒன்று, குணவதி போன்ற பெண்களின் மனநிலை, அவர்களை இலக்கியப் படைப்புகள் அணுக வேண்டிய  முறை முதலானவை குறித்த நம் எதிர்பார்ப்புகள் மட்டுமே முழுமையாக மாறியிருக்கின்றன

இறுதியாக நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி:

"வினயனுடன் தான் கொண்டிருந்த உறவை தன்னுடைய மனதின் அடி ஆழத்திலிருந்து இழுத்து மேலே கொண்டுவர அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள் அவளின் காதல் அங்கு அடைபட்டுக் கிடந்தது. அந்த நோயாளி மனிதனுடன் உறவு கொண்ட ஓயறகு தான், அது உள்ளே தள்ளப்பட்டு விட்டது. அது கூட வினயனுடன் அவன் கொண்ட தீவிர காதலால் தான். ......
வினயனின் இரக்கம் கலந்த முத்தத்தை பெறவும், பார்க்கும் நிமிடங்களில் மனதில் மகிழ்ச்சிப் பொங்கி நிற்கவும், கடவுளின் இதயத்தைப் போல கருதி பாதுகாப்பான அவன் நெஞ்சின் மேல் தலையை வைத்து உறங்கவும் அவள் ஆசைப் பட்டது இருந்த இடம் தெரியாமல் அடங்கிப் போனது."
"உங்க குணவதி ஒரு தீராத நோயைக் கொண்டவள்"
"அய்யோ ...அது எப்படி?"
"ரதீசன் ஒருவனை அழைச்சிட்டு வந்தான். அவன் என் கூட படுத்தான்"
"உன் பாதத்தில் நான் கொஞ்சம் விழட்டுமா? கதவைத் திற."
"என்  பாதத்திலேயா ?"
"இல்ல கஷ்டங்கள் அனுபவிக்கற மனித உலகத்தையே உன் மூலம் நான் பார்க்கிறேன். அதற்கு முன்னால் ....."