சனி, 31 ஜனவரி, 2009

ஆர்.வி என்ற நிர்வாகி


ஆர்.வெங்கட்ராமன் (ஆர்.வி) ஒரு உண்மையான காங்கிரஸ் கட்சிக்காரராகவும், நேர்மையான அரசியல் வாதியாகவும்,மிகச் சிறந்த நிர்வாகியாகவும்,தேசியவாதியாகவும் திகழ்ந்தார்.1942ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
இந்தியா அரசியல் சாசனத்தை வகுத்த அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1967ம் ஆண்டு காமராஜ் அவர்கள் மந்திரி சபையில் தொழில் துறை,மின்சாரம் என்று பல துறைகளின் அமைச்சராக பதவி ஏற்றார்.அவருடைய முன் முயற்சியில் தான் இன்றுள்ள கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் உருவாகின.
சிறு மற்றும் மத்திய தொழில்கள் தொடங்குபவர்களுக்கு பெரிய அளவில் ஊக்கமளித்தார்.இந்த மாதிரி தொழில்கள் வேலை வாய்ப்பை பெருக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.தமிழ்நாட்டில் பொதுத் துறை வளர்ச்சிக்கு வித்திட்டார்.குறிப்பாக BHEL,நெய்வேலியில் NLC போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் இன்று தமிழ்நாட்டில் இருப்பதற்கு இவர் முன் முயற்சி தான் காரணம்.TVS நிறுவனத்தை சென்னையில் தொழில் தொடங்க வைத்ததில் இவர் பங்கு நிச்சயம் உண்டு.
இவருடைய அனுபவத்தையும்,நிர்வாகத் திறமையையும் நன்கு பயன் படுத்திக் கொண்ட காமராஜை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆர்.வி.திட்டக் குழு உறுப்பினராக 1967ம் ஆண்டிலிருந்து 1971ம் ஆண்டு வரை பணியாற்றினார்.மீண்டும் 1977ம் ஆண்டிலிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
1980ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.அந்த நேரத்தில் தான் முதல் முறையாக உலக வங்கியிடம் இந்தியா நிதி உதவி பெற்றது.
பின்பு ராணுவ அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார்.அணு குண்டு சோதனை செய்ய இந்தியா 1983ம் ஆண்டு தயாராக இருந்ததாகவும்,அதனை ஆர்.வி. தானே அதற்கான வசதிகளை மேற்பார்வை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.அப்துல் கலாமை ஏவுகணைகள் பிரிவிற்கு மாற்றி அதற்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினார்.
1984 ம் ஆண்டு துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.இவர் நேரு-இந்திரா குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1987ம் ஆண்டு இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.இவர் 4 பிரதமர்களுடன் வேலை செய்ய நேரிட்டது.இவர் ஜனாதிபதியாக இருந்தபோது தான் மத்தியில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது.வி.பி.சிங்கை ஆட்சி செய்ய அழைத்து ஒரு நல்ல முன் மாதிரி ஏற்படுத்தினார்.ஆட்சி மாற்றத்தால் மாநில ஆளுநர்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வி.பி.சிங் நினைத்த போது,ஜனாதிபதியே ஆளுநர்களை ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு கடிதம் எழுதுவது நன்று என்ற நல்ல யோசனையை தெரிவித்தார்.இவர் ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் தான் பொபஃர்ஸ் ஊழல்,இலங்கைப் பிரச்சனை,ராஜீவ் காந்தி கொலை,மண்டல் கமிசன் பரிந்துரை போன்ற முக்கிய நிகழ்வுகள் நடேந்தேறின.1991ம் ஆண்டு போது தேர்தலில் எந்த கட்சிக்கும் பெருன்பான்மை கிடைக்காத நேரத்தில்,எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து "தேசிய அரசு" அமைக்கலாம் என்ற யோசனையை முன் வைத்தார்.இந்த நிகழ்வுகளை எல்லாம் முன்வைத்து "My Presidential Years" என்ற புத்தகத்தை எழுதினார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சில யோசனைகளை முன் வைத்தார்.குறிப்பாக,மத்தியில் இரண்டு கட்சி ஆட்சி முறை இருக்க வேண்டும் என்றும்,சிறிய கட்சிகள் குழப்பம் ஏற்படுத்துவதை இது தவிர்க்கும் என்றும் கூறினார்.மேலும் ஒரு அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் போது,அடுத்து யாரை பிரதமராக பரிந்துரைகிறோம் என்பதையும் தீர்மானம் கொண்டு வரும் கட்சி தெரிவிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.கிருஷ்ணசாமி அசொசியட்ஸ் ஆர்.வி.யைப் பற்றி ஒரு ஆவணப் படம் (Documentary) எடுத்து வெளியிட்டது.அது தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது.இதில் "சில மாநில அரசுகள்" கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறை படுத்தப் பட்டதை பற்றிய கேள்விகளுக்கு,தான் இந்தியா அரசியல் சாசனப்படி நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.

98 ஆண்டுகள் வாழ்ந்து முக்கிய பொறுப்புக்களில் இருந்த ஆர்.வி ஒரு தொண்டு மனப்பான்மையுடன் கூடிய கண்ணியமான வாழ்கையை வாழ்ந்து மறைந்துள்ளார்.இன்றுள்ள மற்றும் எதிர்கால அரசியல் வாதிகள் இவரிடமிருந்து கற்க நிறைய விஷயங்கள் உள்ளன.வரலாற்று ஆசிரியர்கள் சென்ற நூற்றாண்டின் இந்திய அரசியலை ஆராயும் போது ஆர்.வி க்கு நிச்சயம் சரித்தரித்தில் ஒரு உன்னதமான இடம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

திங்கள், 26 ஜனவரி, 2009

இஸ்ரேல் பாலஸ்தீனிய தீராத பிரச்சனை


காஸா ஸ்ட்ரிப் என்பது 140 சதுர மைல்கள் பரப்பளவே கொண்ட இஸ்ரேலுக்கும்,எகிப்துக்கும் இடையே உள்ள கடலோரப் பகுதியாகும். கிட்டத்தட்ட 15 லட்சம் பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.இந்த பகுதியில் பெரிய அளவு இயற்கை வளங்கள் இல்லை. அத்தியாவசப் பொருட்கள் வருவதற்கு இஸ்ரேல் மற்றும் எகிப்து மூலமாக தான் வரவேண்டும்.காஸாவிற்குள் நுழையும் எகிப்து எல்லை மூடப்பட்டுள்ளது..இஸ்ரேலோ 2005இல் காஸா வை விட்டு வெளியேறினாலும்,இஸ்ரேலில் இருந்து காஸாவிற்குள் நுழையும் எல்லையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதனால் காசாவில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலை.இந்த சூழ்நிலையில் தான் ஹமாஸ் போன்ற ஆயுதம் ஏந்திய குழுக்கள் மக்களின் ஆதரவை பெற்றது.இஸ்ரேலை அழிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் மேல் ராக்கிட்டுகளை ஏவியது.அடிப்படை பிரச்சனையை தீர்க்காமல்,ஹமாஸை ஒழித்துக் கட்டுகிறேன் என்ற பெயரில் அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்குக் பயமும்,தன்நம்பிக்கை இழப்பும் தான் காரணம். மேலும் தன் நாட்டின் மீது இருந்த பயம் அண்டை நாடுகளுக்கு போய் விட்டது என்ற நினைப்பும் சேர்ந்து கொண்டது.2006ம் ஆண்டு ஹெசபெல்ல உடன் நடந்த சண்டையில் ஏற்பட்ட பின்னடைவு இஸ்ரேலை உறுத்திக் கொண்டே இருந்தது.
ஹமாஸின் முக்கிய கோரிக்கை காசாவின் எல்லை மூடலை முழுவதும் அகற்ற வேண்டும் என்பது தான்.இஸ்ரேல் இதை கடுமையாக எதிர்க்கிறது.குறிப்பாக எகிப்தின் எல்லையின் வழியாக ஆயுதம் கடத்தலை ஹமாஸ் செய்து,அதனை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்துகிறது என்பது முக்கிய குற்றச்சாட்டு.எகிப்து காஸா எல்லையை உலக நாடுகள் கொண்ட குழு கண்காணிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்துகிறது.இதனை எகிப்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

ஹமாஸை அமைதி படுத்திவிட்டோமே தவிர அதனை முழுவதும் அழிக்கவில்லை என்று இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.இதிலிருந்து இந்த மாதிரி ஆயுதம் ஏந்திய குழுக்களை வழக்கமான போர் முறையில் முற்றிலும் ஒழிக்க முடியாது என்பதை இஸ்ரேல் முக்கியமாக புரிந்து கொள்ளவேண்டும்..எகிப்தின் "RAFAH" வழியாக சுரங்கங்களைத் தோண்டி ஹமாஸ் ஆயுதங்களை தொடர்ந்து கடத்தி வந்தது இஸ்ரேலுக்கு பெரிய எரிச்சலையும்,தொல்லையையும் கொடுத்து வந்தது.அதனால் அந்த எல்லைப் பகுதியில் 60% சுரங்கங்களை அழித்து விட்டதாக இஸ்ரேல் கூறுகிறது

இஸ்ரேல் 27 நாட்களாக காஸா பகுதியில் தொடர்ந்து குண்டு மழை பெய்து,.20000 ஹமாஸ் இயக்கத்தினரில் 500 பேரை கொன்றிருக்கிறது.கிட்டதட்ட 700 பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.5000 அப்பாவிப் பொதுமக்கள் காயமடைந்திருக்கிறார்கள்.இன்று தானாக முன்வந்து தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.இதை ஹமாஸ் ஆதரிக்கவில்லை.ஆனால் இஸ்ரேலுடைய படைகள் காஸாவை விட்டு வெளியேறுவதாக இல்லை.அதனால் இந்த பிரச்சனை மேலும் சிக்கலாகி இருக்கிறது.தன்னுடைய அழிக்கும் சக்தியை மீண்டும் நிலை நாட்டியதாக இஸ்ரேல் கருதுகிறது.தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்ததால்,இஸ்ரேல் தற்காலிகமாக சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறது எனலாம்.இந்த கண்மூடித்தனமான காஸாவின் மீதான தாக்குதலினால் உலக நாடுகளின் குறிப்பாக அரபு நாடுகளின் கோபத்திற்கும்,எதிர்ப்புக்கும் உள்ளாகியது.அதனை தணிக்க இந்த முடிவு உதவும்.ஹமாஸை தான் அங்கீகரிக்கவில்லை என்ற நிலையை இஸ்ரேல் மீண்டும் நிலை நிறுத்திருக்கிறது.இஸ்ரேல் படைகள் தொடர்ந்து காஸாவில் இருக்கப் போவதால் ஹமாஸ் உடனான சண்டை தொடரும் வாய்ப்புள்ளது.மேலும் பாலஸ்தீனிய மக்கள் நிம்மதியாக் வாழ முடியும் என்று தோன்றவில்லை.மேலும் எகிப்து காஸா எல்லையையும் கண்காணித்து ஹமாஸை எதிர்த்து ஒடுக்க இஸ்ரேலுக்கு இந்த ஆக்ரமிப்பு ஏதுவாக இருக்கும்.

அரபுக் கூட்டமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இருந்த பிரச்சனை இப்போது அதையும் தாண்டி,ஈரான் நுழைந்ததில் இந்த நீண்ட நாளைய பிரச்சனைக்கு விரைவில் ஒரு நிரந்தர தீர்வு காண முடியும் என்று தோன்றவில்லை.ஈரானின் அதிபர் "ஹோலகாச்ட்" என்பதே ஒன்று நடக்க வில்லை என்று கூறியதோடு நில்லாமல்,இஸ்ரேலை அழித்து விடவேண்டும் என்று கூறியது எரிகிற விளக்கில் எண்ணையை ஊற்றிய கதை ஆகியது.ஈரான் ஹமாசுக்கும்,இசெபெல்லாவுக்கும் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகிறது.அதனால் தான் ஈரானின் அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் இடத்தை இஸ்ரேல் சென்ற ஆண்டு தாக்குவதற்கு அமெரிக்காவிடம் அனுமதி கேட்டது.நல்ல வேலை புஷ் மறுத்துவிட்டார்.ஆனால் அடுத்த கட்டமாக இஸ்ரேல் ஈரானைத் தாக்கவும் வாய்ப்பிருக்கிறது.இப்போது நடந்து வரும் ஈரானுடனான நிழல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் நினைத்தால் இது நடக்கும். அமெரிக்கா வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்கும் ஹிலாரி க்ளின்டன் இந்த பிரச்சனையை அணுகும் முறை இஸ்ரேலின் இந்த முடிவை தீர்மானிக்கும்.

புஷ் ஆட்சியின் கடைசி நாளன்று இஸ்ரேல் அமெரிக்காவுடன் "வேவு பார்க்க தேவையான உபகரணங்களை அளிப்பது மற்றும் காஸாவின் நிலம்,கடல் எல்லைகளை கண்காணிக்க இஸ்ரேல்,எகிப்து முதலிய நாடுகளுக்கு தேவையான பயிற்சிகளை கொடுப்பதற்கு ஒத்துக்கொண்டது" என்று ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.அதாவது ஒபாமா பதவி ஏற்பதற்கு முன்பு காஸா மீது தாக்குதலையும் நடத்தி ஆக்ரமித்துக் கொண்டு, ஒரு ஒப்பந்தத்தையும் அமெரிக்காவுடன் செய்து கொண்டதைப் பார்க்கும் போது பெரிய அளவில் இஸ்ரேலும், அமெரிக்காவும் திட்டமிட்டு இதை செய்தது போல் தெரிகிறது.

இஸ்ரேல் என்ற நாடு தோன்றியதிலிருந்து அதற்கு நிம்மதி கிடையாது.பாலஸ்தீன பகுதியில் யூதர்களுக்கு ஒரு நாடு அமைக்க ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட போது,ரஷ்யாவும்,அமெரிக்காவும் தான் இஸ்ரேலை முதலில் அங்கீகரித்தன.அரபு நாடுகள் இதை யூதர்களின் ஒரு ஆக்ரமிப்பாகவே கருதின.பின்பு பல நாடுகள் இஸ்ரேலை ஒப்புக் கொண்ட போதும், அரபு நாடுகள் குறிப்பாக பாலஸ்தீனியர்களுக்கு இது யூதர்களின் ஆக்ரமிப்பு என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கிறது. அதனால் தான் ஹமாஸ்,ஹெசபெல்ல போன்ற அமைப்புகள் மற்றும் ஈரான்,சிரியா போன்ற நாடுகள் கடுமையாக இஸ்ரேலை எதிர்ப்பதோடல்லாமல் அதனை அழிக்கவும் நினைக்கிறது.அதே நேரத்தில் இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்ள தன் ராணுவத்தை மிகவும் வலிமையாக வைத்துக் கொண்டு,மத்திய கிழக்கு பகுதியையே மிரட்டி வருகிறது.அமெரிக்கா மற்றும் இரோப்பிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பு இஸ்ரேலுக்கு முழுவதும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தன்னை நிலைப் படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது,அதே நேரத்தில் இஸ்ரேலை ஒழிக்க ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. இதற்கு முடிவு தான் என்ன?மத்தியக் கிழக்குப் பிரச்சனையைப் பற்றி சொல்லாத யோசனைகள் கிடையாது,எழுதாத புத்தகங்கள் இல்லை.ராணுவ நடவடிக்கையோ,தீவிரவாதமோ இதற்கு தீர்வு ஆகாது.இஸ்ரேல் தான் பாலஸ்தீனிய பகுதியில் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.இஸ்ரேல் ராணுவத்தால் விரட்டப் பட்ட பலர் தான் இன்று காஸா பகுதியில் உள்ளார்கள்.அவர்களுக்கு அந்த மனவருத்தம் இருப்பதில் நியாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்கள் மனதில் ஒரு நம்பிக்கையை உண்டு பண்ண வேண்டும்.வெஸ்ட் பேங்க்(West bank) மற்றும் காசாவிலும் சுதந்திரமான அரசு அமையவும், மக்கள் நிம்மதியாக வாழவும் வழி செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் மக்கள் தீவிரவாதிகளை ஆதரிப்பதை முற்றும் நிறுத்தி விடுவார்கள்.இல்லை என்றால் இப்படி சண்டை போட்டே வாழ்க்கையை நடத்துவதைத் தவிர இஸ்ரேல் மக்களுக்கு வேறு வழி இல்லை.

அதே போல் பாலஸ்தீனியர்களும்,அரபு நாடுகளும் பழமையும்,சரித்தரமும் பேசிக்கொண்டிருக்காமல்,இன்றுள்ள நிலையை பற்றி சிந்திக்க வேண்டும்.இஸ்ரேல் என்பது இன்று ஒரு நிஜம்.அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.அதனுடன் சேர்ந்து அமைதியான,சுமுகமான் வாழ்க்கை வாழ நினைக்க வேண்டும்.இதெல்லாம் சொல்வது சுலபம் என்று தெரிகிறது.இது ஒரு நாளில் நடந்து விடாது.அதற்கான சூழ்நிலையை இஸ்ரேல்,அரபு நாடுகள் மற்றும் உலக நாடுகள் உருவாக்க வேண்டும்.இல்லை என்றால் இஸ்ரேல் தாக்குவதும்,அப்பாவி மக்கள் பாதிக்கப் படுவதும்,ஐ.நா.சபை தீர்மானங்கள் இயற்றுவதும்,உலக நாடுகள் கண்டனம் தெரிவிப்பதும்,மனித உரிமைக் குழுக்கள் போர்க்கொடி தூக்குவதுமாக காலத்தைக் கழிக்க வேண்டியது தான்.பாலஸ்தீனியர்களும்,இஸ்ரேலும் சேர்ந்த ஒரு நாடாக இருப்பது ஒரு தீர்வு என்றாலும்,அதில் நடைமுறை சிக்கல்கள் நிறையவே இருக்கும். அதனால் இரண்டு தனிப்பட்ட,சுதந்திரமான நாடுகள் தீர்வு தான் ஒரே வழி.இதை விட்டு ஒருவரை ஒருவர் அழிக்க நினைப்பது உலக நிம்மதியையும் சேர்த்து கெடுப்பதில் தான் போய் முடியும்.

வெள்ளி, 16 ஜனவரி, 2009

நினைவில் எம்.ஜி.ஆர்

1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் காலை 10:30 மணி வாக்கில் 12G பேருந்தில் பயணித்த போது,மயிலாப்பூர் லஸ் கார்னர் நிறுத்தத்தில் கடைகள் எல்லாம் அவசரமாக மூடும் காட்சி.பயணிகள் வியந்து பார்த்துக் கொண்டிருந்த போது,சக பயணி "என்ன எம்.ஜி.யார். பூட்டாரா" என்று வியந்தார்.அடுத்த நொடி அந்த பயணியின் அருகில் அமர்திருந்தவர் அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தார்.அது எம்.ஜி.யார் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் இருந்த நேரம்.இந்திரா காந்தி கொல்லப்பட்ட செய்தி பின்னர் தெரிந்தது.அதாவது எம்.ஜி.யார் இறப்பு என்பதைக் கூட கேட்க தயாராக இல்லாத அளவுக்கு அவர் மேல் அன்பு வைத்திருந்த மக்கள்.

இலங்கையில் பிறந்து கும்பகோணத்தை வந்தடைந்து,சினிமா உலகில் 1936ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.ஆனால் 1947ம் ஆண்டில் "ராஜகுமாரி" படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். அதன் பிறகு முப்பது வருடத்திற்கு திரை உலகின் முடிசூட மன்னராக விளங்கினார்.இவருக்கு இசையில் மிகுந்த நாட்டம் இருந்தது.இவர் திரைப்படப் பாடல்கள் பலவற்றை இன்றும் கேட்டு மகிழ முடியும்.
தமிழக முதல்வராக இருந்த போது ஒரு முறை மதுரையில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இசை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்தவர், மூன்று மணி நேரமும் அமர்ந்து ரசித்துக் கேட்டுச் சென்றதை உதாரணமாகக் கொள்ளலாம்.

மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு உதவும் குணம் இவரிடம் இயற்கையாகவே இருந்தது.இயற்கை பேரழிவுகள் மற்றும் தனி மனித துன்பங்களுக்கு உதவுவது என்பதை பல முறைகள் செய்திருக்கிறார்.ராமதாசும் அவர் மகனும் இன்று ஒவ்வொரு நடிகராக சிகரட் மற்றும் குடிக்கும் காட்சிகளை படங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எம்.ஜி.யார் என்றோ கடை பிடித்தார் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சிரியமாக இருக்கிறது.எம்.ஆர்.ராதாவால் சுடப் பட்ட போது அவருடைய போராடும் குணமும்,தன்னம்பிக்கையும் வெளிப் பட்டது.

ஏழைப் பங்காளனாக சினிமாவில் அவர் வளர்த்து வந்த உருவம் பிற்காலத்தில் அரசியலில் அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.அண்ணாதுரையும் எம்.ஜி.யாரை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.1967ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நடந்த எல்லா பொதுத் தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார் எம்.ஜி.யார்.எம்.ஜி.யாரின் அரசியல் மற்றும் ஆட்சி பல விதமான விமர்சனத்திற்கு உள்ளானது. அவருடைய அரசியல் எந்த குறிப்பிட்ட கொள்கையோ,நீண்ட கால திட்டத்தை அடிப்படையாக கொண்டதாகவோ இருக்கவில்லை.

கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான்.அதை இறுதி வரை அவரால் செய்ய முடிந்ததுதான் ஆச்சிரியம்.தி.மு.கவில் இருந்து வெளியேற்றிய உடன் கருணாநிதியைப் பற்றி கடுமையானப் பிரசாரத்தை மேற்கொண்டார்.1972ம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டு வரை இடை விடாமல் மக்களின் மத்தியில்,குறிப்பாக கிராம மக்களிடையே கருணாநிதி மேல் ஒரு தீராத வெறுப்பை ஏற்படுத்தினார்.அதனால் ஏழு ஆண்டு தண்டனை போதாதா,புறங்கையைத் தானே நக்கினோம் என்றெல்லாம் மன்றாடியும் கருணாநிதியால் எம்.ஜி.யார் இருந்த வரை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது.

அண்ணாயிசம் என்ற சித்தாந்தத்தை கடைபிடிக்கப் போவதாக அறிவித்தார்.ஆனால் அதை சரியாக வரைமுறை செய்யவில்லை.
பல விளக்கங்களைக் கூறினார்.ஆனால் எதுவும் தெளிவாக இல்லை.உதாரணமாக ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தில் இதைப் பற்றி தான் கூறியதாகச் சொன்னார்.அண்ணாயிசம் என்பது பலராலும் கேலிக்குரிய பொருளானாலும்,அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அதைப் பற்றிய பெரிய கவலை இருந்ததாகத் தெரியவில்லை.பெரியாரின் முக்கியமான நாத்திகக் கொள்கையில் இவருக்கு பெரிய அளவு ஈடுபாடு இருந்ததாக தெரியவில்லை.தாய் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்தது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.ஆனால் பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மிக சுலபமாக செயல் படுத்தினார்.தாழ்த்தப்பட்டவர்களுக்கு 69% இட ஓதுக்கீடு அமல் படுத்தியது இவர் ஆட்சியின் ஒரு பெரிய மைல் கல்லாகக் கருதப் படுகிறது.

அண்ணா பல்கலைக் கழகம் அமைத்து அதற்கு ஒரு தனி கவனத்தை பெற்றுக் கொடுத்தார்.இன்று அது மிகவும் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக மாறி இருப்பது எம்.ஜி.யாருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.தமிழ் பல்கலைக் கழகமும், பெண்களுக்கான தனி பல்கலைக் கழகமும் அமைத்தது அவர் ஆட்சியின் நற்செயலாகக் கருதப் படுகிறது.காமராஜால் அறிமுகப் படுத்தப் பட்ட மதிய உணவு திட்டத்தை விரிவாக்கியும்,சீர்த்திருத்தியும் அமல் படுத்தியது பெரிய வரவேற்பை பெற்றது.அதை கருணாநிதி கூட ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.

அவர் ஆட்சியின் மிகச் சிறப்பான பகுதியாக கருத வேண்டுமென்றால்,பொது விநியோக முறையை நிர்வகித்த விதம் தான்.ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.அதனால் கீழ் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்கையை பிரச்சனை இல்லாமல் நடத்த முடிந்தது.இலங்கையில் உள்ள தமிழர்கள் இன்று கடுமையான துன்பத்திற்கு உள்ளாகும் நிலையில், எம்.ஜி.யார் அவர் ஆட்சி காலத்தில் இலங்கையில் தமிழர்களின் மீது நடந்த கூட்டுக் கொலையின் போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

புள்ளியியல் படி எம்.ஜி.யார் ஆட்சியில் அவருக்கு எப்போதும் ஆதரவளித்து வந்த கீழ் தர மக்கள் மிகுந்த நன்மை அடைந்ததாகக் கூற முடியாது.பெரிய தொலை நோக்குப் பார்வை இருந்ததாகக் கூற முடியாது.ஒரு வித உள்ளுணர்வின் அடிப்படையில் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.முதல் 2 1/2 ஆண்டுகள் ஊழல் இல்லாத மது விலக்கை கடைபிடித்த ஆட்சி கொடுத்தாலும்,1980௦ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன்,பெரிய அளவில் ஊழலும், மதுவிலக்கு நீக்கத்தால் மது தயாரித்து விற்ற நிறுவனங்களும்,அதன் அதிபர்களும் அடைந்த லாபமும் பெருத்த ஏமாற்றம் தான்.கருணாநிதியின் ஊழலை எதிர்த்து ஆரம்பித்த கட்சி,ஜெயலலிதாவின் வரலாறு காணாத ஊழலால் சரித்திரம் படைத்தது. இன்னும் இரட்டை இலை சின்னத்திற்கு இருக்கும் ஆதரவு இன்றும் எம்.ஜி.யாருக்கு மக்களிடையே இருக்கும் ஈர்ப்பு சக்தி தான் காரணம்.
எம்.ஜி.யாரை கடவுள் போல் நினைத்த ஏழை மக்களுக்கு அவர்கள் எதிர் பார்த்ததில் பத்து சதவிகிதமாவது நன்மை செய்திருப்பாரா என்பதற்கு சமூகவியலாளர்களும், சரித்திர ஆசிரியர்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.

செவ்வாய், 13 ஜனவரி, 2009

அண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை

அண்ணா காலமான பிப்ருவரி மூன்றாம் தேதி 1969ம் வருடம் தமிழகம் முழுவதும் வரலாறு கண்டிராத துயரத்தில் மூழ்கியது. காலை 7:15 மணிக்கு ஒலி பரப்பான தேசியச் செய்திகளில் "செய்திகள் வாசிப்பது விஜயம்" என்று சோகமான குரலில் அண்ணாவின் மறைவைப் பற்றியும், தலைவர்கள் அஞ்சலி பற்றியும் தட்டினால் பேசும் வானொலியில் கேட்டது இன்றும் நினைவில் இருக்கிறது. கட்சி, ஜாதி, மதம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து பிரிவினரும் வருந்தும் அளவிற்கு காந்த சக்தி
பெற்ற அரசியல் தலைவராக சாதாரணமான நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாவால் எப்படி வளர முடிந்தது. வரலாற்றைச் சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

1937 ம ஆண்டு ராஜாஜி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அண்ணாவின் பேச்சைக் கேட்டவர், அண்ணாவை காங்கிரசில் சேர்த்துக் கொண்டால் நல்லது என்று நினைத்தார். ஆனால் முதுகலைப் பட்டம் பெற்ற அண்ணா பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, ஜஸ்டிஸ் கட்சியில் ஏற்கனவே உறுப்பினராக இருந்தது தெரிய வந்தது. அவருடைய பேச்சு மற்றும் எழுத்துத் திறமையால் மிக குறுகிய காலத்தில் திராவிட கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக முன்னேறினார். "திராவிட நாடு" என்ற பத்திரிக்கையை 1942ம் ஆண்டு தொடங்கினார். சமூக அக்கறையுள்ள கதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள் எழுதினார். சமூக நீதி மற்றும் ஏழைகளின் பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்பதில் பெரியாருடன் கருத்து வேறுபாடு இருந்தது. மிக சாதுர்யமாக எந்தவிதமான அடிப்படைக் கொள்கைகள் பொருட்டு இல்லாமல், பெரியார் எழுவது வயதில் திருமணம் செய்து கொண்டதை காரணம் காட்டி, திராவிட முன்னேற்றக் கழகம்(தி.மு.க) என்ற கட்சியை தொடங்கி அதன் பொதுச் செயலாளர் ஆனார். அவருடன் தி.க வில் இருந்து பெரிய பட்டாளமே அவருடன் வெளியேறியது. தேர்தலில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சியாக தி.மு.க வை அண்ணா முன்னிறுத்தியதால், பலவிதமான சமாதானங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகியது. "அரசியல் என்பது முடிந்தவற்றைச் செயல் படுத்தும் ஒரு கலை" என்று அண்ணா நன்கு அறிந்து இருந்தார்.

வட இந்தியாவில் இருந்ததைப் போல் இல்லாமல் பிராமணர்கள் மற்றும் பிராமணர் அல்லாதோர் என்ற இரண்டு பிரிவினைகள் தான் தென் இந்திய சமுதாயத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது. இந்த பிரிவினை 19ம் நூற்றாண்டில் தான் வளரத் தொடங்கியது. பிராமணர் அல்லாதவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு இல்லாததும், சூத்திரர்கள் என்ற அடையாளமும் அவர்களைப் புண்படுத்தியதின் விளைவு ஜஸ்டிஸ் கட்சி உருவாக காரணமானது. அதில் இருந்து உருவான திராவிட கழகத்தின் முக்கியக் கொள்கைகளான பிராமண எதிர்ப்பு, கடவுள் இல்லை என்ற பிரச்சாரம், பிராமணர் இல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற சமூக நீதி, ஹிந்தி எதிர்ப்பு முதலானவைகள் பிரதானமானவை.



பிராமண எதிர்ப்பை மட்டும் முன்னிறுத்தி அரசியல் கட்சியாக வளர முடியாது என்று உணர்ந்த அண்ணா, தி. க கொள்கைகளைக் கொண்டு தொடங்கப் பட்ட தி.மு.க. வில் பலவிதமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். குறிப்பாக தமிழர் என்ற அடையாளத்தின் மூலமாக எல்லா தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்தார். தமிழர்கள் என்ற குடையின் கீழ் பிராமணர்கள் மற்றும் முஸ்லீம்களை அணைத்துக் கொண்டார். ஜாதி மற்றும் மதம் என்ற மக்கள் மத்தியில் இருந்த பிரிவினையை தற்காலிகமாக மறைத்து வைக்க தமிழர்கள் என்ற அடையாளம் உதவியது. தமிழர்கள் இலக்கியமாக சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் முன்னிறுத்தப் பட்டது. சங்க காலத்தில் நிலவிய தமிழர்களின் உயர்ந்த நிலையைப் பற்றி பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. 300௦௦க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள் நடத்தப் பட்டன. பெரும்பாலான இலக்கிய கூட்டங்கள் நடத்தப் பட்டு, சங்க இலக்கியம், திருக்குறள் பற்றி விரிவாக பேசப் பட்டது. இந்த இலக்கியங்கள் உலகப் புகழ் பெற்றதற்கு தி. மு.கவின் இந்த நிலைப்பாடு தான் காரணம். சினிமா என்ற ஊடகத்தை அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.யார். தி.மு.க வின் கொள்கைகளைப் பரப்ப சிறந்த முறையில் பயன் படுத்தினார்கள். மின்சார மயமாக்குதல் என்ற காங்கிரசின் திட்டம் இந்த தி.மு.க வின் கொள்கை பாமரனை துரிதமாக சென்றடைய உதவியது. துண்டு பிரசுரங்கள், அடுக்கு மொழி மேடைப் பேச்சுக்கள் என்று அண்ணாவின் எண்ணங்கள் தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. "தமிழர்கள் தன் மானத்தை மீட்பது" என்ற கோஷம் மக்களை மிகவும் கவர்ந்தது.

பிராமணர்களை எதிர்க்கவில்லை "பிராமணியத்தையே" எதிர்ப்பதாக கூறினார். கடவுள் எதிர்ப்பு என்பது "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற அறைகூவலில் திசை மாறியது. பல நூற்றாண்டுகளாக கடவுள் நம்பிக்கையில் ஊறிய சமூகத்தில், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற முழக்கம் அண்ணாவின் மக்களுடனான நெருக்கத்தை அதிகப் படுத்தியது. "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என்ற தனி நாடு என்ற கோரிக்கை 1963ம் ஆண்டு நடந்த தி.மு.க மாநாட்டில் கைவிடப் பட்டது. இதை "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்ற சிந்தாந்தத்தின் மூலமாக மாநிலத்திற்கு அதிக அதிகாரம் பெறும் முயற்சியாக அண்ணா மாற்றினார். காங்கிரஸ் எதிர்ப்பு, தி.மு.க வின் கொள்கை பரப்புதலுக்கு இடையே கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்து வந்தார். இங்கு 1952ம ஆண்டு தேர்தலில் கம்யூனிஸ்டுகள் அதிக இடங்கள் பெற்றதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து மே தினம், பொருளாதார சமநிலை முதலியவற்றை பெற்று பொங்கல் திருநாள் தான் தமிழர்களுக்கு மே தினம் என்றும், சமதர்ம பூங்கா என்பதே லட்சியம் என்றும் அழகாக மாற்றி மக்கள் மத்தியில் கொண்டு சென்றதால் கம்யூனிஸ்டுகள் வளர்ச்சி அடையாமல் பார்த்துக் கொண்டார். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், அதை சரியான முறையில் கையாளாத காங்கிரஸ் அரசு, பண வீக்கம், தி.மு.க வின் இடைவிடாத பிரச்சாரம், கம்யூனிஸ்டுகள் மற்றும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனான கூட்டு, தி.மு.க விற்கு 1967ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று தந்தது.

பெரியார் அண்ணாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் "கூத்தாடிகள்" என்று கடுமையாக எதிர்த்து வந்தாலும், அண்ணா தி.மு.க பெற்ற வெற்றியை அவருக்கு சமர்பிப்பதாக கூறியதோடு மட்டுமிலாமல், அவரிடம் திருச்சிக்கு சென்று ஆசிர்வாதமும் வாங்கி வந்தார். மேலும் பக்தவத்சலம் மற்றும் காமராஜரையும் சென்று பார்த்தது தமிழ் நாட்டு அரசியல் நாகரீகத்தின் உச்ச கட்ட நிகழ்ச்சி என்றால் மிகையாகது. "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்ற அண்ணாவின் சொல் எதிர் முகாமில் இருப்பவர்களையும் மதிக்கும் பண்பை வெளிப் படுத்துவதாக உள்ளது. தமிழ்நாட்டில் சமூக மாற்றத்திற்கு வித்திட்டு ஓரளவுக்கு அதிகார பங்கீட்டை அமல்படுத்தவும் அண்ணாவின் அரசியல் வெற்றி வழி வகுத்தது.69 சதவிகித இட ஒதுக்கீடு அமல் படுத்தியது திராவிட இயக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல். ஆனால் அதிகாரப் பரவல் முழுவதும் எல்லா சமூகத்தினரையும் சென்றடையவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. பாட்டாளி மக்கள் கட்சி என்று வன்னியர்களும், ஆதிதிராவிடர்களுக்கென தனி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு ஜாதி சங்கங்கள் உருவாகிருப்பதே இதற்கு பிரதானமான சாட்சி. சமூக மாற்றத்திற்கு உதவிய அண்ணாவின் அரசியல் வெற்றி, பொருளாதார மாற்றத்திற்கு பெரிதும் உதவவில்லை. இதற்கு முக்கிய காரணம் பெரிய அளவிலான பொருளாதாரதக் கொள்கை அதனை அமல் படுத்தும் நீண்ட காலத் திட்டம் எதுவும் அண்ணாவால் தி.மு.க வில் முன்வைக்கப் படாததே காரணம் என்று தோன்றுகிறது.. தமிழை செம்மொழி அளவுக்கு உயர்த்தியது திராவிட இயக்கத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியது என்றால் மிகையாகாது. அதே நேரத்தில் கவரத்தக்க மேடைப் பேச்சுகளாலும், அண்ணாவால் ஊக்குவிக்கப் பட்டு அவரது தம்பிகளால் தொடங்கப்பட்ட பல்வேறு பத்திரிக்கைகள், இலக்கிய இதழ்கள் மற்றும் இலக்கிய கூட்டங்கள் மக்களைப் பெரிதும் ஈடுபாடு கொள்ளச் செய்ததோடு மட்டுமல்லாமல் பொழுது போக்கும் அம்சமாகவும் அமைந்தது.

அண்ணாவின் எதிர்பாராத மறைவு, அதற்குப் பிறகு தி.மு.கா வில் ஏற்பட்ட பதவிச் சண்டை, பேராசை எண்ணங்கள் தம்பிகளின் பத்திரிக்கை மற்றும் இலக்கிய முயற்சிகளில் இருந்த ஈடுபாட்டை திசை திருப்பியது. ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த வெற்றிடத்தை சினிமா ஆக்கிரமித்துக் கொண்டது. ஆட்சியாளர்களும் சினிமா பிண்ணணியில் இருந்து வந்ததால், அதற்கான முக்கியத்துவம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முதன்மை இடத்தை ஆக்ரமித்துக் கொண்டது. தொலைக் காட்சிகளின் வரவு அதனை மேலும் அதிகரித்தது. சினிமா என்ற பொழுது போக்கு அம்சமாக இருக்க வேண்டிய ஒன்று, தமிழ் சமூகத்தின் முக்கிய அம்சமாக மாறியது தமிழனின் தலை எழுத்து என்பதை விட வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை. அண்ணாவால் பெருமையாக மொழியப்பட்ட "கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு" அவரது தமிபிகளால்(தங்கைகளும் தான்) பதவி ஆசை, ஊழல், பேராசை, அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று இன்று மாற்றப்பட்ட இழி நிலையை நினைக்கும் போது, மனதிற்கு மிகவும் வேதனையாகவும், வருத்தமாகவும் உள்ளது. அண்ணாவால் கனவு காணப்பட்ட தமிழர்களின் சமூக பொருளாதார சமன்நிலை அடைய முயற்சிப்பது, இளைய சமூகத்திடம் தமிழின் முக்கியத்துவம் மற்றும் பண்பாடு பற்றி எடுத்துரைப்பது என்ற சூளுரை அவரது நூற்றாண்டில் நாம் அவருக்கு அளிக்கும் சிறந்த பரிசாகவும், அஞ்சலியாகவும் இருக்கும்.

வெள்ளி, 9 ஜனவரி, 2009

இன்றைய நாட்காட்டியின் கதை




உலகில் தான் எத்தனை நாட்காட்டிகள்(calendars). எகிப்து,பாபிலோனியன்,ரோமன்,யூத என்று பல நாட்காட்டிகள் இருந்தன.சில நாட்காட்டிகள் இன்றும் புழக்கத்தில் உள்ளது. எகிப்து நாட்காட்டி தான் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.கி.மு.4236ம் ஆண்டு தான் இன்று எழுதிவைக்கப்பட்ட (documented) முதல் வருடமாக அறியப்படுகிறது.பெரும்பாலானவைகள் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் அமைந்தது. விவசாயிகளுக்கு நாட்காட்டிகள் பயிரிடும் காலத்தை சரியாக அறியவும், சமயம் சார்ந்த திருவிழா கொண்டாட்டங்களைக் கணிக்கவும் தேவைப்பட்டது.எகிப்து நாட்காட்டி 10 நாட்கள் ஒரு வாரமாகவும்,30 நாட்கள் ஒரு மாதமாகவும்,4 மாதங்கள் ஒரு பருவமாக 3 பருவங்களை கொண்டிருந்தது.அதாவது 360 நாட்கள் வருடத்திற்கு.ஆனால் வருட ஆரம்பத்தில் 5 விடுமுறை நாட்களை சேர்த்து 365 நாட்கள் கொண்ட நாட்காட்டியை உபயோகித்து வந்தார்கள். லீப் வருடம் என்ற சித்தாந்தம் இல்லாதது தான் ஒரே குறை.

ஆனால் இன்று உலகம் முழுதும் உபயோகத்தில் இருக்கும் நாட்காட்டி ரோம் நாட்டில் இருந்து வந்தது தான்..இந்த நாட்காட்டி பல திருத்தங்களுக்கு உள்ளானது.மிகப் பழைய ரோமன் நாட்காட்டி 304 நாட்களையே வருடத்திற்கு கொண்டிருந்தது. மார்ச்சிலிருந்து டிசம்பர் வரை பத்து மாதங்களே இருந்தன.குளிர் காலத்தின் 60 நாட்களை கணக்கில் எடுக்காமல் விட்டு விட்டார்கள்.

ஆரம்ப காலத்து நாட்காட்டிகள் சந்திரனின் சூழற்சி சூரியனைப் பொறுத்து அமைந்த 29.5 நாட்களை வைத்து வடிவமைக்கப் பட்டன.
அதனால் மாதத்தின் ஆரம்ப நாட்கள் அமாவாசை அல்லது முழு நிலவாக இருந்தது. மேலும் மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்கள் என்றிருந்தது.
ஆனால் பூமி சூரியனை சுற்றி வருவதற்கு கிட்டத்தட்ட (approximately) 365.25 நாட்கள் ஆகிறது. இதை ஒரு சூரிய ஆண்டு (solar year) என்று கொள்ளலாம். .அதனால் சந்திரனின் சூழற்சியை ஒருங்கிணைத்து அமைக்க முற்பட்ட நாட்காட்டிகள் மூன்று நான்கு வருடத்திற்கு ஒருமுறை சில நாட்களை இடைச் செருகல் செய்ய வேண்டியதாகியது. உதாரணமாக ஆந்திராவில் இன்று வழக்கத்தில் உள்ள நாட்காட்டி இந்த முறையை இன்றும் கையாள்கிறது.இஸ்லாமியர்கள் பின்பற்றும் நாட்காட்டி சந்திரனின் சுழற்சியை மையமாகக் கொண்டது. அதனால் தான் ரம்ஜான் பண்டிகை எல்லா காலங்களிலும் மாறி மாறி வருவதைக் காணலாம்.

கி.மு.700 ஆண்டு வாக்கில் நும போம்பிலயுஸ் (Numa Pompilius ) ஆட்சி காலத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்டது. மேலும் நான்கு மாதங்கள் 31 நாட்களையும்,பிப்ருவரி 28 நாட்களையும் மற்றும் அனைத்து மற்ற மாதங்களும் 29 நாட்களைக் கொண்டு வருடத்திற்கு 355 நாட்களாக மாற்றி அமைக்கப் பட்டது.இருந்தாலும் சூரிய ஆண்டுடன் நாட்காட்டி ஒத்ததாக இல்லை.பிப்ருவரி மாதத்தில்வேண்டிய அளவிற்கு நாட்களை கூட்டி பருவ காலத்திற்கு இணையாக நாட்காட்டியை உபயோகித்து வந்தார்கள்.இது போல் செய்ததில் கி.பி.190௦ இல் கிட்டததட்ட 115 நாட்கள் பருவ காலத்துடன் வித்தியாசம் இருந்தது உணரப்பட்டது.

சீசர் ரோமை ஆள வரும் போது "ரோமன் ரிபப்ளிக்" என்ற சூரியன்-சந்திரன் சுழற்சியின் ஒருங்கிணைந்த ஓர் நாட்காட்டி பழக்கத்தில் இருந்தது.சூரிய ஆண்டுடன் ஒத்ததாக அமைப்பதற்காக பிப்ரவரி மாதம் 23ம் தேதிக்குப் பிறகு 22 நாட்களை தேவைப்படும் போது இடை செருகல் செய்யும் பழக்கம் இருந்தது. இதை செய்வதற்கு என்று ஒரு குழு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதனை செயல் படுத்துவதில் நிறைய ஊழல் மற்றும் முறை கேடுகள் நடை பெற்றன.இந்த நாட்காட்டியில் உள்ள குறைகளை நிபுணர்கள் சீசரிடம் கூறினார்கள்.

சீசர் கி.பி 45ம் ஆண்டு நாட்காட்டியில் பெரிய சீர்திருத்தங்களை அமல்படுத்தினார்.90 நாட்களை இடைச் செருகல் செய்ததால் ஒரு வருடத்தில் 445 நாட்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.இந்த ஆண்டை "குழப்பத்தின் ஆண்டு"(year of confusion) என்று அழைக்கப்படுகிறது.மேலும் லீப் வருடம் என்ற புதிய வருடத்தை அறிமுகப் படுத்தினார்.10 நாட்களை கூட்டி, வருடத்திற்கு 365 நாட்கள் என்றும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ருவரிக்கு 29 நாட்கள் என்று இன்று உபயோகத்தில் உள்ள நாட்காட்டியை வடிவமைத்தார்.ஜனவரி 1ம் தேதி ஆண்டின் முதல் நாள் ஆக்கப்பட்டது.அடுத்த வருடம் சீசர் இறந்தவுடன்,Quinctilis என்ற மாதம் "ஜூலை" என்று மாற்றி அமைக்கப்பட்டது. அன்று ரோமில் கணக்கிடும் போது,கி.பி.45 - கி.பி.42 ஐ நான்கு ஆண்டாக கணக்கிட்டு லீப் வருடத்தை கணித்தனர்.இதனால் மேலும் நாட்காட்டியில் அதிக நாட்கள் சேர்ந்ததில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தவறை அகஸ்டஸ் சீசர் திருத்தினார். அதனால் கி.மு.9 இல் இருந்து கி.பி. 8 வரை லீப் வருடம் இருக்கவில்லை.இதற்கு பிரதிபலனாக "Sextilis" என்ற மாதத்தை "ஆகஸ்ட்" என்று மாற்றி வைக்கப் பட்டது.
முதல் லீப் வருடமாக கி.பி 8ம் ஆண்டு ஆனது.சூரிய ஆண்டு ஜுலியன் நாட்காட்டியை ஒப்பிடும் போது 128 வருடத்திற்கு ஒரு முறை ஒரு நாள் பின் தங்கியது. ஈஸ்டர் பண்டிகையை கணிப்பதில் தவறு நேரிட்டது. அதனால் ஜுலியன் நாட்காட்டியில் மாறுதல் தேவைப்பட்டது. அதிக நாட்கள் சேர்க்கப்பட்டதை குறைக்க வேண்டியதாகியது. ஜுலியன் நாட்காட்டியை மாற்றுவதை ஆலோசயுஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்பவர் முன்மொழிய போப் கிரெகோரி (Gregory) செயல் படுத்தினர்.

ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும் 97 லீப் வருடங்கள் இருக்க வேண்டும் என்ற மாற்றம் செய்யப்பட்டது. அதாவது 4அல் வகுபடும் வருடங்கள் மற்றும் 400அல் வகுபடும் நூற்றாண்டுகள் லீப் வருடங்களாக அறிவிக்கப் பட்டது. இந்த மாற்றத்திற்கு உறுதுணையாக மார்ச் 21ம் தேதியை "Vernal Equinox" (அதாவது இரவும் பகலும் சமமாக இருக்கும் நாளே வெர்னால் எகிநோக்ஸ் என்று கொள்ளலாம்) என்று கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் 1582ம் ஆண்டு 10 நாட்களை நாட்காட்டியில் இருந்து எடுக்க முடிவு செய்யப் பட்டது. இத்தாலி,போர்துகீஸ்,ஸ்பெயின் போன்ற நாடுகள் கிரெகோரியன் நாட்காட்டியை உடனடியாக அமல் படுத்தின.இந்த நாடுகளில் 1582ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதிக்குப் பிறகு 15ம் தேதி பிறந்தது. இந்த மாற்றத்தை போப் அறிவித்ததால் கத்தொலிக்க நாடுகள் ஏற்றுக் கொண்டன.

ஆனால் இங்கிலாந்து,ரஷ்ய போன்ற நாடுகள் இதனை வெவ்வேறு நூற்றாண்டுகளில் செயல் முறை ஆக்கியது. குறிப்பாக இங்கிலந்தில் 1782லும்,ரஷ்யாவில் 1918லும் நடைமுறை படுத்தப் பட்டன.இந்த கிரெகோரியன் நாட்காட்டியிலும் சிறு பிழையும்,சிக்கலும் உள்ளது. 3300 ஆண்டுகளில் ஒரு நாள் வித்தியாசம் மீண்டும் வரும்.ஜான் ஹெர்ஷல் என்ற வானவியல் நிபுணர் 4000 ஆண்டுகளுக்கு 369 லீப் வருடங்கள் இருந்தால் இந்த பிழை நீக்கப்படும் என்றார். அதாவது 4000 வருடங்களில் ஒரு லீப் வருடத்தை நீக்குவது. ஆனால் இதை இன்னும் அதிகாரப் பூர்வமாக உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.மேலும் ஈஸ்டர் பண்டிகை வரும் நாள் வருடத்திற்கு வருடம் மாறுபடுவது குறையாக கருதப் படுகிறது. மார்ச் 21ம் தேதிக்குப் பிறகு 32 நாட்களில் என்று வேண்டுமானாலும் ஈஸ்டர் வரலாம். கிரெகொரியின் நாட்காட்டியை ஸ்விடநில் (Sweden) செயல் படுத்தும் போது நடந்த சுவையான சம்பவம்.செயல்முறையில் ஏற்பட்ட குளறுபடியால் 1712ம் ஆண்டு பிப்ருவரியில் 30 நாட்களாக இருந்தது.அன்று பிறந்தவர்கள் வாழ்கையில் பிறந்த நாள் கொண்டாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது..

ஆறாம் நூற்றாண்டில் தான் கி.மு. மற்றும் கி.பி என்று ஆண்டுகளைக் குறிக்கும் வழக்கம் ஏற்பட்டது. Dionysius Exiguus என்பவர் தான் கி.பி.525ல் .கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு),கிறிஸ்து பிறப்பதற்கு பின் (கி.பி) என்ற இன்றுள்ள முறையை நிறுவியவர்.இதில் கி.மு 1ம் ஆண்டிற்குப் பிறகு கி.பி 1ம் ஆண்டு தான்."பூஜ்ஜியம்" ஆண்டு என்று ஒன்றில்லை.