புதன், 26 நவம்பர், 2008

இலங்கை தமிழர்களின் அவல நிலை

இலங்கையில் இந்த வருடத் தொடக்கத்திலிருந்து தீவிரமடைந்துள்ள போரினால் பலவிதமான கேள்விகளும், யோசனைகளும் முன்வைக்கப் படுகின்றன.
தேசியம் மற்றும் தேச பக்தி என்பது தேவையானதா, எல்.டி.டி ஒரு தீவிரவாத இயக்கமா அல்லது விடுதலைக்குப் போராடும் ஆயுதம் ஏந்திய குழுவா போன்ற சர்ச்சைகள் நடை பெறுகின்றன. மேலும் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த போருக்கு எதிரான தமிழர்களின் கொந்தளிப்பின் காரணம் "மூலப் படிம உணர்வா" (உயிரோசையில் தமிழவன் எழுதிய "தமிழ் மக்களின் மூலப்படிம உணர்வு" நினைவிருக்கலாம்) என்ற விவாதம் நாகர்ஜுனன் அவர்களின் வலைத்தளத்தில் ஓர் உயர் தளத்தில் (higher dimension) நடக்கிறது. இதைப் பற்றிய பரவலான விவாதத்திற்கு உகந்த நேரம் இது தான். கட்டாயமாக ஓர் அறுபடாத நூலிழை போல் தமிழ் உணர்வு என்ற சக்தி உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே இழையோடுகிறது. ஆனால் இந்த சக்தியை ஒருங்கிணைத்து ஒரு குறிக்கோளை நோக்கி நகர்த்திச் செல்ல தன்னலமற்ற, வியாபார நோக்கமில்லாத தலைமைத் தேவைப் படுகிறது. அப்படி ஒரு தலைவர் இன்று இல்லை. எதிர் காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது. காலம் பதில் சொல்லும்.

இந்தியாவின் ஆங்கில இதழ்கள் மற்றும் விடுதலிப் புலிகளை கடுமையாக எதிர்க்கும் என்.ராம், சோ, ஜெயலலிதா, இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை அரசியல் பிரச்சனையாக மட்டுமே கருதுகிறார்கள். இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை. எனவே அதனை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம். அதற்கு நேர்மாறாக முழுமையாக சமூகப் பிரச்சனையாகவும், உணர்வுப் பூர்வமாகவும் அணுகுகிறார்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். ஆனால் எல்லோரும் ஓத்துப் போகும் ஒரே அம்சம் இலங்கையிலுள்ள தமிழர்கள் அனைவரும் ஜனநாயக முறையில் எல்லா உரிமைகளுடனும் நலமாக வாழ வேண்டும் என்பது தான். இதற்கு இரண்டே தீர்வு தான் உள்ளது. ஒன்று தமிழ் ஈழம். இன்றைக்கு இது சாத்தியமா?

பல இயக்கங்கள் ஆயுதம் ஏந்தி இலங்கை தமிழர்களுக்காகவும், தனி ஈழம் கேட்டும் போராடிய நிலையில், விடுதலிப் புலிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளனர். நீண்டகால போர், தவறான அணுகுமுறை, எதிர்கால விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எடுத்த நடவடிக்கைகள், தீவிரவாத குழு என்ற முத்திரை, பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற சுமை, கிழக்குப் பகுதியில் புலிகளின் மத்தியில் ஏற்பட்டப் பிளவு போன்ற காரணங்களினால் இன்று வலுவிழந்து நிற்கின்றனர் விடுதலைப் புலிகள். அதே நேரத்தில் இராணுவம் பெரிய அளவில் வெற்றி அடைந்து வரும் இன்றைய நிலையில் இலங்கை அரசு இறங்கிவந்து தமிழ் ஈழம் வழங்குவது ஒரு கனவாகத் தான் இருக்கிறது. அமைதிப் பேச்சு வார்த்தையில் தேவைப்படும் ராஜ தந்திரம் இல்லாமல் ஆயுத போராட்டத்தை மட்டும் வைத்து தனி நாடு அடைந்து விடலாம் என்ற புலிகளின் எண்ணம் மிகவும் தவறானது. 2000ம் ஆண்டு நடந்த போரில் புலிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றும், இலங்கை ராணுவமும், அரசும் பின்னடைவில் இருந்த நேரத்தில் நார்வே மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் குறைந்த பட்சம் இலங்கையில் ஒன்றிணைந்த (fedaral) தனி தமிழ் மாநிலம் பெற்றிருக்க வாய்ப்பிருந்தது. அதையும் தவற விட்டார்கள். உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் துணை இல்லாமல் தனி நாடு அடைவது என்பது கனவாகவே முடிந்து விடும் என்று புலிகளின் தலைமை உணர வேண்டும். அதற்கான தீவிர அரசியல் முயற்சியில் ஈடுபடுவது தான் புலிகளுக்கு இன்றுள்ள ஒரே வழி. முதற் கட்டமாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற அடையாளத்தை உடைத்து, இந்திய அரசு அங்கீகரிக்கும் நிலைக்கு செல்ல வேண்டும். புலிகளின் இன்றைய செயல் பாடுகளில் பெரிய அளவிற்கு மாற்றம் இல்லாமல் இந்த இலக்கை அடைய முடியாது.இதற்கு தமிழ் நாட்டில் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பாலமாக இருந்து உதவலாம். ஆனால் அதற்கு முன்பாக புலிகள் தங்கள் இயக்கத்தின் மேல் மற்றவர்களுக்கு உள்ள நம்பகத் தன்மையை மேம்படுத்த வேண்டும்.

தமிழர்களின் விவகாரத்தில் இலங்கை அரசின் செயல்பாட்டை எழுதுவதற்கே மிகவும் வெட்கமாக இருக்கிறது. பண்டாரநாயக இலங்கையின் சுதந்திரத்திற்கு பிறகு சிங்கள இன வெறி என்ற விஷ விதையை விதைத்ததின் பலன், இன்று ஆயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள் மற்றும் சிங்கள ராணுவத்தினரின் உயிர்கள் அறுவடையாகின்றன. அதற்கு பிறகு இலங்கையில் இருந்த ஆட்சியாளர்கள் மறைமுகத் திட்டத்தை M.S.S. பாண்டியன் என்ற சமூகவியல் அறிஞர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதியதில் (http://timesofindia.indiatimes.com/SUBVERSE_Change_course_in_Lanka/rssarticleshow/3630071.cms) இருந்து தெரிந்து கொள்ளலாம். இன்றுள்ள இலங்கை அதிபர் ராஜ்பக்ஷே அமெரிக்க அதிபர் புஷ்ஷைப் போல் முரட்டுப் பிடிவாதம் கொண்டிருக்கிறார்.தமிழர் பிரச்சனை போரினால் தீர்க்கப் பட முடியாத ஒன்று என்று இன்னும் அவருக்கு உறைக்கவில்லை. இவருடைய குறிக்கோள் போரில் வெற்றி பெற்று(?) அரசியல் தீர்வு என்ற பெயரில் கிழக்குப் பகுதியில் வெள்ளையன் தலைமையில் ஏற்படுத்தியது போல இலங்கையின் வடக்கில் பெயரளவில் ஒரு பொம்மை அரசாங்கத்தை உண்டாக்குவதுதான்.புலிகளை வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் ஆதரவற்ற தமிழர்கள் மேல் அடக்குமுறையை ஏவி விட ராஜபக்சே நினைத்தால், அது வரலாற்றில இலங்கை அரசு இழைத்த மிகப் பெரிய தவறாகிவிடும். தமிழர்கள் எதிர் பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் அமையாவிட்டால், இனப் பிரச்சனை மீண்டும் தலை தூக்க நீண்ட நாள் ஆகாது. ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமாக 30% பணவீக்கத்துடன் திணறிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் இந்த போர் தொடர்ந்தால் ஏற்கனவே மோசமான நிலையிலுள்ள இலங்கை மக்களின் வாழ்க்கை சீரழிந்து விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். புலிகள் ஆயுதத்தை கைவிட வேண்டும் என்று கோரும் ராஜ்பக்ஷே, அதே சமயத்தில் ஒரு பரந்த, தமிழர்கள் ஏற்கத்தக்க, தமிழர்களுக்கு சம அந்தஸ்து அளிக்கக் கூடிய ஜனநாயகத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.

இந்த போரினால் மீறப் பட்டுள்ள மனித உரிமைகள் மனித சமுதாயத்தையே தலை குனிய வைக்கும் அளவிற்கு உள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழக மனித உரிமை சங்கம் (UTHR-J) அக்டோபர் 28ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கை புலிகள் மற்றும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. "உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி" என்பது போல் போர் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் நிலை உள்ளது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் தங்கள் தாய் மண்ணிலேயே அகதிகளாக வாழும் அவல நிலை. இதை பார்த்து கண்ணீர் வடிக்க தமிழ் உணர்வு தேவையில்லை. மனிதாபிமானமே போதுமானது. இந்த நேரத்தில் இந்திய அரசின் கடமை மிகவும் முக்கியமானது. இந்திய அரசு செய்ய வேண்டியது என்ன?

என்னதான் உள்நாட்டுப் பிரச்சனை என்று இந்தியா கருதினாலும், இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடவேண்டும். விடுதலைப் புலிகளின் பின்வாங்குதலால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பி அவதியுறும் இலங்கைத் தமிழர்களின் நல் வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் தனக்குள்ள நல்லுறவைப் பயன்படுத்தி உலக நாடுகளின் மூலமாக இந்த இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்க இது தான் சரியான தருணம்.மேலும் இந்திய அரசாங்கம் எப்போதுமே இருதரப்பு பேச்சு வார்த்தையைத் தான் வெளிநாட்டுக் கொள்கையில் கடைபிடிக்கிறது. ஆனால் புலிகளுடன் நேரடி தொடர்பு வேண்டாம் என்ற பட்சத்தில், பல தரப்பு பேச்சு வார்த்தை (multilateral talks) நடத்த முன் வரலாம். சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் கொண்ட ஒரு குழு அமைத்து சிங்கள மற்றும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயலலாம். அதில் "தமிழ் ஈழமா அல்லது ஒருங்கிணைந்த இலங்கையில் ஒன்றிணைந்த தமிழ் மாநிலமா?" என்ற தீர்வுக்கு வரலாம். அதை விட்டு இந்தியா இலங்கைக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை போருக்கு தீர்வாகாது. இந்தியா ஆயுதம் தரவில்லை என்றால் சீனா அல்லது பாகிஸ்தானில் இருந்து வாங்கிக் கொள்வார்கள். ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் உளவாளிகள் அதிக அளவில் இலங்கையில் உள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, போரினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பதை இலங்கை அரசும், புலிகளும் உடனடியாக கை விட வேண்டும். மூன்று லட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். மூன்று லட்சம் தமிழ் மக்கள் குறைந்த பட்ச தேவையான உணவு, உடை,இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி கூட இல்லாமல் அவதிப் படுகிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது நாம் 21ம் நூற்றாண்டில் இருக்கிறோமா அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இருக்கிறோமா என்று தெரியவில்லை. உலக நாடுகள் மற்றும் குறிப்பாக இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார் இன்று இருந்தால் இந்த அல்லல் படும் தமிழ் மக்களைப் பார்த்து என்ன பாடியிருப்பாரோ?

உயிரோசை இதழில் வெளியானது.
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=577

அமெரிக்க தேர்தல் களம்

உயிரோசை இதழில் வெளியானது

தண்ணி டாங்கர் லாரி ஏறி நசிங்கிய தகர டப்பா போல அமெரிக்க பொருளாதாரம் ஒரு புறம் இருக்க, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரங்கேறும் தேர்தல் திருவிழா மற்றொரு புறம். அமெரிக்க ஊடகங்கள் பசிக்கி நல்ல தீனி. ஜனநாயக கட்சி வேட்பாளராக ஓபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளராக மெக்கைனும் போட்டியிடுவது தெரிந்ததே. தனி நபர் தாக்குதல்களும், எதிர்மறை விளம்பரங்களும் முன் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. பொருளாதாரம், ஓர் இனச்சேர்க்கை, கருக்கலைப்பு,வெளிநாட்டு கொள்கை,ஈராக்குடனான யுத்தம், சுற்றுபுறச் சூழல் மற்றும் உடல் நல பாதுகாப்பு (ஹெல்த் கேர்) தேர்தலின் முக்கியப் பிரச்சனைகளாக உள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி அமெரிக்க மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கயுள்ளது. புஷ்ஷின் எட்டு ஆண்டு கால கைங்கர்யம் ஈராக் மீது போர் மற்றும் வரிக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் உபரியாக இருந்த அமெரிக்க பட்ஜெட்டில் பெரிய துண்டு (டெபிசிட்) விழுமாறு செய்தது தான். ஒரு பக்கம் புஷ்ஷால் ஏற்பட்ட சுமை, மறுபக்கம் வங்கிகள் கண்மூடித்தனமாக வீட்டுக் கடன்கள் வழங்கி திரும்பப் பெற முடியாமல் போனதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்ற இரண்டு பிரச்சனைகளையும் ஒரு சேர சமாளிக்கும்படியான பொருளாதார திட்டத்தை அறிவிக்க வேண்டிய பரிதாப நிலையில் வேட்பாளர்கள். பூதாகாரமாக விஸ்வரூபம் எடுத்துள்ள பொருளாதாரச் சிக்கலில் இருந்து அமெரிக்காவை மீட்பது குறித்து இரண்டு வேட்பாளர்களும் முற்றிலும் மாறுபட்ட பொருளாதாரத் திட்டத்தை முன் மொழிந்து இருக்கிறார்கள்.

மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவை குறைப்பது முதலானவைகள் பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மெகைன், அரசாங்கத்தின் செலவினைக் குறைக்க முடியுமா என்பது சந்தேகம் தான். மேலும் மெகைனின் வரி கொள்கை 60% மக்களுக்கு அனுகூலமாகவும், 1% மக்களுக்கு அதிக வரி கட்டும் படியும் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே அதிக வருமானம் உள்ளவர்களுக்கு அதிகப் படியான சலுகை அளிப்பதாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. வீட்டுக் கடன் திரும்ப செலுத்த முடியாமல் பல மக்கள் அவதியால் வீட்டை மீண்டும் கடன் வாங்கிய வங்கியிடமே விட்டுச் செல்வதால் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிர்ணயிக்கப் பட்ட வட்டி விகிதத்தில் 30 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் படியான கடன் வழங்கப்படும் என்றும், இது 2 லட்சம் முதல் 3 லட்சம் மக்களுக்கு பயன்படும் என்று மெகைன் கூறுகிறார்.

ஓபாமாவின் வரிக் கொள்கை முற்றிலும் மாறு பட்டதாக உள்ளது. 20 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள வரித் தள்ளுபடி செய்து காசோலையாக மக்களுக்குக் கொடுப்பது, வீட்டுக் கடன் செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு 10 பில்லியன் டாலர் நீதி ஒதுக்கீடு செய்வது, புஷ் செயல்படுத்திய வரிச் சலுகையை பணக்காரர்களுக்கு (250000 டாலாருக்கு மேல் வருமானம் உள்ளவர்கள்) ரத்து செய்வது, எரிபொருள் நிறுவனங்கள் மேல் "விண்ட்பால்" வரி விதித்து, கிட்டதட்ட ஆயிரம் டாலர் வரை குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு"அவசர எரிபொருள் தள்ளுபடி" என்ற பெயரில் வழங்குவது போன்றவைகள் முக்கியமானவைகளாகும்.ஓபாமாவின் வரிக் குறைப்புத் திட்டத்தால் 80% மக்களுக்கு நன்மையும், 17% அதிக வருமானமுள்ள மக்கள் கூடுதல் வரி செலுத்தும் படியும் நேரிடும் என்பது பொருளாதார நிபுணர்கள் கருத்து.

வெளிநாட்டுக்கு வேலையை அனுப்பாத அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்ற ஓபாமாவின் கூற்றுக்கு, உலக அளவில் போட்டியிடும் வாய்ப்பை அமெரிக்க கார்பரேட் நிறுவனங்கள் இழந்து விடும் என்று மெகைன் மறுதலிக்கிறார். ஈராக்கில் இருந்து பதினாறு மாதங்களில் ராணுவத்தை திரும்ப அழைப்பது என்ற ஓபாமாவின் நிலையால் அரசாங்கத்தின் செலவினங்களை குறைப்பது கடினம். செல்வத்தைப் பரவலாக்குவது என்ற ஓபாமாவின் கூற்றை நாட்டை சோசலிசத்தை நோக்கி எடுத்துச் செல்ல முயல்கிறார் என்று மெகைன் கடுமையாக சாடுகிறார். சோசலிசம் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் சோர்ந்து போயுள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களை ஒன்று சேர்க்க மெகைனின் இந்த பிரச்சாரம் உதவலாம். நடுத்தர மக்களைப் பற்றி மெகைன் கவலை படவில்லை என்பது ஓபாமாவின் கட்சி. உடல் நல காப்பீடு மக்களின் உரிமை என்று ஓபாமாவும், இல்லை அது மக்களின் பொறுப்பு என்று மெகைனும் வாதிடுகிறார்கள். இதை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் கொள்கைகளும் வரையறுக்கப் பட்டுள்ளன. வெளிநாட்டு விவகாரத்தில், "பொறுக்கி" நாடுகள் என்று புஷ் விளித்த வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுடன் உட்கார்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்பது ஓபாமாவின் நிலைப்பாடு. மெகைன் கிட்டத்தட்ட புஷ்ஷின் வெளிநாட்டு கொள்கையையே தொடர்ந்து கடை பிடிப்பவராக தெரிகிறது.

ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் மாநிலங்களை "நீல மாநிலங்கள்" என்றும், குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் மாநிலங்களை "சிவப்பு மாநிலங்கள்" என்றும் பிரித்திருக்கிறார்கள். கடைசி கட்ட பிரச்சாரமாக இரண்டு வேட்பாளர்களும் சிவப்பு மாநிலங்களில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்கள். ஜோ பைடேன் என்ற அனுபவமிக்க ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக ஓபாமாவும், அனுபவக்குறைவான, கிறிஸ்துவ மதத்தில் அதிதீவிர ஈடுபாடு கொண்ட சாரா பாலின் என்பவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக மெகைனும் தேர்தெடுத்து உள்ளார்கள். .அமெரிக்காவின் இந்த கஷ்ட நிலைக்கு புஷ்ஷின் கொள்கைகளைகளே காரணம் என்றும், அதை மெகைன் முழுவதும் ஆதரித்தவர் என்றும், அவர் ஜனாதிபதி ஆனால் அதே கொள்கைகளை தொடர்ந்து கடை பிடிப்பார் என்றும், அது நாட்டுக்கு மிகவும் கெடுதல் என்றும் மீண்டும் மீண்டும் ஓபாமா கூறியதால் எரிச்சல் அடைந்த மெகைன், மூன்றாவது நேரடி விவாதத்தில் "நான் புஷ் இல்லை" என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே மூன்று நேரடி விவாதங்கள் (debate) நடந்து முடிந்த நிலையில், மூன்றிலும் ஒபாமா வெற்றி பெற்றதாக நடுநிலை கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மெகைன் எரிச்சலுடனும், உணர்ச்சிவசப்பட்டும் இருந்த நிலையில், ஓபாமா பொறுமையுடனும், நிதானமாகவும் விவாதத்தை அணுகியது பாராட்டக் கூடியதாக இருந்தது. ஒரு விமர்சகர் கூறியது போல் "90 நிமிட விவாதத்திற்குப் பிறகும் கூட ஓபாமா தலையில் ஐஸ் கட்டியை வைத்தாலும் உருகாத அளவிற்கு சாந்தமான மனநிலையில் இருந்தார்" என்பதே உண்மை. ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு ஒபாமாவுக்கே அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. புஷ் நிர்வாகத்தில் அங்கம் வகித்த காலின் பொவெல் கூட ஓபாமாவை ஆதரித்துள்ளது குறிப்பிடத் தக்கது. என்னதான் ஓபாமா முன்னணியில் இருந்தாலும், 60% தீவிர கிறிஸ்துவர்கள் உள்ள இந்த நாட்டில், ஏறத்தாழ அனைவரும் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களை வாக்குச் சாவடிக்கு வரவைக்க மேகினால் முடிந்தால், ஓபாமா வெற்றி பெறுவது கேள்விக்குறி ஆக வாய்ப்புள்ளது. . ஓபாமா வெற்றி பெற்று சரித்திரம் படைப்பாரா? ஆனால் யார் வெற்றி பெற்றாலும் அது முள்ளின் மேல் படுத்த சுகத்தைத் தான் கொடுக்கப் போகிறது இந்த பதவி என்பது நிதர்சனமான உண்மை.

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=408

அறிக்கைகளும் ஆர்பாட்டங்களும்

14-Oct-2008

இன்று இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் உள்ள அரசியலை வூடகங்கள் மூலம் படிக்கும் போதும், பார்க்கும் போதும் கற்பனையில் உதித்த பேட்டிகளையும், அறிக்கைகளையும் மன வேதனையுடனும், நகைச்சுவையுடனும் பகிரிந்து கொள்கிறேன்.

தமிழகத்தில் மின்வெட்டு 'கட்': ஆற்காடு வீராசாமி அறிவிப்பு

இயற்கையின் சதியால் தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி நின்றது என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் தமிழ் நாட்டில் மின்வெட்டு இருக்காது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இருண்ட தமிழகம்: ஜெயலலிதா அறிக்கை

என் ஆட்சியில் 'பிரகாசமாக ஒளி வீசி மின்னிய" தமிழகத்தை இருண்ட தமிழகமாக மாற்றிய கையாலாகாத ஆற்காடு வீராசாமியையும், நயவஞ்சக கருணாநிதியின் அரசையும் கண்டித்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டி என்ற கிராமத்தில் அ.தி.மு.க மிகப் பெரிய போராட்டத்தை வரும் அக்டோபர் 22ம் நடத்தும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஜெயலலிதாவைக் கண்டித்து கருணாநிதி உருக்கமான கவிதை

ஆற்காடார் அறிவித்தது புரிந்தும்
புரியாதது போல் - பொறாமையில்
பிதற்றும் பேதையே
இரவில் மட்டுமே மின்வெட்டு
பகலிலோ சுட்டெரிக்கும் நமது சூரிய ஒளியை
இலவசமாக எல்லா தமிழ் மக்களுக்கும் பகிர்தளித்து
மின்வெட்டு இல்லா மாநிலமாக்கி
பார் புகழ நடாத்திச் செல்லும்
அரசை ஆன்றோரும், சான்றோரும் பாராட்ட
கண்டிக்கப் புறப்பட்ட
நயவஞ்சகியே, நாசக்கார அம்மையே
கலங்காது இந்த மனம்
வீழாது தமிழ் இனம் - உன் சூழ்ச்சிக்கு
இந்நாளும் மறந்திருந்த இலங்கை
இனப் படு கொலை கண்டித்து
யாம் போராடத்துடிக்கும் போது
தமிழ் நெஞ்சங்களை திசை மாற்றும்
தரம் கெட்ட உன் இழிச் செயலை
தகர்த்தெறிவோம் தடைகளை களைவோம்
உயிரை துச்சமாக மதிப்போம் - பொருத்தது போதும்
பொங்கியெழு உடன்பிறப்பே

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


இலவச "லாந்தர்" : கருணாநிதி பேட்டி

மின்சார உற்பத்தி நின்றதால் இரவில் அவதியுறும் தமிழக மக்களுக்கு இலவச லாந்தர் விளக்கு அளித்து ஒளி ஏற்றி வைக்க அண்ணா வழியில் அற நெறியில் நிற்கும் கழக அரசு முடிவு எடுத்திருக்கிறது என்பதை உளமார உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கருணாநிதியை கண்டித்து ராமதாஸ் பேட்டி

இருண்ட தமிழகத்தை மீட்க லாந்தர் விளக்கு கொடுத்து ஒளி ஏற்றி வைக்க முன் வந்த அரசு "டாஸ்மாக்" கடைகளை மூடியும், தமிழக மக்களுக்கு எண்ணை,திரி மற்றும் தீப்பெட்டி இலவசமாக கொடுக்கவும் முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

லாந்தர் ஊழல்: சுப்ரமணிய சுவாமி அறிக்கை

லாந்தர் வாங்குவதில் தமிழ் நாட்டில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இந்த விஷயத்தில் கனிமொழி பெரிய அளவில் கோடிக் கணக்கில் பணம் கையாடல் செய்ததாக சுப்ரமணிய சுவாமி அறிவித்தார். இதற்காக தி.மு.க அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளார்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சுப்ரமணிய சுவாமி ஒரு மன நோயாளி : கனிமொழி எம்.பி. அறிக்கை

தியாக உள்ளதுடன் மக்களுக்கு சேவை செய்து வரும் தமிழக முதல்வர் அவர்களை களங்கப் படுத்த வேண்டும் என்றே சு.சுவாமி அறிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவிற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் செயல்களில் இருந்தே அவர் ஒரு மன நோயாளி என்பது திட்ட வட்டமாகத் தெரிகிறது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை:

நான் அரசியலுக்கு வருவது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது ஆண்டவனுக்கே எப்படி தெரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. ஆண்டவனே நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் ஆண்டவன் ஆணையிட்டால் நான் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. இது தான் என் அரசியல் பிரவேசம் பற்றிய தெளிவான நிலை என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



காதலில் விழுந்தேன்: விஜய காந்த் பேட்டி

இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜய காந்த் கூறியது:
ஏழை மக்களுக்காக நான் கட்டிய கல்யாண மண்டபத்தை இடித்து என்னை அழிக்க நினைத்த இந்த அராஜக அரசு, என்னைக் கண்டு பயந்து நடுங்கும் இந்த அரசு, ஏழைப் பங்காளன் "சன்" தொலைக் காட்சி பாமர மக்களுக்காகவே தயாரித்த "காதலில் விழுந்தேன்" என்ற திரைக் காவியத்தை மதுரை மாநகரில் வெளியிட முடியாமல் தடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனால் நான் "சன்" தொலைக் காட்சி நிர்வாகத்துடன் கூட்டணி அமைத்து விட்டேன் என்றோ, விலை போய் விட்டேன் என்றோ நினைக்காதீர்கள்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

"பொடா" சட்டம்: அத்வானி பேட்டி

இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த பா.ஜ.க தலைவர் அத்வானி
"பா.ஜ.க" பாராளுமன்றத் தேர்தலில் வென்று தான் பிரதமர் பதவி ஏற்றவுடன் "பொடா" சட்டத்தை நிறைவேற்றி இந்தியப் பொருளாதரத்தை சீர்படுத்தி, தீவிரவாதத்தை ஒழித்து இந்தியாவை மீண்டும் "ஒளிரச் செய்வேன்" என்று கூறினார்.
மேலும் ஒரிசாவில் கிருஸ்துவர்கள் தாக்கப் படுவதை நிறுத்த "மோடி"யை ஒரிசாவின் முதல்வர் ஆக்கினால், ஒரிசாவில் கிருஸ்துவர்களே இல்லாமல் செய்து "டாட்டா"வோ, "பிர்லா"வையோ அவர்கள் வாழ்ந்த இடத்தில் தொழிற்சாலை அமைக்கச் செய்து ஒரிசாவை இந்தியாவின் முதல் மாநிலமாக மோடி மாற்றி விடுவார் என்றும் கூறினார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இந்தியா பொருளாதாரம்: சிதம்பரம் பேட்டி

இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலுவான நிலையில் உள்ளதாகவும் பொது மக்கள் பீதி அடையவேண்டாம் என்றும், இருபது வருடம் பொறுமையாக இருந்தால் பங்கு சந்தையில் மக்கள் இழந்த பணத்தை மீட்டு விடலாம் என்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். மேலும் அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கலுக்கு, இந்தியா பண உதவி செய்யும் நிலையில் உள்ளதாகவும், எதற்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


கம்யூனிஸ்ட் ஆதரவு வாபஸ் எதிரொலி: பிரகாஷ் காரட் பேட்டி

கம்யூனிஸ்ட் ஆதரவு இருந்த வரை, மத்திய ஆட்சி சிறப்பாக நடந்து வந்தது. விலை வாசி உயர்வோ, பங்கு சந்தை விழ்ச்சியோ காணவில்லை. அமெரிக்க-இந்தியா அணு சக்தி ஒப்பந்தத்தால், உலகப் பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்து விட்டது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தால் உலகமே மகிழ்ச்சி அடையும் என்று கூறினார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

செவ்வாய், 25 நவம்பர், 2008

மனக்கிறுக்கல்கள் - 2

கர்நாடக இசை


பல விதமான ரசிகர்கள்

நண்பர் அழைப்பை ஏற்று செல்லும் குழந்தை பிறந்தநாள் விழாவோ, நல்ல இயக்குனரின் விரைவில் வர இருக்கும் திரைப்பட வெளியீடோ, அபிமான எழுத்தாளரின் புதிய புத்தக வரவோ மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் தரக் கூடியவைகள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமோ, ஏதாவது புதிய உத்தியைக் கையாண்டு அசர வைத்து விடுவாரோ இயக்குனர், புதிய கதைக் களம் என்னவாக இருக்கும் என்று பல விதமான கற்பனைகள் மனதில் ஓட ஆரம்பித்து விடும். சில சமயங்களில் இதனால் ஏமாற்றம் ஏற்படுவதும் இயற்கை தான். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகி விடுகிறது. குறிப்பாக கர்நாடக இசை நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தால் தோன்றும் எண்ணங்களுக்கு அளவே கிடையாது. இன்று பிரதான ராகம் என்னவாக இருக்கும், "ராகம் தானம் பல்லவி" இடம் பெறுமா, அப்படியானால் என்ன ராகத்தில் அமையும், துக்கடா பாடல்கள், தனி ஆவர்த்தனம், வயலின் ஒத்துழைப்பு என்று பெரிய பட்டியல் போடலாம்.

மாம்பலம் நடேசன் மாமா ஒரு தனி ரகம். கர்நாடக இசை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மனிதர். ஆனால் அவர் மனைவிக்கு அபார சங்கீத ஞானம். தாழ்வு மனப்பான்மையோ என்னவோ, "ஒரே வரியை நான்கு முறை மாற்றி மாற்றி பாடினால் அதற்குப் பெயர் கர்நாடக சங்கீதம்" என்று கூறும் கட்சி அவர். ஒரு முறை அவரை ஓர் இசை கச்சேரியில் பார்த்த போது, "என்ன மாமா இங்கே" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். "ராஜம் (பொண்ணு) ஊரிலிருந்து வந்திருக்கா, கச்சேரிக்கு போகனும்னா" என்றார். "எப்படி மாமா இருந்தது' என்ற கேள்விக்கு "நன்னா இருந்துடா. எதோ அந்த ராகம் இந்த ராகம் அப்படினா ராஜம், ஆனா எனக்கு எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தது" என்று சொல்லி சிரித்தார்.


சில விஷயங்கள் வாழ்கையில் எத்தனை முறை எதிர் கொண்டாலும் ஓர் இனம் புரியாத சந்தோஷ உணர்வு மனதைக் கவ்விக் கொள்கிறது. தோடி ராகத்தை எத்தனை முறை கேட்டாலும் உதாரணமாக ஐன்ஸ்டைனின் இயற்பியல் தத்துவம், திருக்குறள்,பாரதியின் கவிதைகள், தி.ஜா. வின் மோக முள் என்று பெரிய பட்டியலே போடலாம். இந்த வகையைச் சேர்த்தது தான் தோடி ராகமும். குறிப்பாக ஒ.எஸ். தியாகராஜன் அவர்கள் தோடி ராகத்தில் ராகம்,தானம்,பல்லவி பாடியது மிகச் சிறப்பாக அமைந்த நிகழ்ச்சியின் உச்ச கட்டம் என்றால் மிகையாகது. ஓர் அழகான சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் கை வண்ணத்திற்கு இணையானது பாடகரின் கற்பனையும், ராகத்தை கையாண்ட விதமும். வயலின் வித்வான் ராகவேந்திரர் மற்றும் மிருதங்கக் கலைஞர் முருகபூபதி அவர்களின் சமமான பங்களிப்பு ரசிகர்களின் மகிழ்ச்சியையும், பாடலின் இறுதி வடிவத்தையும் மெருகேற்றியது என்பது நிதர்சனமான உண்மை. "ஹனுமனை தினம் நினை மனமே" என்று பக்தி ரசம் சொட்ட இறுதியாக பாடி நிகழ்ச்சியை அமைதியான, மன நிறைவான சூழலில் முடித்தார் வித்வான். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த GLAC அன்பர்களுக்கு பாராட்டுக்கள். இருபது அல்லது இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொலை நோக்கு பார்வையுடன் GLAC என்ற அமைப்பை உருவாக்கியவர்களையும், அதை இன்று வரை தொடர்ந்து நடத்தி வருபவர்களையும் நினைக்கும் போது "எந்தரோ மகானு பாவலு அந்தரிக்கு மா வந்தனமு" என்று சொல்லத் தோன்றுகிறது.

மனக்கிறுக்கல்கள்


சுஜாதாவைப் பற்றி அவர் எழுதிய இன்றும் ரசிக்கத்தக்க விஷயங்களை த.ம.இ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாக நண்பர் திரு. ராஜராமனிடம் கூறி விட்டேன். ஆனால் எங்கு ஆரம்பிப்பது, எதை எழுதுவது, எதை விடுவது என்ற சிந்தனைக்குப் பிறகு கிடைத்தவை இவைகள். சுஜாதா தவிர வேறு சில விஷயங்களும் இதில் இடம் பெறலாம். எனக்குப் பிடித்தவைகள் என் கருத்துகளுடன் இங்கு இடம் பெறுகின்றன. உங்கள் மாறுபட்ட கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மிகவும் பயனுளதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.


முதலில் வணக்கத்துடன் ஆரம்பிப்போம். "கவிதை ரசனை என்பதே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலத்தான்" என்று எங்கேயோ படித்ததாக நினைவு என்கிறார் சுஜாதா.

"வணக்கம்" என்ற புவியரசு 1989ல் எழுதிய கவிதையை உதாரணமாகக் கொடுத்திருக்கிறார்.

"கோவை முகப்பில் உங்களை வரவேற்றும்
வாலான்குளக் கோட்டை மேட்டுப்
பாலத்து முனையின்
கள்ளுக்கடைக்கு வணக்கம்.
அதன் வாசல் புழுதியில் கருப்பன்
காசு கொண்டு வரக் காத்திருக்கும்
நகர்சுத்திப் பெண்ணுக்கும்
கள்ளுக்கடை சாராயக்கடை
வைன்ஷோப் முதலாளிக்கும்
கொடைக்கானலில் படிக்கும் அவர் புதல்வருக்கும்
அவர்களின் புதிய கான்டேசா கார்களுக்கும் வணக்கம்."

இதை படிக்கும் போது பட்டுகோட்டையார் எழுதிய

"காடு விளைஜென்ன மச்சான்
கையும் காலும் தானே மிச்சம்"

என்கிற கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. இந்த கவிதைகளில் இடதுசாரி கருத்துக்களை "சிவப்பு" சாயம் இல்லாமல் அழகாகக் கூறி உள்ளார்கள். இந்தியா இத்தனை முன்னேறிய பிறகும் இந்த கவிதைகளுக்கு இன்னும் உயிர் இருக்கிறது.

"பெரும்பாலான மனிதர்கள் முப்பது வயது வரை இடதுசாரி சிந்தனையுடன் தான் வாழ்கிறார்கள்" என்று படித்ததாக நினைவு. இது உண்மைதானா?

சீனக் கவிதை

அடுத்தது சீனக் கவிதைகளைப் பற்றி பார்ப்போம்.

சைனீஸ் கவிதைகளைப் பற்றி சுஜாதா:

"சைநீசில் கவிதைகளுக்கு நன்கு வரிகள் உண்டு. முதல் வரி கவிதையை தொடங்குகிறது. இரண்டாம் வரி கவிதையை தொடர்கிறது. மூன்றாவது வரி ஒரு புதிய கருத்தை ஆரம்பிக்கிறது. நான்காவது வரி முதல் மூன்று வரிகளையும் ஒன்று சேர்க்கிறது" என்று ஜப்பானியக் கவிஞர் கூறியதாக எழுதி உள்ளார்.

உதாரணத்திற்கு இந்த கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார்.

"சியோடவைச் சேர்ந்த சில்க் வியாபாரிக்கு இரண்டு பெண்கள்
மூத்தவளுக்கு இருபது வயது இளையவள் பதினெட்டு
ஒரு படைவீரன் கத்தியால் கொள்கிறான்.
ஆனால் இந்தப் பெண்கள் ஆண்களை தத்தம் கண்களால் கொள்கிறார்கள்."


இந்த கவிதையை படித்தவுடன் பாரதியின் கற்பனையில் உதித்த இந்த பாடலை நினைவு கூறாமல் இருக்க முடியாது.
"சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோவட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ"


கண்ணையும்,பெண்ணையும் வைத்து எதிர்மறையாக கண்ணதாசன் கற்பனையில்

"கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே"

கண்ணைக் கொடுத்தாலே கவிஞர்கள் கடல் உள்ள வரை கவிதை படைப்பார்கள். பெண்ணையும் கொடுத்தால் கற்பனைக் குதிரையை நிறுத்த முடியாது.

சுஜாதா முயற்சித்த சீனக் கவிதை:

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்.
மணி பார்த்தான். உட்கார்ந்தான். படுத்துக் கொண்டான்.
சென்னை விட்டு திருச்சி போகும் ராக்க்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல் எனுக்கும் ஒரு சீனக் கவிதை எழுதிப் பார்க்கலாமே என்று தோன்றியது. விளைவு இதோ:

எட்டு வயது வேலன் பந்து விளையாடினான்.
பசிக்கு பழைய சோறு சாப்பிட்டான். படுத்து உறங்கினான்
இளமையில் கல் என்பது தமிழ் முதுமொழி
விடியலில் வேலன் வேலைக்கு புறப்பட்டான் தந்தையுடன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxx
நீல. பத்மநாபன்

நீல. பத்மநாபன் அவர்களுக்கு காலம் கடந்து "சாகத்ய அகாடமி" விருது கிடைத்துள்ளது. இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எழுவது வயதான இவர் திருவனந்தபுரத்தில் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். முப்பது வயதில் இவர் எழுதிய "தலைமுறைகள்" என்ற நாவல் மிகவும் பிரபலமானது. க.நா. சு. இந்த நாவலை இந்தியாவிலேயே தலை சிறந்த பத்து நாவல்களில் ஒன்றாக மதிப்பிட்டுள்ளார். "உறவுகள்", "தேரோடும் வீதி", "இலையுதிர் காலம்" போன்ற நாவல்களும், நூற்றி ஐம்பது சிறு கதைகளும் எழுதி உள்ளார். இவருக்கு பரிசு கொடுத்து "அகாடமி" பெருமை சேர்த்துக் கொண்டது.


சுஜாதா - ஒரு வாசகனின் அஞ்சலி


சுஜாதாவின் மறைவுச் செய்தியை அறிந்தவுடன் கவிஞர் கண்ணதாசன் கூறிய "சாவே உனக்கு ஒரு சாவு வரதா" என்று எழுதியது தான் நினைவுக்கு வந்தது. ஒரு சிறந்த பொறியியல் வல்லுநர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் தமிழில் அறிவியலை மிகவும் எளிதாக கூறும் திறமை என்று பல சிறப்புகளை பெற்றவர். இவருடைய நைலான் கயிறு, கனவு தொழிற்சாலை, ரத்தம் ஒரே நிறம், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று பிரபலமான நூற்று கணக்கான கதைகள், நாவல்கள் படைத்தவர். இவருடைய முதல் சிறுகதை "சிவாஜி" என்ற பத்திரிகையில் வெளி வந்தது. பிற்காலத்தில் ஒரு பேட்டியில் முதல் கதை பிரசுரமானத்தில் ஏற்பட்ட சந்தோஷம் அளவிட முடியாதது என்றும், அதை யாராவது பெற்று தந்தால் தன் சாம்ராஜ்யத்தில் பாதியை கொடுப்பதாகவும் கூறி இருந்தார். தமிழில் கதை எழுதிவதில் "விஸுஅல் ரைடிங்" என்ற புதிய அணுகு முறையை கையாண்டார். அறிவியல் புனைக் கதைகள் (science fiction) மற்றும் அறிவியல் சார்ந்த இவருடைய கட்டுரைகள் தான் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து இவரை மிகஉம் வேறுபடுத்தி காட்டியது. தமிழில் "அறிவியல் கதைகளின் முன்னோடி" என்ற பட்டம் இவருக்கு சரியாக பொருந்தும். எழுவதுகளில் வந்த சுஜாதாவின் "கணையாழிஇன் கடைசி பக்கங்கள்" அவருடைய பரந்த அறிவையும், புத்திகூர்மையையும் வெளி படுத்துவதாக இருந்தன. கவிதை மற்றும் நாடகங்கள் படைப்பதிலும் கூட இவருடைய திறமையை காண முடிந்தது. "ஹைக்கூ" கவிதைகளை தமிழில் பிரபல படுத்தினார். பல வாசகர்களை கவிதை எழுதும் முயற்சியில் எடுபடச் செய்து சிறிதளவு வெற்றியும் பெற்றார். தமிழ் இலக்கியத்தின் பால் இவருடைய எழுத்தால் பல இளைய தலை முறையினர் கவர்ந்து இழுக்கப்பட்டனர் என்பது தான் இவர் தமிழுக்கு ஆற்றிய மிகப் பெரிய சேவை.

எண்பதுகளில் இருந்து எழுதுவதற்கு கணணி உபயோகித்தார் என்பது ஓர் ஆச்சிர்யமான விஷயம். "கணணியில் தமிழ்" என்பதிற்கு உண்மையான முயற்சி மேற்கொண்டவர். வைஷ்ணவ பக்தி இலக்கியத்தை பற்றி நிறைய எழுதினார். குறிப்பாக ஆண்டாள் பற்றிய கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது. சிறு கதைகள் மற்றும் கதைகள் எழுதும் நுணுக்கங்களை அழகான கட்டுரைகள் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சிற்றிதழ்களில் இடம் பெற்ற அருமையான கதைகள்,கட்டுரைகள் மற்றும் கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள தவறியதே இல்லை. உதாரணமாக விழுப்புரம் கல்லூரி பேராசிரியர் பழமலை எழுதிய "சனங்களின் கதை" என்ற யதார்த்தமான கவிதை தொகுப்பை பாராட்டி எழுதி சாதாரண வாசகனை அடையச்சைதார். தமிழ் பழங்கால இலக்கியத்தையும் இவர் விட்டுவைக்கவில்லை. கடுமையான விமர்சனகளுக்கிடையே ("இந்தியா டுடே", காலச்சுவடு" ) "புறநானூறு ஓர் எளிய அறிமுகம்" என்ற நூலை இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டார். இவருடைய எளிமையான உரைநடை, சிறு வாக்கியங்களாக செய்தியைச் சொல்லும் முறை மற்றும் நகைச் சுவை உணர்வு ("குதிரை" சிறு கதை, அந்நியன் சினிமாவில் விக்ரம் எழுதும் காதல் கடிதம்) திரை உலக வசனகர்த்தாவாக பிரகாசிக்க உதவியது. மணிரத்தினம், சங்கர் போன்ற இயக்குனர்கள் இவரை நன்கு பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் கதைகள் சினிமாவில் சிதைக்கபடுவதை கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், எழுத்து மற்றும் திரைக்கு இடையே உள்ள ஊடக வித்தியாசங்களை புரிந்து கொண்டு யதார்த்த நிலையை கையாண்டார் என்றால் மிகையாகாது. காச்மாலாஜி (cosmology) , குஅந்டொம் ப்ஹைசிச்ஸ் (quantum physics) முதலிய சிக்கலான விஷயங்களை தமிழில் என்னைப் போன்ற சாதரணமான வாசகனுக்கும் புரியும் வகையில் பகிர்ந்து கொண்டார். முதலில் இவருடைய கதைகளை நல்ல இலக்கியமாக விமர்சகர்கள் ஏற்க மறுத்தாலும், காலப் போக்கில் தமிழ் சிறுகதை இலக்கியத்தில் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் போன்ற தலை சிறந்த எழுத்தாளர்களுடன் சுஜாதா பெயர் இடம் பெறுவது தடுக்க முடியதாகி விட்டது.


ஓட்டு போடும் இயந்திரம் கண்டு பிடித்ததற்கு, அறிவியலை (ஏன், எப்படி, எதற்கு) பிரபலமான ஊடகங்கள் மூலமாக பிரபலப்படுதியதற்கு சுஜாதாவிற்கு பரிசுகள் கிடைத்தன. தன்னுடைய தொழிலையும், சொந்த வாழ்க்கையையும் மற்றும் எழுத்தாளர் என்ற அடையாளத்தையும் குழப்பிக் கொள்ளாமல் எளிமையான, இறுதிவரை உற்சாகமான ஒரு வித இளமையுடன் வாழ்ந்து வந்தார். சுஜாதாவை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்தார்க்கும், வாசக நண்பர்களுக்கும் அவருடைய எழுத்துக்களில் வாழ்கிறார் என்பது தான் ஒரே ஆறுதல்.

இறுதியாக சுஜாதா இறப்பு பற்றி அவர் எழுத்தில்:
"செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை ,என் புத்தகங்கள் ,என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும் .செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.
நான் நானாகவே தொடர வேண்டும் . அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும் . கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும் . அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன , முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்."


சுஜாதா நினைவாக ஒரு கவிதை முயற்சி:

சுஜாதா மரணம்

பூஜ்ஜியத்தால் வகுத்து பிரபஞ்சத்தை
படைத்த ஆண்டவனுக்கே ஆசை
அறிவியல் தமிழில் அறிய
கணணி கற்க கதைகள் கேட்க
ஆள் தேவை விளம்பரம் கண்ட
காலன் பாசக்கயிற்றுக்கு விடை