சனி, 25 பிப்ரவரி, 2012

அழகர்சாமியின் குதிரை

தமிழ் சினிமா வரலாற்றின் தொடக்கத்தில் நாடகங்கள் சினிமாக்களாக உருவாக்கப்பட்டன. பாடல்கள் மிகப் பெரிய அங்கமானது. நாடக பாணியில் பெரிய வசனங்கள் கருணாநிதி போன்றவர்களால் திராவிட பிரச்சாரத்துடன் 1950 களில் எழுதப்பட்டு, சிறிது அளவுக்கு மீறிய உணர்ச்சி ததும்ப  சிவாஜி போன்றோரால் நடிக்கப் பட்டு தமிழ் சினிமா பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. 60 களில் சினிமா தயாரிப்பு , நடிப்பு போன்றவைகள் ஒரு தொழிலாக உருவெடுத்தது. 70 களில் இளையராஜா, பாரதி ராஜா போன்றோர் வரவு தமிழ் மணத்துடன் கூடிய இசையோடு, கிராமத்தை மையமாகக் கொண்ட படங்கள் வெளிவரக் காரணமாகியது.. ரஜினியின் பிரவேசம்  மற்றும் வளர்ச்சி தமிழ் சினிமாவை முற்றிலும் லாப நோக்கமுடைய வியாபாரத்திற்கான களமாக மாற்றியது. அது இன்றும் விஜய், அஜித் மூலம் தொடர்கிறது. இதிலெல்லாம் பல சமயங்களில் போலியான, யதார்த்தமில்லாத, ஒரு கற்பனையான உலகையே பார்க்க முடிந்தது. இதில் விதி விலக்காக இயக்குனர்கள் மகேந்திரன்  மற்றும்  பாலு மகேந்திரா யதார்த்தப் படங்களை நோக்கி தமிழ் சினிமாவைத் திருப்ப முயன்று தோற்றார்கள் என நினைக்கிறேன். 



சமீப காலத்தில் யதார்த்தமான தமிழ் மக்களின் வாழ்க்கைச் சித்தரிப்புகள் படங்களாக வரத் தொடங்கி இருக்கின்றன.அந்த வரிசையில்  வெண்ணிலா கபடிக் குழு ஒரு முக்கியப் பங்களிப்பு. அதே போல் இயக்குனர் சுசீந்திரனின் மற்றொரு அருமையான படைப்பு "அழகர்சாமியின் குதிரை".

கதை என்றால் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் திரைக் கதை அசாத்தியம். இயக்குனர் சுசீந்திரன் கிராம வாழ்கையின் அத்தனை அம்சங்களையும் மிக அழகாகச் சித்தரித்திருக்கிறார். தமிழ் கிராம மண்ணின் யதார்த்த வாழ்கையின் அங்கங்களாகிய  ஜாதிப் பிரச்சனை, மூட நம்பிக்கைகள், வறுமையில் இருந்தாலும் உதவும் மனப்பான்மை, உறவுகளின் சிக்கல்கள், நியாயமான எதிர்பார்ப்புகள் என பல விஷயங்களை நுணுக்கமாக சித்தரித்து சுசீந்திரன் மனதைக் கொள்ளை கொள்கிறார். 

தொடை தட்டும் சவால்கள், வீர வசனங்கள், பெரிய கதாநாயகர்கள், மிகவும் அறிவாளித்தனமாக பேசுவது, ௧௦௦ பேரை  அடித்து விரட்டுவது, ரத்தம், கத்தி, கொலை, மரத்தை சுற்றி சுற்றி வருவது, ஏழையாக இருந்து ஒரு பாடலில் பணக்காரனாவது  என்ற எந்த விஷயமும் இல்லாத ஒரு சினிமா.

அந்த மலையாள மந்திரவாதி செய்யும் கூத்து, காவல் நிலையத்தில் குதிரை தொலைந்து  போனதை பற்றி தங்கள் சந்தேகங்களை விவரிப்பது, ஊரின் சந்தோஷத்தை பார்த்து அழகர் சாமி தன் மனதை மாற்றிக் கொள்வது, "source from பகவதி  அம்மன் " என்று போலீஸ் காரர் கூறுவது, வறுமையின் காரணமாக தன் பெண்ணை தெரியாத வெளியூருக்கு வேலைக்கு அனுப்புவது என்று பல இடங்கள் மனதை வருடியும், உற்சாகத்தைக் கொடுப்பதாகவும் இருந்தது.


பாஸ்கர் சக்தி
 

பாஸ்கர் சக்தி மிகச் சிறந்த வசனகர்த்தா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அழுத்தமான, புன்முறுவல் பூக்க வைக்கும் இவரின் வசனங்கள் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய துருப்புச் சீட்டு. ஜெமோ, எஸ்ரா போன்ற எழுத்தாளர்கள் வசனங்கள் எழுதினாலும் அது ஓர் எடுபடாத சமாசாரம் தான் என்னைப் பொறுத்த வரை.  எழுத்தாளர்கள் வசனகர்த்தாவாக மாறியவர்களில் பாஸ்கர் சக்தியே முதன்மையானவர் என்பதில் சந்தேகமே இல்லை.



கிரிக்கெட்டில்  "Form is temporary. but class is permanent" என்பார்கள். அது நம் இளையராஜாவுக்கு மிகப் பொருந்தும். பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிக அருமை. அதுவும் அந்த குதிரை ஓடும் சத்தத்தை மிக அழகாகப் பயன்படுத்தியுள்ளார். 80 களின் இளையராஜாவை மீண்டும் கேட்க முடிந்தது.

நடிகர்கள் எல்லோரும் மிகவும் இயற்கையாக நடித்திருக்கிறார்கள்.

வியாபார ரீதியாக இந்த படம் வெற்றியா அல்லது தோல்வியா எனத் தெரியாது. ஆனால் மனதிற்கு சுகத்தை கொடுக்கும் ஒரு படம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. நீங்கள் பார்க்கவில்லை எனில், நிச்சியம் பார்க்கவும்.

2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. அழகர்சாமியின் குதிரை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், காட்சியமைப்பு, நடிப்பு என்று சகல விதத்திலும் மனதை கொள்ளைக் கொண்ட படம். பகிர்வுக்கு நன்றி பாஸ்கர் லட்சுமணன்.

    பதிலளிநீக்கு