திங்கள், 31 அக்டோபர், 2011

கந்த ஷஷ்டி அனுபவங்கள்

நெல்லையில் வாழ்ந்தால் திருச்செந்தூர் முருகன் கந்த ஷஷ்டி விழா ஒரு சமுதாய நிகழ்வாக நம்முடன் உறவாட முடியாமல் இருக்க முடியாது. தீபாவளி முடிந்த கையுடன் ஷஷ்டித் திருவிழா தொடங்கி விடும். முருகன் மீது தீராத அன்பும், நம்பிக்கையும் கொண்ட பெரும் திரளான மக்கள் தீபாவளி முடிந்த வளர் பிறையில் முதல் ஆறு நாட்கள் விரதமிருந்து அந்த செந்திலாண்டவனை மனதார ஆராதிக்கத் தொடங்கி விடுவார்கள்.


நானும் என் பங்குக்கு கல்லூரி நாட்களில் ஷஷ்டி விரதமிருந்த நாட்கள் நினைவிற்கு வருகிறது. ஷஷ்டி அன்று திருச்செந்தூர் சென்று சூர சம்ஹாரம் பார்த்து வந்தது ஒரு நீங்காத நினைவு. பாளையங்கோட்டையில் பஸ் பிடித்து திருச்செந்தூர் செல்ல முடியாது. ஏனெனில் வரும் பேருந்துகள் அனைத்தும் நிரம்பி வழியும். ஓட்டுனர் அங்கு ஒரு மனித ஜென்மம் இருப்பதாகக் கூட நினைக்க மாட்டார். அதனால் ஜங்ஷன் (பழைய பேருந்து நிலையம்) சென்று, அடித்துப் பிடித்து கிடைக்கும் பேருந்தில் ஏறி, திருச்செந்தூரில் இறங்கினால் சாரை, சாரையாக மக்கள் கூட்டம் கடற்கரையை நோக்கிச் செல்வதைக் காணலாம். கடற்கரையில் மணலைப் பார்க்க முடியாது. மக்கள் தலைகளைத் தான் பார்க்க முடியும்.



முதலில் யானை முகம் மற்றும் சிங்க முகம் சம்ஹாரம் முடிந்த பிறகு, சூரனின் முக சம்ஹாரம் நடக்கும். பிறகு மரமாக சேவல்கள் அமர்ந்திருக்க வலம் வர, அந்த மரத்தைச் சாயத்த பிறகு சேவல்கள் பறப்பதுடன் சூர சம்ஹார நிகழ்ச்சி முடியும் என நினைவு. உடனே வேகமாக ஓடி, நெல்லை செல்லும் பேருந்தைப் பிடித்து வீடு வந்தால், அங்கு அம்மா வாசலில் காத்திருக்கும் தருணம் இன்றும் கண் முன் நிற்கிறது. குளித்து விட்டு வந்தால், அம்மா சுடச், சுட கொடுக்கும் தோசையின் சுவைக்கு ஈடு ஏதேனும் உண்டா அதுவும் நாள் முழுக்க எதுவும் உண்ணாத பட்சத்தில்?

எல்லோரும் கைவிடும் போதும், மானசீகமாக கூடவே இருக்கும் அந்தக் கந்தனை மறக்க முடியுமா? தமிழ் நாட்டில் இருக்கும் முருகத் தலங்களை பார்த்தாகி விட்டது. ஒரு முறை கதிர்காமம் செல்ல விருப்பம். நிறைவேறுமா?

2 கருத்துகள்: