திங்கள், 5 செப்டம்பர், 2011

ஓர் ஆசிரியரின் நினைவாக ....3


ஆசிரியர் தினத்தில் தான் நமக்குக் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றி நினைக்கிறோமோ? இல்லை அது ஒரு வாய்ப்பு. எத்தனையோ மனிதர்களை வாழ்நாளில் சந்திக்கிறோம். பல நல்ல விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில் சிலரிடமிருந்து எதை செய்யக் கூடாது என்பதையும் அறிந்து கொள்கிறோம். அப்படிப் பட்டவர்கள் நினைவில் இருந்தாலும், அவர்களிடமிருந்து விலகியே இருக்க முயல்கிறோம். ஆனால் சில ஆசிரியர்கள் நம் வாழ்க்கையில் என்றுமே நம் உணர்வில்லாமலே மூச்சு விட்டுக் கொண்டிருப்பது போல் நம் நினைவுகளில் ஒன்றி விடுகிறார்கள்.

நான் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியர் கல்லூரியில் படிக்கும் போது, இளநிலை மற்றும் முது நிலை பட்டப் படிப்புகளில் கணிதம் கற்பித்த ஆசிரியர் திரு.ஜோதிமணி அவர்கள்.

அவர் கணிதம் படித்த காலம் 1950 களில் இருக்கும். மதுரை பல்கலைக் கழகத்தில் 1975 ஆம் ஆண்டு வரை கணங்கள் (set theory) முது நிலை வகுப்புக்களில் தான் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியெனில், ஐம்பதுகளில் திரு. ஜோதிமணி அவர்கள் என்ன விதமான சமீபத்திய கணிதம் கற்றிருக்க முடியும். ஆனால் எங்கள் வகுப்பில் நவீன இயற்கணிதம் (Modern Algebra) பயிற்றுவித்தார். அதுவும் முழுதும் தானே படித்து, வகுப்பில் புத்தகமோ, குறிப்புக்களோ பார்க்காமல் மிகவும் சரளமாக நடத்துவார். வரையறை (definition), தேற்றங்கள் (theorem) சிறிதும் தயங்காமல் அதிலுள்ள நுணுக்கமான விஷயங்களுடன் பகிந்து கொள்வார். பகுவியல் (analysis) நடத்தும் போதும் அதே முறை தான். கணக்குகளை செய்து அதை எழுதி வைத்து அடுத்த ஆண்டு அதையே பயன்படுத்தும் முறை அவரிடமில்லை. ஒவ்வொரு வருடமும் அந்தக் கணக்கை புதிதாக சிந்தித்து அதன் அடிப்படையில் தீர்வு காணுவார். அவரிடம் கணிதம் கற்றது ஏதோ புண்ணியம் தான்.

ஆசிரியர்களுக்கு மிகவும் தேவையானது தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுதல். அதற்கு ஒரு முன் உதாரணம் திரு. ஜோதிமணி அவர்கள். இம்மாதிரி ஆசிரியர்களுக்கு எந்த நல் ஆசிரியர் விருதும் தேவையில்லை. ஒரு மாணவன் அவரைப் பற்றி உயர்வாக நினைத்தாலே அது கோடி விருதுகளுக்குச் சமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக