சென்ற வார இறுதியில் நடை பெற்ற விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்றது மகிழ்ச்சியான சம்பவம். அரை இறுதியில் சாங்காவை வென்ற பொழுதே
நடாலுக்கு இறுதி ஆட்டத்தில் வலுவான எதிர்ப்பு இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. அந்த எண்ணம் வீணாகவில்லை.ஒருவரே அந்தப் பட்டத்தை பல முறை வெல்வது சிறிது அலுப்பைத் தான் தருகிறது. செர்பியா நாட்டு மக்களுக்கு இது ஒரு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்த நேரத்தில் பெடரரைத் தோற்கடித்த சாங்காவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இம்முறை விம்பிள்டனின் மிகச் சிறந்த ஆட்டம் பெடரர்-சாங்கா இடையே நடந்த அரைஇறுதி போட்டி என்று உறுதியாகக் கூற முடியும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மீண்டும் தமிழகத்தில் இரண்டு மாதத்திற்குமுன்பு "அம்மா" ஆட்சி மலர்ந்ததிலிருந்து சமச்சீர் கல்வி பிரச்சனையைத் தவிர ஆட்சி நன்றாகப் போகிறது என்று தகவல்கள் கூறுகின்றன. சிறிது காலம் செல்லட்டும் பார்க்கலாம்.
கருணாநிதி தயாநிதி மாறன் திகாருக்குச் சென்றால் வருந்துவரா இல்லை மகிழ்ச்சி அடைவரா?பாராட்டும், சினிமாக் கொண்டாட்டமும் இல்லாமல் கருணாநிதிக்கு எப்படித் தான் பொழுது போகிறதோ?கருணாநிதி தன் மகளை நினைத்து உருகும் போது, அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கிய சமயம் உதய குமார் என்ற மாணவனின் மரணம் மற்றும் உதயகுமாரின் பெற்றோர்கள் பட்ட கஷ்டம் நினைவிற்கு வந்துத் தொலைகிறது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சில சமயங்களில் இளம் கர்நாடக இசைக் கலைஞர்கள் கச்சேரி செய்யும் போது எடுத்துக் கொள்ளும் சிரத்தையும், பாடும் தரமும் அதிசியக்க வைக்கிறது. பிரபல இரட்டை கர்நாடக இசைக் கலைஞர்கள் ரஞ்ஜனி,காயத்திரி அவர்களின் மாணவி வாணி ராமமூர்த்தி அவர்களின் அப்படிப்பட்ட ஓர் இசை நிகழ்ச்சியை சென்ற வாரம் கேட்க முடிந்தது. அ(ஹ)ம்சமான நாதமாக "பண்டு ரீதி கொலுவு" என்ற தியாகராஜ கீர்த்தனையில் விறுவிறுப்பாக கச்சேரி தொடங்கியது. அடுத்ததாக தீட்சிதரின் "சேதச்ஸ்ரீ பாலக்ரிஷ்ணம்" என்ற த்வஜாவந்தி ராகத்தில் அமைந்த பாட்டை சௌக காலத்தில் மிக அற்புதமாக பாடினார். குளத்து நீரை வருடிச் சென்ற தென்றல் போன்ற சுகமான அனுபவம்.முக்கியமான கீர்த்தனையாக சாவேரியில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரிகளின் "துருசுகா" விரிவாகப் பாடி ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார்.
வாணியின் சகோதரர் அருண் ராமமூர்த்தி வயலின் மற்றும் கிரண் மிருதங்கம். அருண் வாணிக்கு ஈடு கொடுத்து மிக நன்றாக வசித்தார். சாவேரி ஆலாபனை இவரின் உச்சம் என்று கூறலாம்.கிரணின் வாசிப்பு கச்சேரிக்கு நல்ல வலு சேர்த்தது. குறிப்பாக த்வஜாவந்தி கீர்த்தனைக்கு அவர் வாசித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.இது வீட்டில்(House concert) நடை பெற்ற நிகழ்ச்சி. இதற்கு அழைப்பு விடுத்த டாக்டர்கள் ராஜாராமன் மற்றும் கல்யாண் தம்பதியர்களுக்கு கட்டாயம் நன்றி சொல்ல வேண்டும். வாணி மற்றும் அருணின் சகோதரர் சிவாவும் ஒரு சிறந்த வயலின் இசைக் கலைஞர் என்று கேள்வியுற்றேன். இவர்களும் கிரணும் மேலும் வளர்ந்து பெரிய, புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்களாக வர வாழ்த்துக்கள்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நகுலன் கவிதைகள் எத்தனை முறை படித்தாலும் சலிக்காத ஒன்று. சில பிடித்த கவிதைகள்.
மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!
என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம்; மகா மெளனம்!
அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது
நண்பா அவள்
`
எந்த சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள் ?`