புதன், 25 ஆகஸ்ட், 2010

பலாச்சுளைக் கணக்கு - கணக்கதிகாரம்


கணக்கதிகாரம் என்ற 19- ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கணிதப் புத்தகம் இணையத்தில் படிக்கக் கிடைத்தது. அதை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. என் சந்தோஷத்திற்காக புரிந்த வரை அதைப் பற்றி எழுதலாம் என்று உள்ளேன். இதை தமிழ் நன்கு அறிந்த நண்பர்கள் ஏற்கனவே படித்து ரசித்திருப்பார்கள். இருந்தாலும் இதை மீண்டும் படிக்க நிச்சியம் கசக்காது. சரி. ஒரு பலாப் பழக் கணக்குடன் ஆரம்பிப்போம்.

ஒரு பலாப் பழத்தை அறுக்காமலே அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதைக் கண்டறியும் வழி கொடுக்கப் பட்டுள்ளது.

பலவின் சுளையறிய வேண்டிதிரேலாங்கு
சிறுமுள்ளுக்காம்பருக்கெண்ணி - யறுகாக
ஆறிற்பெருக்கியே யைந்தினுகீந்திடவே
வேறென்ன வேண்டாஞ்ச்சுளை


அதாவது பலாப்பழத்தின் காம்பைச் சுற்றயுள்ள முற்களை எண்ணி அதனை ஆறால் பெருக்கினால் வரும் விடையை ஐந்தால் வகுத்தல் கிடக்கும் ஈவு தான் அந்தப் பலாவில் இருக்கிற மொத்த சுளையாகும்.

உதாரணமாக காம்பைச் சுற்றி 100 முட்கள் இருந்தால் அதை ஆறால் பெருக்கி ஐந்தால் வகுத்தால் கிடைக்கும் சுளையின் எண்ணிக்கை 120 ஆகும்.

பாலாவே இனிக்கும் என்றால் அதனுடன் கணிதக் கற்கண்டு மற்றும் தமிழ்த் தேன் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்.
ருசித்து மகிழுங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

பீப்ளி லைவ் (Peepli Live) - காட்சி ஊடகங்களின் உல்லாசம்



ஒரு விவசாயின் சாவின் அறிவிப்பை இந்தியாவும், அதன் அரசியல் வாதிகள் மற்றும் ஊடகங்கள் - குறிப்பாக தொலைக் காட்சிகள் - எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது தான் படத்தின் கதை. இதை அருமையான நக்கலுடன் படமாக்கப் பட்டுள்ளது.

இந்தப் படத்தில் எந்த மசாலாவும் இல்லை. அரசியல்வாதிகள் எப்படி செயல்படுவார்கள் என்பது பல படங்களில் பார்த்தது தான். அதில் பெரிய புதுமை இல்லை. ஆனால் தொலைக் காட்சிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. மலத்தைக் கூட விடாமல் காட்டி கொண்டாடுகிறது ஒரு தொலைக்காட்சி.



படம் முழுவதும் ஒரு பகடி. அதனால் எந்த உணர்ச்சிகளுக்கும் இடமே இல்லை. படம் பார்க்கும் போது ஒரு விவசாயியின் துன்பம் பற்றிய எண்ணம் சிறிது கூட மனதில் உருவாகவில்லை. இதை ஒரு வருத்தம் அளிக்கும் விஷயமாக இந்திய சமுதாயத்தின் ஒரு பகுதி கூட காணவில்லை என்பது கொடுமை தான். பகடி மூலம் விருதுகளும், நிறைய பணமும் இந்த படம் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒட்டு மொத்த இந்திய சமூகத்தை இப்படி உணர்ச்சியற்ற கும்பலாகக் காட்டியுள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது.

ஆக மொத்தம் இந்தப் படம் பிடிச்சிருக்கு ஆனால் பிடிக்கவில்லை.

இந்தப் படம் நல்லாயிருக்கு ஆனால் நல்லாயில்லை.