செவ்வாய், 28 ஜூலை, 2009

காவஸ்கர் மற்றும் பாய்காட் ஓர் ஓப்பீடு (75-வது இடுகை)


சமீபத்திய செய்தி: கிரிக்கெட் மட்டை ஆட்டத்தில் தனக்கு கவாஸ்கரை விட .5% நுணுக்கம் அதிகமாக உள்ளதாக பாய்காட் கூறியுள்ளார்.

இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது மற்றும் இந்தக் கருத்து ஒத்துக் கொள்ளக் கூடியதா என்று பார்ப்போம்.பாய்காடே சொல்லி இருப்பது போல காவஸ்கருக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.இரண்டு பேரும் வலதுகை துவக்க ஆட்டக்காரர்கள், தங்கள் ஆட்ட இழப்பை எந்த நேரத்திலும் விரும்பாதவர்கள்."சுயநல வாதிகள்" என்ற குற்றச் சாட்டு இருவருக்கும் பொதுவானது.காவஸ்கர் அளவுக்கு நாசுக்காக ஒரு விஷயத்தை சொல்லுவதற்கு பாய்காட்டுக்குத் தெரியாது.பொதுவாக தனிமை விரும்பிகள்.

பந்தை தூக்கி காற்றில் அடிக்காமல் விளையாட வேண்டும் என்பது காவஸ்கரின் கொள்கையாக இருந்தால், தன்னை நோக்கி வீசப்படும் எல்லா பந்துகளையும் தடுத்து விளையாடினால் போதுமானது என்று நினைத்தவர் பாய்காட்."ரசேல் வெல்ச் (அழகான அமெரிக்க நடிகை) அல்லது லார்ட்ஸ் மைதானத்தில் 100 ஓட்டங்கள் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் லார்ட்ஸ் மைதான 100 ஓட்டங்களையே தேர்ந்தெடுப்பேன்" (என்ன ரசனை இந்த மனிதருக்கு!)என்று பாய்காட் கூறியதிலிருந்து அவரின் கிரிக்கெட் ஈடுபாடு தெளிவாகத் தெரிகிறது.காவஸ்கரின் ஈடுபாடு மற்றும் ஒழுக்கம் பாய்காடை விட எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்பது நாமெல்லோருக்கும் தெரிந்தது தான்.

மல்கொம் மார்ஷல் கான்பூர் டெஸ்ட் பந்தயத்தில் வீசிய ஓர் ஓவர் காவஸ்கருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்றால், ஹோல்டிங் போட்ட ஓர் ஓவரில் இரண்டு பந்துகளில் அடி வாங்கி, இரண்டு பந்துகளைத் தடுத்து விளையாடி,ஆறாவது பந்தில் ஸ்டம்புகள் எகிறியது பாய்காட்டிற்கு மறக்க முடியாத அனுபவம்.ஆனால் இருவரும் அடுத்த வந்த டெஸ்ட் பந்தயங்களில் அதே பந்து வீச்சாளர்களை எதிர்த்து சதம் அடித்தது அவர்களுடைய மகத்துவத்தை நிலைநாட்டுகிறது என்றால் மிகையாகாது.

காவஸ்கர் 60 ஓவர்களில் 36 ஓட்டங்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் சாதனை செய்தார் என்றால்,பாய்காட் கிட்டதட்ட 10 மணி நேரம் விளையாடி இந்தியாவிற்கு எதிராக ஓர் அருமையான மட்டையாளர்கள் விளையாடும் களத்தில் 246 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது மறக்க முடியாதது.

விளையாடும் காலங்களில் ஆகட்டும் இல்லை இப்போது கிரிக்கெட் வர்ணனையாலர்களாக பணி புரியும் போதாகட்டும் "சர்ச்சைகளை உருவாக்குவதிலும்,அதில் சிக்கி மிக லகுவாக வெளியே வருவதிலும்" ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.

இப்படி பல விஷயங்கள் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு எழுதிக் கொண்டே போகலாம்.ஆனால் கட்டுரையின் முதல் கேள்விக்கு பதில் என்ன என்று பார்ப்போம்.



1. இருவரும் விளையாடும் போது திறமையான மற்றும் உறுதியான தடுப்பு முறையைக் கையாண்டாலும்,காவஸ்கர் பாணி விளையாட்டு மிகவும் நளினமாக இருக்கும்.அவருடைய "கவர் டிரைவ்" கண்ணிற்கு ஒரு மறையாத விருந்தாக இருக்கும்.பாய்காடின் விளையாட்டு மிகவும் தட்டையானது.

2. எத்தனை நேரம் விளையாடினாலும் பாய்காடின் விளையாட்டின் தன்மையில் எந்த மாறுதலும் இருக்காது.போட்டி எந்த சூழ்நிலையில் இருந்தாலும் எப்போதும் ஒரே மாதிரி "எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல்" தான் விளையாடுவார். உதாரணமாக நியூசிலாந்தில் இங்கிலாந்து வேகமாக ஓட்டங்களை எடுத்து வெற்றி பெறவேண்டிய நிலையில் இவர் எப்போதும் போல் கட்டைப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.ஐயேன் போதம் பாய்காடை "ரன் அவுட்" செய்து ஆட்டமிழக்கச் செய்தது நினைவிருக்கலாம்.அதே நேரத்தில் காவஸ்கர் ஒவ்வொரு 25 ஓட்டங்களுக்கு பிறகு ஆட்டத்தில் செய்யும் மாறுதல்கள் அற்புதம்.

3. டெஸ்ட் போட்டிகளில் இவர்களுடைய ஓட்டங்களின் எண்ணிகையில் பெரிய அளவு வித்தியாசம் இல்லை.ஆனால் ஓட்டங்கள் எடுத்த முறை தான் மிகவும் வித்தியாசம்.குறிப்பாக காவஸ்கருக்கு பந்துகளைக் கணித்து அடிப்பதற்கு பாய்காடை விட அதிக நேரம் இருந்தது. அதனால் காவஸ்கர் தான் நினைத்த இடத்தில பந்தை திசை திருப்ப முடிந்தது. ஆட்டத்தின் நுணுக்கம் மிகவும் நன்றாக இருந்ததால் தான் இது சாத்தியமாகியது

4. காவஸ்கரின் டெஸ்ட் பந்தயங்களில் அடிக்கும் வேகம் (strike rate): 62.28
பாய்காடின் டெஸ்ட் பந்தயங்களில் அடிக்கும் வேகம் : 53.56


பொதுவாக பாய்காட் ஒரு புத்திசாலி(intelligent) ஆட்டக்காரர்.ஆனால் காவஸ்கர் ஒரு தந்திரமிக்க புத்திசாலி (clever) ஆட்டக்காரர்.

என்னைப் பொறுத்த வரை இருவரும் மிகப் பெரிய துவக்க ஆட்டக்காரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் காவஸ்கர் தான் கிரிக்கெட் ஆட்டத்தின் மட்டை பிடிப்பதில் நுணுக்கம் பாய்காட்டை விட அதிகம் கொண்டவர் என்று மேற்கூறிய காரணங்களைக் கொண்டு கணிக்கிறேன்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது என் 75 வது இடுகை. இது வரை என்னை தொடர்ந்து ஆதரித்து வரும் எல்லோருக்கும் என் நன்றிகள்.

திங்கள், 27 ஜூலை, 2009

இந்த வாரக் கணக்கு - 16


எண்களுக்குள் பல புதிர்கள் அடங்கியுள்ளன.சில புதிர்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.அதைப் போன்ற ஒரு புதிர் தான் இந்தவாரக் கணக்கில் இடம் பெறுகிறது.

உதாரணமாக இந்த இரண்டு 10406, 11864 ஐந்து இலக்க எண்களைப் பெருக்கினால்
கிடைப்பது

123456784

ஆகும்.

இந்தவாரக் கேள்வி இது தான்:

இரண்டு ஐந்து இலக்க எண்களைப் பெருக்கினால்
கிடைக்கும் விடை 123456789. உங்களால் அந்த இரண்டு ஐந்து இலக்க எண்களையும் யூகிக்க முடிகிறதா?

செவ்வாய், 21 ஜூலை, 2009

பூமியின் புவிஈர்ப்பு சக்தி சூரிய கிரகணத்தின் போது குறைகிறதா?


கிரகணம் என்று வந்தாலே பலவிதமான விஷயங்கள் ஊடகங்களில் காணப்படுகின்றன.அதிலும் சூரிய கிரகணம் என்றால் கேட்க வேண்டியதே இல்லை.ஜோசியக்காரர்கள் பாடு கொண்டாட்டம் தான். ஆனால் வானியல் அறிஞர்களுக்கு இது ஒரு மிக முக்கியத் தருணம் என்றால் மிகையாகாது. 1919 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது தான் ஐன்ஸ்டைனுடைய தத்துவம் சோதனை மூலம் நீருபிக்கப் பட்டது என்பதை மறக்க முடியாது.

இந்த நூற்றாண்டில் நடக்கும் மிக முக்கிய மேலும் நீண்ட நேரம் காணப்படும் ஒரே கிரகணம் இது தான்.எனவே வானியல் அறிஞர்கள் வெகு நாட்களாக விடை கிடைக்காமல் இருக்கும் ஒரு கேள்விக்கு பதில் கிடைக்குமா என்று சோதனை மூலம் முயன்று பார்க்க இருக்கிறார்கள்.குறிப்பாக சீனாவைச் சேர்த்த அறிவியலாளர்கள் தான் இதை மேற்கொள்ளப் போகிறார்கள்.

மாரிசே அல்லைஸ் (Maurice Allais) என்ற பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அறிஞர் 1954 ஆம் ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது ஊசல் குண்டின் (pendulum)தாறுமாறான செயல் பாட்டை வைத்து பூமியின் புவிஈர்ப்பு சக்தியில் மாறுதல் இருப்பதைக் கணித்தார்.அதாவது பூமியின் சுழற்சி மற்றும் புவிஈர்ப்பு சக்தியால் ஊசல் குண்டு ஊசலாட்டம் ஏற்படுகிறது.பாரிசில் சூரிய கிரகணம் ஆரம்பமான போது ஊசல் குண்டின் ஊசலாட்டத் திசையில் பலவந்தமான மாறுபாடு ஏற்பட்டதைக் கண்டார்.இந்த மாற்றம் பூமியின் புவிஈர்ப்பு சக்தியில் ஏற்படும் மாறுதலால் தான் என நினைத்தார்.ஆனால் அதற்குப் பிறகு நிகழ்ந்த இருபதுக்கும் மேற்பட்ட சூரிய கிரகணங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டும் எந்தவொரு முடிவுக்கும் வர முடியாமல் இருக்கிறார்கள் வானியல் அறிஞர்கள்.




இந்த மாதிரி வித்தியாசமான ஊசல் குண்டு செயல் பாட்டிற்குக் காரணம் வெளிமண்டலத்தில்(atmosphere) ஏற்படும் தொல்லைகளால் அல்லது சோதனைக்கு உபயோகப்படுத்தும் கருவிகளால் இருக்கலாம் என்று பல அறிஞர்கள் நினைக்கிறார்கள்.ஆனால் இந்த முறை சைனாவில் கிட்டதட்ட 1800 மைல்கள் அகலத்தில் ஆறு இடங்களில் எட்டு நவீனக் கருவிகளை பயன் படுத்துவதால் இந்த சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் தெளிவான ஒரு முடிவு கிடைக்கும் என்று வானியல் அறிஞர்கள் நினைக்கிறார்கள்..

மேலும் இந்த சூரிய கிரகணம் 5 நிமிடங்களுக்கு முழுமையாக இருக்கும்.இதைப் போல் ஒரு சந்தர்ப்பம் இந்த நூற்றாண்டில் கிடைக்க வாய்ப்பில்லை.இந்த முறை ஒரு தீர்மானமான முடிவு கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்

சனி, 18 ஜூலை, 2009

1729 என்ற எண்ணின் சிறப்பு என்ன?



தமிழ் நாட்டில் பிறந்து கணிதத்தில் கோலோச்சிய மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனைப் பற்றி பல தகவல்கள்,புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
அவருக்கு எண்களின் மேல் ஒரு தீராத மோகம் இருந்தது என்று கூறலாம்.அவர் எண் தத்துவத்தில் பல சாதனைகள் செய்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹார்டி என்ற கணித மேதை தான் ராமானுஜனை ஊக்குவித்து அவருக்கு உரிய பேரும் புகழும் உலக அளவில் வெளிச்சத்திற்கு வர உதவினார் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று.

ராமனுஜன் இங்கிலாந்தில் இருந்த போது உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.
அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்ற ஹார்டி

"நான் பயணம் செய்த டாக்ஸ்யின் எண் எனக்குப் பிடித்ததாக இல்லை" என்று கூறினார்.




ராமனுஜன் அந்த எண் என்ன என்று வினவினார்.அதற்கு ஹார்டி கொடுத்த பதில் "1729" ஆகும்.

உடனடியாக ராமானுஜன்

"அந்த எண் இரண்டு வெவ்வேறு முறைகளில் இரண்டு எண்களின் 3 - இன் அடுக்குகுறியின் கூட்டுத் தொகையாக எழுத முடியக் கூடிய மிகச் சிறிய நேர்மறையான எண்"

ஆகும் என்று கூறி ஹார்டியை ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.

அதாவது

1729 = 10^3 + 9^3
1729 = 12^3 + 1^3


என இரண்டு முறைகளில் எழுத முடியும்.

10^3 என்றால் 10X10x10 ஆகும்.இதைப் போல் பல எண்களின் சிறப்புக்களைப் பற்றி பதிவு எழுத உத்தேசம்.

புதன், 15 ஜூலை, 2009

பிங் தேடுபொறியின் பாராட்டத் தக்க சில செயல்பாடுகள்


பிங் தேடுபொறியை மைச்ரோசபிட் அறிமுகப்படுத்தி கிட்டத்தட்ட 45 நாட்கள் ஆகியுள்ளன.இதை கணிசமான அளவில் தேடுதலில் பயன்படுத்தும் ஒரு கருவியாக உள்ளது.மற்ற மைச்ரோசபிட் பொருட்கள் போல் அல்லாமல் பல ஊடகங்களும் இதற்கு நல்ல மதிப்பீடு கொடுத்துள்ளன.நானும் ஒரு மாதமாக இந்தக் கருவியை உபயோகித்து வருகிறேன்.நான் கவனித்த அல்லது ரசித்த சில அம்சங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.

1. இதனுடைய முகப்புப் பக்கத்தின் பின்புறத்தில் தினமும் கண்ணிற்கு குளிர்ச்சியாகக் காட்சி அளிக்கும் நேர்த்தியான படங்கள்.

2. சில பிரபலங்களைத் தேடும் போது அவர்களின் மிகவும் புகழ் பெற்றப் படங்கள் முதலில் வருகிறது. அதற்குப் பிறகு தான் அவர்களைப் பற்றிய வலைத் தளங்கள் வருகிறது. நான் ரஜினிகாந்த்,அமிதாப் மற்றும் டெண்டுல்கர் என்று தேடிப் பார்த்தேன். சுவையான படங்களுடன் விடைகள் கிடைத்தன.

3. பிங் தேடி கொண்டு வரும் வலைப்பக்கங்களுடன்,அதற்கு அருகில் அழகான அந்தப் பக்கத்தின் சுருக்கத்தைக் முன்காட்சியாகக் கொடுக்கிறது.இது மிக உதவிய உள்ளது.

4. நிகழ்படம் தேடுதலில் நிறைய விடைகளைத் தருவதுடன் அந்த நிகழ்படங்களின் சுட்டியைச் சொடுக்காமலே, அந்தப் படத்தின் முன்காட்சியைக் காணமுடிகிறது.இது பல படங்களை வேகமாகப் பார்க்க உதவியாக உள்ளது.

5. படிமங்கள் என்பதைச் சொடுக்கி தேடினால் பல படிமங்களை சிறிய படிமங்களாக (thumbnail) ஒரே பக்கத்தில் காட்டுகிறது.இது தான் மிகவும் அருமை.

6. தேடும் போதே இடது பக்கத்தில், தேடப்படும் பொருளுடனான சம்பந்தப் பட்ட விஷயங்கள் சுட்டிகளாகக் காணக் கிடைக்கிறது.

7. மிக முக்கியமாக நம் தேடுதலின் முந்தையச் சரித்திரத்தை சுட்டிகளாகக் கொடுக்கிறது.

ஆக மொத்தம் பிங் ஒரு நல்ல உபயோகமான தேடுபொறி என்பதில் சந்தேகமே இல்லை.ஆனால் இது எந்த விதத்திலும் கூகுளை விட சிறந்த இடத்தைப் பெற்று விடும் என்று இப்போது கூற முடியாது. கூகிள் கூகிள் தான். நீங்களும் இதைப் பயன்படுத்தித் தான் பாருங்களேன்.

முகப்புப் பக்கம் - Home page
பின்புறத்தில் - background
முன்காட்சியாக - preview
நிகழ்படம் - video
படிமங்கள் - images

திங்கள், 13 ஜூலை, 2009

வாரக் கணக்கு - 15 செய்முறையும் விடையும்

சென்ற வாரக் கணக்கு இதோ:

இங்கிலாந்தும்,இந்தியாவும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கு பெற முடிவு செய்தன.போட்டிகள் மூன்றுமே வெற்றி அல்லது தோல்வியில் முடிவதாகக் கொள்வோம்.
இந்தத் தொடரில் ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 0.35 ஆகும்.
இந்தத் தொடரில் இங்கிலாந்து சரியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?


இங்கிலாந்து சரியாக இரண்டு போட்டிகளில் வெற்றிபெற வேண்டும்.
அதாவது முதல் மற்றும் இரண்டாவது,
அல்லது முதல் மற்றும் மூன்றாவது
அல்லது இரண்டாவது மற்றும் மூன்றாவது

போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும்.

P(W) என்பது இங்கிலாந்து ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு எனக் கொள்வோம்.

P(L) என்பது ஒரு போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைவதற்கான நிகழ்தகவு எனக் கொள்வோம்.

எனவே
P(W) = 0.35

மற்றும்

P(L) = 0.65

இங்கிலாந்து முதல் மற்றும் இரண்டாவது போட்டிகளில் வெற்றி பெற நிகழ்தகவு
= P(W)XP(W)
= 0.35X0.35
= 0.1225

இங்கிலாந்து முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் வெற்றி பெற நிகழ்தகவு
= P(W)XP(L)XP(W)
= 0.35X0.65X0.35
= 0.079625

இங்கிலாந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் வெற்றி பெற நிகழ்தகவு
= P(L)XP(W)XP(W)
= 0.65X0.35X0.35
= 0.079625

எனவே இங்கிலாந்து சரியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு
= 0.1225 + 0.079625 + 0.079625
= 0.28175.


இந்தக் கணக்கை முயற்சி செய்தவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.உங்கள் கருத்துக்களை பின்னுட்டமிட்டோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோத் தெரியப்படுத்தவும்.

ஞாயிறு, 12 ஜூலை, 2009

வீணை கேட்கும் நாதம்


மீட்டப்படாத வீணையின்
அருகில் அன்புடன்
படுத்திருந்தது - பூனை
எங்கு சுற்றினாலும் வந்துவிடும்
எனக் காத்திருக்கும் வீணை

மடியில் வைத்து
நெஞ்சோடு அணைத்து
விரல்களின் விளையாட்டில்
அருவியாகப் பாய்ந்த
நாதத்தின் சுவை உணர்ந்த
நாட்கள் தான் எத்தனை

இன்று மீட்கப்படாமல்
இருக்கும் வீணையைப் பற்றி
செய்தவன் கேட்டு வருந்தினான்.

மீட்ட காலங்களில் காற்றில்
மிதந்திருக்கும் நாதம்
இன்று வீணைக்கு மட்டும்
கேட்கிறது.

நாதமும் பூனையுமாக
கழியும் வீணையின் வாழ்க்கை.

வெள்ளி, 10 ஜூலை, 2009

மறக்க முடியாத ஒரு சகாப்தம்:சுனில் காவஸ்கர்


ஒரு முறை இந்தியாவும்,ஆஸ்திரேலியாவும் ஒருநாள் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தன.அந்த ஆட்டத்திற்கு காவஸ்கரும்,இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டோனி கிரேக்கும் தொலைக் காட்சி வர்ணனையாளராக இருந்தனர்.அப்போது சற்று கிண்டலாக "சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில், உங்களை (காவஸ்கரை) 50% கிரிகெட் ரசிகர்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனரே" என்று கூறினார் கிரேக்.உடனடியாக அதற்கு "50% கிரிகெட் ரசிகர்கள் என்னை விரும்புவர்கள் இருக்கிறார்கள் என்று சந்தோஷப் படுகிறேன்" என்று காவஸ்கர் பதிலடி கொடுத்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீசுடன் தன் கிரிக்கெட் டெஸ்ட் தொடரை 1971ம் ஆண்டு தொடங்கிய கவாஸ்கர் 34 சதங்களுடன் 10122 ரன்களுடன் 1987ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.இவரது முதலாவது டெஸ்ட் தொடர் கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையாளர் வந்திருப்பதை உலகத்திற்கு அறிவித்தது.

முதல் டெஸ்ட் தொடருக்குப் பின் வந்த இங்கிலாந்து தொடர்களில் இவர் சரியாக விளையாடவில்லை.அதனால் இவருடைய திறமையின் மீது பலருக்கு சந்தேகம் வந்தது.ஆனால் 1976ம் ஆண்டு இந்தியா மேற்கொண்ட நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடர்களில் இவர் வெளிப்படுத்திய நுணுக்கமான விளையாட்டு இவருக்கு உலக அரங்கில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பெற்றுத் தந்தது.

இவருடைய விளையாட்டு வாழ்கையில் 1983-84ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் இந்தியாவிற்கு விஜயம் செய்த போது தான் மிகப் பெரிய, மோசமான சோதனையை எதிர் கொள்ள வைத்தது.கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மால்கோம் மார்ஷல் வீசிய அதிவேகப் பந்தில் காவஸ்கரின் மட்டை கீழே விழுந்து ஆட்டமும் இழந்தார்.இவருடைய எதிர்பாளர்களுக்கு தாங்கமுடியாத சந்தோசம்.பத்திரிகைகள் பலவிதமாக எழுதின. ஆனால் அடுத்து நடந்த டெல்லி டெஸ்டில் மார்ஷல் பந்துகளை விளாசித் தள்ளினார்.பல ஆண்டுகள் உபயோகிக்காமல் இருந்த "hook shot" மீண்டும் பிரயோகித்து எதிரியை திணற அடித்தார்.37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.மேலும் சென்னையில் நடத்த போட்டியில் 236 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதைப் பற்றி மைக்கல் ஹோல்டிங் "கவாஸ்கர் ஒரு சுவர் போல் நின்றிருந்தார்.எத்தனை நாட்கள் பந்து வீசினாலும் அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியாது" என்று கூறினார்.இது காவஸ்கரின் ஒழுக்கம்,கட்டுப்பாடு மற்றும் மனஉறுதியைக் காட்டுகிறது.



இவருடைய மறக்க முடியாத இன்னிங்க்ஸ்களில் சிலவற்றை இங்கு நினைவு கூறுவோம்:

1. 1974ம் ஆண்டு இங்கிலாந்து OldTrafford மைதானத்தில் அடித்த 101 ஓட்டங்கள்
2. 1976ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் "Port of Spain" போட்டியில் அடித்த 156 ஓட்டங்கள்
3. 1979ம் ஆண்டு இங்கிலாந்து ஓவலில் விளாசிய 221 ரன்கள்
4. 1983ம் ஆண்டு டெல்லியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடித்த 121 ஓட்டங்கள்
5. இவருடைய இறுதி டெஸ்ட் போட்டியில், மிக மோசமான ஆடு களத்தில், இவர் அடித்த 96 ஓட்டங்கள்.

இவர் எடுத்த ஓட்டங்கள் எதுவுமே ஏனோதானோ என்று எடுத்ததில்லை.மிகவும் நேர்த்தியாக விளையாண்டு எடுத்தவைகள்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், தொலைக் காட்சி வருணனையாளராக அவதாரம் எடுத்தார்.அதிலும் அவர் தலை சிறந்து விளங்குகிறார் என்றால் மிகையாகாது.ஒரு முறை மேற்கிந்திய தீவின் வால்ஷ் பந்து வீசும் போது, வருணனையாளராக இருந்த காவஸ்கர் அவர் ஒவ்வொரு ஓவரிலும் 5 வது பந்து வேகம் குறைவான (ஸ்லொவ் டெலிவரி) பந்து வீசுகிறார் என்று கணித்தார். ஆனால் விளையாடுபவரோ அதைப் பற்றி தெரியாமலே விளையாடிக் கொண்டிருந்தார்.இவருடைய கவனிக்கும் திறனுக்கும்,புத்தி சாதுர்யதிர்க்கும் இது ஒரு சாட்சி ஆகும்.

இன்றும் இவர் பலவிதமான தர்க்கத்திற்கும், விவாதத்திற்கும் மற்றும் ஆட்சேபத்திற்கும் இடமளிக்கும் கருத்துக்களை தெரிவிப்பதிலும்,செய்கைகளிலும் ஈடுபடுகிறார்.குறிப்பாக,1975ம் ஆண்டு முதல் உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன் 60௦ ஓவர்களில் 36 ஓட்டங்கள் எடுத்தது, மெல்பர்ன் போட்டியில் வெளியேறியது மற்றும் உலகக் கிரிக்கெட் குழு குறித்த இவருடைய கருத்து முதலியவைகளைக் கூறலாம்.என்ன இருந்தாலும் இவர் கிரிகெட்டில் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை மறுக்க முடியாது.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 13 சதங்கள் அடித்திருக்கிறார்.மேலும் இவர் எந்த தலையணியும் விளையாடும் காலத்தில் உபயோகித்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கிரிகெட்டில் ஒரே ஒரு பிராட்மன் தான் இருக்க முடியும்.அதே போல் ஒரே ஒரு காவஸ்கர் தான் இருக்க முடியும்.அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் காவஸ்கர் பல ஆண்டுகள் நலத்துடன் வாழ வாழ்த்துவோம்.

வியாழன், 9 ஜூலை, 2009

கூகிளின் க்ரோம் இயக்குதளம் (Chrome OS) மைக்ரோசாபிடுக்குப் போட்டியாகுமா?


கூகிள் க்ரோம் (Chrome) என்ற இயக்குதளத்தை உருவாக்கி வருவதாகவும் அதனை 2010ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளது.

முக்கியமாக இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்க உள்ளது.

முதலில் வலைப் புத்தகங்கள் (netbooks) என்று அழைக்கப் படும் மிகச் சிறிய மடிக் கணனியில் மட்டும் உபயோகப் படுத்தும் இயக்குதளமாக வெளிவர உள்ளது.

இதன் முக்கியமான இரண்டு நன்மைகளாக கூகிள் கூறுவது:

1. இது செயல் படும் வேகம் மிகத் திறமை வாய்ந்ததாக இருக்கும்.வலைத் தளங்களை மேய்வதற்கும்,மின்னஞ்சல் பார்ப்பதற்கும் எளிதாக இருக்கக் கூடும்.

2. அடிக்கடி இந்த இயக்குதளத்தை மேம்படுத்த (upgrade) வேண்டிய அவசியமில்லை.

அடுத்த கேள்வி: இந்த புதிய இயக்குதளம் எந்த அளவிற்கு மைக்ரோசபிடின் இயக்குதளச் சந்தையை பாதிக்கும்?

1. உடனடியாக எந்த பெரிய பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை.ஏனென்றால் இந்த வருடம் 220 ல்ட்சம் வலைப் புத்தகக் கணணிகள் விற்றால், 1340 ல்ட்சம் மேசைக் கணனிகள் விற்கப்படும் என சந்தை ஆராய்ச்சி நிறுவனகள் கூறுகின்றன.

2.கம்பியில்லாத இணைப்புகள் (wireless connection) எல்லா இடங்களிலும் கிடைப்பது கடினமாக உள்ளதால், எதிர் காலத்தில் இந்த வலைப் புத்தகக் கணனிகள் அதிக அளவு விற்பனை ஆக வாய்புக்கள் குறைவாகவே உள்ளது.

3. இப்போது பெரும்பாலும் ஒருங்கிணைக்கப்பட்ட கணணி பயன்பாடு பெரிய அளவில் உள்ளது.ஆனால் கூகிள் ஒருங்கிணைக்கப்படாத "க்லௌட்" (cloud) கணணி பயன்பாடு என்பதை முன்வைக்கிறது.அதாவது நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் தரவுகளையும்,பயன்பாடுகளையும் உபயோகிக்க முடியும்.இதில் சில பிரச்சினைகள் இருந்தாலும், எதிர்காலம் இதை நோக்கித் தான் செல்வதாகத் தெரிகிறது. அப்போது கணணி பயன்படுத்தும் முறையே மாறிவிடும்.அது மைக்ரோசாபிடிற்கு பெரிய பிரச்சனை ஆகிவிட வாய்ப்புள்ளது.ஆனால் அது நடப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இவர்கள் போட்டியில் தொழிற்நுட்பத்தின் மேம்பாடும், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அபரிமிதமான நன்மைகளும் தான்.

வெள்ளி, 3 ஜூலை, 2009

கூகிள்,பிங் மற்றும் யாஹூவில் ஒரே நேரத்தில் தேடல்


மைச்ரோசாபிட் சமீபத்தில் பிங் என்ற தேடு பொறியை அறிமுகப் படுத்தியதைப் பற்றி பல பதிவுகள் பார்த்தோம். கூகிள் பக்கத்தில் கூட போக முடியாவிட்டாலும், பிங் யாகூவிற்கு பெரிய போட்டியாக உள்ளது.பிங் தேடுபொறியில் பல விதமான குறைகள் கண்டறியப் பட்டுள்ளன.அதைப் பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.இதற்கு இடையில் மைச்ரோசாபிடில் வேலை பார்க்கும் மைக்கல் கொர்டஹி கூகிள்,பிங் மற்றும் யாஹூ ஆகிய மூன்று தேடு பொறிகளிலும் ஒரே நேரத்தில், ஒரே வலைத் தளத்தில் தேடும் வசதியை ஏற்படுத்தியுள்ளார்.அந்த வலைத் தளம் இதோ:

http://blindsearch.fejus.com/


குறிப்பாக இந்த வலைத் தளம் மூன்று தேடு பொறிகள் விடையாகக் கொடுக்கும் முதல் பத்து வலைத் தளங்களை அந்த தேடு பொறியின் பெயர் கொடுக்காமல் ந்ம் கண் முன் காட்டுகிறது. மேலும் விடைகளை வரிசைப் படுத்தவும் செய்யலாம்.இந்த வலைத் தளம் மிகவும் உதவியாக உள்ளது.

உதாரணத்திற்கு

A.R. Rahman vs illaiya raja

என்று கொடுத்துப் பார்த்தேன். ஒரே இடத்தில கிடைக்கும் விடைகள் அற்புதம். சுவையான வலைத் தளங்களும் கிடைத்தன.
நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்

வியாழன், 2 ஜூலை, 2009

இந்த வாரக் கணக்கு - 15


இங்கிலாந்தும்,இந்தியாவும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கு பெற முடிவு செய்தன.போட்டிகள் மூன்றுமே வெற்றி அல்லது தோல்வியில் முடிவதாகக் கொள்வோம்.
இந்தத் தொடரில் ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு ௦0.35 ஆகும்.
இந்தத் தொடரில் இங்கிலாந்து சரியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?