திருமதி. வைதேஹி
ஹெர்பெர்ட் அவர்களின் சங்க இலக்கியப் பயிலரங்கம் டெட்ராயிட் நகரில் ஆகஸ்ட் திங்கள்
15-16 ஆகிய நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நண்பர் திருமூர்த்தியின்
முன்னெடுப்பில் "தமிழ் மறுமலர்ச்சி இயக்கம்" எனும் அமைப்பை நடத்தி வரும்
டாக்டர் இராஜாராமன் மற்றும் மிச்சிகன் தமிழ் சங்கம் உதவியில்
இந்தப் பயிலரங்கம் நடத்தப்பட்டது. இவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.
இங்கொன்றும்,
அங்கொன்றுமாக சங்க இலக்கியம் படித்திருக்கிறேன். குறிப்பாக
பிற்கால இலக்கியங்கள் படிக்கும் போது, தமிழ்ர்கள் வாழ்வு முறை மற்றும்
தமிழ் மரபின் தொடர்ச்சியாக சங்க இலக்கியத்தை மேற்கோள்
காட்டுவதின் மூலம் சென்றடைந்த வாசிப்பு அனுபவம் தவிர பெரிய அளவில் ஈடுபாடு
இருந்ததில்லை என்பது தான் உண்மை. ஆனால் அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றியது இந்தப்
பயிலரங்கமெனில், அது மிகையாகாது.
சங்க இலக்கியத்தின்
முக்கியக் கூறுகளை அறிமுகம்படுத்தும் விதமாக எழுதப்பட்ட "Sangam Literature: A Beginner's Guide" என்ற புத்தகம்,
இந்த பயிலரங்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. முதல்
நாள் பயிலரங்கில் பகிரப்பட்டவைகள்(நினைவிலிருந்து):
1. சங்க இலக்கியம் 18
நூல்களால் ஆனது. பத்துப்பாட்டு எனப்படும் (முல்லைப் பாட்டு,
நெடுநல் வாடை போன்ற) பத்து நீண்ட பாடல்கள் மற்றும் எட்டுத்தொகை எனப்படும்
(குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற) 8 தொகை நூல்கள்.
2. சங்க இலக்கியக் காலம்
தோராயமாக கி.மு.400 - கி.பி 300 வரை எனலாம்.
3. அகம், புறம்.
அகப்பாடல்களில் தலைவன், தலைவி, தோழி,தாய், செவிலித் தாய் - இவர்களிடையேயான
உணர்ச்சிப் பகிர்தல். புறப் பாடல்களில் போர் மற்றும் மன்னர்களின் பெருமைகள்,
வெற்றி குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. உள்ளங்கை -அகம் மற்றும் புறங்கை - புறம் என்ற ஒப்பீடு நச்சினர்க்கினியாரால்
கொடுக்கப்பட்டுள்ளது.
4. குறிஞ்சித் திணை,
முல்லைத் திணை, பாலைத் திணை, நெய்தல் திணை மற்றும் மருதத் திணை குறித்து விரிவாக
வைதேஹி அவர்கள் எடுத்துரைத்தார்கள். மேலும் உதாரணத்திற்கு சில பாடல்களும்
படிக்கப்பட்டு பொருளும் விரித்துரைக்கப்பட்டது.
5. கிட்டத்தட்ட சங்க
இலக்கியக் காலத்தில் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூகம் இருந்ததாகத் தெரிகிறது. இழிசினன்
என்ற சொல்லின் சங்க இலக்கியப் பயன்பாடு குறித்த நீண்ட உரையாடல்
நடந்தது. வைதேஹி அவர்கள் ஜைன மதத்தின் தாக்கம் தான் இத்தகைய சொல்லாடலுக்கு வழி
வகுத்தது என்று தாம் உறுதியாக நம்புவதாகக் கூறினார். ஜைன நம்பிக்கையின்
அடிப்படையில் இது இறங்கு முகமாக செல்லும் பிறப்பினை குறிப்பதே
தவிர, பிறப்பாலோ இல்லை செய்யும் தொழிலைக் கொண்டோ வரையறுக்கப் பட்டதில்லை என்றார்.
ஆனால் இதில் அறிஞர்கள் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இதைக் குறித்து மேலும்
அறிந்து கொள்ள இராஜம் அவர்களின் சமீபத்திய புத்தகத்தை
படிக்குமாறு பரிந்துரைத்தார்.
6. வைதேஹி அவர்கள் பல
அறிஞர்களின் உரையையும் படிப்பதின் மூலம், சங்க கால தமிழ்
மரபு, வாழ்க்கை முறை மற்றும் அன்றைய இயற்கைச் சூழல்
போன்றவற்றை திருத்தமாக அறிந்து கொள்ளலாம் என்றார்.குறிப்பாக
குறுந்தொகைக்கு உ. வே.சா மற்றும் புறநானூறுக்கு அவ்வை
துரைசாமி நூல்களைக் குறிப்பிட்டார். . மேலும் ஐராவதன் மகாதேவன் அவர்களின் புத்தகங்களைப்
படிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தையும்
எடுத்துரைத்தார்.
வைதேஹி அவர்கள் சங்க
இலக்கிய மொழி பெயர்ப்பு செய்தது மட்டுமின்றி, வடக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் முக்கிய நகரங்களில் இதைப் போன்ற "இலவச" சங்க இலக்கியப் பயிலரங்கங்கள் நடத்தி வருகிறார். இந்த மகத்தானத்
தொண்டு பாராட்டப் பட வேண்டியது. இவரின் ஆங்கில மொழி
பெயர்ப்பு குறித்து சமீபத்தில் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன..
தமிழில் எதை எழுதினாலும் கிணற்றில் போட்ட கல் போல் அது காணாமல் போவது தான்
இயல்பு.. இந்தளவுக்கு அவர் உழைப்பு கவனம் பெறுவது, ஆறுதல் அளிப்பதாகவே இருக்கிறது.
மேலும் வைதேஹி அவர்கள் ஆங்கிலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, இந்த ஒப்பற்ற
இலக்கியத்தை பலருக்கும் சென்றடைய மேற்கொண்ட முயற்சி வரவேற்கத்தக்கது.
இரண்டாம் நாள்
நிகழ்வுக்கு செல்ல முடியவில்லை. அதைக் குறித்த குறிப்பை வேறு யாரும் பகிர்வார்கள்
என நினைக்கிறேன்.